டால்ஸ்டாய் கதைகள்- வல்லிக் கண்ணன் | Tolstoy - Stories

டால்ஸ்டாயின் மூன்று கதைகளின் தொகுப்பு இந்நூல்.

‘இருவர்’

பணம் ஈட்டுவதையே வாழ்வின் குறிக்கோளாக கொண்ட பேராசைக்காரன் வாஸிலி ஆன்ட்ரீவிச் பிரகுணோவ், தனது விசுவாசமான ஊழியன் நிகிட்டாவைக்கூட  சுரண்டுகிறான்.

நிகிட்டா, வாசிலியின் எண்ணங்களை முழுமையாக அறிந்திருக்கிறான்.

‘மரண பயம் மனிதரை வேட்டையாடிக் கொண்டே இருக்கிறது. தான்- தனக்கு -தன்னுடைய என்ற குறுகிய நினைவுகளோடு வாழ்கிற வரையில்தான் மரணம் மனிதரை பயமுறுத்தும். தன்னை மறந்து பிறருக்கு உதவத் துணிகிறபோது மனிதன் மரண பயத்தை வென்று விடுகிறான். அதுவரை அவனுக்கு கிட்டாத மன அமைதி தானாகவே அவனை வந்து அடைகிறது’.

மேற்கண்ட வரிகள் டால்ஸ்டாய் எழுதியதா அல்லது மொழி பெயர்ப்பாளர் வல்லிக் கண்ணன் எழுதியதா என்று தெரியவில்லை முன்னுரையில் இடம்பெறும் இவ்வரிகள் எத்தனை நிதர்சனமானவை என்பதை உணர முடியும்.

குளிர் காலத்தில்,இரவு நேரத்தில்,  நீண்ட பயணம் மேற்கொள்ளும் அவ்விருவரும் இரு துருவங்களில் வசிப்பவர்கள். நிகிட்டா இறந்து விடுவான் என்று நினைக்கும் போது பெரும் திருப்பமாக பனிப்புயலில் வாசிலி இறந்து விடுகிறான்.

பெரும் முனைப்புடன் பணத்தை மட்டுமே துரத்திச் செல்பவர்களுக்கு இயல்பாகவே நிகழ்ந்துவிடும் நிலைதான் இது.

‘அது அந்த காலம்’

வேளாண்மையிலும், வாழ்வு முறைகளிலும் காலம் தோறும் நிகழ்ந்துவிடும் மாற்றங்களை மிக எளிமையாக உணர்த்திச் செல்லும் புனைவு இது. எல்லா இடங்களுக்குமாக, எல்லா காலத்திற்குமாக பொருந்தக்கூடிய உண்மை இது.

‘குற்றமும் தண்டனையும்’

தஸ்தயெவ்ஸ்கியின் பெரும் நாவலின் தலைப்பில் இடம் பெறும் டால்ஸ்டாயின் சிறப்பான கதை இது.

கொல்ல வந்தவன் பழியை வீசிவிட்டு தப்பிக்க, அகப்பட்டவன் கருணையின்றி பல ஆண்டுகளுக்கு தண்டிக்கப்படுகிறான்.

காட்டிக் கொடுத்துவிட கிடைத்த வாய்ப்பையும் தவறவிட்டு மன்னிப்பவனின் செயலில் அதிர்பவன் உண்மையை ஒப்புக்கொள்கிறான். நிரபராதியை சிறையில் இருந்து விடுவிப்பு செய்ய அவன் தற்போது உயிருடன் இல்லை.

உண்மையான குற்றவாளி வேறொரு குற்றச் செயலுக்காகவே அச்சிறைக்கு வருகிறான். கசையடிகள் தண்டனை  துன்பத்தைவிட அதிகமாக தற்போது வேதனை அடைவதாக குறிப்பிடுபவன்,பழிக்கு அஞ்சுகிறான்.

திருடன்கூட தன் வீட்டில் திருடுபோக எண்ணுவதில்லை, சத்தியத்தின் வலிமை அதுவே என்று உணர்த்தி விடும் கதை இது.

ஜார் மன்னரின் ஆட்சிக் காலத்தில் நிரபராதிகள் பலர் விரைவான விசாரணை நடைமுறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு அநீதிக்கு ஆளானதை அறிய முடிகிறது.

காட்டிக் கொடுக்கும் வாய்ப்பு அவனுக்கு முழுமையாகக் கிடைத்த போதும் அவ்வாறு செய்யாதது குற்றவாளியின் மனத்தை உறுத்துகிறது. தவறவிட்ட காலமும், இளமையும் திரும்பி வரப்போகிறதா என்ன?

டால்ஸ்டாயின் மூன்று கதைகளையும் மிக அழகாக மொழிபெயர்த்து தமிழுக்கு அளித்திருக்கிறார் வல்லிக் கண்ணன். தமிழ் வாசகர்கள் அனைவரும் வாசித்து மகிழ வேண்டிய நூல் இது.

நூலின் தகவல்கள்:- 

நூல் : டால்ஸ்டாய் கதைகள்

தமிழில் : வல்லிக் கண்ணன்

வெளியீடு : மின்னூல்

பக்கங்கள் : 138

நூலறிமுகம் எழுதியவர்:- 

சரவணன் சுப்ரமணியன்

 

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *