The story of the lying man (பொய் மனிதனின் கதை 3) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 3 – ஜா. மாதவராஜ்



“உண்மை மௌனத்தால் நிரப்பப்படுமானால், அந்த அமைதியும் பொய்யே!”
– யெவ்டுஷெங்கோ

”வதோராவில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவில் அவர் என்னை தனது மனைவியாக குறிப்பிட்டு இருக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. அவர் என்னை நினைவில் வைத்திருக்கிறார்.” என்று பா.ஜ.கவின் பிரதம வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட நரேந்திர மோடியின் மனைவியாகிய யசோதாபென் பத்திரிகையாளர்களிடையே 2014ம் ஆண்டு மே 24ம் தேதி சந்தோஷப்பட்டார்.

வேட்பு மனுவில் தனது மனைவியின் பெயராக யசோதாபென் என்று குறிப்பிட்டதைத் தவிர, நரேந்திர மோடி என்னும் ஆண் மகன் தன் திருமணம் குறித்தோ, தன் மனைவி குறித்தோ வேறு ஒரு வார்த்தையும் வேறு எங்கும் எப்போதும் உதிர்த்ததில்லை. .

யசோதாபென் என்னும் பெயரை நரேந்திர மோடியின் பேனா எழுதிய அந்த ஒரே ஒரு கணத்திற்கு பின்னணியாக சதிகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த அதிகார வேட்கை இருந்தது. இந்திய நாட்டின் அரசியல் இருந்தது. ராஜாவின் வெற்றிக்கு ஆட்டத்தின் துவக்கத்திலேயே பலி கொடுக்கப்பட்ட ஒரு பகடைக்காயின் கதை அது. பொய்யாய்ப் போன ஒரு பெண்ணின் கதை அது.

மோடிக்கு திருமணம் நடந்து 25 ஆண்டுகள் கழித்துத்தான் மோடி திருமணமானவர் என்னும் தகவலே வெளியில் வந்தது. அள்ள அள்ளக் குறையாத மர்மங்களின் மனிதர் அவர்.

பத்திரிகையாளர் வகீல் என்பவர் 1993ல் யசோதாபென்னை நேரில் சந்தித்து குஜராத்தின் அரசியல் பத்திரிகையான அபியானில் எழுதி இருந்தார். அப்போது குஜராத் அரசியலில் செல்வாக்கு பெற்ற கேசுபாய் பட்டேலுக்கு பக்கபலமாக மோடி இருந்தார். கட்சி மட்டத்தில் அறியப்பட்டவராய் இருந்தும், மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு வெளிச்சம் பெறாதவர். எனவே அந்த செய்தி, முக்கியமற்ற ஒரு மனிதரின் தனிப்பட்ட விஷயமாய் கரைந்து போயிருக்க வேண்டும். ஆனால் அப்போதே ஆர்.எஸ்,எஸ்ஸும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் தனக்கு கண்டனங்கள் தெரிவித்ததாக வகீல் குறிப்பிடுகிறார். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மோடியின் திருமணம் குறித்து ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தது என்கிறார் அவர்.

2000ம் ஆண்டில் குஜராத் புஜ்ஜில் ஏற்பட்ட பூகம்பத்தையொட்டி, நிவாரணப் பணிகளில் கேசுபாய் படேலின் அரசு மக்களின் நம்பிக்கை இழந்து, வெறுப்பை சம்பாதித்தது, 2001ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிந்துரையின் பேரில் அப்போது நாட்டின் பிரதம மந்திரியாய் இருந்த வாஜ்பாயால் குஜராத் அரசியலில் ஒரு புதிய முகமாக நரேந்திரமோடி களம் இறக்கப்பட்டார். அரசியல் எதிரிகளான கேசுபாய் பட்டேல் சங்கர்சிங் வகேலா இருவருக்கும் மோடி பொது எதிரியாகிறார்.

மோடிக்கு மாநில அளவில் கட்சியில் பெரிய ஆதரவு அப்போது இருக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே முதலமைச்சரான மோடி ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தலில் நின்று ஜெயிப்பதே பெரும் சிரமமாய் இருந்தது. இந்த நேரத்தில்தான், அயோத்திப் பிரச்சினையின் பின்னணியோடு கோத்ரா ரயில் சம்பவம் உருவானது. அதையொட்டி முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்கள் குஜராத்தில் திட்டமிடப்பட்டு அரங்கேறின. நிகழ்த்தப்பட்ட வன்முறைகளால் தேசமே பதறியது. உலக நாடுகள் அதிர்ந்து கண்டனக்குரல்கள் எழுப்பின. வெறிபிடித்த இந்துத்துவா சக்திகள் அனைத்தும் மோடிக்கு ஆதரவு தெரிவிக்க, பா.ஜ.கவில் மோடியின் அரசியல் எதிரிகள் அனைவரின் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின. மோடியின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்த இடம் அதுதான். ஒன்றிலிருந்து ஒன்றாய் ஏற்படும் விளைவுகளிலிருந்து வரலாற்றில் தனிநபர் பாத்திரங்களை அறிய முடிகிறது.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகு 2003லிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தங்கள் பகுதியில்தான் மோடியின் மனைவி வசிப்பதாக, முணுமுணுத்தாலும், மூர்க்கத்தனமான அதிகாரத்தின் மீதான பயம் உரக்க பேச விடாமல் செய்திருக்க வேண்டும். 2002 மற்றும் 2007 சட்டசபை தேர்தல்களிலும் அவர் வேட்பு மனுவில், திருமணம் பற்றிய விபரங்களை குறிப்பிடாமல் இருந்தார்.

வகீலுக்குப் பிறகு பதினாறு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பத்திரிகையாளர் வந்தார். உண்மையைப் போட்டு சத்தமாய் உடைத்தார்.

”மிகச் சாதாரணமான புடவை, பொருத்தமற்ற ரவிக்கை அணிந்து இருந்தார். லேசாக குனிந்த முகம் சுருக்கம் கொண்டிருந்தது. வாழ்வின் கஷ்டமான நேரங்களைப் பார்த்திருந்தன கைகள். முடியை இறுக்கமாக பின்னுக்கு இழுத்து கட்டியிருந்ததால் ஒரு கடுமையான தோற்றம் ஏற்பட்டிருந்தது.. செருப்பு அணிந்த கால்களில் வெடிப்புகள் நிறைந்து அழுக்காயிருந்தது. குஜராத்தில் ரஜோசனா கிராமத்தின் ஒரு பெண்ணாக அவர் இருந்தார்.”

இப்படித்தான் விவரிக்கிறார் பத்திரிகையாளர் ஹைமா தேஷ்பாண்டே. 2009ம் ஆண்டு மே மாதத்தில் ரஜோசனா கிராமத்துப் பள்ளிக்குச் சென்று அங்கு ஒன்றாம் வகுப்பு டீச்சராய் இருந்த யசோதாபென்னை, அவரது 57வது வயதில் நேரில் சந்தித்திருக்கிறார் ஹைமா. அப்போது குஜராத்தின் முதலமைச்சராய் இருந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடிக்கும் யசோதாபென்னுக்கும் இந்து மதச் சடங்கின்படி திருமணம் நடந்து நாற்பத்தோரு வருடங்கள் ஆகி இருந்தது.

ஹைமா தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் ஒரு குழந்தையைப் போல உற்சாகமாகியிருக்கிறார் யசோதாபென். முகமெல்லாம் அப்படி சிரித்திருக்கிறது. தன்னைப் பற்றிச் சொல்லவும் விரும்பி இருக்கிறார். பள்ளியின் தலைமையாசிரியர் பிரவீன்குமார் வியாஸ் குறுக்கிட்டு, அவர் பத்திரிகையாளரோடு பேசிக்கொண்டு இருப்பதை நினைவுபடுத்தி இருக்கிறார். ”பள்ளி முடிந்ததும் பேசலாம். இப்போது வகுப்பறைக்குச் செல்லுங்கள்’ என உத்தரவிட்டிருக்கிறார்.

“இடைவெளி நேரத்தில் பேசுகிறேனே… கொஞ்ச நேரம்தான்” என்று சொல்லிப் பார்த்திருக்கிறார் யசோதாபென். தலைமையாசிரியர் அசையவில்லை. வேறு வழியின்றி பணிவுடன் அந்த இடத்தை விட்டு சென்றவர் சட்டென திரும்பி வந்து, “நான் என் கணவருக்கு எதிராக எதையும் சொல்ல மாட்டேன். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த வேலைதான் என் வாழ்க்கை. பயமாய் இருக்கிறது “ என்று சொல்லி அகன்றிருக்கிறார்.

உடனடியாக தலைமையாசிரியர் யாரிடமோ செல்போனில் பேசி இருக்கிறார். அடுத்து யசோதா பென்னின் வகுப்பறைக்குச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் யசோதாபென் முற்றிலும் வேறொருவராக தென்பட்டிருக்கிறார். முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லாமல் போயிருக்கிறது. பதட்டமாக காணப்பட்டிருக்கிறார். திரும்ப ஹைமா சென்று அவரை சந்திக்க முயற்சித்தபோது பேசுவதை புறக்கணித்து, என்னை தனியாக இருக்க விடுங்கள் என சத்தம் போட்டிருக்கிறார்.

தொடர்ந்து சில ஆண்கள் அங்கு வாகனங்களில் வந்திருக்கிறார்கள். தலைமையாசிரியரின் அறைக்குள் நேரடியாக சென்றிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் வெளியேறி இருக்கிறார்கள். பள்ளி முடிந்ததும் வெளியே காத்திருந்த ஆட்டோவில் ஓடிச்சென்று ஏறி முகத்தை கைகளால் பொத்தியவாறு 20 கி.மீ தள்ளி இருக்கும் தன் சகோதரர் வீட்டிற்கு அன்றைக்கு போயிருக்கிறார் யசோதாபென். சில நிமிடங்களில் அரசு பத்திரிகையாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு இளைஞன் வந்து உடனடியாக இங்கிருந்து சென்று விடுங்கள் என ஹைமா தேஷ்பாண்டேவிடம் சொல்லி இருக்கிறான். அவரும், அவரது குழுவினரும் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாகி இருக்கிறது.

அந்த கிராமத்து மக்களிடம் ஹைமா விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதே ஊரில் நூறு சதுர அடிக்கும் குறைவான, தகர கொட்டாய் வேய்ந்த ஒரு சிறு வீட்டில்தான் யசோதா பென் வாழ்ந்து வந்திருக்கிறார். கழிப்பிடம் கூட கிடையாது. ஒத்தாசைக்குக் கூட யாரும் கிடையாது. அவரால் வேறொரு இடத்தில் இதை விட சௌகரியமாகக் கூட வாழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. ஆனால் ஏன் அந்த சிறிய ஊரில் அவதிப்பட வேண்டும் என்பது பிடிபடவில்லை. மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர்தான் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மனைவி என அங்கு பெரும்பாலோருக்குத் தெரிந்திருந்தது.

ஹைமா தேஷ்பாண்டே மூலம் பத்திரிகைகளில் இந்த தகவல்கள் வந்த பின்னரும் கூட 2012ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் மோடி வேட்பு மனுவில் அவரது திருமணம் பற்றி குறிப்பிடவில்லை. “நான் தனி ஆள். எனக்கு குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்? என் உடல் உயிர் எல்லாமே மக்களுக்கு சேவகம் செய்யத்தான்!” என தொடர்ந்து கூட்டங்களில் இரண்டு கைகளையும் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தார்.

People Representation Act ஐ மீறியதற்காக மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி 2013ம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.. இதில் தேர்தல் கமிஷனே முடிவெடுக்க வேண்டும் எனச் சொன்னது நீதிமன்றம். தேர்தல் கமிஷனும் பழைய கதைகளை எல்லாம் ஆராய விரும்பாமல், “இனி தேர்தலில் நிற்பவர்கள் வேட்பு மனுவில் எதையும் நிரப்பாமல் விடக் கூடாது, கேட்கப்பட்ட அனைத்து விபரங்களும் தர வேண்டும்” என்று பொதுவான ஒரு விதியை எல்லோருக்குமாக அறிவித்து தன் நியாயத்தை முடித்துக் கொண்டது..

இந்த நேரத்தில்தான் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.. பாஜகவின் பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.

நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் சத்திய சோதனை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் 1968ம் ஆண்டு நடந்த திருமணத்தை 46 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடி 2014ம் ஆண்டில் உலகத்தின் முன்னே ஒப்புக் கொண்டார்.

பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து விவாதங்களும், மோடியின் மீது கண்டனங்களும் எழுந்தன. “BJP ‘bachelor’ Modi admits marriage” என பிபிசி மானபங்கம் படுத்தியது.

பதில் சொல்ல வேண்டிய மோடியோ கூட்டத்தினிடையே மேடையேறி அங்கும் இங்கும் நகர்ந்து டஸ்டரை வைத்து எதையோ அழிப்பது போல கைகளை அசைத்துக் கொண்டு இருந்தார்.

மோடியின் ஒவ்வொரு பொய்யையும் சமாளிப்பதும், மடை மாற்றுவதும் பாஜக என்னும் ’தூய்மையான’ கட்சி’யின் முக்கிய அலுவல் பணியாகிப் போனது.

“மோடி திருமண விபரத்தை சொல்லவில்லை. அவ்வளவுதானே. திருமணம் ஆகவில்லை எனச் சொல்லி இருக்கிறாரா? இது எப்படி பொய்யாகும், குற்றமாகும்”

“மோடியின் திருமணமா இங்கு முக்கியம்?. நாட்டின் முன் ஊழல் முதற்கொண்டு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப் பற்றி பேச வக்கில்லை.”

“மோடியின் மனைவியே இதுகுறித்து கவலைப்படாதபோது, சம்பந்தமில்லாதவர்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்”

இதில் நிர்மலா சீதாராமன் பேசியதுதான் உச்சம். “மோடி அவர்களின் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம். அதற்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டுமா?”

மோடியின் திருமணம் நடந்தது 1968ம் ஆண்டு. அவரது பிறந்த ஆண்டு 1950 என்று வைத்துக் கொண்டாலும் அவரது 18வது வயதில் திருமணம் நடந்திருக்கிறது. யசோதாபென்னுக்கு 16 வயது. 1929ம் ஆண்டு சட்டப்படி பெண்ணுக்கு திருமண வயது 14 எனவும், ஆணுக்கு 18 எனவும் இருந்தது. எனவே அதனை குழந்தைத் திருமணம் என்று வகைப்படுத்த முடியாது.

திருமணம் நடந்து மூன்றாண்டுகள் மோடி குடும்பத்தாருடன் இருந்தாலும், மோடியுடன் கூட வாழ்ந்தது மூன்று மாதங்கள் போலத்தான் என்றும் அதன் பிறகு அவர் வீட்டை விட்டு சென்று விட்டதாகவும், அவரிடமிருந்து எந்த தகவல்களும் இல்லை என்றான பிறகு அவரது குடும்பத்திலிருந்து விலகி வந்து தனது சகோதரர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாக யசோதாபென் கூறுகிறார். மீண்டும் படிக்கத் துவங்கியதாகவும், ஆசிரியர் பணிக்குச் சேர்ந்ததாகவும் தனிமை நிறைந்த தன் வாழ்வின் போக்கை தொடர்கிறார்.

மோடியின் சகோதரர் சோமபாய் மோடிவின் கூற்று வேறாக இருக்கிறது. மோடிக்கு அவ்வளவு சிறுவயதில் திருமணம் செய்வது பிடிக்கவில்லை என்றும், குடும்பத்தாரின் கட்டாயத்தினால் திருமணம் செய்ததாகவும், எனவே திருமணம் ஆனவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், பின்னர் குடும்பத்தாருடன் வந்து மோடி தங்கவே இல்லை என்றும் அவர் சொல்கிறார்.

திருமணம் பிடிக்கவில்லை என்றால், திருமணத்துக்கு முன்பே மோடி வீட்டை விட்டு சென்றிருக்கலாமே என்னும் கேள்வி எழுத்தான் செய்கிறது. என்ன நடந்தது, ஏன் நடந்தது என்னும் ஆராய்ச்சிகளுக்கும், விவாதங்களுக்கும், ஊகங்களுக்கும் சென்றாலும் யசோதாபென்னுக்கு யாரும் நியாயம் வழங்கிட முடியாது.

அதிகார பீடத்தின் உச்சியில் இருக்கும் சக்தி வாய்ந்த மனிதரின் மனைவியாகிய அந்த மிகச் சாதாரண பெண்மணி தனது சிந்தனைகள் எல்லாவற்றையும் அப்படியே இனி எப்போதும் வெளிப்படுத்திட முடியாது.

ஆனால் இந்தியா டுடே பத்திரிகைக்கு 2014ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி யசோதாபென் அளித்த பேட்டியில் சில உண்மைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டு இருக்கின்றன.

இந்தியா டுடே: ”இத்தனை நாளும் மனைவி என்ற ஸ்தானத்தை கொடுக்காமல் தாங்கள் அலட்சியப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்களா?”

யசோதாபென்: ”இல்லை. நான் மோசமாக உணரவில்லை. விதியாலும் கெட்ட நேரத்தாலும்தான் அவ்வாறு செய்கிறார் என்பது எனக்குத் தெரியும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் அவ்வாறு பேசுகிறார், பொய்யும் சொல்கிறார். என் நிலைமை ஒன்றும் மோசமாகவில்லை. ஒருவகையில் அதிர்ஷ்டம் என்னை மேம்படுத்தியே இருக்கிறது.”

இந்தியா டுடே: ”ஏன் நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை?”

யசோதாபென்: ”இந்த அனுபவத்திற்குப் பிறகு எனக்கு திருமணம் செய்து கொள்ளத் தோன்றவில்லை. என் மனம் அதில் இல்லை.”

சில வார்த்தைகளில் ஒரு வாழ்க்கையையே தரிசிக்கும்படி ஆகிவிடும். அப்படி ஒரு உரையாடல் இது.

யசோதாபென் உண்மையாகவும், மோடி பொய்யாகவும் காலத்தின் முன் நிற்கிறார்கள்.

முந்தைய தொடர்களை வாசிக்க: 

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *