மாபெரும் நிகோபார் திட்டத்தின் (Great Nicobar Project) பின்னணியில் உள்ள பாதுகாப்புப் புனைவு
ஆங்கில மூலம்: சுஷாந்த் சிங்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
இராணுவத் தேவைகளை விடப் பன்மடங்கு அதிகமாக ஏற்படக்கூடிய சூழலியல் சேதத்தையும் வணிக விரிவாக்கத்தையும் நியாயப்படுத்த, இத்திட்டம் தேசியப் பாதுகாப்பு எனும் பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது.

மாபெரும் நிகோபார் திட்டம் (Great Nicobar Project), நன்கு அறியப்பட்ட ஆனால் பலவீனமான ஒரு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஈடுசெய்யும் காடு வளர்ப்பின் மூலம் வளர்ச்சியைத் தீங்கற்றதாக மாற்ற முடியும் என்ற கூற்றுடன் இது தொடங்கியது; பின்னர், சூழலியல் இழப்பை விட மூலோபாய மதிப்பு (strategic value) என்கிற சொல்லாடலுக்கு நகர்ந்தது; இறுதியாக, ஒரு வெப்பமண்டலத் தீவின் சூழல் அமைப்பு, ஒரு பழங்குடி சமூகம் மற்றும் ஓர் உணர்திறன் மிக்க கடல்சார் எல்லை ஆகிய அனைத்தையும் நிரந்தரச் சேதமின்றி ஒரே நேரத்தில் மாற்றியமைக்க முடியும் என்று பொதுமக்கள் நம்ப வேண்டும் என்கிற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு நிற்கிறது. ஆனால், இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல.
ஈடுசெய்யும் காடு வளர்ப்பு என்பதே இத்திட்டத்தின் சூழலியல் தொடர்பின்மையின் மிகத் தெளிவான அறிகுறியாகும். மாபெரும் நிகோபார், நிலப்பற்றாக்குறை உள்ள ஒரு தீவாகும், அதன் 75% க்கும் அதிகமான பகுதி ஏற்கனவே காடுகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, தீவிலேயே வெட்டப்படும் மரங்களை அரசால் எளிதில் ஈடுசெய்ய முடியாது. காடுகளை வேறு இடங்களில், முக்கியமாக ஹரியானாவில், ஈடுசெய்வதே அதிகாரப்பூர்வ தீர்வாக இருக்கிறது. ஆனால், ஆரவல்லி மலைத்தொடரில் ஒரே வகை மரங்களை மட்டும் கொண்ட தோட்டத்தால், பல மில்லியன் ஆண்டுகளாகப் பரிணமித்து வந்த ஒரு பூமத்திய ரேகை மழைக்காட்டின் பல்லுயிர்ப் பெருக்கம், மண் அமைப்பு, ஈரப்பதம் மற்றும் கார்பன் சேமிப்பு ஆகியவற்றை மீண்டும் உருவாக்க முடியாது.
இது முக்கியமானது, ஏனெனில் இழப்பின் அளவு பெரியது. இந்தத் திட்டத்தின் பரப்பளவு சுமார் 166.1 சதுர கிலோமீட்டர் ஆகும், இதில் காடுகளுக்கான மாற்று வழி (diversion) மட்டுமே 130.75 சதுர கிலோமீட்டர் ஆகும். அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி, அப்பகுதியில் சுமார் 18.65 லட்சம் மரங்கள் உள்ளன, அவற்றில் 7.11 லட்சம் மரங்கள் வரை பகுதி பகுதியாக வெட்டப்பட வாய்ப்புள்ளது. இந்த காடு வளர்ப்புத் திட்டத்தின் தோல்வி தவிர்க்க முடியாதது, ஏனெனில் புது தில்லியின் ஒரு முன்மாதிரித் திட்டமான `சென்ட்ரல் விஸ்டா’ மறுவடிவமைப்பு போன்ற முந்தைய முயற்சிகளிலும் இதே போன்ற போக்கு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பட்ட 3,609 மரங்களில் 1,545 மரங்கள் இறந்துவிட்டதாகவும், அதாவது கிட்டத்தட்ட 43% மரங்கள் அழிந்துவிட்டதாகவும் அரசாங்கம் சமீபத்தில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தது. ஆனால், திட்டத்திற்குள் தக்கவைக்கப்பட்ட பசுமைப் பகுதியையும் அதன் ஊகிக்கப்பட்ட அற்புத வெற்றியையும் கணக்கில் கொண்ட பிறகும் கூட, இந்த மாற்றம் என்பது ஓர் உயிருள்ள தீவு அமைப்பின் அடிப்படையான மறுசீரமைப்பாகும்.
இந்தத் திட்டம் அதன் வலுவான அரசியல் பாதுகாப்பைப் பெறும் இடம் அதன் மூலோபாய வாதமே (strategic argument) ஆகும், ஆனால் அதே சமயம் மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டியதும் அதுவே. இந்தியாவின் கடல்சார் நிலைப்பாட்டிற்கு மாபெரும் நிகோபார் தீவுகள் நிச்சயமாக முக்கியத்துவம் வாய்ந்தவையே. மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) அருகில் அதன் அமைவிடம், கிழக்கு இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பு, தளவாடங்கள் மற்றும் இருப்பு ஆகியவற்றிற்கு மதிப்புமிக்கதாக அமைகிறது. அதற்காக இது தீவு சம்பந்தமாக முன்மொழியப்பட்ட ஒவ்வொரு கட்டமைப்பையும் தானாகவே நியாயப்படுத்திவிடாது. ஒரு மூலோபாய அமைவிடம் என்பது அளவு அல்லது வடிவம் சார்ந்த மற்ற எந்தவொரு திட்டத்தையும் போன்றதில்லை; அதுவும் பெரும்பாலும் ஒரு பெரிய வணிகத் திட்டமாக இருக்கும்போது நிச்சயமாக அப்படி இருப்பதில்லை. தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, நியாயமான எந்தவொரு ஆட்சேபணைகளையும் அடக்குவதற்காக, இந்த இரண்டும் வேண்டுமென்றே குழப்பப்படுகின்றன.
அரசாங்கத்தின் சமீபத்திய செயல்பாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது, குறிப்பாக தேசியப் பாதுகாப்பு வாதம் வலுவற்றதாகத் தோன்றுகிறது. உதாரணமாக, குஜராத்தின் காவ்டாவில் (Khavda), அதானி குழுமத்திற்காக ஒரு பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவை அமைப்பதற்கு வசதியாக, பதற்றமான இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் தளர்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூரிய மின் தகடுகள் கண்காணிப்பு மற்றும் பீரங்கிகளின் நடமாட்டத்தைத் தடுக்கக்கூடும் என்ற இராணுவத்தின் ஆட்சேபணைகள் இருந்தபோதிலும், அந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம், சரியான வணிக நலன்கள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, தேசியப் பாதுகாப்பைக் கூடப் புறக்கணிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில்தான் ஐஎன்எஸ் பாஸ் (INS Baaz) இந்த விவாதத்தின் மையமாக இருக்க வேண்டும். இது ஏற்கனவே 2012-ல் செயல்பாட்டிற்கு வந்த இந்திய ஆயுதப் படைகளின் தென்கோடி விமான நிலையமாகும், மேலும் இது முப்படைகளின் அந்தமான் மற்றும் நிகோபார் கட்டளையகத்தின் ஒரு முக்கிய மையமாக நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகிறது. கேம்ப்பெல் விரிகுடாவில் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கும், ஒரு கடற்படைத் துறைமுகத்தைக் கட்டுவதற்கும் கடற்படையின் சொந்தத் திட்டங்கள் ஐந்து ஆண்டுகளாக ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. ஓடுபாதை தற்போது சுமார் 3,000 அடி நீளம் மட்டுமே உள்ளது, மேலும் அதை 9,000-10,000 அடியாக நீட்டிக்க கடற்படை முயன்று வருகிறது. இது நீண்ட தூரம் செல்லும் P8I கடல்சார் ரோந்து விமானங்களையும், கனரக போக்குவரத்து நடவடிக்கைகளையும் கையாளும் திறனை கணிசமாக மேம்படுத்தும். இது ஒரு குறிப்பிட்ட இராணுவத் தேவையாகும்; ஒரு பிரம்மாண்டமான துறைமுகம், நகரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வணிகச் சூழலை விட இது மிகவும் சிறியது. செயல்பாட்டு வரம்பு, கண்காணிப்பு, எரிபொருள் நிரப்புதல் மற்றும் விரைவான பதில் நடவடிக்கை ஆகியவையே முக்கிய நோக்கமாக இருந்தால், ஒரு வணிக மேம்பாட்டாளருக்காக தீவை மாற்றி அமைப்பதை விட, INS Baaz மற்றும் கடற்படைத் துறைமுகத்தை வலுப்படுத்துவதே ஒரு தெளிவான தீர்வாகும்.
இந்த வேறுபாடு முக்கியமானது, ஏனெனில் இராணுவ உள்கட்டமைப்பும் வணிக நகரமயமாக்கலும் ஒன்றுக்கொன்று மாற்றாக அமையாது. மரியாதைக்குரிய முன்னாள் கடற்படை அதிகாரிகள் இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். தீவின் பாதுகாப்புத் தேவைகளை, அதன் சூழலியலை அழிக்காத ஒரு சிறிய திட்டத்தின் மூலம் பூர்த்தி செய்ய முடியும் என்று அட்மிரல் அருண் பிரகாஷ் வாதிட்டுள்ளார். ரியர் அட்மிரல் சுதிர் பிள்ளை போன்ற பிற ஓய்வுபெற்ற அதிகாரிகள், இத்திட்டத்தின் அளவு இராணுவத் தேவையை விட மிகவும் அதிகம் என்று எச்சரித்துள்ளனர். அவர்களின் கருத்து உத்திக்கு எதிரானதல்ல, மாறாக வரம்பு மீறாத உத்திக்கான ஒரு வாதமாகும். பலப்படுத்தப்பட்ட விமானத்தளம், ஒரு சிறிய படகுத்துறை, மேம்பட்ட ரேடார், சிறந்த தளவாடங்கள் மற்றும் வலுவான கடல்சார் விழிப்புணர்வு ஆகியவை அனைத்தும் தற்காப்புக்குரிய நடவடிக்கைகளாகும், அதேசமயம் ஒரு பெரும் குடியிருப்பு மற்றும் சரக்கு மாற்று வளாகம் என்பது முற்றிலும் வேறுபட்ட தலையீடாகும்.
எனவே, கலாத்தியா விரிகுடாவுடனான இந்த வேறுபாடு முக்கியமானது. அரசாங்கம் அங்குள்ள துறைமுகத்தை திட்டத்தின் மூலோபாயத்துக்கான மையமாக முன்வைக்கிறது, ஆனால் கலாத்தியா விரிகுடா ஒரு சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க இடமாகவும், அப்பகுதியில் உள்ள மிக முக்கியமான தோல்முதுகு (leatherback) ஆமைகளின் முட்டையிடும் பகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது. அங்கு துறைமுக மேம்பாடு என்பது தூர்வாருதல், கப்பல் போக்குவரத்து, ஒளி மாசுபாடு, கடலடி சீர்குலைவு மற்றும் நீண்டகால வாழ்விடச் சீர்குலைவு ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒரு துறைமுகத்தின் மூலோபாய மதிப்பு இந்தத் தாக்கங்களை நீக்கிவிடாது. அருகிலேயே ஒரு விமான நிலையம் இருப்பது, பாதுகாப்பிற்காக ஒரு முழு அளவிலான வணிகத் துறைமுகம் அவசியம் என்பதையும் குறிக்காது. உண்மையில், INS Baaz இருப்பு அந்தக் கூற்றை பலவீனப்படுத்துகிறது, ஏனெனில், மிகவும் இலக்கு வைக்கப்பட்ட முறையில் விரிவாக்கப்படக்கூடிய ஒரு செயல்படும் தளம் அந்தத் தீவில் இராணுவத்திடம் ஏற்கனவே உள்ளது என்பதை அது காட்டுகிறது.
வணிகரீதியான தர்க்கத்தை பாதுகாப்பு தொடர்பான சொல்லாடல்களிலிருந்து பிரிப்பதும் கடினம். அரசு கடல்சார் போட்டி மற்றும் தேசிய நலன் என்ற மொழியில் பேசுகிறது, ஆனால் இந்தத் திட்டத்தில் ஒரு பெரிய துறைமுகம், விமான நிலையம், குடியிருப்புப் பகுதி மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும், இது தவிர்க்க முடியாமல் தளவாடங்கள், கட்டுமானம், நில மதிப்பு உயர்வு மற்றும் நீண்டகால ரியல் எஸ்டேட் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியப் பெருந்திட்டங்கள் பெரும்பாலும் கலவையான முத்திரைகளுடன் பயணிக்கின்றன, ஏனெனில் பாதுகாப்புச் சட்டகம் இணைக்கப்பட்டவுடன், உன்னிப்பான ஆய்வு கடினமாகிறது. எதிர்ப்பு என்பது அப்பாவித்தனமானது, வளர்ச்சிக்கு எதிரானது அல்லது தேசபக்தியற்றது என்று புறக்கணிக்கப்படலாம்.
இத்திட்டத்தில் கவனிக்கப்படாத மற்றொரு மூலோபாய பலவீனமும் உள்ளது. ஒரு தொலைதூரத் தீவில் உள்ள அதிக குடிமக்கள் தொகை, சொத்துக்களாக இருப்பதுடன் பொறுப்புகளையும் உருவாக்குகிறது. மாபெரும் நிகோபாரில் தற்போது சில ஆயிரம் குடியிருப்பாளர்கள் மட்டுமே உள்ளனர். குடியேற்றம், சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் குடிமக்கள் தொகை 650,000 ஆக அதிகரித்தால், அது புதிய பாதுகாப்புப் பொறுப்புகளை உருவாக்கும். இதனால், மோதல்களின் போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும் வளங்கள் தேவைப்படும். இது இராணுவம் பாதுகாக்க வேண்டிய ஒரு சுமையாக மாறும், இது பாதுகாப்பை மேலும் கடினமாக்கும்.
இந்தத் தீவு, வேட்டையாடி உணவு சேகரிக்கும், குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுவான ஷோம்பென்களின் தாயகமாகும். இவர்களின் மக்கள் தொகை 200-400 என மதிப்பிடப்பட்டுள்ளது, இவர்களில் பலருக்கு வெளி உலகத் தொடர்பு குறைவாகவே உள்ளது. மேலும், இத்தீவில் நிகோபாரிய சமூகங்களும் வாழ்கின்றன. நகரமைப்புக்காக அவர்களின் பழங்குடியினர் காப்பகம் அறிவிப்பு நீக்கம் செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை, வாழ்விட இழப்பு, வெளியாட்களின் அதிகரித்த வருகை, நோய்ப் பரவல் மற்றும் பாரம்பரிய வாழ்வாதாரங்களில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக, அவர்களின் உடல்ரீதியான மற்றும் கலாச்சார அழிவுக்கு வழிவகுக்கும் என்று மானுடவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். அந்த சமூக அமைப்புகள் ஒருமுறை சிதைந்துவிட்டால், வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு தனித்துவமான வாழ்க்கை முறையை எந்தவொரு பல்லுயிர் மேலாண்மைத் திட்டத்தாலும் மீட்டெடுக்க முடியாது.
தற்போதைய ஆட்சியில், நவீன இந்திய உள்கட்டமைப்பு ஒப்புதலின் வழக்கமான பாணியையே சட்ட செயல்முறையும் பின்பற்றியுள்ளது. இதில், ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக, அடிப்படை செயல்முறை திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது. நிபுணர் குழுக்கள் திட்ட ஆதரவாளர்களால் நிரப்பப்பட்டுள்ளன, மேலும் இந்திய வனவிலங்கு அமைப்பு (Wildlife Institute of India) மற்றும் இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பு (Zoological Survey of India) போன்றவை சாதகமான அறிக்கைகளை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளன. முக்கிய ஆவணங்களை அணுகுவதைத் தடுக்க தேசியப் பாதுகாப்பு காரணம் காட்டப்படும்போதும், கலந்தாலோசனை ஒரு சடங்காக மாறும்போதும், அதன் முடிவு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு செயல்முறையில் நிபுணர் கருத்து உள்ளிழுக்கப்படும்போதும், அந்தத் திட்டம் மிகக் குறுகிய அர்த்தத்தில் மட்டுமே சட்டப்பூர்வமானதாகிறது. உண்மையில், சட்டம் நிலத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படாமல், அதன் அழிவை அனுமதிக்கவே பயன்படுத்தப்படுகிறது.
இதில் ஒரு பரந்துபட்ட படிப்பினை உள்ளது, அது மாபெரும் நிகோபாரைத் தாண்டியும் செல்கிறது. சார் தாம் சாலைத் திட்டமும் (Char Dham Road Project) இதேபோன்ற ஒரு பாணியையே பின்பற்றியது. அங்கும், சூழலியல் ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடிய ஒரு பிராந்தியத்தில் பெரும் கட்டுமானத்தை நியாயப்படுத்த, தேசியப் பாதுகாப்பும் எல்லை இணைப்பும் காரணம் காட்டப்பட்டு, சுற்றுச்சூழல் கவலைகள் புறந்தள்ளப்பட்டன. இந்த மாதிரியான செயல்முறையின் ஆபத்து மிகவும் கடினமான கேள்விகளை எதிர்கொள்ளக்கூடிய திட்டங்களைத் திறக்கும் திறவுகோலாக பாதுகாப்பு மாறிவிடுகிறது. அது நடந்தவுடன், அரசு ஒவ்வொரு மூலோபாய உரிமைகோரலையும் தன்னையே நியாயப்படுத்துவதாகவும், ஒவ்வொரு சூழலியல் எச்சரிக்கையையும் ஒரு தடையாகவும் கருதத் தொடங்குகிறது.
மாபெரும் நிகோபார் இதைவிடச் சிறந்ததற்குத் தகுதியானது. கிழக்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவிற்கு நிச்சயமாகக் கடல்சார் திறன் தேவைப்படுகிறது, அதற்காக, தீவுகளில் வலுவான உள்கட்டமைப்பும் தேவைப்படுகிறது. ஆனால், அது இராணுவத்துக்கான அத்தியாவசியத்தை வணிகச் சுரண்டலுடன் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. INS Baaz மற்றும் இராணுவத்திற்குத் தேவையான கடற்படைத் தளம் ஒரு குறிப்பிட்டப் பாதையைச் சுட்டிக்காட்டுகின்றன. கலாத்தியா விரிகுடா மற்றும் பெரிய குடியிருப்புப் பகுதி மற்றொரு பாதையைச் சுட்டிக்காட்டுகின்றன. முதலாவது நியாயப்படுத்தக்கூடியது. இரண்டாவது பொறுப்பற்றது.
(இந்தக் கட்டுரை `themorningcontext.com இணையதளத்தில் 15/05/2026 அன்று வெளியானது. இதில் இடம் பெற்றிருக்கும் படம் 2019 ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின் அட்டைப்படத்தின் திரைப்பிடிப்பு – screenshot – ஆகும். ஆங்கில கட்டுரையை வாசிக்க https://themorningcontext.com/business/the-security-fiction-behind-the-great-nicobar-project)
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

