தமிழில்: ச.வீரமணி
மோடி அரசாங்கம் 2019 ஆகஸ்ட் 5 அன்று அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன. அதன்பின்னரும் அது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லீம் பெரும்பான்மை மக்கள்தொகையைக் குறைக்க வேண்டும் என்ற தன்னுடைய மதவெறி நலனுக்குப் பொருந்த வேண்டும் என்பதற்காக அங்கே தேர்தல் அமைப்புமுறையையே மாற்றியமைத்திடுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 16 அன்று ஜம்மு-காஷ்மீரின் தலைமைத் தேர்தல் அதிகாரி (Chief Electoral Officer) ஜம்மு-காஷ்மீரில் சாதாரணமாக வசிக்கும் எவரொருவரும் தான் வசிக்கும் யூனியன் பிரதேசத்தில் தன்னை வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள முடியும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பாக மாற்றியமைக்கும் நிகழ்வின்போது (special summary revision) 20 முதல் 25 லட்சம் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை இணைத்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுவதாகவும் கூறியிருக்கிறார். முன்பு, அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு அமலில் இருந்தசமயத்தில், அங்கே “நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள்” மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் மற்றும் “சாதாரணமாக குடியிருப்பவர்கள்” (“ordinary residents”) நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும்போதுதான் வாக்களிக்க முடியும். அவ்வாறான வாக்காளர்கள் “நிரந்தரமற்ற குடியிருப்பவர்கள்” (“Non-Permanent Resident”-NPR) என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.
இப்போது ஜம்மு-காஷ்மீரில் வர்த்தகம் செய்வதற்காகவும், வேலைகளுக்காகவோ அல்லது படிப்பிற்காகவோ தங்கியிருப்பவர்களும் வாக்களிக்க முடியும் என்று கூறியிருப்பது, அரசியல் கட்சிகள் மத்தியில் எச்சரிக்கை மணியை அடித்துக்கொண்டிருக்கிறது. உண்மையில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் 76 லட்சம் வாக்காளர்களுடன் மேலும் சுமார் 25 லட்சம் வாக்காளர்களைச் சேர்ப்பது என்பது பாஜக-விற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் தேர்தல் ஆதாயத்தை அளித்திடும். இது மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலும் மிகப்பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டுவரும். மேலும், அங்கே தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினரும் வாக்குரிமை பெறும் தகுதியைப் பெறுவார்களா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கிற ஒழுங்குமுறைகள் காரணமாக, 1947க்குப்பின்னர் மேற்கு பாகிஸ்தானிலிருந்து வந்து அங்கு அகதிகளாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாகிறார்கள் எனப் பொருள்படுகிறது. அதேபோல், நாடாளுமன்றத் தொகுதிக்கு மட்டும் வாக்களித்துவந்த “நிரந்தரமற்ற குடியிருப்பவர்கள்” (NPRs) ஆக இருந்தவர்கள் இனி வருங் காலங்களில் சட்டமன்றத்திற்கும் வாக்களிக்கத் தகுதிபெற்றவர்களாக மாறுவார்கள் என்றும் பொருள்படுகிறது. இவ்வாறு “நிரந்தரமற்ற குடியிருப்பவர்களுக்கு” வாக்களிக்கும் உரிமைகளை அளிப்பது காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், ஜம்மு பிராந்தியத்திலும் முஸ்லீம் மக்கள்தொகையின் பெரும்பான்மையைக் குறைத்திட வேண்டும் என்கிற ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்தத் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.
வாக்காளர் பட்டியலில் வெளியூர் ஆட்களைச் சேர்க்கும் முடிவினை பாஜக-வைத் தவிர இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் நிராகரித்திருக்கின்றன. பரூக் அப்துல்லா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒன்பது கட்சிகளும் வெளியூர் ஆட்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் எத்தகைய முடிவையும் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றன. இது ஒன்றிய பாஜக அரசாங்கம், மாநிலத்தின் மக்கள்தொகை வரையறையை மாற்றியமைத்திட மேற்கொண்டுள்ள முயற்சி என்று அக்கட்சிகள் அறிவித்திருக்கின்றன.
இதற்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், ஜம்முவில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலும் அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. ஆணையம் இடங்களின் எண்ணிக்கையை 83இலிருந்து 90ஆக உயர்த்தியது. இவ்வாறு உயர்த்திய ஏழு இடங்களில் ஜம்முவிற்கு ஆறு இடங்கள் கிடைத்துள்ள அதே சமயத்தில், காஷ்மீருக்கோ ஒரேயொரு இடம்தான் அளிக்கப்பட்டிருக்கிறது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ஜம்மு பிராந்தியம் மக்கள்தொகையில் 44 விழுக்காடு அளவிற்குப் பெற்றிருந்தது. இப்போது இவர்கள் மாற்றியமைத்துள்ள மறுசீரமைப்பின்படி 48 விழுக்காடு இடங்களை அது பெற்றிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் மக்கள்தொகையில் 56 விழுக்காடு அளவைப் பெற்றிருந்த காஷ்மீர் 52 விழுக்காடு இடங்களை மட்டுமே பெறுகிறது. மேலும், ஜம்முவில், பிராந்தியத்தின் மொத்த இடங்களில் முஸ்லீம் பெரும்பான்மை இடங்கள் கால்பங்கிற்கும் குறைவாகவே இருக்கின்றன. மேலும் மறுசீரமைப்பு ஆணையம் புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக (Kashmiri pandit migrants), இரு நியமன இடங்களும், மேற்கு பாகிஸ்தான் அகதிகளுக்காக மற்றொரு நியமன இடமும் ஒதுக்கிப் பரிந்துரைத்திருக்கிறது.
இவை அனைத்தும் ஜம்மு பிராந்தியத்தில் பாஜக பெரிய அளவில் பெரும்பான்மையைப் பெற்று, அதன்மூலம் அது சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு ஆட்சியை அமைத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஜம்மு-காஷ்மீருக்கு மீளவும் மாநில அந்தஸ்து அளிக்கப்படுவது தொடர்பாக எவ்விதமான உறுதிமொழியும் அளிக்கப்படாமலேயே அங்கே சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கான அனைத்துத் தயாரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 2019 மறுசீரமைப்புச் சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் இந்த சமயத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அரசமைப்புச்சட்டம், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அளித்திருந்த உறுதிமொழிகள் அனைத்தையும் காலில்போட்டு மிதித்தபின்னர், கடந்த மூன்று ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் ஜனநாயகத்தின் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி, நீதியரசர் ஏ.பி. ஷா மற்றும் உள்துறை முன்னாள் செயலாளர் ஜி.கே.பிள்ளை ஆகியோரின் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் மனித உரிமைகளுக்கான அமைப்பின் கூற்றுப்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கலைக்கப்பட்டபின்னர் கடந்த மூன்றாண்டுகளில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட அரசியல் கைதிகளில் இன்னும் பெரும் எண்ணிக்கையில் சிறைகளிலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அங்கே குடியிருப்பவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இதழாளர்களுக்கு எதிராக வகைதொகையின்றி பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தேசத்துரோகக் குற்றப்பிரிவு தொடர்ந்து ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்றன. காவல்துறையினரின் துன்புறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் இதழாளர்கள் இஷ்டத்திற்கு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருத்தல் மூலமாக பத்திரிகை சுதந்திரம் கடுமையாக முடக்கப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் ஜம்மு-காஷ்மீர் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்தான் பாஜக-வின் மதவெறி நலனுக்கு உகந்தமுறையில் தேர்தல் அமைப்புமுறையில் மாற்றங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நடவடிக்கைகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களை மேலும் ஆழமான வகையில் அந்நியப்படுத்திடும், தீவிரவாதம் தலைதூக்குவதற்கு இடமளித்திடும். ஏற்கனவே அங்கே இந்த ஆண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் நடவடிக்கைகளைப்பற்றி, நாட்டின் இதர பகுதிகளில் வாழும் ஜனநாயக எண்ணம் கொண்ட மக்கள் கண்களை மூடிக்கொண்டு இருந்துவிட முடியாது. ஏனெனில் அங்கே நடைபெறும் சம்பவங்கள் என்னவாக இருந்தாலும் அவை பின்னர் நாட்டின் இதர பகுதிகளுக்கு வருவதற்கு வெகுநாட்களாகிவிடாது.
(ஆகஸ்ட் 24, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.