அந்த கிருமிக்கு வேறு வேலையே கிடையாது. “தான் வாழ வேண்டும், தான் மட்டும் தான் வாழ வேண்டும்” என்னும் மிக எளிய கோட்பாடுடன் வாழும் ஒரு ஜீவன். அதனால் அது தேர்ந்தெடுப்பது அது சுலபமாக பயணம் செய்ய ஒரு வாகனத்தை. இன்னும் சொல்லப்போனால் அந்த வாகனத்தை முழுமையாக அதன் சுயநலத்திற்காகவே பார்த்து பார்த்து இழைத்து உருவாக்கும் அளவுக்கு வல்லமை கொண்டது அந்த கிருமி. அந்த கிருமி ஒரு நல்ல வாகனத்தை தேர்ந்தெடுத்துவிட்டால் தனக்கு மரணமே ஏற்படாமல் செய்துவிடமுடியும். அதை தான் அது வெற்றிகரமாக பல்லாயிரம் வருடங்களாக செய்தும் வருகிறது. அந்த கிருமியின் பெயர் தான் – DNA, அது அமர்ந்து பயணிக்கும் வாகனம் தான் நமது உடல்கள்!

DNA-வை நான் ‘கிருமி’ என்று சொன்னதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று- அது தான் ஒரு நிஜ கிருமி போல் நம் உடல், நம் மனம் என அனைத்தின் ஒட்டுமொத்த செயல்களையும் ஸ்திரமாக தீர்மானிக்கின்றது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஆண் என்றால் உங்களை திருமணம் செய்ய இரு பெண்கள் காத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்பெண்களில் ஒருவர் த்ரிஷாவை போல் இருக்கிறார். மற்றவர் நமீதாவை போல் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சராசரி ஆண் என்றால், அப்பெண்களுடன் பேச உங்களுக்கு வாய்ப்பில்லை என்றால், ஒரு வினாடியில் நீங்கள் முடிவெடுத்தே வேண்டும் என்றால், நீங்கள் கண்டிப்பாக நமீதாவை போல் இருப்பவரைதான் திருமணம் செய்ய தேர்ந்தெடுப்பீர்கள்!

காரணம், பலருக்கு நான் சொல்லத் தேவையே இல்லை. ஆண்களுக்கு பெருத்த மார்பகங்களும் வளைவு நெளிவான உடல் கொண்ட பெண்களைத்தான் இயற்கையாகவே பிடிக்கும். அப்படி நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது உங்கள் தப்பும் இல்லை. காரணம் முடிவெடுப்பது நீங்கள் அல்ல- உங்கள் DNA. அந்த ஒரு DNA கிருமியின் வேலை, தான் இரண்டாகவேண்டும், இரண்டு நான்காகவேண்டும், நான்கு பதினாறாகவேண்டும் என்பது மட்டும் தான். அப்படி ஆகவேண்டும் என்றால் அதற்கு என்ன வழிமுறை? அக்கிருமி பயணிக்கும் உடல் என்னும் வாகனம், அதாவது நீங்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபட வேண்டும். அதோடு மட்டும் முடியாது. புதிதாக உருவாகும் DNA வை தாங்கும் அந்த குட்டி வாகனமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அந்த குட்டி வாகனம் என்னும் உங்கள் பிள்ளை பிறந்து சில மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் அருந்த வேண்டும். அதனால் அந்த DNA எளிமையாக தேர்ந்தெடுப்பது நமீதாவை போல் உடல் பொருந்தியவரைத்தான்! அது மட்டும் அல்லாது வளைவு நெளிவான உடல் பொருந்திய பெண்களால்தான் லாகவமாக குழந்தைகளை தங்களது இடுப்பில் தூக்கிக்கொண்டு ஆபத்து என்றால் ஓடவும் முடியும்!

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு-0
A Short History of Everything by Bill Bryson –https://thamizhbooks.com/product/anaithayum-kuritha-surukkamana-varalaru-1261/

அதே DNA என்னும் கிராதகன் தான் பெண்கள் பிற்காலத்தில், அதாவது அவர்களது ஐம்பதாவது வயதை அடையும்போது அவர்களது இனப்பெருக்க சக்தியையும் மெனோபாஸ் (menopause) என்று சொல்லி ஒரே அடியாக பறித்துவிடுகின்றான். காரணம், மூப்பை அடைந்த பெண்களால் தங்கள் பிள்ளைகளை சரியாக வளர்க்க முடியாமல் போய்விடும் என்பதனால் தான்! ஐம்பது வயதில் நீங்கள் பிள்ளை பெற்று அந்த பிள்ளை வளரும் முன்பு உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதனால் பாதிக்கப்பட போவது யார்? அந்தப்பிள்ளை. அந்தப்பிள்ளை என்பது என்ன? உங்களையும் உங்கள் கணவரையும் ஆட்டுவிக்கும் அந்த DNA பயணம் செய்ய உருவாக்கி இருக்கும் ஒரு புதிய வாகனம்.

அந்த வாகனத்தில் தான் நீங்கள் இயற்கையாக மரணித்த பிறகு அந்த DNA இந்த உலகத்தில் எந்த தடையுமின்றி நிம்மதியாக வாழும். பின்னர் உங்கள் மகனுக்கு பிறகு, உங்கள் பெயரன் உடலிலும் அது தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும். நாம் என்ன தான் அதனை கடுஞ்சொற்களால் பழித்தாலும் நாம் உருவாகி வர காரணமும் அந்த DNA தான். அதன் அமரத்துவத்திற்காகவே நாம் படைக்க பட்டிருக்கிறோம். இதனால் தான் ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்ற ஓர் அறிஞர் அதனை The Selfish Gene என்று அழைத்தார். அது நன்றாக வாழ்வதற்குத்தான் நம்மை அது காத்துக்கொண்டிருக்கிறது. நம் உடல்களின் உச்சபட்ச இன்பத்தை முதலாவது காமத்திலும், இரண்டாவது உணவு உண்பதிலும் வைத்ததும் இதன் அடிப்படையில் தான் – நீங்கள் காமம் கொண்டால் தான் DNA இரட்டிப்பாகும், நீங்கள் நன்றாக விரும்பி உண்டால் மட்டுமே அதன் வாகனம் என்னும் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நீங்கள் அதிக ஆண்டுகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் மேலும், மேலும் காமம் கொள்ள முடியும், பல பிள்ளைகளை பெற முடியும், அப்படி செய்தால் மட்டுமே அதனால் இந்த உலகத்தில் அழிவின்றி வாழ முடியும்.
***
DNA என்பது வெறும் ஒரு The Selfish Gene மட்டும் தான் என்றால், நம் சுயநலம் ஒன்றே அதன் நோக்கம் என்றால் நாம் எப்படி தனியர்களாக அல்லாமல், சமூகங்களாக பிற்காலத்தில் உருவாகி வந்தோம்? எப்படி நமது மரபணு சூட்சுமத்தையே (genetic design) நம்மால் எதிர்க்க முடிந்தது ? நாம் ஏன் ஒருவரை ஒருவர் வெட்டி விழுங்காமல் இன்னும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ?

The Selfish Gene by Richard Dawkins – WeZBest

இப்படிப்பட்ட எளிமையான கேள்விகளுக்குள் மாட்டிக்கொண்டு முழிக்கும் அளவுக்கு முட்டாள்தனமானதோ மூர்க்கமானதோ அல்ல நமது DNA. நாம் சமூகங்களாக ஒருவரோடு ஒருவர் பிணைந்த வாழ தேவையான பயிற்சியை மனிதர்கள் என்னும் நிலையை அடையும் முன்பே பழகிவிட்டோம் – மீன்களாக இருந்த காலத்தில் இருந்தே, பெரிய மீன்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, சிறு சிறு குழுக்களாகதான் நாம் நமது உணவை தேடி அலைந்தோம். ஒற்றுமையாக இருந்தே பெரும் ஆபத்துகளை எதிர்கொண்டோம், அந்த பரிணாம மாற்றங்கள் அனைத்தையும் உள்வாங்கியே காலத்திற்கேற்றவாறு தன்னைத்தானே மாற்றிக்கொண்டு உருவானது தான் நமது DNA.

ஆனால் இவை எல்லாம் இருந்தும் அதன் அடிப்படை புத்தி “Selfish” தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. என்னதான் சமூகமாக நாம் மாறி, பல ராட்சத அடிகள் எடுத்து வைத்து, “எல்லோருக்காக ஒருவர், ஒருவருக்காக எல்லோரும்” என்று மார்க்சிய சிந்தனையின் அடிப்படையில் வாழ முயற்சித்தாலும், ஒரு எரிகிற வீட்டில் நமது குழந்தையும், நமது நெருங்கிய நண்பரின் குழந்தையும் மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டால், நாம் முதலில் காப்பாத்த முயல்வது நமது குழந்தையாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் நமது DNAவிற்கு அதன் புதிய வாகனத்தின் மீது தான் அக்கறை அதிகமாக இருக்கும். நமது நண்பரின் குழந்தை பக்கத்து வீட்டுக்காரரின் வண்டியை போலத்தான், அதற்கு.

இதனால் நான் சொல்ல வருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நீங்கள் உங்கள் பிள்ளையிடம் “உன்னை இப்படி வளர்த்தேன், அப்படி வளர்த்தேன், இந்த தியாகம் செய்தேன்” என்றெல்லாம் அடுத்த முறை Blade போடும் முன்பு இந்த கட்டுரையை ஒரு முறை நினைத்து பாருங்கள். அல்லது இதனை எழுத தூண்டிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய உலக புகழ் பெற்ற The Selfish Gene என்ற புத்தகத்தையாவது ஒரு முறை படிக்க திட்டமிடுங்கள்! வளர்ந்ததும், வளர்த்ததும், வளர்வதும் நீங்கள் அல்ல, உங்களை ஆட்டுவிக்கும் DNA!!

மேலும் படிக்க :
1. The Selfish Gene by Richard Dawkins.
2. A Short History of Everything by Bill Bryson.
3. Cosmos by Carl Sagan.
4. நம்ம கடை ஐட்டம் -https://jeevasessays.wordpress.com/2020/08/18/the-selfish-gene-theory-of-dawkins-simplified/

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *