தொடர் 3: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | பூமியின் கதை (The Story of the Earth) - முனைவர் என்.மாதவன்

அறிவியலாற்றுப்படை 3: பூமியின் கதை – முனைவர் என்.மாதவன்

பூமியின் கதை (The Story of the Earth)

அறிவியலாற்றுப்படை

பாகம் 3

வருடக்கணக்கைச் சொல்லிக்கொண்டு சென்றால் தலை சுற்றும். வாசிக்கவும் அயற்சியாக இருக்கும். அறிவியலின் பெருமை சொல்வதற்கு இவையெல்லாம் தடையாக வேண்டாமே. போனால் போகட்டும் ஒரு பெட்டிச் செய்தியாக அவற்றைக் கொடுத்துவிடுவோம். பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை அறிவியலாளர்கள் எவ்வாறு கணிக்கின்றனர். பொதுவாக அறிவியல் எந்த வரையறைக்கும் கட்டுப்படாதது. யாரும் எங்கும் அதனை நிருபித்துக் காட்டிவிடலாம். பிரபஞ்ச வெடிப்பிலிருந்து பூமி இன்றைய பூமியாக உருவான வரலாற்றை மிகவும் சுருக்கமாக கொஞ்சம் பார்ப்போம். அதற்கு முன்பாக அறிவியல் ஆய்வு முறையின் இரண்டு முக்கியமான வகைகளைப் பார்த்துவிடுவோம் . ஏனென்றால் அறிவியல் ஆய்வுக்கு இதுதான் உதவிகரமாக இருந்துவருகிறது.

ஒன்று, ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனடிப்படையில் பெரும்பாலான விஷயங்களை ஓப்பீடு செய்து ஆய்ந்தறிவது. இதனை ஆங்கிலத்தில் (Inductive method). மற்றொரு முறை பொதுவான தரவுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட முடிவை எட்டுவது இதனை ஆங்கிலத்தில் (Deductive method) என்று அழைக்கின்றனர். நாசா உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள் கடந்த ஆண்டுகளில் பிரபஞ்ச உருவாக்கம் தொடர்பாக கிடைக்கும் பல்வேறு தரவுகளையும் இப்படித்தான் ஆய்வு செய்கின்றனர். பனிக்கட்டிகளிலும்,பாறையிடுக்குகளிலும் சிக்கிக்கிடக்கும் புதைப்படிமங்களைத் தொகுத்து பல வினாக்களுக்கு விடை காண்கின்றனர். இன்றைக்கு காலாவதியாகும் தருவாயில் இருக்கும் நட்சத்திரங்களின் நிலையைக்கொண்டு பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நமது சூரியனுக்கு என்ன நடக்கும் என கணிக்கின்றனர். சரி நம்ம கதைக்கு வருவோம்.

தொடர் 3: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | பூமியின் கதை (The Story of the Earth) - முனைவர் என்.மாதவன் | History of Earth In Tamil

பெருவெடிப்பு மூலமாக பல்வேறு விண்மீன் திரள்கள் உண்டானதை பார்த்தோம். அவ்வாறு உண்டான விண்மீன் திரளின் ஒரு பகுதி தான் பால் வெளி மண்டலம். பால்வெளி மண்டலமே கற்பனைக்கெட்டாத அளவுக்கு பெரியது. அதாவது குறுக்குவெட்டாக அதனைக்கடக்க ஒருலட்சம் ஒளி ஆண்டுகள் ஆகுமென கணிக்கப்படுகிறது. இந்த ஒளி ஆண்டுக் கணக்கை முதலில் செட்டில் செய்துவிடுவோம். ஒளி ஒரு விநாடியில் கடக்கும் தொலைவை வைத்துத்தான் விண்பொருட்களுக்கிடையே உள்ள தூரத்தை அறிவியலாளர்கள் கணக்கிடுகின்றனர்.. அதாவது ஒளியானது ஒரு நொடிக்கு சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும். அந்த வேகத்தில் பயணிக்கும் ஒரு பொருள் எவ்வளவு காலத்தில் மற்றொரு விண்பொருளை அடையும் என்ற கணக்கிட்டில் ஆண்டு, நிமிடம் எனக் கணக்கிடுகின்றனர். உதாரணமாக பூமியானது சூரியனிலிருநுது 8நிமிட ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. அதாவது சூரியனிடமிருந்து புறப்படும் ஒரு கதிர் நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு என்ற வேகத்தில் பூமியை அடைய எட்டு நிமிடம் ஆகும். சூரியன் 5.52க்கு உதித்தால் 6 மணிக்கு நாம் அதன் ஒளியைப் பார்க்கலாம். அடடா பூமியின் கதையை விட்டுவிட்டோமே..

அந்த பால்வழி மண்டலத்தின் ஒரு புள்ளி தான் நமது சூரிய குடும்பம். அந்த சூரிய குடும்பத்தில் ஒரு கோள்தான் நமது பூமி. ஆனால் இந்த பூமி உருவாக பல லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின. பெருவெடிப்பின் ஒரு பகுதியாக ஒரு நெபுலாவிலிருந்து கணக்கற்ற நிறையுடன் சூரியன் எண்ணிலடங்கா ஆண்டுகள் சுற்றிக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் ஆண்டாவது ஒன்றாவது யார் எதைப்பற்றிக் கவலைப்பட்டிருக்கப் போகிறார்கள், பின்னாளில் வரப்போகும் கிரேக்கர்கள்தான் நாட்காட்டிகளையும் ஆண்டுகளையும் வடிவமைக்கப்போகின்றனர். நமது புரிதலுக்காக ஆண்டுகள் என்று சொல்லிக் கொள்வோம். இவ்வாறு சுற்றிக்கொண்டிருந்த சூரியனிலிருந்து நமது பூமி உள்ளிட்ட ஒவ்வொரு பாறை போன்ற நிறைப்பரப்பும் கோள்களாகப் பிரியத் தொடங்கின. புதன்,வெள்ளி, பூமி செவ்வாய்,வியாழன், சனி,யுரேனஸ்,நெப்டியூன், (புளூட்டோ இவர் தற்போது அனாதையாகிவிட்டார் அதனால் எனா ஊர்ட் கோள்களுடன் ஐக்கியமாகிவிட்டார்)

தொடர் 3: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | பூமியின் கதை (The Story of the Earth) - முனைவர் என்.மாதவன் | History of Earth In Tamil

ஒரு வசதிக்காக இனி பூமியில் நடந்ததைப் பற்றி மட்டும் பார்ப்போம். சூரியனிடமிருந்து தனிக்குடித்தனம் வந்த பூமி அதுவும் அனல் பந்தாய் சுற்றிக்கொண்டிருந்தது. அளவிடமுடியாத வெப்பக் கோளாய் அது இருந்தது சூரியன் பிற்ப்புடனேயே ஹைட்ரஜனும் ஹீலியமும் உருவாகியிருந்தன.
ஆசிரியரில்லாத வகுப்பறையாய் பிரபஞ்சத்தில் ஆட்டங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன. பல கோள்கள் மீதும் பால்வெளியிலிருந்தும் பிரபஞ்சத்தின் மற்ற பகுதியிலிருந்தும் பல லட்சக்கணக்கான விண்கற்கள் விழத் தொடங்கினர் அவ்வாறு விழத் தொடங்கிய போது பூமியின் வேதியியல் சூழலும் மாறத் தொடங்கியது. பல்வேறு வேதிப்பொருட்களும் சேகரமாகத் தொடங்கின. பூமியில் எரிதல் முக்கிய நடவடிக்கையாக இருந்ததால் கரியமில வாயுவின் அளவு மிகவும் கூடுதலாக இருந்தது. அப்போது ஆக்சிஜன் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு காலகட்டத்தில் வேறு கிரகங்களில் இருந்து வந்து சேர்ந்த துகள்கள் மூலமாக தான் நீருக்கான ஆதாரம் கிடைத்தது.

சிலபசா, டைம்டேபிளா அறிவியல் அதன்போக்கில் பாடம் நடத்திக்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் நைட்ரஜன் ஆர்கான் போன்ற வாயுக்கள் உருவாகின. இதனிடையே முழுவதும் நீரால் ஆன நீர்க்கோளமாக இருந்ததில் சிலவகை பாக்டிரியாக்கள் உருவாகத் தொடங்கின. கரியமில வாயு படிப்படியாக அதிகமானதால் பூமி தனது வெப்பத்தை முழுவதுமாக இழந்து பனிக்கட்டியானது. இதனை பனியுகம் என்று அறிவியலாளர்கள் வர்ணிக்கின்றனர். நமது பூமி பல பனியுகங்களைக் கண்டிருப்பதாக அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். இவ்வாறான பனியுகமும் முடிவுக்கு வந்தது.

பனியுகத்தில் பூமியின் மேற்பரப்பு குளிர்ந்தாலும் உட்பரப்பின் வெப்பம் அப்படியே இருந்தது. இதனால் கோவித்துக்கொண்டு போகும் குழந்தை போல பல முறை பூகம்பங்களும் எரிமலைகளும் வெடிக்கத் தொடங்கின. பூமியின் அடிப்பாகத்திலிருந்த டெக்டானிக் தகடுகள் வெகுவாக ஆட்டம் போட்டு கண்டங்களை நகரவைத்தன. இவ்வாறான நகர்வுகளால் ஏற்பட்ட அழுத்தங்களால் நம்மூர் இமயமலை, அமெரிக்காவின் ராக்கி மலைத்தொடர்கள் போன்றவை உருவாகின. இப்படிப்பட்ட காலங்களில் அழிந்த உயிரினங்களும் மரங்களும்தான் நமக்குப் புதைபடிவ எரிபொருட்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

தொடர் 3: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | பூமியின் கதை (The Story of the Earth) - முனைவர் என்.மாதவன் | History of Earth In Tamil

பூமியில் கடல் போன்ற நீர்ப்பகுதியில் பாசிகள் தோன்றத் தொடங்கின. பாசிகளின் பரிணாமவளர்ச்சியும் பெருக்கமும் ஆக்சிஜன் அளவைக் கூட்டத் தொடங்கின. மெல்ல கடல்வாழ் மெல்லுடலிகள், முதுகெலும்புள்ள உயிரினங்கள் பரிணமிக்கதொடங்கின. நிற்க இப்போதைக்கு நமது மூதாதையர்கள் குரங்குகள் கூட பரிணமிக்கவில்லை. பின்னாளில் கிடைத்த கரியமில வாயுவைப் பயன்படுத்தி பல்வகைத் தாவரங்களும் பல்கிப்பெருகின. உலகையே ஆட்டிப்படைத்த டைனோசர்களும் வந்து குத்தாட்டம் போட்டுவிட்டுப் போயின. பிறகு பல்வகைத் தாவரங்களும் உயிரினங்களும் பரிணமிக்கத் தொடங்கின. இந்த மட்டில் உயிரினங்கள் வாழ ஏற்ற இடமாக பூமி மாறியதில் அறிவியலின் பங்கை புரிந்துகொள்ளவே இவ்வளவு பீடிகை. மனிதன் அறிவியலை ஆட்டிப் படைக்கும் காலம்வரை அறிவியல் தொடர்ந்து இயங்கிகொண்டேயிருந்தது. இயக்கம் தானே அறிவியல் அடிப்படை. மனிதர்களின் பரிணாமத்தை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

              நிகழ்வு                                                    ஆண்டுகளுக்கு முன்பு (சுமார்)

  • பூமியின் பிறப்பு                                               4.6 பில்லியன் ஆண்டுகள்
  • பூமியின் மேலேடு உருவாக்கம்               4.5 பில்லியன் ஆண்டுகள்
  • முதல் கடல் உருவாதல்                                4.4 பில்லியன் ஆண்டுகள்
  • முதல் உயிரினத் தோற்றம்                        3.85 பில்லியன் ஆண்டுகள்
  • ஆக்சிஜன் தோற்றம்                                     1.5 பில்லியன் ஆண்டுகள்
  • முதல் விலங்கினத் தோற்றம்                   700 மில்லியன் ஆண்டுகள்

இப்படியாக நமது மூதாதையர்களான ஹேமோ சேப்பியன்ஸ் சுமார் 2,லட்சம் முதல் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினார்கள். அப்போது நாம் பரிணமிக்கவில்லை. நாம் எவ்வளவு ஜூனியர். இதை ஐந்தறிவு உள்ள விலங்கினங்கள் சொல்லவில்லை. நம்மவர்கள்தான் கண்டறிகிறார்கள். மனிதா கொஞ்சம் அடக்கி வாசி …………

படை எடுப்போம்

கட்டுரையாளர்:

தொடர் 1: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai): உலகில் வேறு எதையும் விட அறிவியல் மனிதர்களின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. N. Madhavan (என். மாதவன்)

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்

முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 2 : பெருவெடிப்பும் பிரபஞ்ச வெளியும் – முனைவர் என்.மாதவன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *