The story of the lying man (பொய் மனிதனின் கதை 4) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 4 – ஜா. மாதவராஜ்



“அம்பு போல் நேராக செல்கிறது உண்மை.
பாம்பு போல் நெளிந்து நெளிந்து செல்கிறது பொய்” – சுசி காசிம்

“அவர்கள் 60 பேரைக் கொன்றார்களா,  இல்லையா” என்று மோடி மேடையிலிருந்து கேட்கிறார்.

“ஆம், கொன்றார்கள்” என்கிறது கீழே நின்றிருக்கும் கூட்டம்.

“நாம் அவர்களைக் கொன்றோமா?” அடுத்த கேள்வி. 

“இல்லை” என பெரும் சத்தம்.

“நாம் அவர்கள் கடைகளுக்குத் தீ வைத்தோமா?”. 

“இல்லை”. 

“நாம் யாரையாவது கற்பழித்தோமா?”. 

“இல்லை”. 

“ஆனால் குஜராத்தின் எதிரிகள் குஜராத்தே தீப்பிடித்து எரிவதாகச் சொல்கிறார்கள்” என்று முடிக்கவும் கூட்டம் கோபம் கொண்டு கத்துகிறது.

“நாம் தீவீரவாதிகளா” என்று கேள்வி. 

“இல்லை” என கொந்தளிக்கிறது கூட்டம்.

“நாம் தீவீரவாதிகளானால்…” என்று நிறுத்தி கூட்டத்தைப் பார்க்கிறார் மோடி. நிதானமாய். சட்டென்று உச்சஸ்தாயில் அதி உக்கிரத்துடன்  “பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இருக்காது” என்று முடிக்கிறார். கூட்டம் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரிக்கிறது.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலை ஒட்டி மோடியின் இந்த வெறியேற்றும் பொதுக்கூட்டப் பேச்சினை அப்படியே இயக்குனர் ராகேஷ் சர்மா அவரது ‘இறுதி தீர்வு” (Final Solution)  என்னும் ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறார், 

மோடி குறிப்பிட்ட ‘நாம்’ இங்கே இந்துக்களின் குறியீடாகவும்,, ‘பாகிஸ்தான்’ என்பதை ’மூஸ்லீம்களின் குறியீடாகவும் பகுத்துப் பார்க்க ஆழமான சமூக அரசியல் ஞானமெல்லாம் தேவையில்லை. இந்தியாவை அப்படி அவர்கள் பழக்கி வைத்திருக்கிறார்கள்.

2002 பிப்ரவரி 27ம் தேதி  காலையில் கோத்ராவில்  சபர்மதி ரெயிலில் ஆறாவது கோச் எரிக்கப்பட்டதில், அயோத்திக்கு சென்று திரும்பி வந்த கரசேவகர்களில் 59 பேர் உடல் கருகி இறந்து விட்டதாக எங்கும் காட்டுத் தீயாய் செய்திகள் பரவின. நாடு முழுவதும் பதற்றம் தொற்றியது. கோத்ரா மாவட்ட கலெக்டர், “இது ஒரு விபத்து. திட்டமிட்ட சதியல்ல” என்றே முதலில் ஊடகங்களிடம் சொல்லி இருக்கிறார். அன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் ஆகாஷவாணியில் முதலமைச்சராக இருந்த மோடி, இந்த கொடிய சம்பவத்திற்கு பின்னால் ஐ.எஸ்.ஐயின் சதி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே  ஐ.எஸ்.ஐ என்றும் பாகிஸ்தான் என்றுமே அவர் கூறி வந்தார். 

இது போன்ற பேச்சுக்களினால் ஏற்பட்ட விளைவுகளையும் அதே ஆவணப்படத்தில் காணலாம். 

வெளிச்சம் குறைந்த டிசம்பர் 15, 2002 இரவு வேளையில், பாரதீய ஜனதா கட்சியினரும், விஸ்வ ஹிந்து பரிஷத்துக்காரர்களும் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடி அரசு வெற்றி பெற்றதை ஆரவாரித்துக்  கொண்டாடுகிறார்கள். வாகனங்கள் அலறும் சத்தங்களின் நடுவே நின்று தலையில் காவித்துணி கட்டிய ஒருவன் “பி.ஜே.பியின் வெற்றி எனது வெற்றி” என்கிறான். பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுவன் “கடவுளுக்கு நன்றி… முஸ்லீம் தாய்களை புணருங்கள்” என்கிறான்.

மோடியின் வார்த்தைகளையும், அந்த சிறுவனிடம் வெளிப்பட்ட வார்த்தைகளையும் சேர்த்துப் பார்த்தால் குஜராத் வன்முறைகளின் ஊற்றுக்கண்ணை அறிய முடியும். 60 பேரைக் கொன்றார்கள் என கோத்ரா ரயில் எரிப்பை, ஒட்டு மொத்த முஸ்லீம் மக்கள் மீதான இந்துக்களின் வெறுப்பாகவும், ஆத்திரமாகவும், வன்மமாகவும் முன்னிறுத்தியது யார் என்பது தெரியும். 

ரெயில் பெட்டியில் கருகிய கரசேவகர்களின் உடல்களை சட்ட விரோதமாக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான ஜெய்தீப் படேல் வசம் ஒப்படைக்கப்பட்டது. இறந்து போனவர்களின் உடல்களோடு ஊர்வலமாய் சென்று  பெரும் கூட்டமாக கலந்து கொண்ட இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கலவரங்களும், வன்முறைகளும் வெடித்தது. முஸ்லீம் மக்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். 

மனிதகுலம் அதிர்ச்சியோடு பார்த்த காட்சிகளும் நிகழ்வுகளும் தேசம் குறித்த நினைவுகளில் உறைந்தே இருக்கின்றன. கருகிய உடல்களும், வெட்டப்பட்ட மனித உறுப்புகளும், வாட்களின் முன்பு கதறி கையெடுத்துக் கும்பிட்ட கைகளும், வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களின் அலறல்களும் நிறைந்த பயங்கரமான நாட்கள் அவை.

2002 பிப்ரவரி 28ம் தேதியும் அப்படியொரு நாள்தான். குல்பர்க் சொஸைசிட்டியில் இந்து மத வெறிக் கும்பலால் முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஜாஃப்ரியும் 37 பேரும் வெறிகொண்ட இந்துத்துவ கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இறப்பதற்கு முன்பு காவல்துறைக்கும் முதலமைச்சர் மோடிக்கும் மாறி மாறி தங்களைக் காப்பாற்றுவதற்கு ஜாஃப்ரி கதறி போன் செய்திருக்கிறார். எந்த பதிலும் இல்லை. பாதுகாப்பும் கிடைக்கவில்லை. ஜாஃப்ரியின் துணைவியார் ஜாகியா தொடுத்த வழக்கில் மோடியும் முக்கிய குற்றவாளியாய் கருதப்பட்டு இருந்தார். 

வழக்கின் உண்மைகளை அறிய சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு (Special Investigation Team – SIT ) அமைக்கப்பட்டது. குஜராத் முதலமைச்சராக அதிகாரத்தில் மோடி இருந்த காலங்களில்தான் சிறப்பு புலனாய்வுக் குழுவும் செயல்பட்டது. அதில் இருந்த முரண்பாடுகள், குளறுபடிகள், மேலோட்டமான விசாரணை, காலதாமதம் எல்லாம் பெருங்கதை. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை நடத்திய வர்மா கமிஷனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைகளுக்கு பொறுப்பானவராக சுட்டிக்காட்டப்பட்ட போலீஸ் அதிகாரியும், அதனால் தமிழ்நாடு அரசின் துறை ரீதியான நடவடிக்கைகளால் வெகு காலம் பதவி உயர்வு பெற முடியாமல் போனவரும், வாஜ்பாய் அரசினால் புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டு சி.பி.ஐ டைரக்டராக ஆனவருமான ஆர்.கே.ராகவன்தான் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது ஒரு கிளைக்கதை.

கோத்ரா சம்பவம் நடந்து எட்டு வருடங்கள் கழித்து சிறப்பு புலனாய்வுக்குழு 2010ம் ஆண்டு மோடியிடம் மொத்தம் 71 கேள்விகள் கேட்டனர். மோடியின் பதில்களில் அவர் எத்தகைய மனிதர் என்பது புலப்பட்டது.

SIT: கோத்ரா சம்பவத்தை முன்கூட்டியே திட்டமிட்டது என்றும், பாகிஸ்தான் சதி அதில் இருப்பதாகவும் அறிவித்தீர்களா? அப்படியென்றால் அதற்கு ஆதாரமுண்டா?

மோடி : நான் அப்படி எந்த வார்த்தைகளையும் சட்டசபையில் சொல்லவில்லை. ஆனால் ஊடகங்கள் என்னிடம் அதுகுறித்து சில கேள்விகள் கேட்டபோது, விசாரணை முடிவு தெரியாமல் எந்த முடிவுக்கும் வர முடியாது என தெரிவித்திருந்தேன் 

SIT-ன் கேள்விக்கு பதிலாய்ச் சொன்ன மோடியின் வார்த்தைகளுக்கும், இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பொதுக்கூட்டத்தில் வெளிப்பட்ட மோடியின் வார்த்தைகளுக்கும் இடையே ஒளிந்திருந்தது பொய். 

தொடர்ந்த கேள்விகளிலும் மோடியின் மழுப்பலான பதில்களிலும் பல பொய்கள் நிறைந்திருந்தன.

சிறப்பு புலனாய்வுக் குழு: 27.02.2002 அன்று கோத்ரா ரெயில்வே ஸ்டேஷனில் சபர்மதி எக்ஸ்பிரஸ்ஸின் கோச் எரிக்கப்பட்டது எப்போது உங்களுக்குத் தெரியும்?

மோடி: 27.2.2002 அன்று காலை ஒன்பது மணி வாக்கில் அடிஷனல் சீப் செக்ரட்டரி  திரு. அசோக் நாராயணன் தகவல் தெரிவித்தார்.

சிறப்பு புலனாய்வுக் குழு: உடனடியாக உங்கள் எதிர்வினை என்னவாக  இருந்தது? அந்த சம்பவம் குறித்து என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?

மோடி: உள்ளாட்சித் துறை அமைச்சர் கோர்தான் ஜோடாஃபியா, அடிஷனல் சீப் செக்ரட்டரி அசோக் நாராயணன் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினேன். சட்டசபையில் பிரச்சினையாக எழும் என்பதால் அந்த சம்பவம் குறித்த உண்மைகளை கேட்டறிந்தேன். அந்த ரெயிலின் மற்ற பிரயாணிகளுக்கு மேலும் தாமதம் ஏற்பட்டால் பதற்றம் அதிகரிக்கும் என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்தேன். கோத்ரா ஒரு பதற்றம் மிக்க பகுதி என்பதால், அங்கு ஊரடங்கு உட்பட நடவடிக்கைகள் எடுக்கவும், தேவைப்பட்டால் அந்த பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கவும் சொன்னேன். 

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பந்தமாக மோடி தகவல் அறிந்தது காலை 9 மணி. மேற்கண்ட துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து பேசியது காலை 10.30 மணி அளவில். அதற்கு முன்பே குஜராத் முதலமைச்சர் மோடியின் தனி உதவியாளருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப் படேலுக்கும் இடையே  9.39க்கும் 9.41க்கும் இடையே இரண்டு தடவை தொலைபேசி அழைப்புகள் பதிவாகி இருந்தன. அந்த உண்மையை வெளிக்கொண்டு வருவதில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தொடர்ந்த கேள்விகளில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

சிறப்பு புலனாய்வுக் குழு: விஸ்வஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப் படேல் உங்களுக்குத் தெரியுமா?  அவர் உங்களை கோத்ராவில் சந்தித்து, இறந்து போனவர்களை அகமதாபாத்திற்கு கொண்டு செல்லும் போது தானும் உடன் செல்வதற்கு அனுமதி கேட்டாரா?

மோடி: விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப்பை எனக்குத் தெரியும். அவரை கோத்ராவில் சந்தித்தது ஞாபகமில்லை. இறந்தவர்களின் உடலை அகமதாபாத்திற்கு கொண்டு செல்வது குறித்த வழிமுறைகளை தீர்மானித்தது மாவட்ட நிர்வாகம். எனக்கு அது குறித்த விபரங்கள் தெரியவில்லை.

”ஞாபகமில்லை” என மோடி  உண்மைகளை சாதாரணமாக கடந்தார்.

அடுத்தது  தொடர் கலவரங்களுக்கு வித்திட்ட இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள். கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பில் இறந்த கரசேவகர்களுக்கு அகமதாபாத்தில்  நடந்த இறுதிச் சடங்கில் பெரும் கூட்டம் கலந்து கொண்ட காட்சியை ரெய்ட்டர் செய்தி நிறுவனமும், சில இந்துத்துவா அமைப்புகளின் இணைய தளங்களிலும்  பகிரங்கமாக வெளியிட்டு இருந்தன. 

காவல்துறை கண்ட்ரோல் ரூமில் (Police Control Room  – PCR) பதிவான தகவல்களில் பிப்ரவரி 28 காலை 11.58 மணிக்கு ஜந்தநகரிலிருந்து ஹட்கேஷ்வர் மயானத்திற்கு  10 உடல்கள் எடுக்கப்பட்டு ஐயாயிரத்திலிருந்து ஆறாயிரம் பேரோடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்பது பதிவாகி இருந்து. 

Concerned Citizen Tribunal அறிக்கையின் 132ம் பக்கத்தில் பின்வருமாறு விவரிக்கப்பட்டு இருந்தது: ”கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டியில் இறந்த பயணிகளின் உடல்கள் சாலை வழியாக அகமதாபாத்தில் உள்ள சோலா சிவில் மருத்துவமனைக்கு குதிரை வண்டியில் கொண்டு செல்லப்பட்டன. குதிரை வண்டிகளில் ராம சேவகர்கள் நிறைந்து இருந்தனர். இந்த செய்தியை ஒளிபரப்ப அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் பயன்படுத்தப்பட்டது மற்றும் உள்ளூர் ஆகாஷ்வாணி வானொலி நிலையம் அகமதாபாத்தில் குதிரை வண்டிகள் புறப்படும் நேரத்தை அறிவித்தது. இறந்த உடல்கள் சிவில் மருத்துவமனையை அடைந்தபோது, நாங்கள் பழிக்குப் பழி வாங்குவோம்” போன்ற வெறித்தனமான கோஷங்களை ராம சேவகர்கள் எழுப்பினர். அதிக மக்கள் அங்கு கூடியிருந்தனர்.”

இவ்வாறு வெறியூட்டப்பட்ட, கலவரம் தூண்டப்பட்ட நிகழ்வுகள் சம்பந்தமாகவும் மோடியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

சிறப்பு புலனாய்வுக் குழு: கோத்ரா சம்பவத்தில் இறந்த ராமசேவகர்கள் மற்றும் வேறு சிலரும் அகமதாபாத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனரா?

மோடி: கோத்ராவில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் பதற்றம் அதிகரிக்க விடக்கூடாது என்பதில் அரசு கவனமாய் இருந்தது.  எனக்கு கிடைத்த தகவலின்படி காவல்துறையினர் இதில் முனைப்புடன் செயல்பட்டனர். இறந்தவர்களின் உடலை வாகனங்களில் எடுத்துச் செல்ல உறவினர்கள் சிலருக்கு வலியுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  ஒத்துழைத்தார்கள். எந்த அசம்பாவிதம் இல்லாமல் அமைதியாக நடந்தது. அடையாளம் காண முடியாத உடல்களும், சட்ட ரீதியான விதிகளின்படி  அரசு ஆஸ்பத்திரியிலிருந்து 200  மீட்டர் தொலைவில் தகனம் செய்யப்பட்டன. எனவே இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. 

கிடைத்த ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்டு கேள்விகளை எழுப்பி இருக்க முடியும். உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் SIT கவனம் செலுத்தவில்லை என்னும் விமர்சனங்கள் மட்டுமே மிச்சமாகிப் போயின. இது போல கலவரங்கள் குறித்து வெளிவர வேண்டிய பல உண்மைகள் காணாமல் போயின. 

2013ல் வெளியான சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையில் மோடி அப்பழுக்கற்றவராய் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து நாட்டின் பிரதம வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டார். வெற்றி பெற்றார். இந்திய அரசியலில் பாசிசப் போக்கு அதிகாரத்தை நோக்கி பாய முடிந்த சம்பவமாக ’கோத்ராவில் சபர்மதி ரயில் எரிக்கப்பட்ட’ தருணம் அமைந்து விட்டது.

இவ்வளவுக்கும் மூல காரணமாக இருக்கும் – சபர்மதி ரயிலை கோத்ராவில் எரித்தது யார்? எப்படி எரித்தார்கள்? அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனரா? என்ன குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன? அவை நிருபீக்கப்பட்தா? தண்டனை வழங்கப்பட்டனரா?

அதுகுறித்த செய்திகள் முக்கியத்துவம் அளிக்கப்படாமலும் கவனம் பெறாமலுமே இருக்கின்றன. 

ரெயில் பெட்டி எரிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 31 பேரில் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேல்முறையிட்டில் அந்த 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூட  ரஃபீக் ஹூசைன் பதுக் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

மிகப் பெரும் வன்முறைகளுக்கு வித்திட்ட  அந்த சபர்மதி எக்ஸ்பிரஸ்ஸின் 6வது பெட்டியை யாரெல்லாம் எரித்தார்கள். எப்படி எரித்தார்கள் என்பது முழுமையாக தெரியவில்லை. ரெயிலின் உள்ளிருந்துதான் தீப்பிடித்திருக்க வேண்டும், வெளியிலிருந்து தீப்படிக்க சாத்தியமில்லை என்ற ஆய்வு உண்மைகளும் இருக்கின்றன. ஜஸ்டிஸ் பானர்ஜி  கமிட்டி அறிக்கையில், “கோத்ரா சம்பவம் சதி அல்ல, விபத்து“ என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு சம்பவம் இன்று வரை மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது.

மோடியால் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்ட ’சதி’ இன்னமும் நிரூபிக்கப்படமாலேயே இருக்கிறது.

அவர் குஜராத்தின் 14 வது முதலமைச்சராக  12 ஆண்டுகள் இருந்துவிட்டு, இந்தியாவின் 14வது பிரதம மந்திரியாக ஏழு வருடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 3 – ஜா. மாதவராஜ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *