பனிமலையின் மேய்ப்பள் (The Shepherdess of the Glaciers) ஆவணப்படம் – இரா.இரமணன்                         இமயமலையின் லடாக் பகுதியில் கியா (gya) எனும் கிராமத்தில் ஆடு மேய்க்கும் செரிங் டோர்ஜை (Tsering Dorjai)யின் வாழ்க்கையை விளக்கும் ஆவணப்படம். அவரது சகோதரரான ஸ்டான்சின் டோர்ஜூம் (Stanzin Dorjai) கிறிஸ்டியன் மோர்டலே (Christiane Mordelet)வும் இணைந்து தயாரித்துள்ளனர்.

                              அந்த கிராமத்தில் மேய்ச்சல் தொழில்தான் பிரதானமாக இருந்தது. ஆனால் இப்பொழுது செரிங் மட்டுமே அதை செய்கிறார். வருடத்தில் பத்து பதினொன்று மாதங்கள் பனி மூடிய பள்ளத்தாக்குகளில் தன்னந்தனியாக இருக்க வேண்டியிருப்பதால் மற்றவர்கள் அதைக் கைவிட்டுவிட்டனர். ஆனால் செரிங் சிறு வயதிலிருந்தே ஆடுகளிடம் மிகுந்த பாசப் பிணைப்பை கொண்டிருந்தார்.  பள்ளிக்கூடம் எதுவுமில்லாத அந்தக் கிராமத்தில் செரிங் அவரது தந்தையுடனும் சகோதரர் ஸ்டான்சினோடும்  ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். 14 வயதில் சகோதரன் லே நகரில் முறைசாரா கல்வி கற்க சென்றுவிடுகிறான். தந்தை இறந்ததும் செரிங் அவர்களுக்கு சொந்தமான முன்னூறு ஆடுகள் கொண்ட   கிடையை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  அப்பொழுது அவருக்கு வயது 27. ஆடுகளை கவனிப்பதற்கு முழு நேரமும் செலவழிக்க வேண்டும் என்பதற்காக திருமணத்தை நிராகரித்துவிட்டார். ஆடுகள் தன குழந்தைகள் போன்றது என்கிறார். இந்தப் பணிக்காக 4500-6000 மீட்டர் உயரத்தில் – 35டிகிரியிலிருந்து  35 டிகிரி வரை மாறும் வெப்ப நிலைகளில் அவர் வாழ வேண்டியதிருக்கிறது. 

                                  ஆடுகளுடன் பேசுவதிலும் சகோதரன் கொடுத்த ரேடியோ கேட்பதிலும் தனிமை உணர்வை தவிர்க்கிறார். ரேடியோ அவருக்கு வானிலை அறிவதற்கும் உதவுகிறது. ஆனால் அவருக்கு அந்த மலைப் பகுதியும் அதன் பருவ நிலையம் அத்துபடி. எங்கு நல்ல மேய்ச்சல் வெளிகள் உள்ளன. பனிப்பாறைகளின் இண்டு இடுக்குகள், சிகிச்சைக்கு உதவும் மூலிகைகள், காற்று வீசுவதிலிருந்து பருவநிலை மாற்றம் என எல்லாமே அவர் அறிவார். மருத்துவர், வானிலை நிபுணர், கால்நடை மருத்துவர், தாவரவியலாளர், இமயமலை உதவியாளர். தத்துவவாதி, மேய்யப்பள் எல்லாம் ஒன்று சேர்ந்தவர் என்கிறார் அவரது சகோதரர். 

REVIEW: 'The Shepherdess of the Glaciers' illustrates beauty of modernity-free life | Culture | dailynebraskan.com

                                இந்த குணாதிசயங்களைத்தான் ஸ்டான்சின் தன் ஆவணப் படத்தில் வெளிக்கொணர விரும்பினார். ஆண்களின் களமாக கருதப்படும் துறைகளில் ஸ்ரிங் போன்ற பெண்கள் ஈடுபட்டு குடும்பம் மற்றும் உள்ளூர் மரபுகளையும் முன்னெடுத்து செல்ல முடியும் என்று காட்டுவதில் குறிப்பாக இருந்தார். இந்தியப் பெண்களையும் அவர்களது விடா முயற்சியையும் கவுரிவிக்கும் பொருட்டு நடைபெறும் ஒன் பில்லியன் ரைசிங் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெறும் ரைசிங் கார்டன் பிலிம் பெஸ்டிவல் 2021இல்  திரையிடப்பட்டது. முன்னதாக 2016ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச மலை திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றது. மேலும் பல சர்வதேச, தேசிய திரைப்பட விழாக்களிலும் விருதுகள் பெற்றது.

                                      தன் சகோதரன் ஏதோ பாலிவுட் திரைப்படம் தயாரிக்கிறான் என்றுதான் செரிங் நினைத்தாராம். ஆடு மேய்ப்பவளின் வாழ்க்கையை உலகம் பார்க்க வேண்டும் என்று அவர் சொன்னவுடன் இதையெல்லாம் யார் பார்ப்பார்கள் என்றுதான் செரிங் சொன்னார். விருது வழங்கும் விழாவிற்கு அவரை ஸ்டான்சின் பாரிசிற்கு அழைத்து சென்ற போதுதான் எவ்வளவு பேர் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டார். ‘எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் நான் என் ஆடுகளுடன் இருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடாகாது’ என்கிறார்.  இந்தப் புகழினால் எல்லாம் செரிங் பாதிக்கப்படவில்லை. தன்னுடைய வாழ்க்கையினால் சில பெண்கள் ஆடு மேய்க்கும் தொழிலை எடுத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆனால் அவர்கள் ஆடுகளை தங்கள் குழந்தைகள் போல் நேசிக்க வேண்டும் என்கிறார். இந்தக் கடினமான பணியில் அப்பொழுதுதான் தாக்குப் பிடிக்க முடியும் என்கிறார்.

(இந்து ஆங்கில நாளிதழ் 18.04.2021 ஞாயிறு இணைப்பில் ஸ்வப்னா மஜூம்தார் எழுதிய கட்டுரையின் சற்று சுருக்கிய தமிழாக்கம்.)