“வெளியிலிருந்து வரும் மக்களை நிச்சயமாக நாம் அதிகமாகவே ஏற்றுக் கொள்கிறோம்” : நிர்மலா லஷ்மண்
நேர்காணல்: அபர்ணா கார்த்திகேயன்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
“The Tamils: A Portrait Of A Community” என்கிற நூலானது கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும், தனிப்பட்ட விஷயங்களிலிருந்து அரசியல் துறைக்கும் தடையின்றி கடந்து செல்வதின் மூலமாக ஒரே மாதிரியான கருத்துக்களைத் தகர்த்தெறிந்து தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற கலாச்சாரத்தைக் கொண்டாடுகிறது.
இந்த நூலை எழுதியதற்கான பின்னணி / செயல்முறை என்ன?
இவை அனைத்தும் தெரியாத உணர்விலிருந்தும், தெரிந்து கொள்ள விரும்புவதிலிருந்தும் வந்ததாக நான் நினைக்கிறேன். நாம் ஒரு ஆங்கிலமயமாக்கப்பட்ட உலகில் வளர்ந்திருந்தாலும் நம் தமிழ் பாரம்பரியம் மீது அதிகமான உணர்வு கொண்டிருக்கிறோம். எழுத்தாளர் அசோகமித்திரன் ஒருமுறை என்னிடம், ` நீங்கள் எதைச் சார்ந்து இருக்கிறீர்களோ அதிலிருந்து தொடங்குங்கள்’ எனக் கூறினார். எனவே, நான் என்னிலிருந்தே தொடங்கலாம் என நினைத்தேன். இந்தக் காலத்தில் ஒரு தமிழராக, உலகத்தை தெரிந்து கொண்டவளாக, வேறொரு மொழியில் கல்வி கற்றவளாக பார்க்கையில் செயல்முறையானது முற்றிலும் ஒரு கண்டுபிடிப்பு போன்றதாக இருந்தது. நான் விரிவாகப் படிக்க ஆரம்பித்ததோடு மக்களின் வாழ்க்கை அனுபவத்தைப் புரிந்துகொள்ள அந்த இடங்களுக்கெல்லாம் செல்லத் தொடங்கினேன். எனக்கு மிகவும் உதவி செய்த மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், கல்வெட்டு நிபுணருமான டாக்டர் வேதாச்சலம், `மன்னர்களைப் பற்றி மட்டும் எழுத வேண்டாம். சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதுங்கள்’ எனக் கூறினார். இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், நிறைய தமிழ் கலைஞர்கள், கைவினைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் அதிகமாக அறியப்படாமலே இருந்தனர். ஆனால் அவர்கள் அற்புதமான விஷயங்களை படைத்திருந்தனர். இந்த நூல் தமிழர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வமுள்ள மக்களுக்கான கல்விசாரா தகவல்களைக் கொண்டிருக்கிறது.
தமிழ் அடையாளமானது மொழியுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது, என்பது பற்றியும் இந்தி உடனான நீண்டகால பதற்றங்கள் / மிகு உணர்ச்சிகள் (tensions) பற்றியும் கொஞ்சம் சொல்ல முடியுமா?
சங்க காலத்தில், மொழி என்பது ஓர் உணர்ச்சிப் பூர்வமான விஷயமாக இருக்கவில்லை. காதல், வீரம், போர் மற்றும் இயற்கையைப் பற்றிப் பேசுவதற்கு இது ஒரு நடைமுறை தொடர்புக் கருவியாக இருந்தது. ஆனால், குறிப்பாக சமணர்களும் பௌத்தர்களும் வந்த பிறகு தமிழ் மீதான உணர்ச்சிபூர்வமான பற்று காலப்போக்கில் அதிகமானது என்று நான் நினைக்கிறேன். அவர்களின் தகவல் தொடர்பு உள்ளூர் மொழி மூலம் இருந்தது. பக்தித் துறவிகள் – ஆழ்வார்களும் நாயன்மார்களும் – சமஸ்கிருதமானது நிறைய மக்களை அந்நியப்படுத்துகிறது என்பதை உணர்ந்தனர். அவர்கள் கோவில் கோவிலாகச் சென்று தமிழில் பாடிக்கொண்டிருந்தனர் இதனால் உள்ளூர் மக்கள் அவர்கள்பால் ஈர்க்கப்பட்டனர்.
இந்தி மொழியுடனான பதற்றத்தைப் பொறுத்தவரை, அது நீண்டகாலமாகவே இருந்து வரும் ஒன்றாகும். தமிழைப் பாதுகாக்க வேண்டிய தேவைகள் குறித்து மக்களின் கருத்துக்களைத் திருப்பிய ஒரு முக்கிய மையப் புள்ளியாக திராவிட இயக்கம் இருந்தது. இசை, இலக்கியம் மற்றும் நல்ல வேலைகள் ஆங்கிலேயர்களுக்கும் பிராமணர்களுக்கும் மட்டுமே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் உணர்ந்ததால், இது ஒரு பிராமண எதிர்ப்பு இயக்கமாகத் தொடங்கியது.
மாநிலத் தலைவர்களான சி.என்.அண்ணாதுரை மற்றும் மு.கருணாநிதி தொடங்கி, இந்தி திணிப்புக்கு எப்போதும் பெரும் எதிர்ப்பு இருந்து வருகிறது, மேலும் அவர்கள் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வலியுறுத்தும் அதே வேளையில், இந்தி மொழியை முறியடிப்பதில் உறுதியாக இருந்தனர்.
மிகவும் கவர்ச்சிகரமான விவரங்களில் இட்லி, தோசை மற்றும் சாம்பார் போன்ற குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உணவுகளின் வரலாறும் அடங்கும். அவற்றின் தோற்றம் பற்றிப் படிப்பது சுவாரஸ்யமாக இருந்தது. மற்றவையெல்லாம் ஏறக்குறைய பொதுவாக இருக்கும் போது, இந்தத் தமிழ் உணவுகள் எதைக் குறிக்கின்றன?
பல்வேறு கலாச்சார பண்புகளை ஒருங்கிணைப்பதில் வணிகர்களும், வியாபாரிகளும் பெரும் பங்கு வகித்தனர். தமிழ் கலாச்சாரத்தில் இயல்பாகவே இருந்த பயணமும் வர்த்தகமும் புதிய உணவுகளை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்களித்தன. நாம் பயன்படுத்தும் சில காய்கறிகள் கூட இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். மிளகாய், தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவை நம்மிடம் ஒருபோதும் இருந்தது இல்லை. இவையெல்லாம் பின்னர் வந்தவையாகும். நமது உணவு மற்றும் கலையின் பரிணாம வளர்ச்சியில் தஞ்சாவூரை ஆட்சி செய்துவந்த மராத்தா அரசுக்கும் பங்கிருந்தது. இது ஹைதராபாத்தில் நடந்ததைப் போல அல்ல. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சமரசம் (syncretic) சார்ந்த ஒரு கலாச்சாரம் இருந்தது, இது துரதிர்ஷ்டவசமாக இன்றைய அரசியலால் சிதைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியார், கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் பங்களிப்பு வழங்கிய நவாப் அலி வாலாஜா, நாட்டின் கடற்கரைப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு அல்லாமல் பண்டமாற்றுக்காக வந்த அரபு வணிகர்கள் போன்றவர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் இந்த நூல் ஒரு ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாகத் தெரிகிறது. இவை அனைத்தும் தெற்கின் அனுபவத்தை எவ்வாறு வடிவமைத்தன?
தெற்குப் பகுதியானது எந்தவொரு பெரிய படையெடுப்பாலும் நேரடியாகத் தாக்கப்படவில்லை. மேலும் இந்நூலில், தென்னிந்தியாவில் மாலிக் கஃபூர் இருப்பின் முரண்பாடான மரபை நான் கையாண்டுள்ளேன். சங்க காலத்தில் தொடங்கி – குறிப்பாக திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் – எப்போதும் ஒரு தத்துவ அடித்தளம் உள்ளது. இது தமிழர்களிடையே ஒரு விதிவிலக்கான பண்பு என்று நான் கூறவில்லை, ஆனால் நிச்சயமாக வெளியிலிருந்து வரும் மக்களை நாம் அதிகமாக ஏற்றுக் கொள்கிறோம். சங்க காலத்தில், யவனர்கள் என்ற வணிகர்கள். பின்னர், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இவை அனைத்தும் தமிழர்களின் சகிப்புத்தன்மை உணர்வை வடிவமைத்தன.
பாண்டியர், சோழர் காலத்தில் பிராமணர்கள் பற்றியும் அவர்களின் நில உடைமை குறித்தும் ஏராளமான தகவல்கள் இந்நூலில் உள்ளன. மேலும் பதிவுகளிலிருந்து மறைமுகமாக்கம் செய்யப்பட்ட விளிம்புநிலை மக்கள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் சூழலில் தலைமுறைச் சலுகையின் நீண்ட பின்னணி குறித்து நீங்கள் கருத்து தெரிவிக்க முடியுமா?
பிராமணர்கள் மன்னர்களிடமிருந்து நிலத்தைப் பெற்றபோது அதில் அவர்கள் பயிரிட்டு வளர்க்கும் வேலையைச் செய்யாமல் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த விவசாயிகளை அதற்காகப் பயன்படுத்தினர். சிறிய குழுக்களிடமிருந்து வந்த எதிர்ப்பைத் தவிர இதற்கு எதிராக எந்தக் கிளர்ச்சியும் எழவில்லை. பிராமணர்கள் ஏற்கனவே படித்தவர்களாக இருந்ததால், அனைத்து வாய்ப்புகளையும் சலுகைகளையும் – பிரிட்டிஷாருடன் இணைந்துக் கொண்டு – அடைவது என்பது மிகவும் வெளிப்படையாகவும் அரசியல் ரீதியாகவும் மாறியது.
ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வரை அவர்கள் உயர் பதவிகளில் இருந்தனர். திராவிட உணர்வின் பிறப்பால்தான் இந்த சலுகையை அகற்ற முயற்சி நடந்தது. அது அரசியல் விருப்பத்தாலும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பாலும் மட்டுமே வெற்றி பெற்றது. வரலாற்று ஒடுக்குமுறைகளை சரிசெய்ய இடஒதுக்கீடு மிகவும் அவசியமானது.
இடஒதுக்கீடுகளால் தமிழ்நாடு பெரிதும் பயனடைந்துள்ளது, தொழில்நுட்ப வல்லுநர்களையும் அதிகாரிகளையும் இது உருவாக்கியது. ஆனால் விகிதாச்சார அளவில் தலித்துகள் பயனடையவில்லை என்பதை இந்நூலில் பதிவு செய்யப்பட்ட நேர்காணல்கள் உங்களுக்குச் சொல்லும்.
நாட்டின் பிற பகுதிகளில் நடந்த பல கிளர்ச்சிகளைப் போல சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் பங்கு நன்கு அறியப்படவில்லை. இந்த நூல் சுட்டிக்காட்டுவது போல காந்திஜியின் சத்தியாக்கிரகக் கருத்துக்கள் உட்பட பல இப்பிராந்தியங்களில் எழுந்தன. இது ஏன்?
சுதந்திரப் போராட்டம் ஓர் அகில இந்திய இயக்கமாகும், மேலும் நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் நீங்கள் காணக்கூடிய அளவுக்கு இங்கும் பல எதிர்ப்புகள் இருந்தன.
மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, அம்புஜம்மாள் மற்றும் பலரின் கலாச்சார, இலக்கிய, அரசியல்ரீதியான எதிர்ப்புகள் இருந்தன. திராவிட இயக்கம் சுதந்திரப் போராட்டத்திற்கு இணையாக இருந்தது, ஆனால் அதை ஒருபோதும் அடக்க முயற்சிக்கவில்லை. காந்தியின் வருகையுடன் இது ஒரு வெகுஜன இயக்கமாக மாறியது, ஆனால் ஏதோ காரணத்தால் தெற்கின் அற்புதமான ஈடுபாடுகள் அவ்வளவாக மேலெழுந்து சிறப்பிக்கப்படவில்லை.
பெண்களை முன்னிலைப்படுத்துவது எவ்வளவு கடினமாக இருந்தது?
இது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அவர்களின் பங்களிப்புப் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவில்லை. மேலும் வரலாறு பற்றிய வாசிப்புகளிலும் எழுத்துக்களிலும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது, ஏனெனில் கலைஞர்களாக, படைப்பாற்றல் மிக்கவர்களாக, இலக்கிய அறிஞர்களாக மற்றும் வரலாற்றாசிரியர்களாக பங்களிப்பு செய்த பெண்களின் மீது நாம் கவனம் செலுத்தவில்லை. நான் போராடி, நினைவில் வைத்து, கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் ராஜராஜ சோழன் சிறந்த காரியங்களைச் செய்தார் என்று சொல்வது மிகவும் எளிதானது, ஆனால் அவரது அத்தை செம்பியன் மகாதேவி அவரின் செயல்பாடுகளில் தாக்கத்தைச் செலுத்தினார் என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை.
பல்லவர் காலம் குறித்து எழுதிய புரட்சிகரமான வரலாற்றாசிரியரான டாக்டர் மீனாக்ஷி அல்லது செல்லம்மாள் (பாரதியின் மனைவி) போன்ற பெண்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி போதுமான பதிவுகள் இல்லை. அவர்கள் இன்னும் நிழலில் மறைமுகமாகத்தான் இருக்கிறார்கள்.
இவர்களைத் தவிர, விதவைகள் என்று முத்திரை குத்தப்படுவதை எதிர்த்தவர்கள் அல்லது விதவைகள் மறுமணத்தை ஆதரித்தவர்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் வீடுகளுக்குள் இருந்தனர். பெண்கள் தங்களின் கல்விக்காகப் போராடி கல்லூரிக்குச் சென்றனர். இவை பற்றியெல்லாம் மேலும் அறிய விரும்பினேன். ஆனால் இவை குறித்தெல்லாம் என்னால் அதிகமாகக் கண்டறிய முடியவில்லை. என்றாவது ஒரு நாள், நான் இவை குறித்தெல்லாம் கண்டறிய வேண்டும்.
இந்நூல் எழுதும்போது நீங்கள் கண்டறிந்ததில் உங்களுக்குப் பிடித்தமான ஒன்று பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?
சமண பாரம்பரியத் தளமான சித்தன்னவாசலில் உள்ள குகை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. கழுகு மலை மலையடிவாரத்தில் உள்ள வெட்டுவன்கோவில் என்னை ஆச்சரியப்படுத்தியது. முதன் முறையாகப் பார்க்கும் போது இது உங்களுக்குத் தெரியாது ஆனால் கவனமாகப் பார்க்கும்போது, ஒரு பள்ளத்திற்குள் இருக்கும் இந்த ஆரம்பகால பாண்டியர் காலத்துக் கோவில் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிடும். இது முடிக்கப்படாததால், அதனுடைய இறுதி நோக்கம் என்னவென்று தெரியவில்லை. நான் இந்நூலுக்கான ஆராய்ச்சியின் போது ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை அங்கு சென்று இக்கோவிலைப் பார்த்திருக்கிறேன்.
நூலின் தகவல்கள் :
நூல் : “The Tamils: A Portrait Of A Community”
ஆசிரியர் : நிர்மலா லஷ்மண்
பதிப்பகம்: அலெஃப்
பக்கங்கள்: 464
விலை ரூ 999
(அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன இதழாளரும், எழுத்தாளரும் ஆவார். இந்நேர்காணல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்தின் @htTweets பக்கத்தில் மார்ச் 15 அன்று வெளியானது. இதனுடைய மூலப் பிரதியை வாசிக்க https://www.hindustantimes.com/books/nirmala-lakshman-we-definitely-are-more-accepting-of-people-from-outside-101741960798633.html என்கிற சுட்டியைச் சொடுக்கவும்)
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.