‘புதிய இந்தியா’வின் கதை: இந்திய அரசமைப்புச்சட்டத்தை ஒழித்துக்கட்டுவதேயாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச.வீரமணி)

‘புதிய இந்தியா’வின் கதை: இந்திய அரசமைப்புச்சட்டத்தை ஒழித்துக்கட்டுவதேயாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச.வீரமணி)

 

இந்திய சுதந்திரதினத்தின் 73ஆவது ஆண்டுதினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், இந்தியாவின் எதிர்காலத்தில் அதற்கு மரணசாசனம் எழுதும் விதத்தில் புதியதொரு கதை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரத்தை எய்திய இந்தியா, 2019 ஆகஸ்ட் 5இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-A ஆகிய பிரிவுகளை ரத்து செய்ததன் மூலமும், பின்னர் 2020 ஆகஸ்ட் 5 அன்று ராமர் கோவில் கட்டுவதற்காக பிரதமர் மோடி முறையாக அடிக்கல் நாட்டியிருப்பதன் மூலமும் இந்தியாவின் உண்மையான விடுதலைக்கான தினமாகும் என்று ‘புதிய இந்தியாவை’க் கதைப்பவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இவர்களின் இந்தப் புதிய கதை, வீரஞ்செறிந்த இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும், அதன்பின் உருவாகியுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும்  முற்றிலும் நேரெதிரானதாகும். இதுதான் பிரதமர் மோடியின் அயோத்தி உரையின் சாரமாகும். இது குறித்து பின்னர் நாம் வருவோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் நம் மக்கள் மற்றும் நம் நாட்டின் வளமான பன்முகத்தன்மை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாங்கினைப் பிரதிபலிப்பதாகும். இந்தியாவில் உள்ள வேற்றுமைகளுக்கு இடையேயுள்ள பொதுவான பண்புகளை ஒருங்கிணைப்பதன் மூலமாக மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். மொழிரீதியாக, இனரீதியாக, மத ரீதியாக மற்றும் இதுபோன்றுள்ள அனைத்து வேற்றுமைகளின் பன்முகத்தன்மைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் சமத்துவ அடிப்படையில் மதித்து, நடந்துகொள்ள வேண்டும். இவ்வேற்றுமைப் பண்புகளை ஒரே சீராக்குகிறோம் என்ற பெயரில் திணிக்கப்படும் எவ்வித முயற்சியும் சமூக வெடிப்புக்கே இட்டுச் செல்லும். ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் அங்கமான பாஜக, அரசாங்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு மத அடிப்படையில் சீரான தன்மையைத் திணித்திடும் முயற்சிகள், ஓர் எதேச்சாதிகார/சர்வாதிகார ஆட்சியின்கீழ் “உள்ளுக்குள்ளேயே இருக்கும் எதிரிகள்” (“internal enemies”) என அவர்களால் வர்ணிக்கப்படுபவர்களுக்கு எதிராக பாசிஸ்ட் முறைகளைப் பிரயோகிப்பதன் மூலம் ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு வேட்டுவைத்திடும்.

இத்தகையதொரு ‘புதிய இந்தியா’வை நிறுவுவது என்பது, மோடி அரசாங்கத்தின் கண்டுபிடிப்பு அல்ல. இதற்கு சுமார் நூறாண்டுகால வரலாறு உண்டு. 1925இல் ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்டதிலிருந்து, 1939இல் கோல்வால்கரால் ஒரு பாசிச இந்து ராஷ்ட்ரத்தின் குறிக்கோளை எய்திட, சாவர்க்கரின் இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் ஸ்தாபனக் கட்டமைப்பை ஏற்படுத்தும் வரலாற்றைப் பெற்றிருக்கிறது.

இந்திய மக்கள் இவர்களின் சித்தாந்தத்தை நிராகரித்ததுடன், விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெற்று அமைத்திட்ட சுதந்திர இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக உறுதியானமுறையில் பிரகடனம் செய்தார்கள். இது, 1947இல் நாடு பிளவுண்டு பாகிஸ்தான் ஓர் இஸ்லாமியக் குடியரசாக அமைக்கப்பட்டதற்கு முற்றிலும் எதிரானதாகும். எனினும், அப்போதிருந்தே, இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு குணாம்சத்தை மாற்றியமைப்பதற்காக ஆர்எஸ்எஸ் தொடர்ந்து கடந்த எழுபதாண்டு காலமாக செயல்பட்டு, இன்றுள்ள நிலையை எட்டியிருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்கள்

இவர்களின் ‘புதிய இந்தியா’விற்கு முதலாவதாகவும், முதன்மையானதாகவுமான தேவை என்பது இந்திய அரசமைப்புச்சட்டத்தால் வரையறுக்கப்பட்டு, கெட்டிப் படுத்தப்பட்டுள்ள பழைய இந்தியாவை ஒழித்துக்கட்டுவதாகும். அரசமைப்புச்சட்டத்தின் மீதான இத்தாக்குதல்கள் கடந்த ஆறு ஆண்டு காலத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியில் உக்கிரமடைந்துகொண்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு என அனைத்தும் அரித்துவீழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அரசமைப்புச்சட்டத்தின் மீதான இத்தாக்குதல் மூலம், அரசமைப்புச்சட்டத்தின் செயல்பாடுகளையும், மக்களுக்கு அரசமைப்புச்சட்டம் அளித்த உத்தரவாதங்களையும் பேணிப்பாதுகாத்திடக்கூடிய விதத்தில்,  சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து, செயல்பட்டுவந்த அரசமைப்புச்சட்ட நிறுவனங்களை வலுவிழக்கச் செய்யும் விதத்தில் அவற்றை அரித்துவீழ்த்த வேண்டியது அவசியமாகிறது. அரசமைப்புச்சட்டத்தால் வரையறுக்கப்பட்டபடி, நம் குடியரசின் மூன்று முக்கிய அங்கங்களாக ஆட்சி அதிகாரம் (Executive), நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் (the legislature) மற்றம் நீதித்துறை (the judiciary) ஆகிய மூன்றும் விளங்குகின்றன. ஒவ்வொன்றும் தனித்தனிதான். ஆனாலும் ஒன்றுக்கொன்று தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு உதவுவனவாகும்.

நாடாளுமன்றம் மிகவும் மோசமானமுறையில் ‘பெரும்பான்மையின் கொடுங்கோன்மை’யை (‘tyranny of the majority’) அமல்படுத்தும் ஒன்றாக குறைக்கப்பட்டு, அரித்துவீழ்த்தப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற நடைமுறைகள், கமிட்டி செயல்பாடுகள் மற்றும் விவாதங்கள் அனைத்தும் அரித்துவீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இப்போக்கு மிகவும் ஆபத்தானதாகும். எப்படியெனில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மையக்கருவே, மக்களின் இறையாண்மையை மக்களுக்குப் பதில்கூற வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்படுவதன் மூலமும், அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதில்சொல்லக்கூடிய விதத்திலும் செயல்படுத்துவதன் மூலமேயாகும். இப்படித்தான், “நாம், இந்திய மக்களாகிய நாம்…” என்று அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் அளிக்கப்பட்டுள்ளதுபோன்று நாம் நம்முடைய இறையாண்மையை நடைமுறைப்படுத்துகிறோம். நாடாளுமன்றம், செயல்படா நிலைக்கு மாறுமானால், பின், மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதில் சொல்வது என்பதற்கோ, ஆட்சியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதில் சொல்வது என்பதற்கோ, விடைகொடுக்கப்பட்டுவிடுகிறது. இதன்மூலம் அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிலிருந்து தப்பித்துக் கொண்டுவிடுகிறது.

Supreme Court to Election Commission : You have woken up to take ...

நீதித்துறை

அரசமைப்புச்சட்டத்தின் ஷரத்துக்கள் ஆட்சி செய்பவர்களால் மீறப்படக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்தும்விதத்திலும், அரசமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் உத்தரவாதங்களை உயர்த்திப்பிடித்திடும் விதத்திலும் ஒரு சுயேச்சையான நீதித்துறை நிறுவப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகாலமாக மிகவும் அபாயகரமானமுறையில் நாம் பார்த்துவருவதைப்போன்று, நீதித்துறையின் பாரபட்சமற்ற போக்கும், சுதந்திரமும் சமரசத்திற்கு உள்ளாக்கப்படுமானால், பின் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்படுவது என்பது தொடர்பாக நீதித்துறையின் மேற்பார்வை என்பதே இல்லாது ஒழிந்துவிடும்.

தேர்தல் ஆணையம்

நாட்டில் தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துவதன் மூலமும், போட்டியிடும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை அளிப்பதன் மூலமும் நம் ஜனநாயகத்தின் ஆரோக்கியமான போக்கை நிலைநிறுத்திட இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் சுதந்தரமாகவும் பாரபட்சமற்றமுறையிலும் ஒரு மைல்கல்லாக இருந்து வந்திருக்கிறது. இதுவும் சமரசத்திற்கு உள்ளாக்கப்படும்போது, பின் அரசாங்கங்கள் உண்மையில் மக்களின் தீர்ப்பையோ அல்லது மக்களின் குரலையோ பிரதிபலிப்பதாகக் கூற முடியாது.

அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கிடும் நிறுவனங்களான மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமலாக்கத்துறை, இலஞ்ச ஒழிப்புத்துறைகள் (Vigilance Department, etc.,) முதலானவை நாட்டில் கிரிமினல் மற்றும் சிவில் குற்றங்கள் புலனாய்வு செய்யப்படுவதையும், அக்குற்றங்களைப் புரிந்தோர் நாட்டின் சட்டங்களால் தண்டிக்கப்படுவதையும் உத்தரவாதம் செய்யும் விதத்தில் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தன. இவையும் அரசின் அரசியல் அங்கமாக சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு செயல்படத்தொடங்கினால், பின் ஆளும் கட்சியினரின் அனைத்துக் குற்றங்கள் மற்றும் ஊழல்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதோடு, அவர்களை எதிர்ப்போரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவார்கள், மிரட்டப் படுவார்கள் மற்றும் வாய்மூடி மௌனிகளாக்கப்படுவார்கள்.

இவ்வாறு அரசமைப்புச்சட்டம் முழுமையாக அரிக்கப்படுவதும் அதன்கீழ் இயங்கிடும் நிறுவனங்கள் பெரிய அளவில் ஊழலுக்கு வழிவகுத்து, ‘கூட்டுக்களவாணி முதலாளித்துவம்’ கொழுப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதும், ஆளும் கட்சியால் மாபெரும் அளவில் பணபலத்தைக் குவிப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்திடும். இது, ஒரே அடியில், ஜனநாயகத்தின் தரத்தை அரித்துவீழ்த்திடும். இது, எந்தவொரு தேர்தலிலும் ஓர் அரசாங்கம் அமைவதற்கான மக்களின் தீர்ப்பை குதிரை பேரத்தின் மூலமாக மாற்றியமைப்பதற்கான சூழ்நிலைமைகளை உருவாக்கி விடும். (இப்போது பல மாநிலங்களில் பாஜக தேர்தலில் தோற்றாலும் பின்னர் அங்கே வென்ற சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கி அரசாங்கம் அமைவதற்கு வழிவகுத்துக்கொடுத்திருப்பது  வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது)

பகுத்தறிவின் மீது தாக்குதல்

இத்தகைய ‘புதிய இந்தியா’வின் கதை வெற்றிபெற வேண்டுமானால், இவர்களின் சித்தாந்தத்திற்கேற்ப இந்திய வரலாற்றை மாற்றியமைத்திடும் வேலையைச் செய்ய வேண்டியதும் அவசியமாகும். எனவேதான் இந்தியக் கல்வி அமைப்புமுறையையும், தங்களின் பகுத்தறிவற்ற, பத்தாம்பசலித்தனமான புராணக் குப்பைகளையும், கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளையும் உயர்த்திப்பிடித்திடும் விதத்தில் பாடப்புத்தகங்களை மாற்றியமைப்பதும் இவர்களுக்கு அவசியமாகிறது. அதற்காகத்தான் அறிவியல்மனப்பான்மையுடன் விளங்கும் பாடங்களை அப்புறப்படுத்த வேண்டியதும் இவர்களுக்குக் கட்டாயமாகிறது. இதேபோன்று கலாச்சாரத்துறையிலும், அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் கல்விமையங்களை, இந்தியக் கலாச்சாரத்தின் ஒத்திசைவு பரிணாமவளர்ச்சியை மூடிமறைத்துவிட்டு, தாங்கள் விரும்பும் ஒரேசீரான மற்றும் ஒரேவகையான கலாச்சாரத்தைத் திணித்திடும் விதத்தில் மாற்றியமைக்க வேண்டியதும் அவசியமாகிறது. இது, இந்தியாவின் பன்முகத்தன்மையுடன் விளங்கும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டிடும் கலாச்சாரத்திற்கு முற்றிலும் முரணான ஒன்றாகும். இதன் அடிப்படையில் வரலாற்றை மாற்றி எழுதி, கட்டமைக்க வேண்டியிருக்கிறது. இதற்காக இந்தியாவின் ஒத்திசைவு வரலாற்றைக் கற்பதைக் கைவிட்டுவிட்டு, அதற்குப்பதிலாக தங்கள் சித்தாந்தத்திற்கேற்ப புராண இதிகாசங்களை வரலாறாக எழுதவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அகழ்வாராய்ச்சி, கடந்தகாலத்தின் அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டு மேற்கொள்வதற்கு எதிராக, இந்துத்துவாவின் அறிவியலற்ற கருத்துக்களையொட்டி, வரலாற்றை எழுதக்கூடிய விதத்தில் சாட்சியங்களை உருவாக்கிட வேண்டியிருக்கிறது.

இவர்களின் ‘புதிய இந்தியா’வின் வெற்றி என்பது நம் சமூகத்தில் ஒரு புதிய குறியீட்டுவாதத்தை உருவாக்குவதன் மூலம் நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது. இதனால்தான் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில்கூட, எப்படி ஹிட்லர் தன்னுடைய இழிபுகழ் கூம்பை (Dome) பெர்லினில் கட்டினானோ அதேபோன்று இங்கேயும் மிகவும் அதிக அளவில் செலவு செய்து புதிய நாடாளுமன்ற வளாகத்தை (Central Vista), இவர்கள் கட்டத் துணிந்துள்ளார்கள். நேருவின் “நவீன இந்தியாவின் கோவில்கள்” என்று அழைக்கப்படுபவைகளுக்கு பதில்சொல்லக்கூடிய விதத்தில் புல்லட் ரயில்கள் மற்றும் நவநாகரிகப் பெயர்களில் பல திட்டங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

‘புதிய இந்தியா’வின் கதை, அவ்வளவு எளிதாக வெற்றிபெற முடியாது என்பதால்தான், இவர்கள் ஊடகங்களின் உடந்தையுடன் இந்திய மக்களைப் பீடித்துள்ள உண்மையான பிரச்சனைகளை மறைத்தும், அவர்களின் வேதனைகளை வெளிக்கொணராது தடுத்தும், அவற்றுக்குப் பதிலாக பொய்ச் செய்திகள், கட்டுக்கதைகள் மூலமாக மக்களின் உணர்வுகளை மாற்றியமைத்திட, மழுங்கடித்திட முயல்கின்றனர்.

தங்களின் உயிர்மூச்சாக விளங்கும் மதவெறி இந்துத்துவா வாக்குவங்கியை நிலைநிறுத்திக்கொள்வதற்காக, தங்களுடைய ‘புதிய இந்தியா’வின் ஓர் அத்தியாவசியமான பொருளாக, தலித்துகளுக்கு எதிராக, பழங்குடியினருக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரங்களையும் வன்முறை வெறியாட்டங்களையும் கட்டவிழ்த்துவிடுவதன் மூலமாக எப்போதும் சமூகப் பதற்றச் சூழ்நிலையைப் பரப்புவதையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவின் ஆகப் பெரும் இரு கனவுகளை ஆக ...

அயோத்தியில் ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் மோடியின் பேச்சு

அயோத்தியில் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமானத்திற்காக அடிக்கல்நாட்டு விழாவில் ஆற்றிய உரை ஒருவிதத்தில் இவர்களின் ‘புதிய இந்தியா’வின் சிந்தனையை வெளிப்படுத்தும்விதத்தில் அமைந்திருந்தது.

உச்சநீதிமன்றம், அயோத்தி தாவாவில் தீர்ப்பு வழங்கியது என்றபோதிலும், அது நீதி வழங்கிடவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, நாட்டில் உள்ள சட்டத்தின்படி ஒரு கிரிமினல் நடவடிக்கை என்று கூறியுள்ளது. அதனைச் செய்தோரை விரைவில் தண்டித்திட வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால், தாவாவுக்குரிய அந்த இடத்தில் மசூதியை இடித்திட்ட நபர்கள் வசமே கோவிலைக் கட்டுவதற்கான பணியையும் ஒப்படைத்தும் தீர்ப்பளித்திருக்கிறது. ஆயினும் இந்தக் கட்டுமானப் பணியை ஓர் ‘அறக்கட்டளை’ மூலமாக செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது.

ஆயினும், கோவில் கட்டும் பணியை ஓர் அதிகாரபூர்வமான அரசாங்க செயல்பாடாகவே பிரதமரும், அரசாங்கமும் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி எடுத்துக் கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ள பிரதமர் அதனை மீறும் விதத்தில் சென்றுள்ளார். ஒவ்வொரு குடிமகனுக்கும் அவருடைய மதத்தைத் தேர்வு செய்யும் அரசமைப்புச்சட்ட உத்தரவாதங்களைப் பாதுகாத்திடுவதும் உத்தரவாரதப்படுத்துவதும் அரசாங்கத்தின் கடமையாகும். இந்த அரசாங்கத்திற்கும், நம் அரசமைப்புச்சட்டத்தின்படி, மதம் கிடையாது.  இத்தகைய அரசமைப்புச்சட்டத்தின் மீறமுடியாத முன்மொழிவு பிரதமராலேயே காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது.   இவ்வாறு பிரதமர் மீறியிருக்கும் செயல், ஆர்எஸ்எஸ் அரசியல் திட்டத்தின் கீழான ‘புதிய இந்தியா’விற்கான சமிக்ஞையாகும்.

பிரதமர் மோடியின் பேச்சில் மிகவும் மோசமான அம்சம் என்பது அவர், நாட்டின் விடுதலைப் போராட்ட இயக்கத்தை, கோவில் கட்டும் இயக்கத்துடன் ஒப்பிட்டிருப்பதாகும். அவர் கூறியதாவது: “விடுதலைப்போராட்டத்திற்காக தியாகம் செய்யாத இடம் என்று நம் நாட்டில் எதுவும் இல்லை. ஆகஸ்ட் 15, பல லட்சக்கணக்கான மக்களின் தியாகங்களின் உருவகமாகும். இந்திய சுதந்திரத்திற்காக ஆழமாக ஏங்கிய எண்ணற்ற மக்களின் ஏக்கமாகும்.  அதேபோன்றே, ராமர் கோவில் கட்டுவதற்காக பல நூறாண்டுகளாக பல தலைமுறையினர் தன்னலமற்ற முறையில் தியாகம் செய்திருக்கிறார்கள்.”

இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டது. இவர்களின் ஆர்எஸ்எஸ் தொலைநோக்குப் பார்வையோ இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் கழித்துக்கட்டும் பார்வையைக் கொண்டது. இந்திய சுதந்திரப் போராட்டம் அனைவரையும் ஒன்றிணைக்கும் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக, நாட்டிலுள்ள வெகுஜனத் திரளுக்கு உத்வேகத்தை  ஊட்டி, அணிதிரட்டி, 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரத்தை எய்துவதற்கு இட்டுச் சென்றது. இவர்களின் ‘புதிய இந்தியா’வின் தற்போதைய கதையளப்பு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொன்றையும் நேரடியாக மறுதலித்திடும் ஒன்றாகும்.

அதிலும் மிகவும் முக்கியமாக, ஆர்எஸ்எஸ் இயக்கம் எந்தக் காலத்திலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அங்கமாக இருந்ததில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து அதற்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள வால்டர் கே.ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி டாம்லே ஆகியோரின் ‘காவியின் சகோதரத்துவம், 1987’ என்னும் நூல்கூட, (The Brotherhood in Saffron by Walter K Anderson and Shridhar D Damle, 1987) ஆர்எஸ்எஸ் இயக்கமானது விடுதலைப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை என்பதை ஆதாரத்துடன் கூறியிருப்பதோடு மட்டுமல்லாமல், அது அதன்காரணமாக பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற ஆதாயங்களையும் பட்டியலிட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சிந்தனாவாதியான, மறைந்த நானாஜி தேஷ்முக் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்: “ஏன், ஆர்எஸ்எஸ் ஒரு ஸ்தாபனம் என்ற முறையில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை?” உண்மையில், பம்பாய் உள்துறை, 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற சமயத்தில், ஆர்எஸ்எஸ் குறித்துக் கீழ்க்கண்டவாறு கருத்தினை வெளியிட்டிருந்தது: “சங் பரிவாரம், சட்டத்திற்குட்பட்டு மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டது. குறிப்பாக, 1942இல் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்கள் எதிலும் கலந்துகொள்ளாது தவிர்த்தது.”

இந்த உண்மைகளை மூடிமறைப்பதற்காக, ஆர்எஸ்எஸ்/பாஜக 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட்டுகள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று இப்போது கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக, அவதூறை அள்ளிவீசிக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக, 1992 ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50ஆவது ஆண்டுதினத்தைக் கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற, நாடாளுமன்றத்தின் நள்ளிரவு அமர்வின்போது அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் ஷர்மா என்ன கூறினார் என்பதை நினைவுகூர்வது நலம் பயத்திடும். அப்போது அவர் கூறியதாவது: “கான்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் அகமதாபாத் ஆலைகளில் பெரிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களுக்குப்பின்னர், 1942 செப்டம்பர் 5 அன்று தில்லியிலிருந்து லண்டனில் உள்ள அரசு செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப்பற்றி கூறப்பட்டிருந்ததாவது: அதன் உறுப்பினர்களில் பலருடைய நடத்தை, அவர்களில் பெரும்பகுதியினர் பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்களைக் கொண்டதாக இருப்பது என்பது எப்போதும் தெளிவாகத் தெரிகிறது.”

இதைவிட அதிகமாக சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா?

இந்தியாவின் எதிர்காலத்தை அழிப்பதைத் தடுத்திடுவோம்

இவர்களின் ‘புதிய இந்தியா’ என்பது, இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதுவது மட்டுமல்ல, இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தையும், அதனுடன் தொடர்புடைய அரசமைப்புச்சட்ட நிறுவனங்களையும், அதிகாரக்குழுமங்களையும், மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களையும், மக்களின் வாழ்க்கை மற்றும் சிவில் உரிமைகளையும் அழித்து ஒழிப்பது மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதன் மூலமும், தாக்குதல்களை அதிகரிப்பதன் மூலமும் இவர்களுக்கெதிராக சண்டையை மூட்டிவிட்டு இந்தியாவின் எதிர்காலத்தையே அரித்துவீழ்த்துவதுமாகும்.

இவர்களின் ‘புதிய இந்தியா’ இந்தியாவின் பொருளாதார சுயசார்பையும், அதன் அடித்தளங்களையும் அரித்துவீழ்த்துகிறது. கடந்த ஆறு ஆண்டு காலமாக இந்தியாவின் பொருளாதாரம் அழித்து ஒழித்துக்கட்டப்பட்டிருப்பது இதற்கு சாட்சியமாக விளங்குகிறது. இப்போது நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதற்காக இவர்கள் அளித்துள்ள பொருளாதார வரைபடம் பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியாவின் கனிம வளங்கள், இந்தியாவின் வனங்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்திட மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள், தொழிலாளர் வர்க்கத்தின் அரசமைப்புச்சட்ட உரிமைகளை ஒழித்துக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருத்தல், இந்தியாவின் செல்வம் அனைத்தையும் அந்நிய மற்றும் நம்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து கொடுத்திருப்பது ஆகிய அனைத்துக்கும் வகை செய்கிறது.  இந்தியாவின் விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்காகவும், இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்காகவும், குறைந்தபட்ச ஆதாரவிலை, விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, கொள்முதல் ஆகியவை தொடர்பாக இருந்துவந்த குறைந்தபட்ச பாதுகாப்பையும் ஒழித்துக்கட்டக்கூடியவிதத்திலும் அவசரச் சட்டங்கள் கொண்டுவந்திருப்பது ஆகிய அனைத்தும் பொது விநியோக முறையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும், வேளாண்-வர்த்தகத்தில் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டவும், உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய ஆபத்திற்கும் இட்டுச் செல்லும். இவை நமக்கு உணவு அளித்துவரும் உழவர்களை முழுமையாக நாசத்திற்குள்ளாக்கிவிடும்.

இவர்களின் இந்தப் ‘புதிய இந்தியா’, இவ்வாறாக, நம்முடைய அரசமைப்புச்சட்ட ஒழுங்கே இல்லாது ஒழித்துக்கட்டும் நெருக்கடிக்கு இட்டுச்செல்லும். நம் மக்களின் வாழ்வாதாரங்கள், சுதந்திரம், கண்ணியம் மற்றும் பெரும்பான்மை மக்களின் செழுமை ஆகியவற்றையும் ஒழித்துக்கட்டும் நெருக்கடிக்கு இட்டுச்செல்லும். இந்தியாவின் பன்முகத்தன்மை, அதன் பல்வேறு மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தையும் ஒழித்துக்கட்டும் நெருக்கடிக்கு இட்டுச்செல்லும். ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் பகுத்தறிவுடனான வாழ்க்கையைப் பின்பற்றுதல் ஆகியவற்றை ஒழித்துக்கட்டும் நெருக்கடிக்கும் இட்டுச்செல்லும்.

இவ்வாறு, இவர்கள் முன்வைத்திடும் ‘புதிய இந்தியா’வின் ஆபத்துக்களைத் தடுத்துநிறுத்தி, முறியடிப்பது அவசியமாகும். அதற்கேற்றவிதத்தில் இந்த ஆண்டு சுதந்திர தின சபதத்தை நாம் அனைவரும் எடுத்துக்கொள்வோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *