ஆளும் மேட்டுக்குடி வர்க்கம் மனிதாபிமானத்தை விட்டுவிட்டது –(பிராங்க் பாரட் விஜய் பிரசாத்துடன் உரையாடியது) | தமிழில் ச.சுப்பாராவ்
2020 ஏப்ரல் 6ம் நாள் கோவிட் -19 கிரானிகிளில் ஒலிபரப்பானது.
பிராங்க் பாரட் (இனிமேல் பி.பா) – மக்கள் கொரோனா வைரஸிற்கு ‘முன்‘, ‘பின்‘ பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பலரும். தாங்கள் ‘இயல்பு வாழ்க்கைக்கு‘ உடனடியாகத் திரும்பவேண்டும் என்கிறார்கள். ஆனால், டிரைகாண்டினென்டல் இன்ஸ்டிட்யூட்டின் சமீபத்திய செய்தி இதழில் நீங்கள், “நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பப் போவதில்லை, ஏனெனில் இயல்பு வாழ்க்கை என்பதுதான் பிரச்சனை,” என்று சொல்லியிருந்தீர்கள். அதை எங்களுக்கு விளக்க முடியுமா?
விஜய் பிரசாத் (இனி வி.பி) – இந்தப் பெரும்பரவல் தொற்றுதான் நம் சமூகம் எப்படி அமைந்திருக்கிறது என்பதைப் பற்றி யோசிப்பதற்கான வாய்ப்பு. பெரும்பரவல் தொற்று என்பது பிரச்சனையல்ல. அது மனிதர்களைக் கொல்லப்போகிறது என்பது உண்மையே ( என் நண்பர்களே அதனால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.) எனினும், ஒருவிதத்தில், அந்த பெரும்பரவல் தொற்று அமைப்பின் பலவீனத்தைக் காட்டியிருக்கிறது.
கடலில் செல்லும் ஒரு மரக்கப்பலை எடுத்துக் கொள்ளுங்கள். உளுத்துப் போன மரத்தில் அது செய்யப்பட்டிருந்தால், அது உடனடியாக மூழ்கிவிடும். இப்போது, வலுவான மரத்தால் செய்யப்பட்ட கப்பல் உங்களிடம் இருந்தாலும் கூட அதுவும் மூழ்கிவிடலாம் – ஏனெனில் கடல் அத்தனை சக்திவாய்ந்த ஒன்று. அதேபோலத்தான் இந்த வைரஸும் மிகவும் சக்திவாய்ந்தது. ஆனால் நாம் இந்த வைரஸிற்கு உளுத்துப்போன ஒரு கப்பலில் வந்திருக்கிறோம். நாம் உண்மையில் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இதுதான். – வைரஸைப் பற்றியல்ல. இறுதியில், வைரஸ் ஏராளமானவர்களைக் கொல்லும். ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும். நாமும் இந்த வைரஸை கடந்து விடுவோம். ஆனால் நாம் இந்த வைரஸ் அடையாளம் காட்டும் பிரச்சனைகளைக் கடந்துவிட முடியுமா? அதைத் தான் நாம் பார்க்க வேண்டும்.
இதில் சில பிரச்சனைகள் என்ன? ‘வளைவு தட்டையாகுதல்‘ என்ற சொற்றொடரைக் கவனிக்காது இருக்க முடியுமா? அதன் பொருள் என்ன? ஒரு மட்டத்தில் இது ஒரு இயல்பறிவு – ஒரே சமயத்தில் எல்லோருக்கும் உடல்நலம் குன்றுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக, நோயின் கடுமையை நாம் குறைக்க வேண்டும். உலகில் ஒவ்வொருவருக்கும், மருத்துவமனை படுக்கையும், வெண்டிலேட்டர் வசதியையும், – அதாவது 7 பில்லியன் தீவிர சிகிச்சை படுக்கைகள் – அளிக்கவல்ல ஒரு சமூக அமைப்பை நம்மால் ஏற்படுத்துவதற்கு சாத்தியமில்லை என்பதை நான் உணர்கிறேன்.

ஆனால், ஒவ்வொருவருக்கும் மருத்துவமனைப் படுக்கை மற்றும் வெண்டிலேட்டர் வசதி என்பதற்கும், உடல்நலம் குன்றியோருக்கு போதுமான படுக்கைகள் இல்லாத நிலை, வெண்டிலேட்டரே இல்லாத நிலை என்பதற்கும் இடையில் உள்ள இடைவெளியில் இந்த அழுகிப்போன சமூகம் பற்றிய ஒரு செய்தி, உண்மையில் ஒரு நாகரீகமே இல்லாதது பற்றிய செய்தி ஒன்று உள்ளது. யார் வாழப்போகிறார்கள், யார் சாகப் போகிறார்கள் என்பதை நாம் தேர்வு செய்ய நேராத வண்ணம், நாம் உடனடியாக ‘இந்த வளைவைத் தட்டையாக்க வேண்டும்‘ என்ற அவசியம். அமைப்பு இதுபோன்ற சிக்கல்களுக்குத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது.
சுகாதாரத்தை லாபம் சார்ந்ததாக ஆக்கலாம் என்று நினைத்தால், பின்னர் மருத்துவமனையின் ஒவ்வொரு படுக்கையும் ரியல் எஸ்டேட் நிலம் மாதிரி ஆகிவிடும். ஒரு படுக்கை காலியாக இருக்க உங்களால் அனுமதிக்க முடியாது. அடுக்ககம் கட்டியவர் அதில் ஏதேனும் ஒன்று காலியாக இருக்க விரும்புவாரா? அது 100 சதவிகிதம் வாடகைக்கு விடப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார். தங்கும் விடுதிகளும் எல்லா அறைகளிலும் ஆட்கள் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றன. ரூம் காலியாக இருக்கிறது என்றால்,. அந்த சொத்திலிருந்து நீங்கள் பணத்தை உருவாக்கவில்லை என்று அர்த்தம்.
பணம் பண்ணும் சொத்தாக நீங்கள் மருத்துவமனைப் படுக்கைகளை கருதினால், பிறகு உங்களுக்கு நிறைய படுக்கைகள் தேவையில்லை. சிறிய மருத்துவமனைகள் தான் வேண்டும். உங்களுக்கு நிறைய செவிலியர்கள் வேண்டாம். ஒரு சில செவிலியர்கள் போதும். இப்படி கூடுதல் செலவினங்களைக் குறைத்தால்தான் உங்கள் லாபம் அதிகரிக்கும். சுகாதாரம் பற்றிய உங்கள் கண்ணோட்டம் இப்படி இருக்குமானால், சுனாமியோ, கோவிட் 19 அல்லது சார்ஸ் கோவி 2 மாதிரியான நோய்களோ வரும்போது, உங்களிடம் ‘எழுச்சித் திறன்‘ (surge capacity) இருக்காது. அக்கார்டியனின் துருத்தியை இழுப்பது போல் புதிய படுக்கைகளை ஏற்படுத்த முடியாது. அது உடனடியான பெரும் சிக்கலாக உருவெடுக்கும்.

பெரும்பரவல் தொற்றின் இறுதியில் ஒரு பெரிய சிக்கல் வருவதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஆரம்பித்த மூன்றாம் நாளே என்றால்? நியூயார்க்கில் மூன்றாம் நாளே சிக்கலாகி விட்டது. உங்களிடம் போதுமான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் இல்லை. உங்களிடம் வெண்டிலேட்டர்கள் இல்லை. முகக் கவசங்கள் இல்லை. பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. இது அவமானகரமானது. இது சார்ஸ் கோவிட் பற்றிய அவமானமல்ல. நமது நாகரீகம் பற்றிய அவமானம்.
சுகாதாரத்தில் மட்டுமல்ல. கல்வியிலும் இப்படித்தான். மேலும், மேலும், மேலும், செலவின வெட்டு செய்யப்படும் ஒரு கல்வி அமைப்புதான் உங்களிடம் உள்ளது. ஆசிரியர்களால் மூச்சுவிட முடியாத அளவு சுமை. மேலும், அர்த்தமற்ற, பகுத்தறிவிற்கு ஒவ்வாத சிந்தனையைத் திணிக்கும் அதிதீவிர வலதுசாரிகளிடமிருந்து நெருக்குதல் வேறு வருகிறது. எனவே, வதந்திகள் பரவுகின்றன.
உலகில் பகுத்தறிவைக் கொண்டு வருவதுதான் மானிட போராட்டத்தின் நோக்கம். பகுத்தறிவு என்பது இங்கு இல்லவே இல்லை. இங்கு பகுத்தறிவ இருப்பதாக நான் நம்பவில்லை. இப்போது நாம் பகுத்தறிவால் மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியதாக உள்ளது. உலகில் பகுத்தறிவு வெளிப்பட நாம் போராட வேண்டியுள்ளது. ஆனால், சுகாதாரத்தில் சிக்கனம், கல்வியில் சிக்கனம், அனைத்திலும் சிக்கனம் என்ற இந்த உலகில் பகுத்தறிவு என்பது சாத்தியமில்லாது போகிறது. அது மக்களைக் கொடுமைப்படுத்துகிறது. இதெல்லாம் இந்த பெரும்பரவல் தொற்று வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்னரே இருக்கிறது. இந்தப் பெரும்பரவல் தொற்று இந்த சமூகம் எப்படி சீரழிந்து போயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த பெரும்பரவல் தொற்றே சமூகத்தைச் சீரழித்து விடவில்லை.
பி.பா – அரசியல்வாதிகளிடம் சுகாதாரத்திற்கு அதிக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று சொன்னால், அவர்களது பதில் “ ஆமாம், நான் சுகாதாரத்திற்கு அதிக ஒதுக்கீடு செய்தால், கல்விக்கான ஒதுக்கீட்டை குறைக்க நேரும். அதனால் ஆசிரியர்கள் வருந்துவார்கள். கல்வியில் அதிகமான முதலீடு செய்ய வேண்டும். என்றால் நான் மற்றொன்றிலிருந்து ஒதுக்கீட்டைக் குறைக்கவேண்டும். பிறகு…“ என்பதாகத்தான் இருக்கும். எனவே சுகாதாரம், கல்வி போன்றவற்றில் முதலீடு செய்ய பணம் எங்கிருந்து எடுப்பது?
விபி – ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன் – ட்ரைகாண்டினென்டல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் ரிசர்ச்சில் நாங்கள் வரிச்சலுகைகளில் எவ்வளவு பணம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி ஆராய்ந்தோம். பணத்தைத் திரட்டுவதற்கு அங்கு நூற்றுக்கணக்கான வழிகள் உள்ளன. ஆனால் இதை ஒரு நல்ல துவக்கப் புள்ளியாக மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதோடு கரிபியனோ, அல்லது மற்ற நாடுகளில் உள்ள வரிச்சலுகைகள் பற்றிய தகவல்களையும் சேர்த்தால்.
உங்களுக்குக் கிடைக்கும் எண்ணிக்கை – 32 டிரில்லியன் டாலர். இந்தத் தொகை உலகில் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பை விட அதிகமாகும். இந்தப் பணம் உங்களுக்குக் கிடைக்காமல் போவதற்கான காரணங்கள் 1) இது வரிச்சலுகையில் உள்ளது. 2) எந்த நாட்டிலும் வலுவான மூலதனக் கட்டுப்பாடுகள் போதுமான அளவு இல்லை. நாம் வெறுமனே செல்வந்தர்களை தமது பணத்தையெல்லாம் வரிவிதிப்பிலிருந்து வெளியே அனுப்ப அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே, பணம் இருக்கிறது. மேலும், ஆயுத வியாபாரத்தில் பணம் இருக்கிறது. அயுதங்கள் விற்பதில். வாங்குவதில் டிரில்லியன் கணக்கில் டாலர்கள் புழங்குகின்றன. உங்களுக்கு எவ்வளவு ஆயுதங்கள் உண்மையாகவே தேவைப்படும்? உலகெங்கும் பங்குச் சந்தைகளில், சூதாட்ட விடுதிகளில் ஏராளமான பணம் இருக்கிறது. வங்கிகள் எல்லாம் அப்படியே பணத்தின் மீது தான் உட்கார்ந்துள்ளன. 2008ற்குப் பிறகு அமெரிக்காவின் பிரடெரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைத்து, பணப்புழக்கத்தை தாராளமாகத திறந்துவிட்டது. வங்கிகளும் பணத்தை வாங்கி அப்படியே வைத்துக் கொண்டன. அவற்றிற்கு லாபகரமான முதலீடுகள் எதுவும் இல்லை.
ஆனால், வங்கிகளுக்கு யாரும் வரி விதிக்கப் போவதில்லை. சாமர்த்தியமாக விலை வைத்தல், விலையைத் தவறாகக் கூறுதல் போன்ற நிறைய தந்திரங்கள் மூலம் அவை பணத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி விடுகின்றன. இது ஒருவிதமான ரசவாதம். பணம் காணாமல் போகிறது. அரசாங்கம் பணத்தை இலவசமாகத் தருகிறது. அது எடுத்துக் கொள்ளப்படுகிறது. மறைக்கப்படுகிறது. பிறகு நீங்கள், ”கல்வி, சுகாதாரத்திற்கு செலவிட எங்கிருந்து வரிப்பணம் வருகிறது?” என்று எங்களிடமே கேட்கிறீர்கள். என்னிடம் ஒரு அரசியல்வாதி இப்படிச் சொன்னால். நான் அப்படியே அவரைக் கன்னத்தில் அறைந்துவிடுவேன். இது மிகவும் கபடமானது. தாம் என்ன செய்தோம் என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அவர்கள், ஆளும் மேட்டுக்குடிகளை 40 – 50 ஆண்டுகள் வரிகொடா இயக்கம் மேற்கொள்ள அனுமதித்திருக்கிறார்கள்.
ஆளும் மேட்டுக்குடிகளும் இந்த இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் மேலிருந்து வேறொரு விதமான வர்க்கப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படையாக, சமூக அமைப்பிலிருந்து தமது பணத்தை திரும்ப எடுத்துக் கொண்டதன் மூலம், அவர்கள் மனித இனத்தைப் புறக்கணிக்கிறார்கள். பின்னர் அவர்கள் சற்று திரும்பி, தமது பணத்தை நன்கொடையாக அளிக்கிறார்கள். எனக்கு அந்த பரோபகார ஈகை தேவையில்லை. நான் வரிவிதிப்பை வேண்டுகிறேன். யாரோ ஒருவர் மருத்துவமனைகளுக்கு பணம் தருகிறார் என்றால், நீங்கள் அவருக்கு துதிபாட வேண்டும். மருத்துவமனைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும். ஈகை என்பது ஜனநாயகமானதல்ல. அது முடியாட்சி. வரிவிதிப்பு தான் ஜனநாயகம்.

உலகில் போதுமான அளவிற்கு பலன் தரும் நிதி ஆதாரங்கள் உள்ளன. நம்மிடம் இருக்கும் சமூக அமைப்பு இந்த ஆதாரங்கள் மறைக்கப்படுவதற்கும். ஜனநாயகபூர்வமாக பயன்படுத்தப்படாமைக்கும் அனுமதிக்கிறது என்பதுதான் பிரச்னை. நாம் கவனிக்க வேண்டிய அம்சம் இதுதான்.
பிபா – முதலாளித்துவ அமைப்பு இருக்கும்போது. விஷயங்களை மாற்றுவதற்கான அரசியல் விருப்பு இருக்காது. ஒவ்வொரு பிரச்சனைக்குப் பிறகும் மக்கள் சமூகத்தில், அது நடத்தப்படும் விதத்தில் ஏதோ மிகவும் தவறாக இருக்கிறது என்று அறிவார்கள். ஆனால் அவர்களுக்கு அதை எப்படி சரிசெய்வது என்று தெரியாது. எனவே, அதை மறந்து விட்டு, வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். கோவிட் -19ற்குப் பிறகும் நமக்கு – மக்களுக்கு – இப்படித்தான் இருக்கும். மாற்றத்திற்கு குறைந்தபட்சம் நாம் எப்படி ஆரம்பிக்கவாவது செய்யலாம்?
விபி – ஒரு வகையில் இது முன்பிருந்த அதே கேள்வியல்ல. கோவிட்-19 கருத்துப் போரை தீவிரப்படுத்தி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இப்போது சுகாதார முறைகள் முன்னேற்றப்பட வேண்டும் என்று மக்கள் பரவலாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதில் பெரிய விவாதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
ஸ்பெயினில் அவர்கள் அவர்களது சுகாதார அமைப்புகளை சட்டென்று தேசியமயமாக்கிவிட்டார்கள் என்று அறிந்தேன். பிரான்ஸிலும் கூட அவர்கள் சில விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்.‘பிரச்சனைகள் வரும்போது சோஷலிசம். பிரச்சனைகள் இல்லா காலங்களில் வெறித்தனமான முதலாளித்துவம்,‘ என்று மக்கள் வேடிக்கையாகச் சொல்வார்கள். இது வேடிக்கையானதல்ல. ஏனெனில், பிரச்சனைகள் உள்ள காலத்தில், அது சோஷலிசமாக இருப்பதில்லை. பிரச்சனைகள் ஏற்படும் காலத்தில் பெரிய விலையை மக்கள்தான் தர நேர்கிறது. பிரச்சனைகள் இல்லாத காலத்தில் ஆளும் மேட்டுக்குடிகள் அதன் பலன்களை அனுபவிக்க நாம் அனுமதிக்கிறோம். பிரச்சனைக்கான செலவு பில்தான் சாதாரண மக்களுக்குத் தரப்படுகிறது. இது இப்போது புரிந்து கொள்ளப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.
வேறுவிதமாகச் சொன்னால், கோவிட் – 19 கருத்துப் போரை வேகப்படுத்தி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்த உண்மையை நாம் மிக உரத்துச் சொல்லவேண்டும். இந்த உண்மையை பூசி மெழுகாது, அப்படியே பச்சையாகச் சொல்லவேண்டும். இந்தப் பிரச்சனையை கையாள்வதற்குத் திறனற்ற ஒரு சமூக அமைப்பை நாம் உருவாக்கியிருக்கிறோம், இப்போது அதன் செலவுகளை எளிய மக்கள் மீது, எளிய மக்களின் குழந்தைகளின் மீது நாம் திணிக்கிறோம் என்பதே அந்த உண்மை. அதே சமயம் வரிச்சலுகைகளில் பணம் இருக்கிறது.

குறைந்தபட்சம் அதன் மதிப்பின் பெரும்பகுதியை அப்படியே காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள். பங்குச் சந்தை வீழ்ந்தால், உடனடியாக அதற்கு பில்லியன் கணக்கான டாலர்களை தரவேண்டும் என்கிறீர்கள். இது ஒரு கிரிமினல் எதிர்வினை. நாம் கருத்துப் போரை தீவிரப்படுத்துவது அவசியம். இது ஒரு அறிவுஜீவித்தனமான வாதம். ஆனால், அதனோடு, அரசியல் இயக்கங்களும் வளர்த்தெடுக்கப்பட்டு, ஆதரிக்கப்பட வேண்டும். அவை சமூகத்தில் முதிர்ச்சியும் பெறவேண்டும்.
இடதுசாரிகள் தாம் மட்டுமே இடதுசாரிகள் என்று கருதிக் கொள்ளக் கூடாது என்று நான் நீண்ட நாட்களாகவே நினைத்து வருகிறேன். சமூகம் முன்னேறிச் செல்ல தாங்கள் மட்டும்தான் நம்புதற்குரிய ஒரே வழி என்று அவர்கள் உணரவேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், நவீன தாராளமயவாதிகள், ஒட்டுமொத்த பூர்ஷ்வா அமைப்புகள் எல்லாம் அடிப்படையாக, எதிர்காலமே இல்லை – உங்களுக்கு இருப்பதெல்லாம் நிரந்தரமான நிகழ்காலம் மட்டும்தான் – என்று சொல்லி வருகிறார்கள். ”நண்பர்களே! இன்று இருக்கும் நிலைதான் எப்பொழுதும் இருக்கப் போகிறது. உங்களுக்கு செலவுகளைச் சமாளிக்க சிரமமாக இருக்கிறதா? உங்கள் குழந்தைகளுக்கும் செலவுகளைச் சமாளிக்க சிரம்மாகத்தான் இருக்கும்.
பிறகு அவர்கள் குழந்தைகளுக்கு? ஓரிருவர் எப்படியோ லிப்டில் ஏறி மொட்டை மாடி வரை செல்லலாம். (அவர்கள் அசாதாரண திறமைசாலிகளாக இருப்பார்கள். யாராவது ஒருவரால் அடையாளம் காணப்படுவார்கள். அவர்கள் நன்றாகப் பாடுபவர்களாக இருக்கலாம். ஏதாவது ஒரு முட்டாள்தனமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான பணம் சம்பாதிக்கலாம்) ஆனால், உங்களில் பெரும்பாலானோருக்கு, நீங்கள் வாழ்ந்த போராட்டமான வாழ்க்கைதான் உங்கள் குழந்தைகளுக்கும்.”. இதைத்தான் பூர்ஷ்வா அமைப்பு சொல்கிறது.
இந்த பூர்ஷ்வா அமைப்பை எதிர்த்துப் போராடுவதில் மட்டுமின்றி, பொதுவாகவே இடதுசாரிகள் இன்னும் அதிகமான போர்க்குணமிக்க ஒரு நிலைபாட்டை எடுக்க வேண்டும். ‘எதிர்காலம் ரத்தாகிவிட்டது என்ற இந்தக் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. எதிர்காலம் இல்லை, முடிவற்ற நிகழ்காலம்தான் என்பதை நாங்கள் ஏற்கமாட்டோம். நாங்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்,‘ என்று சொல்ல வேண்டும்.

சோவியத் யூனியன் சிதறியதற்குப் பிறகு, இடதுசாரிகளான நம்மில் பலர் தண்டிக்கப்பட்டவர்களாக உணர்ந்தோம். நமது உட்டோபியா எவ்வாறோ அடக்கப்பட்டு விட்டது என்று உணர்ந்தோம். பொதுவெளியில் வந்து , “நாங்கள் சோஷலிசத்தை ஆதரிக்கிறோம்,” என்று சொல்வது சாத்தியப்படவில்லை. முன் எப்பொழுதையும் விட இப்போது, இன்று என்ன தவறாக உள்ளது என்பதை விட, எதிர்காலத்தைப் பற்றிப் பேசவேண்டியது அவசியமாக இருக்கிறது.
நிகழ்காலத்தைக் குறித்த விமர்சனம் வெறும் நிகழ்காலத்தைக் குறித்த விமர்சனம் மட்டுமல்ல. நிகழ்காலம் குறித்த விமர்சனம் என்பது எதிர்காலத்தை நோக்கிய பயணமாகும். நம்மில் நிறைய பேர் நவீன தாராளமயத்தை தொடர்ந்து விமர்சிப்பது என்ற பொறியில் சிக்கியுள்ளோம். அது நமது பொறுப்பு தான். ஆனால், நிகழ்காலம் கறித்த விமர்சனம் எதிர்காலத்திற்கான கதவுகளைத் திறக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களால் சமூகத்தை வென்றெடுக்க முடியாது.
நிகழ்காலத்தைக் குறித்த சிறந்த விமர்சனத்தை அளித்தது தான் அதன் மிகச் சிறந்த சாதனை என்று சொல்லிக் கொள்ளும் ஒரு அரசியல் போக்கின் பக்கமாக சமூகம் வர விரும்பாது. ஒரு மாற்றை, இந்த முட்டாள்தனமான, முடிவற்ற நிகழ்காலமாக இல்லாமல், ஒரு எதிர்காலத்தை நீங்கள் தரமுடிந்தால்தான் சமூகம் உங்கள் பக்கமாக வரும். சமூகத்தை நீங்கள் மேலாதிக்கம் செலுத்த முடியும். உண்மையில் பூர்ஷ்வா அமைப்பு சிதைந்துவிட்டது. அது முடிந்து விட்டது. எதிர்காலத்திற்காக அதனிடம் எந்த விடைகளும் இல்லை. அதனால் தான் அவர்களுக்கு எதிர்காலம் என்பது ரத்தாகி விட்டது என்று நான் கூறினேன்.
ஆனால், நமக்கு எதிர்காலம் தான் அனைத்துமே. ஏனெனில் நாம் இந்த நிலையைப் பார்த்து, ‘இதெல்லாம் வேடிக்கையா என்ன?‘ என்று கேள்வி எழுப்புகிறோம். இந்தியாவில் 700 மில்லியன் மக்களுக்கு அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரப்போகிறது என்பது தெரியாது. இதுதான் ஒரு நாகரீகத்தின் வேடிக்கை. இந்திய அரசாங்கம் ஒரு லாக்அவுட்டை அறிவித்துவிட்டு, புலம்பெயர்ந்த தொழிலாளிகளைப் பார்த்து, “வீட்டுக்குச் செல்லுங்கள்,” என்று எளிதாகச் சொல்கிறது. சாப்பாடு இல்லாமல், கையில் பைசா இல்லாமல் மக்கள் வீடு நோக்கி 1100 கிமீ நடக்கிறார்கள். இது ஒரு மனித உரிமை மீறல். இநத பூர்ஷ்வா அமைப்பு ஒரு மனித உரிமை மீறலாகும்.
நாம் தான் எதிர்காலம் – அதுதான் நமது உளப்பாங்கு.
பி.பா – இந்த சிக்கலை அரசாங்கங்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றன என்பதை நாம் அறிவோம். நம்பிக்கையோடு இருக்க நினைப்பவர்கள் அரசாங்கங்கள் முன்பு இருந்த நிலைக்கு திரும்பச் செல்ல மாட்டா என்று கூறுகின்றனர். ஆனால், அவர்கள் இன்னும் கடுமையாக நம்மை நசுக்குவார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஹங்கேரியின் ஓர்பன், டிரம்ப், போல்சோனரா ஆகியோரிடம் நாம் இதை ஏற்கனவே பார்த்து விட்டோம். கோவிட் -19ற்கு முன் இருந்ததை விட பெரும்பாலான மக்கள்திரளுக்கு கோவிட் -19ற்குப் பின் மிகக் கடுமையாக இருக்கப் போகிறது. எனவே, ஒரு இயக்கமாக, மக்கள்திரளாக, அடுத்த ஓரிரு மாதங்களுக்கு மக்களுக்கு மிகவும் அவசியமான ஆதரவை எவ்வாறு தரலாம் என்று நினைக்கிறீர்கள்?
விபி – இது பற்றி நான் இரண்டு விஷயங்களைச் சொல்கிறேன். முதலாவது, உலகெங்கும் உள்ள அரசியல் இயக்கங்கள் இந்தப் பிரச்சனை குறித்து இன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். இது உங்களாலோ, என்னாலோ தீர்க்க முடிந்த பிரச்சனை அல்ல. அரசியல் இயக்கங்களும், சமூக இயக்கங்களும் இதைப் புரிந்து கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு இதை உடனடியாகப் புரிந்து கொள்ளும் திறன் இருக்கிறது. அவர்கள் அதற்கு எதிர்வினை ஆற்றுவார்கள்.

இரண்டாவது, மிக நடைமுறை சார்ந்த விஷயம். என்னவென்றால், உலகெங்கும் ஊரடங்கு ஆரம்பித்தவுடன், டிரைகாண்டினென்டல் இன்ஸ்டிட்யூட்டும், இன்டர்நேஷனல் அசெம்பிளி ஆஃப் பீப்பிள்ஸும் இணைந்து ஒரு 16 அம்ச அறிக்கையை உருவாக்கின. இன்டர்நேஷனல் அசெம்பிளி ஆஃப் பீப்பிள்ஸ் என்பது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் சுமார் 200 அரசியல் இயக்கங்கள் – உதாரணத்திற்கு, நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி (இது தற்போது அங்கு ஆட்சியில் இருக்கிறது), பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கம். துனீசியாவின் தொழிலாளர் கட்சி போன்ற பெரிய அமைப்புகள் – இணைந்துள்ள ஒரு அமைப்பாகும். எங்கள் இணைய தளத்தில் நீங்கள் அந்த அறிக்கையைப் பார்க்கலாம். அதற்கு ஒப்புதல் வழங்குமாறு நாங்கள் மக்களைக் கேட்டுக் கொண்டோம்.
அது வெறும் சொல்லளவிலான அறிக்கையல்ல. உதாரணத்திற்கு, தென்னாப்ரிக்காவின் குடிசைவாழ் மக்களின் இயக்கமான Abahlali baseMjondolo தங்களது இயக்கத்தின் பிரத்யேக பிரச்சனைகளின் அடிப்படையில் தங்களுக்கான கோரிக்கைகளை உருவாக்கியுள்ளது. எனவே, வெறும் கொள்கைகளாக இல்லாமல் ஒரு சரியான நோக்கத்தை முன்வைத்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம். இது மக்களின் போராட்டங்களில் ஆழமாக இறங்கும்.
அரசியலில் நாம் என்ன சொல்வோம்? ஈட்டியை வைத்திருப்பதில் பயனில்லை. அதன் முனை தீட்டவேண்டும் என்போமல்லவா? இந்தக் கூர்தீட்டல் இரு திசைகளில் நடக்கிறது. இது போராட்ட அனுபவத்திலும், போராட்டம் குறித்த சிந்தனையிலும் நடக்கிறது. அதாவது. தத்துவத்திலும், நடைமுறையிலும். உங்களுக்கு பொராட்டத்தின் அனுபுவமும் வேண்டும். பின்னர் நீங்கள் போராட்டம் குறித்து சிந்திக்கவும் வேண்டும். நீங்கள் ஒரு புது தத்துவத்தை உருவாக்க வேண்டும். பின்னர் அதை பரிசோதிக்க வேண்டும், உணர வேண்டும், பின்னர் அது பற்றி சிந்திக்க வேண்டும். அதற்காகத் தான் நாங்கள் இந்த 16 அம்ச அறிக்கையைஉருவாக்கி இருக்கிறோம்.

தத்துவப் போரிற்காக. நாங்கள் வெளியே சென்று ஒரு மாற்று இருக்கிறது என்று சொல்ல விரும்புகிறோம். வாடகையை நிறுத்தி வைப்பதை நாங்கள் விரும்பவில்லை. வட்டியை, வாடகையை நிறுத்தி வைத்தால், கோவிட் -19ற்குப் பிறகு நீங்கள் அதை திரும்பத் தரவேண்டும் என்பதுதான் அர்த்தம். இல்லை. நாங்கள் கோவிட் -19ன் சுமையை வீட்டு உரிமையாளர்கள் சுமக்க வேண்டம் என்று விரும்புகிறோம். கோவிட் -19ன் சுமையை அரசாங்கம் சுமக்கவேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு நிதி திரட்ட சொத்து உள்ளவர்கள் மீது சொத்துவரி விதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இவையெல்லாம் நடைமுறை சார்ந்த யோசனைகள். இவை தத்துவத்திலிருந்து வருகின்றன. ராட்ட அனுபவத்திலிருந்தும் வருகின்றன.
எனவே, இந்தக் கட்டத்தில் நாங்கள் நிராயுதபாணியாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. சுற்றிலும் ஏராளமான அரசியல் இயக்கங்கள் நடக்கும் ஒரு உலகில் வாழ்வதாகவே நான் நினைக்கிறேன். பிரான்சில், தேர்தல் அரசியலிலும், வீதிகளிலும் ஒரு இடதுசாரிப் போக்கு தென்படுகிறது. இத்தாலியிலும் ஒரு மேடை உருவாகி உள்ளது.(Power to the People) அங்குள்ள மக்கள் ஒரு மாற்று எதிர்காலத்திற்காகப் போராடுகிறார்கள். எனவே இதை நான் நம்பிக்கையோடு பார்க்கிறேன்.
மனிதகுல அனுபவத்தில் இது மற்றொரு அருவருப்பான அத்தியாயம். அவ்வளவுதான். ஆனால், மனித அனுபவத்தின் அருவருப்பான தன்மைக்கு மற்றொரு பக்கமும் இருக்கிறது. அது பண்போடு இருப்பதற்குப் போராடக்கூடிய நமது திறன். இந்த அருவருப்பான விஷயத்தில் நாம் சிக்கிக் கொள்ள வேண்டாம். உணர்வுள்ள மக்களாக. பண்பட்ட ஒன்றிற்காக போராடக்கூடிய நமது சக்தி பற்றி நாம் இயங்கியல் ரீதியாக நினைவு கொள்ள வேண்டும். அதற்காகத் தான் நாம் வாழவேண்டும். நீங்கள் தனிமைப்பட்டு சிக்கிக் கொண்டுவிட வேண்டாம். நீங்கள் சமூக ஒற்றுமையோடு வாழ வேண்டும்.
(விஜய் பிரசாத் டிரைகாண்டினென்டல் இன்ஸ்டிட்யூட் ஃபார் சோஷியல் ரிசர்ச்சின் இயக்குநர். லெஃப்ட்வேர்ட் புக்ஸின் தலைமை ஆசிரியர்.
பிராங்க் பாரட் மனித உரிமைப் போராளி. எழுத்தாளர், பத்திரிகையாளர், தயாரிப்பாளர். எட்டாண்டு காலம் பாலஸ்தீனத்திற்கான ரஸ்ஸல் டிரிபுனலில் ஒருங்கிணைப்பாளராக இருந்திருக்கிறார். ஏஞ்சலா டேவிஸ், நோம் சாம்ஸ்கி. இலான் பாப்பே, கென் லோச் ஆகியோருடன் இணைந்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.)