“வகுப்புவாதம் குறித்து எந்தச் சூழ்நிலையில் இப்போது நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்? ஒரு பக்கம் சரிந்துவரும் பொருளாதாரச் சூழல். அதே சமயத்தில் ராமர் கோவில் கட்டுதல் போன்ற விஷயங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கின்றன. சிறுபான்மையினர், தலித்துகள் போன்றவர்கள் மீது காட்டப்படும் சகிப்பின்மை நடவடிக்கைகள். இவைகள் எல்லாம் இந்துத்துவா செயல் திட்டத்தின் அடிப்படையிலே செயல்படுகின்ற விஷயங்களாகும்.
இந்துத்துவா பற்றி பேசுகிறபோது “இந்து’’ மதத்தோடு அது இணைக்கப்பட்டு பேசப்படுவது என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. ரோமிலா தாப்பர் போன்ற வரலாற்றுப் பேராசிரியர்கள் சொல்வது என்னவெனில், ““இந்துயிசம்’’ என்பது மதத் தொடர்பானது, இந்துத்துவா என்பது அரசியல் தொடர்புடையது என்பதாகும். இந்தக் கோட்பாட்டினை வி.டி. சாவர்க்கர் முன்வைத்து சங் பரிவார் இயக்கங்கள் அதனை ஏற்றுக்கொண்டு இன்றையதினம் நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகின்றன.
இந்துத்துவா என்பது இந்து மத அடிப்படையில் இந்து ராஷ்ட்ரம் என்கிற இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவதே அவர்கள் நோக்கம். மத அடிப்படையில் உருவாக்குவது என்றால் தாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறவர்களை ஓரணியில் திரட்டுவது என்று பொருள். அதனுடைய விளைவு, அதில் இல்லாதவர்களை இரண்டாம்தர குடிகளாகக் கருதுவது என்பதாகும். இதை அரசியல் ஆய்வாளர்கள் ‘பாசிசம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
நம் நாட்டில் பாசிசம் இன்னும் வந்துவிடவில்லை, வந்துவிட்டதாகக் கூற முடியாது. ஏனெனில் பல்வேறு குறைபாடுகளுடன் இருந்தாலும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிற இன்றைய சூழல்நிலையில், அது இங்கே உடனடியாகத் தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. பாசிசத்தின் சில நிகழ்வுகள், சில முடிவுகள் ஆளும் கட்சியினரால் எடுக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.
ஜெர்மனியில் அன்றைக்கிருந்த வெய்மர் அரசியல் சட்ட அமைப்பின்படி தேர்தலில் நின்று வெற்றி பெற்றுத்தான் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தான். அதேபோலத்தான் இன்றைக்கு சங் பரிவாரக் கூட்டமும் தேர்தலின் மூலமாகத்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறது.
வரலாற்று ஆசிரியர்கள், பாசிசம் செயல்படுவதற்கு மூன்று முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுகிறார்கள். முதலாவதாக ஒரு தத்துவம். இரண்டாவதாக ஓர் இயக்கம். மூன்றாவதாக அரசியல் அதிகாரம் என இந்த மூன்றும் வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். தற்சமயம் இந்த மூன்றையும் பெற்றிருக்கிற ஓர் இயக்கத்தின்கீழ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அரசியலமைப்புச்சட்ட ரீதியாக, ஒரு கட்சி அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது. அவர்களுக்கு இந்துத்துவா தத்துவம் வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. அதனை செயல்படுத்துவதற்காக பல்வேறு வகையான இயக்கங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் அனைத்து செயல் தளங்களிலும், அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களிலும் இந்துத்துவா தத்துவத்தினை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இவைதான் பல்வேறு சகிப்பின்மை செயல்பாடுகளுக்கு வித்திடுகிறது. அவைபற்றி முழுமையாக இப்போது பட்டியலிட விரும்பவில்லை. எனினும் ஒருசில எடுத்துக் காட்டுக்களை கூறலாம் எனக் கருதுகிறேன்.
சகிப்பின்மைக்கு எதிராக இந்த நாட்டின் பல்வேறு அறிவுஜீவிகள், வரலாற்று ஆசிரியர்கள், அறிஞர்கள் எல்லாம் கருத்துகளைக் கூறியிருப்பது நமக்குத் தெரியும். இது குறித்து அருண்ஜெட்லி போன்றவர்கள், “உற்பத்தி செய்யப்பட்ட எதிர்ப்பு’’ (manufactured dissent) என்று கூறுகிறார்கள். இடதுசாரிகளின் தூண்டுதலால் கொண்டுவரப்பட்ட எதிர்ப்புணர்வு என்றெல்லாம் கூட சொல்லப்படுகிறது. இதே கருத்தை வேறு சிலரும் சொல்கிறார்கள்.
அருண் ஷெளரி என்பவர் பல மாதங்களுக்கு முன்பு இந்த ஆட்சிக்கு நெருக்கமாக இருந்தவர். இன்னும் சொல்லப்போனால் பல மாதங்களுக்கு முன்பே இதே சகிப்பின்மை பற்றி பேச்சு வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடிதான் இந்த சகிப்பின்மையால் மிகவும் பாதிக்கப்படுபவர் என்று கருத்துச் சொன்னவரும் கூட. ஆனால், அவர் இன்றைக்கு மோடி அரசாங்கம் குறித்து காங்கிரசும் பசுவும் சேர்ந்த கூட்டுக் கலவை என்று சொல்கிறார்.
நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமர். அவர் ஒரு துறையின் தலைவர் அல்ல. ஆகவே மிகவும் மோசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற சகிப்பின்மை நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுக்காமல் இருப்பது சரியல்ல.
நமது நாட்டிற்கு அந்நிய முதலீடு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதைப்பற்றி ஆய்வு செய்து, ஓர் அமைப்பு கருத்து தெரிவித்திருக்கிறது. அது, சில அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் முரண்பாடான கருத்துகளைத் தெரிவிப்பதால் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர், இதன் காரணமாக முதலீடு வருவதற்கு ஏற்ற சூழல் இல்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறது. இன்ஃபோசிஸ் என்ற நிறுவனத்தின் தலைவரான நாராயணமூர்த்தி, வர்க்கரீதியாக இந்த அரசுக்கு நெருக்கமானவர்தான். அவரும் சிறுபான்மை மக்களும் மற்ற மதத்தவர்களும் அச்சத்தோடு வாழ்கிற சூழ்நிலை இருப்பது சரியல்ல என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், “மாற்றுக் கருத்துகளுக்கு நாம் இடம் அளிக்க வில்லை என்றால் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் உயர்வதற்கான வாய்ப்பு இருக்காது,’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது, பொதுவாக இந்த நாட்டில் இருக்கக்கூடிய நிலைமைகளாகும். ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த ரோஹித் வெமுலா என்கிற தலித் மாணவரின் தற்கொலை, இன்று நாட்டில் நிலவும் மோசமான வாழ்நிலையைப் பிரதிபலிக்கிறது. அங்கே என்ன நடந்தது என்பது குறித்து பத்திரிகைகளில் பல்வேறுவிதமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ரோஹித் வெமுலா தான் இறப்பதற்கு முன் எழுதி வைத்த கடிதம், எந்த அளவிற்கு அவன் அங்கே மோசமாக நடத்தப்பட்டார் என்பதைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கின்றன.
என்னுடைய பிறப்பே என்னை “உயிர்ப்பலிக்கு இட்டுச்செல்லக்கூடிய விபத்து’’ (“fatal accident”)-ஆக ஆகிவிட்டது என்று எழுதியிருக்கிறார் என்று சொன்னால் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி எந்த அளவிற்குப் புழுங்கிக்கொண்டிருந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியும்.
ரோஹித் வெமுலா எழுதியிருக்கிற பிரச்சனை, ஒருவர் தன் கருத்தை வெளியே சொல்வதற்கு, சுதந்திரமாக வெளியிடுவதற்கு, உரிமை இருக்கிறதா என்பதைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
உத்தரப்பிரதேசம் முசாபர்நகரில் இந்துத்துவாவாதிகள் முஸ்லீம் மக்கள் மீது நடத்திய கோரத்தாண்டவத்தை ஒருவர் ஆவணப்படம் மூலமாகத் தயார் செய்திருந்ததை, பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா வெளியிட முயற்சித்தார் என்பதுதான் அவர் செய்த மிகப்பெரிய குற்றம் என்று சொல்லப்படுகிறது.
நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை வெளியே சொல்வதற்கான உரிமை ஒரு குடிமகனுக்கு இந்த நாட்டில் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
இவ்வாறு கருத்துக்களை வெளியிடும் உரிமை பலவகைகளில் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை நாம் தொடர்ச்சியாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
வெண்டி வெனிகர் என்பவர் எழுதிய “இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு’’ என்ற நூல் தடை செய்யப்பட்டது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
அதேபோன்று தமிழகத்திலும் “மாதொருபாதகன்’’ என்ற நாவலை எழுதிய பெருமாள் முருகன் என்ன வகையான நிர்ப்பந்தத்திற்கு ஆளானார் என்பதும் நமக்குத் தெரியும். இவ்வாறு ஒரு நீண்ட பட்டியலே போட முடியும். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய நிகழ்வுகள் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது.
இவ்வாறு வகுப்புவாதத்திற்கு எதிரான இயக்கத்தைக் கூட நாம் எந்த அளவிற்கு மக்களிடம், தத்துவார்த்தரீதியாகவும், இயக்க ரீதியாகவும் எடுத்துச் சென்றிருக்கிறோம் என்பதைப்பற்றியும் எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த மாநாடு முழுமையாக விவாதிக்க வேண்டும், அவ்வாறு விவாதித்து அதைச் செயல்படுத்தும் திட்டங்களை வருகிற காலத்தில் உருவாக்க வேண்டும் என்பதையே இந்த மாநாட்டின் செய்தியாக நான் அளிக்க விரும்புகிறேன்.
(தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 33ஆவது மாநாடு தஞ்சையில் நடைபெற்ற போது காப்பீடு ஊழியர் சங்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான ஆர்.கோவிந்தராஜன் ஆற்றிய உரையின் சாராம்சம்.)