கையடக்க செல்பேசியின் கதை (The story of the mobile phone in Tamil) | செல்போன் உருவான கதை (Story Of Cellphone in Tamil) - https://bookday.in/

கையடக்க செல்பேசியின் கதை

கையடக்க செல்பேசியின் கதை

பளபளக்கும் எல்இடி திரை, முற்கால சினிமா கேமராக்களுக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்துவிட்ட ஒளிப்பட திறன்கள், உலகின் எந்த மூலையில் இருந்தும் தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி, இருந்த இடத்திலிருந்து முகம் பார்த்து பேசும் வசதி, மனிதன் நுண்ணறிவிற்கே சவால் விடும் செயற்கை நுண்ணறிவை கைகளிலேயே தாங்கிக் கொண்டு பயணிக்கும், மனித இனத்தின் ஆகச் சிறந்த கருவிதான் கைபேசிகள்.

ஒரு காலத்தில், வெறும் தகவல் தொடர்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கைபேசிகள், தற்காலத்தில் பயன்படுத்தப்படாத துறையே இல்லை! என்று குறிப்பிடும் அளவிற்கு மிக உச்சபட்சமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

சாமானியர் முதல் தேசங்களின் தலைவர்கள் வரை, அனைவரது கைகளிலும் புழங்கும் வெகு ஜன கருவியாக விளங்குகிறது செல்போன்கள். ஆனால்,இன்னும் அரை நூற்றாண்டைக் கூட நிறைவு செய்யாத, கைபேசியின் வரலாற்றை சற்றே ஒருமுறை திரும்பி பார்ப்போமா?

தொடக்க கால கைபேசிகள்:-

கையடக்க கைபேசிகளின் வரலாறு  1946 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. தற்போதும், அமெரிக்காவின் மிகப்பெரிய தொலைதொடர்பு வழங்குநராக (telecom service provider) விளங்கிவரும், அமெரிக்க தொலை தொடர்பு மற்றும் தந்தி சேவை நிறுவனத்தின் (AT &T coperation ) பொறியாளர்கள் இணைந்து, கம்பி இல்லாத அலைபேசி (wireless cell phone ) ஒன்றை கண்டறிந்தனர்.

தற்கால, செல்போன்களின் எடை சில நூறு கிராம்களுக்குள்  அடங்கி விடுகிறது . ஆனால், அப்போது தயாரிக்கப்பட்ட அலைபேசியின் எடை மட்டும் 40 கிலோ வரை இருந்ததாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஐந்து அங்குலத்திற்குள் இருக்கும், தற்கால லித்தியம் மின்கலன்களை (lithium based batteries) கொண்டெல்லாம், அந்த கால அலைபேசியை இயக்க முடியாது. அதிக சக்தி கொண்ட கார் மின்கலன்களை கொண்டு மட்டுமே, இயக்கும் வகையில் அப்போதைய அலைபேசிகள் தயாரிக்கப்பட்டு இருந்தன.

முற்கால ரேடியோ பெட்டிகளின் அளவில், கார் தொலைபேசிகளும் இருந்ததை அறிய முடிகிறது. மேலும், குறிப்பிட்ட தொலைதொடர்பு கோபுர எல்லைக்குள் மட்டுமே (particular tower area) உங்களால் அழைப்புகளை பெறவும், அழைப்புகளை மேற்கொள்ளவும் முடியும் என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குப் பிந்தைய காலத்தில் எல்லாம், கார் அடக்க தொலைபேசிகள் மட்டுமே சந்தையில் பெரும்பாலும் கிடைத்து வந்தன.  ஆனால், இந்த சகாப்தத்தை மாற்றி எழுத பிறந்தவர் தான் மார்ட்டின் கூப்பர்.

கைபேசியின் கதாநாயகன் மார்ட்டின் கூப்பர்:-

1928 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த இவர், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் மின்சாரப் பொறியியலில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, 1950 களில் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த மார்ட்டின் கூப்பர், கொரியா போரில் கூட பங்கெடுத்திருப்பதாக அறிய முடிகிறது. அதற்குப் பின்பு தான், 1954 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மோட்டரோலா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.  1960 ஆம் ஆண்டிலேயே ரேடியோ அலைகள் மூலம் கட்டுப்படுத்தும் வகையிலான போக்குவரத்து விளக்குகளை(radio controlled traffic lights)கண்டுபிடித்து, அதற்கான காப்புரிமையும்(patent) பெற்றுக் கொண்டார் மார்ட்டின் கூப்பர். இதே நேரத்தில், உலகமெங்கிலும் கையடக்க மொபைல் கருவிகளுக்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்ட போதிலும், அவை அனைத்தும் பெருமளவில் வெற்றி பெறவில்லை.

மோட்டோரோலாவின் கைபேசி:-

AT&T நிறுவனமும் மேம்படுத்தப்பட்ட கையடக்க செல்போன் கருவியை உருவாக்க வேண்டுமென, தீவிரமாக பணியாற்றி வந்தது.  இந்த தகவல் அதன் போட்டி நிறுவனமான, மோட்டோரோலாவின் காதுகளுக்கும் எட்டாமல் இல்லை.

அவர்களுக்கு முன்பாக கையடக்க மொபைல் கருவிகளை நாம் உருவாக்கி விட வேண்டும்! எனும் நோக்கத்தில் மார்ட்டின் கூப்பர், அடங்கிய ஒரு குழுவை அமைத்தது மோட்டரோலா நிறுவனம். ஏற்கனவே, ரேடியோ அலைகளில் பரிச்சயமான மார்ட்டின் கூப்பர்,  1973 ஆம் ஆண்டு முதலாவது கையடக்க மொபைல் கருவியை தயாரித்தார்.

தயாரித்த உடன், தங்களது  தொழில் போட்டியை நினைவில் வைத்துக்கொண்டாரோ! என்னவோ தெரியவில்லை! நேராக AT&T நிறுவனத்தின் பொறியாளர் ஜோயல் என்பவருக்கு தனது முதலாவது அழைப்பை மேற்கொண்டு, கையடக்க மொபைல் கருவி ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக உலகுக்கு அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மோட்டரோலா நிறுவனம் வெளியிட்டது.  கண்டுபிடித்திருக்க படக்கூடிய கையடக்க மொபைல் கருவியின் எடை சுமார் 1.4 கிலோ கிராம் அளவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக சந்தைகளுக்கு மொபைல் போன்கள் வரத் தொடங்கியது 1983 ஆம் ஆண்டு தான்.

மோட்டரோலா டைன டேக் (dyna tac) எனும் பெயரில் 1983 ஆண்டு, 1.1 கிலோகிராம் எடை கொண்ட மொபைல் போனை வெளியிட்டது. இந்த  செல்போனை முழுவதுமாக சார்ஜ் செய்ய, சுமார் பத்து மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். முழுவதுமாக சார்ஜ் செய்தால், சுமார் 35 நிமிடங்கள் வரை பேசிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் விட, இந்த மொபைல் போனின் விலையை கேட்டால் இப்போது கூட தலை சுற்றும். சுமார் 3995 டாலர்கள்(இப்போதைய இந்திய ரூபாயில் சுமார் நான்கு லட்சம்) என்று 1983 ஆம் ஆண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தற்கால டாலர் மதிப்பில், இது சுமார் 12000 டாலர்கள் வரை வரும் என மதிப்பிடப்படுகிறது. மேலும், இந்த செல்போனை நீங்கள் பயன்படுத்த,  மாதம் 60 டாலர் முதல் 100 டாலர்(அப்போதைய ரூபாய் மதிப்பு 600 முதல் 1000 ரூபாய் வரை) வரை செலவிட வேண்டும் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால், அடுத்த இரண்டு தசாப்தங்களிலேயே பத்து ரூபாய்க்கு கூட போன் பேச முடியும் எனும் நிலை உருவானது இங்கே மிகவும் கவனிக்கத்தக்கது.

இந்த மோட்டரோலா டைன டேக் மொபைல் போனில் 30 தொடர்புகள் வரை சேமித்து வைத்துக் கொள்ள முடியும்! மிகச்சிறிய அளவிலான எல்இடி திரையும் வழங்கப்பட்டிருந்தது. இந்த போனை சார்ஜ் செய்யும் போது, மிக அதிகப்படியான வெப்பம் வெளியேறும்! எனவே இப்போது இருப்பது போல சட்டை பையில் வைத்து கொண்டு எல்லாம் செல்ல முடியாது. இருந்தபோதிலும், சந்தையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது மோட்டரோலா டைனோ டேக் மொபைல் போன்கள். இந்த தொடர் வரிசையில், 1996 ஆம் ஆண்டு வரை மொபைல் போன்கள் வெளியிடப்பட்டன என்பதும் கவனிக்கத்தக்கது.

முதலாவது தொழில்முறை செல்பேசி (commercial phone call) அழைப்பானது,தொலைபேசியை கண்டறிந்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் அவர்களுடைய பேரனுக்கு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் விக்கிபீடியாவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.அதன் பிறகு, மோட்டரோலா நிறுவனமானது google மற்றும் lenovo உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் கை மாறி இருப்பதையும் இங்கு கவனிக்க முடிகிறது. கையடக்க செல்பேசிகள் கண்டறியப்பட்டு தற்போது 51 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. அதேநேரம், அவை சந்தைப்படுத்தப்பட்டு 41 ஆண்டுகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

கைபேசியின் அபார வளர்ச்சி:-

இந்த நான்கு தசாப்தங்களுக்குள் கையடக்க செல் கருவிகளில் ஏற்பட்டு இருக்கக்கூடிய மிகப்பெரிய வளர்ச்சியானது, அனைவரையும் மலைக்க வைக்க தவறவில்லை.

உதிரி பாக உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக மிகவும் அழிவு விலையில் மொபைல் ஃபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2000 காலகட்டத்தில் ஒரு மொபைல் போனை வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும் எனும் நிலை இருந்தது. அதற்குப் பின்பு விலைவாசியானது படிப்படியாக குறைவதற்கு மிக முக்கியமான காரணமாக சீன தயாரிப்பு மொபைல் போன்கள் கருதப்படுகின்றன.

என்னுடைய சிறுவயதில் 500 ரூபாய் தொடங்கி சீன தயாரிப்பு மொபைல் போன்கள் சந்தையை ஆக்கிரமிக்க தொடங்கியது. அதிகப்படியான ஒலி அளவு இரண்டு மூன்று சிம் கார்டுகளை போட்டுக் கொள்ளும் வசதி, பாட்டு கேட்டுக் கொள்ளலாம் ஏன்? சில மொபைல் ஃபோன்களை பார்க்கும் போது அப்போது வெளிவந்த விலைஉயர்ந்த நோக்கியா மொபைல் ஃபோன்களுக்கு சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதன்பின்பு, தொடுதிரை மொபைல் போன்களின் வருகையிலும், சீன மொபைல் கருவிகளின் ஆதிக்கம் தொடர்ந்து காணப்பட்டது. தற்பொழுது, சந்தையில் காணப்படக்கூடிய முதல் 10 மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் பெரும்பாலானவை சீன நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சீனாவில் மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. இதன் காரணமாக எளிய மக்களாலும் மொபைல் கருவிகளை பயன்படுத்தக்கூடிய சூழல் உருவானது. இந்தியாவில் கூட, தைவான் நாட்டை அடிப்படையாகக் கொண்ட ஃபாக்ஸ் கான் நிறுவனத்தின் தொழிற்சாலை ஆனது, சென்னைக்கு அருகே செயல்படுகிறது.

மேலும், மிகப்பெரிய மொபைல் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் கூட தமிழகத்தில் மொபைல் உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. வருங்காலத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மொபைல் உற்பத்தி தந்தையாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

மண்ணில் இருந்து கிடைக்கும் சிலிக்கா எனும் குறை கடத்தியிலிருந்தே மொபைல் கருவிகளின் பெரும்பாலான நுண்ணிய உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

தற்காலத்தில் மொபைல் கருவிகளில் லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இது நீடித்து உழைக்கக் கூடியது மற்றும் அதிகப்படியான ஆற்றலை தன்னகத்தே சேமித்து வைத்துக் கொள்ளும். ஆனால்,நேரடியாக வளிமண்டல காற்றோடு வினைபுரியும் போது வெடிக்கும் தன்மை கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது.

மொபைல் கருவிகள் இவ்வாறு தயாரிக்கப்படுகிறது! என்றால் அதனோடு காலத்திற்கு ஏற்ப சர்ச்சைகளும் உடன் சேர்ந்தே பயணித்து வருகிறது. தற்காலத்தில் மொபைல் கருவிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஏமாற்று வேலைகள் அனுதினமும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மொபைல் பல பரிவர்த்தனையில் மிகப்பெரிய புரட்சியை செய்த யுபிஐ பண பரிவர்த்தனை முறையை அடிப்படையாகக் கொண்டே, ஏமாற்று வேலைகள் நடைபெறுவதை அனுதினமும் பார்த்து வருகிறோம்.

மேலும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை மோசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்களும் அதிகரித்து வருகிறது. அதிகப்படியான வயது வந்தோர் உள்ளடக்கங்கள் தயாரிப்பு மற்றும் அவற்றைப் பார்க்கும் விகிதமும் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.

தற்காலத்தில் உலகில் எந்த மூலையில் இருக்கும் நபரும், மற்றொரு நபரோடு முகம் பார்த்து பேசிக்கொள்ளும் வசதி இருக்கிறது. இதை தவறாக பயன்படுத்தி மிரட்டல் விடும் சம்பவங்களும் அனுதினமும் அரங்கேறி வருகின்றன.

சைபர் குற்றங்கள் என அழைக்கப்படும் கணினியோடு தொடர்புடைய குற்றங்களின் மூலம் இந்த 2025வது வருடத்தில் மட்டும் 10.5 ட்ரில்லியன் டாலர்கள் வரை திருடப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த 10.5 ட்ரில்லியன் டாலர்கள் என்பது பொருளாதார அடிப்படையில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும். மேலும் இது, இந்திய பொருளாதாரத்தை விடவும் மூன்று மடங்கு அதிகப்படியான தொகையாகும்.

குறைகள் ஒருபுறம் இருந்தாலும் நிறைகளும் எண்ணற்ற வகையில் அடங்கி இருக்கிறது கேமராக்களை தன் கைகளால் தொட்டுப் பார்க்காதவர்கள் கூட, இன்றைக்கு விதவிதமாக தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வசதி மொபைல் போன்களின் மூலம் சாத்தியமாகி இருக்கிறது.

விருப்பப்படும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள்,லட்சக்கணக்கான பாடல்கள், புகைப்படங்கள் திரைப்படங்கள்,என விரும்பிய அனைத்தையும் இருந்த இடத்திலேயே பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது மொபைல் கருவிகள் .

அவ்வளவு ஏன்? பார்வை குறைபாடு கொண்டவர்கள் கூட, மொபைல் கருவிகளை பயன்படுத்துவதற்கு தேவையான செயலிகள் தற்காலத்தில் மிகவும் வளர்ந்து இருக்கின்றன. மேலும், சாமானியராலும் கூட வாங்கக்கூடிய விலையில் மொபைல் கருவிகள் விற்கப்படுவதையும்! நாம் இங்கு கவனிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட் மொபைல் கருவிகள் விற்பனை செய்யப்படுகிறது.  500 ரூபாயிலிருந்து சாதாரண பட்டன் அடிப்படையிலான மொபைல் கருவிகளை வாங்கி விட முடியும்.

இந்திய தகவல் தொடர்பு துறையின் அறிக்கையின்படி 2024 அக்டோபர் மாதம் வரை சுமார் 115 கோடி மொபைல் சிம் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மொபைல் கருவிகளை பயன்படுத்துவதை அறிந்து கொள்ள முடிகிறது.

60 கோடிக்கு அதிகமான இந்தியர்கள் ஸ்மார்ட் மொபைல் கருவிகளை பயன்படுத்துகிறார்கள். இருந்த போதிலும், இன்னும் சில கோடி மக்கள் மொபைல் கருவிகளை பயன்படுத்தாமல் இருப்பதை கவனிக்க முடிகிறது.

புத்தகங்கள்,கேமரா, அலாரம், கடிகாரம், விசைப்பொறி, டேப் ரெக்கார்டர், டிவி, டிவிடி பிளேயர் போன்ற தனித்தனியாக வாங்கக்கூடிய ஆயிரம் கருவிகளின் செயல்பாடுகளை கூட, மின்னணு பொறியாளர்கள் ஒரே கையடக்க செல்பேசிக்குள் அடக்கி விட்டார்கள்.

முதலில் இரண்டு அங்குல (5 செமீ) அளவில் வெளியாகி வந்த மொபைல் தொடுதிரை கருவிகள், தற்பொழுது ஆறு அங்குலம் (15 செமீ) எனும் நிலையான அளவில் பெரும்பாலும் வெளியாகிறது.  அடுத்த தசாப்தத்தில்(2030 to 2040) தனது பொன்விழாவை கொண்டாடுகிறது கையடக்க செல்பேசிகள். அதற்குள், அவற்றுள் எத்தகைய மாற்றங்கள் இன்னும் ஏற்படப் போகின்றன? என்பதை காலச்சக்கரத்தின் ஊடாக பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ.

இளங்கலை இயற்பியல் மாணவர், நாகர்கோவில்-02.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *