‘தி சப்ஸ்டென்ஸ்’ (The Substance) – இப்படியும் ஒரு திகில் படம்
எலிசபெத் ஒரு முன்னாள் ஹாலிவுட் நட்சத்திரம். தொலைக்காட்சியில் லட்சக்கணக்கானோரால் விரும்பிப் பார்க்கப்படும் ‘ஏரோபிக்’ உடற்பயிற்சி நிகழ்ச்சியின் மூலமாகவும் அவளுடைய புகழ்க்கொடி உயரப் பறக்கிறது. நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளியான ஹார்வி, வயதைக் காரணம் காட்டி அவளை வெளியேற்றுகிறான். ஏமாற்றமும் கோபமுமாகக் காரில் வேகமாகச் செல்லும் எலிசபெத், சாலையோரத்தில் தனது கவர்ச்சித் தோற்றத்துடன் வைக்கப்பட்டிருந்த விளம்பரம் அகற்றப்படுவதைப் பார்த்து உணர்ச்சி வசப்படுகிறாள். சாலையைக் கவனிக்கத் தவறி விபத்தில் சிக்குகிறாள்.
பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எலிசபெத்துககு, அங்கே செவிலியராக இருப்பவன் ரகசியமாக ஒரு பென் டிரைவ் தருகிறான். அதில் ‘சப்ஸ்டென்ஸ்’ (சரக்கு) – The Substance என்று பெயரிடப்பட்ட ஒரு மருந்துக்கான விளம்பரம் இருக்கிறது. அந்த மருந்தை எடுத்துக்கொண்டால், எடுத்துக்கொண்டவரின் இளமையான, அழகான, கச்சிதமான இன்னொரு பதிப்பை உருவாக்க முடியும் என்று அந்த விளம்பரம் கூறுகிறது.
சட்டப்படி அங்கீகரிக்கப்படாத அந்த மருந்தைக் கள்ளச் சந்தையில்தான் வாங்க முடியும். இளமையை மீட்க வேண்டும் என்ற தீவிரமான ஆசையுடன், பணத்தை அனுப்பிவிட்டுக் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்கிறாள். அங்கே ஆளே இல்லாத ஒரு ரகசிய அறையின் இழுவைக் கதவு பாதி மட்டுமே திறக்கிறது. அதற்குள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் ஊனீர் (சீரம்) மருந்தும் அதைச் செலுத்துவதற்கான ஊசியும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இருக்கிறது.
வீட்டிற்குத் திரும்பும் எலிசபெத் தனக்குத் தானே அந்த உனீர் ஊசியைச் செலுத்திக்கொள்கிறாள். சிறிது நேரத்தில் அங்கமெல்லாம் அதிரக் கீழே விழுகிறாள். அவளுடைய முதுகைக் கிழித்துக்கொண்டு இளமையான, அழகான, கச்சிதமான உடற்கட்டுடன் அவளுடைய இன்னொரு பதிப்பாக சூ வெளியே வருகிறாள். நினைவின்றிக் கிடப்பவளின் முதுகுக் கிழிசலைத் தைக்கிறாள்.
எலிசபெத், சூ இருவரும் வாரம் ஒரு முறை தங்கள் உணர்வுகளைத் தவறாமல் பரிமாறிக்கொள்ள வேண்டும், அதற்கான திரவத்தை உணர்வற்ற நிலையில் இருக்கும் எலிசபெத்தின் நரம்பில் ஏற்ற வேண்டும். இதைச்செய்யத் தவறினாலோ தாமதமானோலோ எலிசபெத் மிக வேகமாகக் கிழவியாகிவிடுவாள். அவளுடைய உடலிலிருந்து ஊசியால் எடுக்கப்படும் இளமையை நிலைப்படுத்துவதற்கான திரவத்தை சூ தனது உடலில் ஏற்றிக்கொள்ள வேண்டும். இந்தக் கால அட்டவனை தவறுமானால் சூ உடல் சீர்குலைந்துவிடும்.
சூ அந்த ஏரோபிக் நிறுவனத்திற்குச் செல்கிறாள். முதலாளிக்கும் அவனுடைய கூட்டாளிகளுக்கும் அவளை மிகவும் பிடித்துப்போக, புதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. ரசிகர்களின் கனவுக்கன்னியாகிறாள் சூ.
படப்பிடிப்புத் தளத்தில் நெருக்கமானவனை வீட்டுக்கு அழைத்து வருகிறாள். அவனோடு உறவுகொள்ளத் தயாராகிறபோது, நிலைத்திரவத்தை எடுக்கும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்து அவனைத் தள்ளிவிட்டு, எலிசபெத்தை மறைத்து வைத்திருக்கும் அறைக்கு வருகிறாள். இதில் தாமதம் ஏற்படுவதால் எலிசபெத்தின் கை விரல் ஒன்று முதுமையடைகிறது. இவள்தான் அவள், அவள்தான் இவள் என்றாலும் இருவருக்குமிடையே காழ்ப்புணர்ச்சி தோன்றுகிறது…
இதுவரையில் பாதிக்கதைதான். இனிமேல்தான் மீதிக்கதை. அதைச் சொல்லப்போவதில்லை. குளோனிங் அறிவியல் சார்ந்த ஒரு கற்பனையை வைத்துக்கொண்டு, பெண்ணின் உடலைக் காட்சிச் சரக்காக மாற்றி டாலர்களைக் குவிக்கும் முதலாளிய வேட்கையையும், அழகிய மேனி–சிவப்புத்தோல் மருந்துகள் வியாபாரத்தையும் கூண்டில் ஏற்றுகிறார் இயக்குநர் கொராலீ ஃபார்ஜியாட். “பெண்ணின் உடல் பற்றிய போதனைகளிலும் சமூகக் கெடுபிடிகளிலும் எனது சொந்த அனுபவத்தின் அடிப்டையில் இந்தக் கதையை உருவாக்கினேன்,” என்று அவர் கூறியிருக்கிறார். 2017ல் தனது முதல் படைப்பான “ரிவஞ்ஜ்” படத்திற்குப் பல விருதுகளைப் பெற்றவர் பிரான்ஸ் நாட்டவரான கொரோலீ ஃபார்ஜியாட். “தி சப்ஸ்டென்ஸ்’ (The Substance)” இவரது இரண்டாவது படம்.
பெண்ணுடல் சுரண்டலைப் பேசுகிற இந்தப் படத்தின் காட்சிகள் அதிர வைக்கின்றன. மயங்கிக் கிடக்கும் எலிசபெத் உடலும், வளர்ந்தவளாகப் படியேடுத்துப் பிறக்கும் சூ உடலும் துளி ஆடை கூட இல்லாமல்தான் புரள்கின்றன. அங்கே ஆபாசம் ஒரு துளியும் இல்லை.
அதே போல், கடைசிக் கட்டத்தில் சூ சிதைந்த உடலோடும் முதுகில் பதிந்த எலிசபெத்தின் முகத்தோடும் புத்தாண்டுக் கொண்டாட்ட நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு வருகிறாள். அதில் துளியும் அருவருப்பு இல்லை.
ஆனால் அதைப் பார்க்கிற ஆண்களின் தலைகள், இந்தச் சுரண்டலுக்கு, பெண்ணை அழகானவளாக மட்டும் கண்டு ரசிக்க விரும்புகிற நாமும்தானே காரணம் என்ற உறுத்தலுடன் சிறிது நேரமாவது கவிழும்.
மேனியெழில் மருந்தென்று விரிக்கப்படும் மாயவலைகள் இயற்கையான உடலமைப்பையும் பறித்துவிடுகின்றன என்ற உண்மையை சக பெண்ணாக நின்று உரித்துக் காட்டுகிறார் இயக்குநர். கொண்டாட்டத்திற்காகவும், அழகுப் பெண்களின் கவர்ச்சி ஆட்டத்திற்காகவும் கூடியிருக்கிற ஹார்வியின் மீதும், மற்றவர்கள் மீதும் சூ–எலிசபெத் உடல்கள் உமிழ்கிற கொழ கொழப்பான குருதி ஒரு இடைக்காலத் தீர்ப்பு. எலிசபெத் பெயர் பொறிக்கப்பட்ட தரையை ஒரு பணியாளர் தூய்மைப்படுத்துவதோடு படம் முடிகிறது. இனிமேலாவது இந்தக் கசடுகளைத் துடைத்தெறிந்து, எலிசபெத்துகளையும் சூக்களையும் இயல்பாக வாழ விடுங்கள் என்று அந்தக் காட்சி சொல்லாமல் சொல்கிறதோ?
எலிசபெத்தாக டெமி மூர், சூவாக மார்கரெட் குவாலி, ஹார்வியாக டெனிஸ் காயிட் உள்ளிட்டோரின் நடிப்பு இந்த எண்ணங்களுக்கெல்லாம் நம்மை அழைத்து வருகின்றன. பெஞ்சமின் கிராகூன் ஒளிப்பதிவு நேர்த்தியும், ராஃபேர்ட்டி இசைச் சேர்க்கையும், ஜெரோம் எல்டாபெட், வாலன்டீன் ஃபெரோன், கொராலீ ஃபார்ஜியாட் படத் தொகுப்பும் மாறுபட்ட சினிமா அனுபவத்தை உறுதிப்படுத்துகின்றன.அ அறிவியல் புனைவு சார்ந்ததாக இப்படியும் ஒரு திகில் கதையைத் தர முடியும் என்று படமெடுத்துக் காட்டியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்களான கொராலீ ஃபார்ஜியாட், டிம் பேவன், டெனிஸ் காயிட் மூவரும். அப்படிப்பட்ட முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் திரையரங்க வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. கேன்ஸ் திரைப்பட விழா விருதும் அதை உறுதிப்படுத்துகிறது.
உலக அளவிலான முக்கியமான படங்களை ஓடிடி மேடையேற்றி வரும் மூபி (MUBI) தளத்தில் இந்தப் படத்தைக் காணலாம்.
கட்டுரையாளர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
இயக்குனர் பெயர்?
கொராலி ஃபார் ஜியாட்
ஓ.கே.