நாடாளுமன்ற சனாதன அரசியலின் வேர்களும் முடிச்சுகளும் – வே .மீனாட்சிசுந்தரம்

நாடாளுமன்ற சனாதன அரசியலின் வேர்களும் முடிச்சுகளும் – வே .மீனாட்சிசுந்தரம்



இன்று நமது நாடாளுமன்றம். சனாதன இந்துத்துவா அரசியல், தாராள பூர்சுவா அரசியல், பாட்டாளி வர்க்க அரசியல் என்ற மூன்று விதமான அரசியல் போக்குகளின் பிரதிநிதிகளைக் கொண்ட மன்றமாக உள்ளது  பாட்டாளி வர்க்க அரசியலின் குரல் நாடாளுமன்றத்திலே குறைவாக இருந்தாலும், வெளியே அதன் சக்தியைப் புறக்கணிக்க ஆளுவோரால் இயலாது.

   இந்த கட்டுரை பிரிட்டிஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்ட சூழலால் தோன்றிய இந்துத்துவா சனாதன அரசியலின் மூன்று தோற்றுவாய்களையும், அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன்  போட முயற்சிக்கும்  இந்து சென்ட்டிமென்ட் முடிச்சுக்களையும் சுருக்கமாக வாசகர்களின் மேலான சிந்தனைக்கு வைக்கிறது.

 இந்துத்துவா அரசியலின் மூன்று தோற்றுவாய்கள் 

1909ம் ஆண்டு மின்ட்டோமார்லி சீர்திருத்தத்தால் உருவான மத அடிப்படையில் தொகுதிகள். 2) இந்துமஹாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் 3) பிரிட்டிஷ் அரசோடு சமரசம் குறு நில மன்னர்களின் ஆதரவு. இந்த மூன்று தோற்றுவாய்களைக் கொண்டதே இன்றைய பா.ஜ.க வும் அதன் பரிவாரங்களும் ஆகும். .

 கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடிய பிரிட்டிஷ் அரசு மதக் கலவரங்களைத் தூண்டும் ஆர் எஸ். எஸ் அமைப்பைப்  பேணியதே தவிர என்றுமே தடை செய்ய விரும்பவில்லை.  1947 ஜனவரியில் 24ம் தேதி பஞ்சாப் ஆளுநர் முதன் முதலாகத் தடை  செய்தார் அவரே 1947 ஜனவரி 28ல் தடையை நீக்கினார். இந்து மார்க்கங்களைப் பேணுவதின் மூலமே மக்களின் ராஜவிசுவாசத்தைப் பேணமுடியும் என்பதால் மத போதகர்களையும், ஆர். எஸ்.எஸ் அமைப்பையும் அன்று இருந்த  500க்கும் மேற்பட்ட குறு நில மன்னர்களும் ஆதரித்தனர்.

1909 மிண்டோ மார்லி திட்டம்

இந்தியாவை ஆண்ட பிரிட்டன் இந்திய மாகாணங்களை நிர்வாகிக்கும் வெள்ளை ஆளுநர்களுக்கு ஆலோசனை  கூற  சட்டசபையை உருவாக்கியிருந்தது. . அன்று வாக்காளர் தகுதி பெற நில உடைமையாளர் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர் இருக்க வேண்டும்.1909ம் ஆண்டு மிண்டோ- மார்லி சீர்திருத்தம் என்ற பெயரில் அரசியல் ரீதியாக மத அடிப்படையில் வாக்காளர்களைப் பிரித்தது. இஸ்லாமியப் பிரதிநிதிகள் இஸ்லாமியர்  தேர்வு செய்வர்  இந்து பிரதிநிதிகளை இந்துக்கள் தேர்வு செய்வர் எனச் சட்டத்தைத் திருத்தியது.

அன்றைய அரசியல் தலைவர்களால் அவரவர் நலனைப் பேண இந்துமஹாசபை மற்றும்  அகில இந்திய முஸ்லீம் லீக் என்ற அமைப்புகளை உருவாக்க இது வழிவகுத்தது. துவக்கத்தில். இவை இரண்டும் பகைமை பாராட்டும் இயக்கங்களாக இல்லை. அதனை நிறுவிய திலகர், லாலாலஜிபதி ராய், மதன் மோகன் மாளவியா போன்றோர் பகைமை பாராட்டவில்லை.

CP Sharavanan: தேர்தல் வரலாறு-7 இந்திய தேசிய காங்கிரஸ்

 இந்து மகாசபையை  1920 ல் விநாயக் தாமோதர் சவர்க்காரும், பாலகிருஷ்ண மூஞ்சே என்பவரும் கைப்பற்றிய பிறகே மதச் சார்பின்மையை அகற்றி இந்து சனாதன இயக்கமாக ஆக்கினர். 1925 கேசவ் பாலராம் ஹெட்கேவர் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் உருவாக்கினார் இந்து சனாதனத்தைப் பேணுகிற அரசியல் சார்பற்ற படை என்று அறிவித்தார். இந்து மகாசபை காலப் போக்கில்  ஆர் எஸ் எஸ் அமைப்போடு கரைந்து போனது. இஸ்லாமியர்களை அந்நியர்களாகக் கருதவைக்க இந்து சாஸ்திரங்களை ஆயுதமாக்கியது. இந்தியா இந்து ராஜ்யமாக இருந்ததாகவும்  அந்நிய மொகலாயர்கள் இஸ்லாமியச் சாம்ராஜ்யமாக்கியதாக வரலாற்று பொய்களைக் கூசாமல் விதைத்தனர்.அந்த பொய்களை ஏற்கிற மனோநிலைக்கு தள்ளிவிட. மக்களின்  தெய்வ நம்பிக்கைகள் 2) சனாதன சடங்குகள் 3) மேலை நாட்டு முதலாளித்துவ சார்பு மூன்று சென்ட்டிமென்ட்டுகளை தாலிபாக்கிய உணர்வுபோல் மக்கள் மனதில் பதிய முடிச்சுப் போட இன்று அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

   இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தையும் அலுவலக கட்டளைகளையும் சமஸ்கிருத சொற்களாக மாற்றி தெய்வீக மணம் கமழச் செய்வது கீதை கூறும் அறங்களைப் பாடமாக்குவது  பிரதமர் மோடி மன்னர்கள் காலத்துக்  கோவில் கட்டும். பண்பாட்டிற்கு அடிக்கல் நாட்டித் துவக்குவது. இந்திய மக்களை இந்துத்துவா கும்பல் கற்பனை செய்கிற “இந்துவாக” வாழவைக்கப் புராணங்களை வரலாறாக்குவது. இந்த முறைகளில் இந்து சென்ட்டிமென்ட்  முடிச்சுக்களைக்  கட்டிவிட முயற்சிக்கிறது.

கீதை கூறும் அறங்கள்

கீதை கூறும் அறங்களை  மேலை நாட்டவர்களே பாராட்டுகிறார்கள் என்று இங்கே பிரச்சாரம் செய்கிறார்கள், அப்படிப் பாராட்டும் மேலை நாட்டு மேதாவிகள் யார் என்று பாருங்கள்?  நாய்களில் பல ரகம் இருப்பது போல் மானுடர்களிலும் பல ரகம் இருப்பதாகக் கருதும் சமூக டார்வீனியர்கள், மண்டை ஓட்டின் அளவை வைத்து புத்திக் கூர்மையைக் கணக்கிடும் சமூக இயலாளர்கள் இவர்களே  கீதைக்கு புதிய விளக்கம் கொடுக்கும் மேதாவிகளாக இருப்பர்.

  வெள்ளையர்களே அறிவாளிகள் மற்ற  இனத்தவர் குதிரை, மாடு போல் பயன்படும் ஜந்துக்கள் என்ற இன வெறியர்களே கீதையைப் பாராட்டுவார்கள்.

 ஜன்ஸ்டின் போன்ற  உண்மையைத் தேடும் அறிவாளிகள் கீதையைப் படித்துவிட்டுக் கூறியது என்ன?  “கீதையைப் படித்துவிட்டுச் சிந்தித்த பொழுது கடவுள் பிரபஞ்சத்தைப் படைக்கிற பொழுது தேவைக்கு மேலேயே மக்களைப் படைத்துவிட்டாரோ என்ற ஐயம் வந்தது.” என்கிறார். ஏன் எனில் . கடவுளே கிருஷ்ணனாக அவதாரமெடுத்து  தேவைக்கு மேல் தான் படைத்த மக்களைத் தனது ஏஜென்டான அரசனை அனுப்பிக்  கொல்ல ஏவுவதையே அவர் குறிப்பிடுகிறார். 

சுற்றங் கொல்வேனோ? — என்றன்
சுற்றங் கொல்வேனோ? — கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?? என  அர்ஜுனன் கேட்கிறான் அதற்குக் கடவுளான கிருஷ்ணன் கூறுகிற பதில்  அரசன் மக்களின் உயிரைப்பறிப்பதுவும்  தெய்வத்திற்குப் பலியிடலும்  பாவமல்ல என்கிறான். பாண்டவர்களின் குருவான துரோனாச்சாரியரை உயிரை மாய்த்துக் கொள்ள தருமனை பொய் சொல்ல சொல்லுகிறான்.

பகவத் கீதை: இறைவன் திருவடியை அடைய...! | Webdunia Tamil

 சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சண்டையிடுவது  அநீதி என்று கருதிய கவுரவர்களின் ஓரே மருமகன் ஜெயராதாவை சூரியனை மறையவைத்து நிராயுதபாணியாக இருந்தவன் மீது அர்ஜுனனை அம்புகளை ஏவிக் கொல்லச் சொல்கிறான்.

பீஷ்மர் திருநங்கையரோடு போர்புரிவது அநீதி  என்று கருதுபவர் கிருஷ்ணன் ஆலோசனைப்படி அர்ஜுனன் சிகண்டிக்குப் பின்னால் நின்று பீஷ்மரைக் கொல்கிறான். சூதுவாதும், போரும் அடக்குமுறையும் இன்றி முதலாளித்துவம் நிலைக்காது அது தான் மானுட தர்மம் எனக் காட்டிடக்  கீதையை அந்த முகாம் போற்றுவதிலும் பாடமாக வைப்பதிலும் ஆர்வம் காட்டுகிறது

இந்தியா உருவான வரலாற்றைத் திரிக்கும் ஆற்றல்

சொத்துடமை உணர்வு, அரசின் தோற்றம், மக்களின்  ராஜ விசுவாசம், அதன் புவி பரப்பு எல்லை இவைகளில் ஏற்பட்ட படி மாற்றங்களின் வரலாற்றை அலசினால் இன்றைய இந்தியா  2000ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இல்லை என்பதை காணமுடியும். அதாவது வேதகாலத்து இந்தியாவின்  புவி பரப்பு  ஆப்கனிஸ்தான் அஜர்பெய்ஜான் பகுதி உட்பட்ட புவி பரப்பில் இந்தியாவின் தெற்கு எல்லையாக விந்திய மலை இருந்தது. மொகலாயர் காலத்தில் தான் இந்தியா நகர்ந்து இமய மலையை வட எல்லையாகவும் இந்து மாகடல் தென் எல்லையாக புவி பரப்பு கொண்ட இந்தியாவானது

          விநோதம் என்னவெனில் எந்த சைவ.வைணவ. சீக்கிய,இஸ்லாமியக் கிருத்துவ சாம்ராஜ்ய வாதிகளாலும், இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியவில்லை. 12ம் நூற்றாண்டு முதல் 1947 வரை இந்திய வரைபடத்தைப் பார்த்தால் ராஜவம்சங்களின் போர்க்களமாக இந்தியா இருந்தது  தெரியவரும் 10க்கும் மேற்பட்ட மன்னர்களின் ராஜ்ய விரிவாக்க யுத்தங்கள் நடந்த புவியாக இப்பகுதி இருந்தது.அதில் 200 யுத்தங்களை வரலாறு காட்டுகிறது. இது தவிர மகுடம் சூட யார் வாரிசு என்பதற்கான உள்நாட்டு யுத்தங்கள் பல ஆயிரமுண்டு. 1188ம் ஆண்டு நெட்டூர் போர்மூலம்  சோழ சாம்ராஜ்யம் பாண்டிய நாட்டை துடைத்தெறிந்ததும் அந்த சோழ சாம்ராஜ்யமும் பின்னர் காணாமல் போனதுமான வரலாற்றை.  எடுத்துக் காட்டாகக் குறிப்பிடலாம். . 

1169ம் ஆண்டில் பாண்டியநாட்டை ஆண்ட பாரக்கிரும பாண்டியனுக்கும் அவரது மகன் வீரபாண்டியனுக்கும் மூடி சூட நடந்த உள் நாட்டுக் கலவரம் எட்டு ஆண்டுகள் 1177 வரை நடந்தது. ராஜேந்திர சோழன் உதவியுடன் அப்பனை விரட்டி அடித்துவிட்டு மகன் வீர பாண்டி முடி சூடிக் கொண்டான். சிறிது நாளில் சோழன் வீரபாண்டியை அகற்றி பாண்டியநாட்டைத் தனதாக்கிக் கொண்டான். அதோடு பாண்டிய நாடு காணாமல் போனது. 1279ல் ஹொய்சல ராஜவம்சம் சோழ சாம்ராஜ்யத்தை முடிவிற்குக் கொண்டு வந்தது.   

 கி.மு 300லிருந்து கி.பி 1950 வரை 66 ராஜ வம்சங்கள்  இந்தியப்பகுதியைப் பங்கு போட்டு ஆண்டனர் என்பதை வரலாறு கூறுகிறது.. கடைசியாகப் பெரும்பகுதியை மொகலாயவம்சமும் அடுத்து பிரிட்டிஷ் ராஜகுடும்பமும் ஆண்டன.. 1947ல் காங்கிரசிடம் பிரிட்டிஷ் மன்னர் அதிகாரத்தை  ஒப்படைத்தபோது இந்தியப் பரப்பளவில் 40சத புவி பரப்பு 565 குறுநில மன்னர்கள் கையிலிருந்தது. 

 ஒரு நாட்டின் புவி பரப்பு எல்லைகள் கடந்த காலங்களில் மாறுவதற்குக் காரணமென்ன?  புவி பரப்பு எல்லைகளையும் பொது நாணயமும் கொண்ட நவீன நாடு எந்த கட்டத்தில் உருவானது ? 

ஆதி காலத்தில் மக்களின் ராஜவிசுவாசமே நாடுகளின் புவி பரப்பு எல்லையை தீர்மானித்தது.. இதனைப் புறநானூறு வரிகளால் அறியலாம்.

” நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”
(புறநானூறு : பாடல் : 186
பாடியவர் : மோசிகீரனார்)

மக்களின் தெய்வ நம்பிக்கையே ராஜவிசுவாசத்திற்கு அடிப்படை ஆகும் இந்த ராஜவிசுவாசமே நாட்டின் எல்லையை தீர்மானித்தது. அன்றைய மக்கள் கும்பிடுகிற தெய்வத்தின் மானுட அவதாரமாக ராஜாவைக் கருதி ஏற்றனர். அதுவே ராஜவம்சங்களின் ஆட்சிக்கு அடிப்படையானது. இன்று ராஜகுடும்பங்களும் வட்டியில் வாழும் பிரிவும் நவீன தொழில் முதலாளியாக உள்ளனர் இந்த பிரிவே மதவாத அரசியலைப் பேணுகிற வர்க்கமாகும் மேலை நாடுகளில் பங்குச் சந்தை மூலமே நடுத்தரவர்க்கம் முதலாளிகளாக உயர்ந்தனர். இந்தியாவின் முதலாளி வர்க்கம் உருவான வரலாறு வேறுபட்டது. ஏற்கனவே நிலமும், தங்கம் வெள்ளி ஊலோகங்களை செல்வமாக வைத்திருந்த சமூக பிரிவே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே நவீன முதலாளிகளாயினர்.



நவீன நாடுகளின் தோற்றம்.

70 ஆண்டுகளுக்கு முன்புதான் புவி பரப்பு எல்லைகளையும், பொது நாணயமும் கொண்ட நாடுகளின் பூந்தோட்டமாக உலகம் மாறத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போர் நிகழ்கிறவரை, உலக நியதி என்ன வென்றால் ஒரு மன்னர் தனது ராஜ்யத்தை விரிவாக்கப்  படையெடுப்பது பிற நாடுகளை வசப்படுத்துவது அடிப்படை உரிமையாகக் கருதப்பட்டது.

முதல் உலக யுத்த முடிவில்  ஐரோப்பிய மன்னர்களும் ராஜவம்ச ஆட்சி காணாத அமெரிக்காவும். ராஜவம்ச ஆட்சியை அகற்றிய பிரான்சும் உருவாக்கிய லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற அமைப்பின் விதிகள் நாடுகளைப் போரிட்டுக் கைப்பற்றுவதைத் தடைசெய்யவில்லை , ஆனால் வர்த்தக உறவைத் தடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியது.  லெனின் வார்த்தையில் சொன்னால் ஏகாதிபத்திய வாதிகள் காலணி நாடுகளைப் பங்கீடு செய்து கொண்டனர். மேலை நாட்டு முதலாளித்துவ கட்டமைப்பு பரவ சுதந்திர வர்த்தகத்தை நடைமுறை ஆக்கினர் எனலாம்.  அந்த பங்கீடு வல்லரசாக ஆகிவிட்ட ஜெர்மனுக்குப் பிடிக்காததால் இரண்டாம் உலக யுத்தம் வந்தது. சோவியத் புரட்சி விதைத்த அரசியல் விழுமியங்களால் எல்லைகளைக் கொண்ட நாடுகளாகப் பரிணமிக்கும் ஆக்கம் அதன் பிறகே தொடங்கியது காலணி ஆதிக்கம் செயலிழந்தது. 

இன்றைய இந்தியா பல தேசிய இனங்களின்  ஜனநாயக கூட்டமைப்பு குடி அரசாகப் பரிணமிக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.என்பதை அரசியல் கட்சிகளின் மோதலில்  காணமுடியும் இந்தியாவை ஜனநாயக குடி அரசாக,பல தேசிய இனங்களின் கூட்டமைப்பாக உருவாக்க முடியுமே தவிர இந்து சாம்ராஜ்யமாக உருவாக்க முடியாது,அப்படியே அதிகார பலத்தைச் செலுத்தி உருவாக்கினாலும் நீடித்து நிற்காது. 


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *