பாராளுமன்றத்தின் ஆன்மா அதன் ஆரோக்கியமான செயல்பாட்டில் உள்ளது, செங்கல் மற்றும் காரையில் அல்ல – யஷ்வந்த் சின்ஹா (தமிழில்: தாரை இராகுலன்)2020 டிசம்பர் 10 ஆம் நாள், பிரதமர் புதிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார், எப்போதும்போலவே அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசகளின் நேரடி தேசிய ஒளிபரப்புடன். பாராளுமன்றத்தின் ஆன்மா செங்கல் மற்றும் காரை போன்றவற்றில் வாழ்வதானால் உண்மையில் இது ஒரு சிறந்த தருணம்தான். ஆனால், அது பாராளுமன்றத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டில், பாராளுமன்ற ஜனநாயகத்தின் உண்மையான உணர்வில் வாழ்வதானால், அது(அடிக்கல் நாட்டல்) ஒரு குரூரமான நகைச்சுவையே. இந்தியப் பாராளுமன்றக் கட்டிடம் 1927 இல் கட்டி முடிக்கப்பட்டது. பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டிடமான ’வெஸ்ட்மின்ஸ்டர்’ அரண்மனை 1860 இல் கட்டி முடிக்கப்பட்டது, இரண்டாம் உலகப் போரின்போது குண்டுவெடிப்பால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ததைத் தவிர்த்து, அதன் பழைய பாணியிலேயே இன்னும் இருந்து வருகிறது.

கட்டிடத்தின் உள்ளே சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, ஆனால் கட்டிடம் பெரும்பாலும் அப்படியே உள்ளது. எனக்குத் தெரிந்தவரை, பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயான அதை ஒரு புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் நமது தற்போதைய பிரதமரைப் போல பெரிய கட்டிடக்கலை நிபுணர்கள் அல்ல, ஷாஜகானுக்குப் பிறகு, நம் வரலாற்றில் மிகப் பெரிய கட்டிடக்கலை நிபுணராக அவர் விரைவில் இடம் பெறுவார்; ’சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் முடிவடையும் வரை காத்திருங்கள்.

இப்போது மீண்டும் பாராளுமன்றத்தின் கருப்பொருளுக்கே திரும்புவோமானால், அதன் ஆன்மா செங்கல் மற்றும் காரையில் வாழ்கிறது என்று நம்புவது கடினம். பாராளுமன்றத்தின் ஆன்மா அதன் ஆரோக்கியமான செயல்பாட்டில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை; செங்கல் மற்றும் காரையில் இல்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் நமது நாடாளுமன்றத்தின் கதி என்ன?

கோவிட் -19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடித்தளம் அமைப்பது உட்பட இந்த அடிப்படையில் வேறு எதுவும் நடத்தப்படவில்லை. எனவே, அரசாங்கத்திற்கு ஏற்றவாறு நிகழ்வுகளை ஒத்திவைக்க கோவிட்-19 தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் போராட்டம் உட்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களில் அரசாங்கத்தைப் பதிலளிக்க வைக்க இந்தக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கும்.

கூட்டத்தொடர் நடைபெற்றிருந்தாலும் கூட, எதிர்க்கட்சிகளால் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் எந்தவொரு பிரச்சினையிலும் எதிர்க்கட்சிகளால் அரசாங்கத்தைப் பதிலளிக்க வைக்க முடிந்திருக்கிறதா? பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகளின் போது நடத்தப்பட்ட அலுவல்களை மட்டும் நான் குறிப்பிடவில்லை; பாராளுமன்றத்தின் மொத்தச் செயல்பாட்டையும் நான் குறிப்பிடுகிறேன்; சட்டத்தை ஆராய்வதில் மற்றும் பிற முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதில் பாராளுமன்றக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

The Spirit of Parliament Is in Its Healthy Functioning, Not in Brick and  Mortar

இந்த அரசின் முதல் ஐந்தாண்டுகளில் இரண்டு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களில் 25% மட்டுமே நிலைக்குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன ( ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆண்டுகளில் 71% ) என்பதை செய்தி அறிக்கைகள் மூலம் அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். கடந்த 18 மாதங்களில், இந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாகும்; இந்தப் பட்டியலில் மிகவும் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களும் அடங்கும். மாநிலங்களவையின் கட்டுக்கடங்காத காட்சிகளை நாம் மறக்கவில்லை, ஒரு மசோதாவை ஒரு தெரிவுக்குழுவிற்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் நியாயமான கோரிக்கை, அரசின் முரட்டுத்தனமான முடிவால் ‘வளைந்து கொடுக்கும்’ ஒரு தலைமை அலுவலரின் துணையுடன் முறியடிக்கப்பட்டது.

பாராளுமன்ற நிலைக்குழுக்களை இழிவுபடுத்துவது என்பது பாராளுமன்றத்தை இழிவுபடுத்துவது என்றும் இது அதன் செயல்பாடுகளின் திறனை பெருமளவில் குறைக்கிறது என்றும் முடிவு செய்வது கடினம் அல்ல. மூன்று வேளாண் மசோதாக்கள் சம்பந்தப்பட்ட நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அது விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்திருக்கும், அவர்களின் கருத்துகளைக் கேட்டு, அவற்றை அதன் பரிந்துரைகளில் சேர்த்திருக்கும்; இப்போது எழுந்துள்ள அனைத்துச் சிக்கல்களும் தவிர்க்கப்பட்டு சிறந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாராளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணிப்பது தற்போதைய குழப்பத்திற்கு நேரடிக் காரணம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.

பல ஆண்டுகளாகவே மாநிலச் சட்டமன்றங்கள் அவற்றின் செயல்பாடுகளில் மோசமாக முடக்கப்பட்டுள்ளன. அவற்றின் அமர்வுகள் மிகவும் குறுகியதாக மாறிவிட்டன. பண மசோதாக்கள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் உள்பட மசோதாக்கள் விரிவான பரிசீலனை இல்லாமல் நிறைவேற்றப்படுகின்றன. உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் குழுக்களில் பணியாற்றுகிறார்கள்; அவர்களின் படிகளை, சட்டசபையிலிருந்து சட்டப்பூர்வமாகவும், அலுவலர்களிடமிருந்து சட்டவிரோதமாகவும் பெறுகின்றனர். எனவே, அரசு மகிழ்ச்சியாக உள்ளது, உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், பொதுமக்கள் கவனிப்பதை நிறுத்திவிட்டனர். எனவே, பெரும்பாலும் மாநிலச் சட்டசபைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள், ஆனால் இன்று மத்தியில் தலைமை வகிப்பவர்கள், பாராளுமன்றமும் மாநிலச் சட்டசபைகளைப் போலவே செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் நிலைக்க வேண்டுமானால் இவை அனைத்தும் மாற வேண்டும். கொஞ்சம் அரசியல் சிந்தனை மற்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் நடைமுறை விதிகளில் மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனைச் செய்ய முடியும், இதேபோல் மாநிலச் சட்டமன்றங்களிலும் செய்ய முடியும்.

முதலாவதாக, நிதிநிலைக் கூட்டத்தொடருக்கு இடைவெளியுடன் கூடிய அறுபது நாள்கள், மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத் தொடர்களுக்கு தலா முப்பது நாள்கள் என பாராளுமன்றம் ஓர் ஆண்டில் குறைந்தது 120 நாள்கள், கூடுமாறு விதிகள் வகுக்கப்பட வேண்டும். கூட்டத்தொடர் கூடும் மாதத்தின் தேதி அல்லது நாள் கூட வரையறுக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, பல்வேறு விடுமுறை நாள்களை மனதில் கொண்டு வேலை நாள்களின் எண்ணிக்கையும் பரிந்துரைக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, அனைத்துக் கட்சிகளும் ஒருமித்துக் கருத்தளிக்கும் மசோதாக்கள் தவிர அனைத்து மசோதாக்களும் நிலைக்குழுக்களுக்கு அனுப்பப்படும் என்பதையும் விதியாக்க வேண்டும்.

நான்காவதாக, கூட்டத் தொடர்களுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் இரு அவைகளின் தலைமைச் செயல் அலுவலர்களிடம் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, விதிகள் மாற்றப்பட்ட பிறகு இது மிகவும் வழக்கமான நடைமுறையாக இருக்கும். ஐந்தாவதாக, ஒரு கூட்டத்தொடரில் எத்தனை கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மற்றும் குறுகிய கால விவாதங்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்பதைப் பரிந்துரைக்கும் ஒரு விதியும் இருக்க வேண்டும், இது, இரு அவைகளின் அலுவல் ஆலோசனைக் குழுக்களில் அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். ஒரு பாகுபாடான தலைமை அலுவலரால் விதிகளை நாசமாக்க முடியும்; எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் சிறிய இடத்தையும் திறம்பட அழிக்க முடியும் என்பதை சமீபத்திய அனுபவம் உணர்த்தும். எனவே, இனிமேலும் நாம் ஆட்சியாளர்களின் கருணைக்காக விசயங்களை விட்டுவிட முடியாது. கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் மற்றும் நடைமுறைகளால் அவர்களின் கை, கால்கள், கட்டுப்பட வேண்டும்.

Yashwant Sinha: How to Navigate a Tricky Parliament

நான் நிதியமைச்சராக இருந்தபோது, கடுமையான மற்றும் காலாவதியான அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தை ரத்து செய்து, அதற்குப் பதிலாக இரண்டு புதிய சட்டங்களான அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவர அரசாங்கம் முடிவு செய்தது. அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவைக்கு நான் மசோதாக்களை எடுத்துச் சென்றபோது, அவையின் மூத்த தலைவர்களான பிரணாப் முகர்ஜி, முலாயம் சிங் யாதவ் ஆகியோர் மசோதா மீதான விவாதத்தின் போது, சட்டத்தின் விதிகள் நாங்கள் வடிவமைத்த அதே மனப்பான்மையில் செயல்படுத்தப்படும் என்று நான் கற்பனை செய்துகொள்ளக் கூடாது என்று என்னிடம் சொன்னார்கள்.

எதிர்காலத்தில் அரசியல் கருவியாக அதைப் பயன்படுத்தும் அரசாங்கங்கள் நமக்கு அமையலாம் என்று அவர்கள் என்னை எச்சரித்தனர். அவை எவ்வளவு சரியானவை? எனவே, அந்த மசோதாவை அவையின் தெரிவுக் குழுவுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன். அனைத்து உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்புகள் இருந்தபோதிலும், அரசியல் எதிரிகளைச் சரிசெய்ய இந்தச் சட்டம் இன்று முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது வேறு விசயம்.

பல தசாப்தங்களாக அபிவிருத்தி செய்யப்பட்ட நமது பாராளுமன்ற அமைப்பின் மரபுகள், பழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து சிறிதளவு பயனும் பொறுமையும் இல்லாத ஆட்சியாளர்களால் நாம் இன்று ஆளப்படுகிறோம். இது எதிர்காலத்தில் இன்னும் மோசமடையக்கூடும். மிகவும் தாமதம் ஆகிவிடும் முன்பு நாம் இந்த யதார்த்தத்திற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும். எனவேதான் இந்த ஆலோசனைகள். அரசாங்கத்தார்க்கு எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை, ஆனால் எதிர்க்கட்சிகள் கவனத்தில் கொள்வார்களா?

( யஷ்வந்த் சின்ஹா: இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமாவார். )

நன்றி: ’The Wire’ இணைய இதழ் 30.12.2020

https://thewire.in/politics/parliament-foundation-stone-winter-session