ஜனநாயக வேரை பிடுங்கியெறியும் சங்கப் பரிவார் – A.K.முகேஷ் (இந்திய மாணவர் சங்கம்)2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி 68 வயதான நரேந்திர தபோல்கர் புனேயில் கொலை செய்யப்பட்டார். 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி 82 வயதான கோவிந்த் பன்சாரே கோலாப்பூரில் கொலை செய்யப்பட்டார்.2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி 77 வயதான எம்.எம்.கல்புர்கி ஜுப்ளியில் கொலை செய்யப்பட்டார். 2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி கௌரி லங்கேஷ் பெங்களூரில் கொலை செய்யப்பட்டார்.
 இவர்கள் நால்வரையும் கொன்றது ஒரு துப்பாக்கி தான் அது நாக்பூர் வடிவமைப்பு துப்பாக்கிதான். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு தாங்கள் விரும்பியதை உண்டதற்காக, உடுத்தியதற்காக, எழுதியதற்காக, பேசியதற்காக பலரும் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு, பிடித்ததையே நாமும் உண்ணவேண்டும், உடுத்த வேண்டும், எழுத வேண்டும், பேச வேண்டும் என்று நினைப்பது ஒரு பாசிச மனநிலை.
ஆனந்த் டெல்டும்டே, வரவரராவ், சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா சாய்பாபா, சுரேந்திர காட்லிங் ஆகியோர் பொய்யான வழக்குகள் புனையப்பட்டு சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சாய்பாபா ஒரு மாற்றுத்திறனாளி , தனியாக கழிவறை கூட செல்ல முடியாது. 85 வயதில் நோயால் அவதிப்படுகிறார் கவிஞர் வரவரராவ். கர்ப்பிணி பெண்ணான சபூரா ஜாகரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது மோடி அரசு.
2018 இல் வைரமுத்து ஒரு புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசினார். அதற்கு எதிராக சங்கபரிவார் கும்பல் சோடாபாட்டில் என்று கிளம்பியது. அதே,  ஆண்டில் பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக கூச்சலிட துவங்கியது. 2019ல்  “நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்” புத்தகத்தை வெளியிட தடை விதித்ததுடன், பாரதி புத்தகாலயத்தின் புகுந்து புத்தகங்களை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை.
 “நீங்கள் சொல்வதை நான் அடியோடு மறுக்கலாம்.ஆனால், அதைச் சொல்வதற்கான ஜனநாயக உரிமை உங்களுக்கு உண்டு”என்ற அடிப்படை ஜனநாயக கோட்பாட்டிற்கு எதிரான இருக்கின்ற ஜனநாயகத்தின் அடியோடு பிடுங்கியெறிய நினைக்கும் கூட்டம் சங்கப் பரிவார்.
பாசிசத்தையும்,பலில்லாவையும் இந்தியாவில் பரப்புவோம் ” என்று சொன்ன மூஞ்சேவின் வாரிசுகளான ஏபிவிபி என்னும் சங்பரிவார் கூட்டத்தின்  சொல் கேட்டு, எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய Walking with the comrades புத்தகத்தை பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து நீக்கியிருக்கிறது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்ககலைக்கழகம்.
 எழுத்தாளர் அருந்ததி ராய் மாவோயிஸ்டுகளை நேரடியாகச் சந்தித்து அவர்களுடன் விவாதித்தும்,  அவர்களில் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கை கதையையும் இணைத்து  புத்தகத்தை எழுதியுள்ளார். இது 2010ல் வெளியானது. அவுட்லுக் இதழில் கட்டுரைகளாகவும் வந்தது.


 மாவோயிஸ்டுகளை பெருமைப்படுத்தியும், சட்டீஸ்கர் மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் அவர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எழுதியிருக்கிறார். அதேசமயத்தில் மாவோயிஸ்டுகளை பழங்குடியினர் ஆதரிப்பதன் காரணத்தையும் விளக்கியுள்ளார். மெய்யான  புரட்சியாளர்கள், புரட்சி கனவை நனவாக்குபவர்களாக மாவோயிஸ்டுகளை வர்ணிக்கிறார்.
வேதாந்தா நிறுவனத்தின் கனிமவள கொள்ளையையும், பழங்குடியினரின் எதிர்ப்புணர்வு என்பது மாவோயிஸ்டுகளுக்கு முன்பாக தோன்றியது குறித்தும், சல்வா ஜூடும் அப்பகுதி கிராமங்களை தீ வைத்து எரித்ததையும் விளக்குகிறது.
மாவோயிஸ்டுகளை ஆதரிப்பதும், எதிர்ப்பதும், அருந்ததிராயின் தனிப்பட்ட உரிமை. நான் எதிர்க்கிறேன் அதனால் நீயும் எதிர்க்க வேண்டும் என்பது சங்பரிவார் மனநிலை. நீங்கள் அருந்ததி ராயுடன் முரண்படலாம். அவருடன் விவாதிக்கலாம். ஆனால், நான் சொல்வதை எழுது என்று வற்புறுத்த முடியாது.
முரண்பாடில்லா  கல்வி என்று ஒன்று இருக்க முடியாது. அப்படி,முரண்பாடில்லா  கல்வி என்பது முட்டாள்களை உருவாக்கலாமே தவிர, சிந்தனையாளர்களை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.கல்வி நிலையங்களை காவிநிலையங்களாக  மாற்றுவதற்கான முதற்கட்ட வேலைகளாக  பல்கலைக்கழக துணைவேந்தர்களை நாக்பூர்  தேர்ந்தெடுக்கிறது.இவர்கள், கடிவாளமிட்ட குதிரைகள் மட்டுமல்ல, ம குரூரமான இந்துத்துவஅடிப்படைவாதிகள்.
Walking with the comrades என்று அருந்ததி ராய் 2010ம் ஆண்டு மார்ச் மாதம், அவுட்லுக்கில் எழுதத் தொடங்கினார். அருந்ததி ராயின் நிலைப்பாடு குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து ஏப்ரல் மாதம்2010ம் ஆண்டு சுதன்வா தேஷ்பாண்டே அவுட்லுக் இதழில் “She was there ” என்ற மறுப்புக் கட்டுரையையும் எழுதினார்.
 மாவோயிஸ்டுகளின்  செயல்பாடு குறித்தும்,அவர்களது தனிநபர் சாகசவாத, குறுங்குழு வாதத்திற்கு  எதிராக நாம் நமது கருத்துக்களை முன்வைக்கலாம். மாவோயிஸ்டுகளை ஆதரித்து ஒருவர் கருத்தை முன்வைக்கலாம். அமர்த்தியா சென் சமீபத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது, ” ஜனநாயகம் என்பது உரையாடலின் மூலம் சாத்தியமாகும்”.
 ஆனால், சங்பரிவார் கும்பல் ஜனநாயக மறுப்பினை  தனது அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரு கூட்டத்தில் பேசும்போது அருந்ததி ராய் சொன்னால் “அவர்கள், (சங்பரிவார்) அறிவாளிகளை மட்டுமல்ல அறிவைக் கொண்டும் அஞ்சுகிறார்கள்”.


 மாவோயிஸ்டுகளின் லால்கர் முற்றுகையின் போது, பிப்ரவரி 4,2009 அன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அங்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டதுடன், மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா மீது நடந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கிய மாவோயிஸ்ட்டான சசாதர் மகதோவின்  சகோதரரும் பிசிபிஏவின் தலைவருமான சத்ராதார் மகதோவுடன் மம்தா பானர்ஜி மேடையைப் பகிர்ந்து கொண்டதுடன், அவர்கள் நோக்கத்திற்கு ஆதரவையும் தெரிவித்தார்.
அக்டோபர் 4,2009 அன்று மேற்கு வங்ப் பத்திரிக்கையான “ஆனந்த பஜார் பத்திரிகா”விற்கு மாவோயிஸ்ட் தளபதி  கோடீஸ்வர் ராவ்  அளித்த நேர்காணலின் போது, “மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக மம்தா பானர்ஜியை  காண விரும்புவதாக” கூறினார்.இவையெல்லாம், மாவோயிஸ்டுகள் மெய்யான புரட்சி அடையாளத்தை உடைத்து நொறுக்கியுள்ளது.
சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது இடது தீவிரவாத போக்கு உள்ள ஒரு கும்பலின் பிடியில் சிக்கியிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய இடதுசாரி சாகசவாதிகளை ஆதரித்தது  மட்டுமல்லாமல் தங்களது அதிகாரத் பூர்வ  ஏடான பீப்பிள்ஸ் டெய்லியில்  ஜூலை 5, 1967இல் “இந்திய வானில் வசந்தகால இடிமுழக்கம் தோன்றிவிட்டது”எனும் தலைப்பில் தலையங்கம் எழுதி நக்சல்பாரி இயக்கத்தை வரவேற்று இருந்தது.
பிற்பாடு தவறுகளில் இருந்து தன்னை திருத்திக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிசம்(Maoism)  என்பதை  ஏற்கவில்லை. மாசேதுங் சிந்தனைகள்(Mao zedong Thoughts)  என்றுதான் வரையறுத்தது. நேபாள மாவோயிஸ்டுகள் ஒரு கட்டத்தில் ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பினர். லத்தீன் அமெரிக்காவும் அதிதீவிரவாதத்தை கடந்து வந்துவிட்டது.
21ம் நூற்றாண்டில் உலக இடதுசாரி இயக்கங்களில் பரிமாணம் மாறத் தொடங்கிற்று. ஆனால், அருந்ததிராய் போன்ற சில லிபரல் இடதுசாரிகள் மாவோயிஸ்டுகளை புனிதப்படுத்தப்பட்ட புரட்சியாளர்களாக அடையாளப்படுத்துவதன் மூலம் எதையும் சாதிக்க போவதில்லை.
 இந்திய இடதுசாரி அறிஞர்  விஜய் பிரசாத் வார்த்தைகளுடன் நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும், “இடதுசாரிகள் முன்னேறுவதற்கான பாதை மக்கள் இயக்கங்களினூடாகத்தான்  இருக்கிறது துப்பாக்கிகள் மூலமல்ல”
துணைநின்றவை :
1) தோழர்களுடன் ஒரு பயணம் — அருந்ததி ராய் (தமிழில் – அ.முத்துக்கிருஷ்ணன்)
2)மாவோயிஸம் இடதுசாரிகளின் விமர்சனம் -தொகுப்பு :  பிரஸென்ஜித் போஸ் (தமிழில் – மிலிட்டரி பொன்னுசாமி)  
( குறிப்பு : 
A.K.முகேஷ்,
மாவட்டச் செயலாளர்,
இந்திய மாணவர் சங்கம்,
திண்டுக்கல் மாவட்டக்குழு.
திண்டுக்கல் அனுக்கிரகா சமூகவில் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வருகிறேன்.
தொடர்புக்கு : [email protected] )