The Tell-Tale Heart – துடிக்கும் இதயத்தின் கதை
( எட்கர் ஆலன் போ )
உண்மை தான் நான் பதட்டமாகத்தான் இருந்தேன். மிகவும் பதட்டமாக இருந்தேன். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் ஏன் என்னை பைத்தியமென்று சொல்ல வேண்டும் ? நோய் என்னுடைய புலன்களை கூர் தீட்டியிருக்கிறதே தவிர அழித்து விடவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்குப் பிறகு என்னுடைய செவிப்புலன் மிகவும் நுண்மையடைந்து விட்டது. வானத்திலும் பூமியிலும் நடப்பதெல்லாம் கூட எனக்கு நன்றாக கேட்கிறது. குறிப்பாக நரகத்தில் நடப்பதெல்லாம் தெள்ளத் தெளிவாகவே கேட்கிறது. பிறகு எப்படி நான் பைத்தியமாக இருக்க முடியும் ? கொஞ்சம் காது கோடுத்து கேளுங்கள்எவ்வளவு அமைதியாகவும் , ஆரோக்கியமாகவும் முழுக்கதையையும் நான் சொல்லப்போகிறேன் கொஞ்சம் காது கோடுத்து கேளுங்கள்.
முதன் முதலில் அந்த எண்ணம் எப்படி என் மூளைக்குள் நுழைந்தது என்று சரியாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் அது தோன்றியதிலிருந்து இரவும் பகலும் என்னை வாட்டி எடுத்து விட்டது.என்னிடம் குறிக்கோளும் இல்லை , பெரிய இலட்சியங்களும் இல்லை. உண்மையில் அந்த முதியவனை நான் வெறுக்கவுல்லை. இன்னும் சொல்லப்போனால் அவனை நேசிக்கவே செய்தேன். அவன் எனக்கு எந்த தீங்குமே செய்திருக்கவில்லை. ஏன் அவன் ஒரு முறை கூட என்னை எரிச்சல் மூட்டியதுமில்லை. அவனுடைய தங்கத்தின் மீது கூட எனக்கு ஆசையில்லை. ஆனால் அவனை எனக்குப் பிடிக்காமல் போனதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. அது அவனுடைய கண்கள் தான். ஆம் அந்தக் கண்களை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அது மனிதர்களுடைய கண்களேயில்லை என்று தான் நான் சொல்லுவேன். கண்களாஅது ? சாயம் போன வெளுத்த நீல நிறமான ஒரு வஸ்துஅது. அதன் மீது தெரிவது என்ன கோலிக்குண்டின் மினுமினுப்பு. அந்தக் கண்கள் எப்போதெல்லாம் என் மீது விழுந்தனவோ அப்போதெல்லாம் என் இரத்தம் உறைந்துபோய் விட்டது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்கள்ளா? ஆனால் உண்மை அது தான். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வளர்ந்து விட்டது .
உண்மை அவனின் கண்களுக்காகவே நான் அவனைக்கொல்ல வேண்டுமென்று முடிவெடுத்தேன். கடைசியில் அந்தக் கண்களினாலேயே என் வாழ்க்கையையும் அழித்துக் கொண்டேன். நான் சொல்ல வருவது ஒன்று தான். நீங்கள் என்னை பைத்தியம் என்றே முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் நான் அந்தக் கொலையை எப்படி திட்டமிட்டு செய்தேன் என்று மட்டும் நீங்கள் கண்ணால் பார்த்திருந்தீர்களானால், என்னை இப்படியெல்லாம் நினைக்க மாட்டீர்கள். எவ்வளவு புத்திசாலித்தனமாக நான் செயல்பட்டேன் என்று நீங்கள் அருகிலிருந்து பார்த்திருக்க வேண்டும். எவ்வளவு முன்னெச்செரிக்கை எவ்வளவு திட்டமிடல் ! எவ்வளவு தொலை நோக்கு! அடடா அதற்காக நான் என்னையே தாராளமாக பாராட்டிக் கொள்ளலாம் தவறில்லை.
அந்தக் கொலையை நடத்தி முடிக்கும் வரையிலும் சுமார் ஒரு வாரம் அதாவது அவனைக் கொல்கின்றகாலம் வரையிலும், நான் அந்த முதியவன் மீது எவ்வளவு அக்கறையாக இருந்தேன் தெரியுமா? என் வாழ்க்கையில் அதற்கு முன்பு நான் யார் மீதும் அவ்வளவு அக்கறையாக இருந்ததேயில்லை.
ஒவ்வொரு நாள் இரவிலும் நடுராத்திரியில் நான் அவனுடைய கதவுகளின் தாழ்பாளை மிக மெதுவாகத் திறப்பேன். ஓசையே சுத்தமாக கேட்காது. அவ்வளவு கவனமாக இருக்கும் எனது நடவடிக்கை. என்னுடைய தலை உள்ளே நுழைகின்ற அளவுக்கு திறந்ததும், அதிகப் பிரகாசமற்ற ஒரு சிறிய விளக்கை எற்றுவேன். அதன் வெளிச்சத்தை என்னைத் தவிர யாராலும் பார்க்க கூட முடியாது. அவ்வளவு மெல்லிய வெளிச்சத்தை தான் அது சிந்தும். பிறகு சிறிய ஒரு இருள் பாதையின் வழியே உள்ளே நுழைவேன். அங்கே எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்டிருக்கும். எவ்வளவு தந்திரமாக நான் உள்ளே நுழைவேன் என்பதை மட்டும் நீங்கள் பார்த்திருந்தால், நிச்சயமாக சிரித்திருப்பீர்கள். நான் மெதுவாக மிக மெதுவாக அந்தப் பாதையில் என்னை நுழைத்துக் கொண்டு உள்ளே செல்வேன்.
அந்த முதியவனின் தூக்கம் என்னால் கெட்டுவிடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருந்தேன். அந்தக் கிழவன் தனது படுக்கையில் படுத்திருப்பதை பார்ப்பதற்கே எனக்கு ஒரு மணி நேரம் ஆகி விடும். அவ்வளவு நேரமும் அந்த அறையில் நான் இருளை கண்களுக்கு பழக்ககப் படுத்திக் கொண்டிருப்பேன். ஒரு பைத்தியகாரன் இவ்வளவு புத்திசாலித்தனமாக செயல்படுவானா என்பதை நீங்களே யோசித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
அந்த அறை என் கண்களுக்கு நன்கு பழகிய பிறகு, நான் மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த சிறிய விளக்கை ஏற்றுவேன். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அந்த விளக்கின் சிறிய கீற்று ஒளி அந்த கழுகுக் கண்களில் மீது விழ வேண்டும் என்பது தான். ஏனென்றால் அந்த கண்கள் தான் என்னை நிம்மதி இழக்கச் செய்தவை.
இது ஏழு நாட்களின் நீண்ட இரவகளிலும் தொடர்ந்து நடபெற்றது. ஒவ்வொரு நாள் இரவிலும் நடு ராத்திரியில் அவனைப் போய் பார்ப்பேன். அந்த விழிகள் மூடிய வண்ணமே தானிருக்கும் . அந்த முதியவன் என்னை துன்புறுத்தவில்லை. ஆனால் அவனது கொடுரமான கண்கள் தான் என்னை துன்புறுத்தின.
ஒவ்வொரு நாள் விடிந்ததும் காலையில் அந்தக் கிழவனை அவனது வீட்டிற்கு சென்று சந்திப்பேன். அவனிடம் தைரியமாக அக்கறையுடன் நலம் விசாரிப்பேன். நான் எப்போதும் அவனது பெயரைச் சொல்லித்தான் அவனை அழைப்பேன். மேலும் முந்தைய நாள் இரவை அவன் எப்படிக் கழித்தான் என்றும் நன்றாகத் தூங்கினானா என்றும் நலம் விசாரிப்பேன். என்னுடைய குரலில் பாசம் பொங்கி வழியும். கிழவன் நல்ல முதிர்ச்சியான மனிதன்தான். ஒவ்வொரு நாள் இரவும் பன்னிரெண்டு மணிக்கு கண்டிப்பாக அவன் தூங்கும் போது அவன் கண்களை ஒரு முறை நான் பார்த்து விடுவேன்.
இது போல் ஏழு இரவுகள் கடந்துவிட்டன. எட்டாவது நாள் இரவில் நான் அவன் வீட்டுக்கதவைத் திறக்கும் போது என்றுமில்லாத அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டேன். ஒரு கடிகாரத்தின் நிமிட முள் கூட என்னை விட விரைவாக நகர்ந்திருக்கும் ஆனால் நான் அதை விட மெதுவாக உள்ளே நகர்ந்து சென்றேன். அந்த இரவுக்கு முன்னால் எனக்குள் இருக்கும் இது போன்ற எல்லையில்லாத ஆற்றலை நான் எப்போதும் கண்டதில்லை.
அன்று என்னுடைய லட்சியம் நிறைவேறப் போகிறது என்ற நினைப்பு வரவே , என்னால் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. சிறிது சிறிதாக மெதுவாககதவைத் திறந்தேன். அவன் என்னுடைய ரகசிய திட்டங்களைப் பற்றி கனவு கூட கண்டிருக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டேன். உடனே என்னையும் அறியாமல் கொஞ்சம் சிரித்து விட்டேன். உடனே படுக்கையில் அசைவுகள் தெரிந்தன. இப்போது நீங்கள் என்ன நினைத்தீர்கள்? நான் உடனே திரும்பியிருப்பேன் என்று தானே ? அது தான் இல்லை.
ஏறத்தாழ என் தலை உள்ளே நுழைந்து விட்டது என்றே சொல்லலாம் . நானும் உள்ளே நுழைவதற்கு தயாராக முன்னால் சற்று நகர்ந்தேன். அதற்குள் என் பெருவிரல் அங்கே அடுக்கப்பட்டிருந்த ஒரு காலி டப்பாவைத் தட்டிவிட்டது. அந்த முதியவன் உடனே படுக்கையில் இருந்து துள்ளி எழுந்து உட்கார்ந்துவிட்டான். பிறகு ‘யாரது யாரது ? என்று நெடுநேரம் கத்திக்கொண்டேயிருந்தான். நான் ஒரு வார்த்தை பேசவில்லை. மயான அமைதியில் உறைந்திருந்தேன்.
ஏறத்தாழ ஒரு மணிநேரமாக என் உடம்பின் எந்தப்பாகத்தையும் நான் அசைக்கவில்லை. ஆனால் அவ்வளவு நேரமும் அவன் படுக்கையில் படுத்ததாகவே தெரியவில்லை. அதன் மீது உட்கார்ந்து கொண்டு ஏதாவது சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக கேட்டுக் கொண்டேயிருந்தான்.
அவனைப் போலவே நானும் உறங்காமல் தான் விழித்திருந்தேன். சுவர் காரத்தின் ஓசை கூட அவனுக்கு மரணபயத்தை எழப்பிருக்கவேண்டும்.ஒரு சிறிய முனங்கல் கேட்டது. அதில் மரணபயம் கலந்திருந்தது புரிந்தது. நிச்சயமாக வலியிலோ வேதனையிலோ வந்த முனகல் இல்லைஅது. அது அவனது ஆன்மாவின் அடியாழத்திலிருந்து வந்த மரணத்தின் அலறல் என்று எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அந்த சத்தத்தை முன்பே எனக்கு நன்றாகத் தெரியும்.
முன்பு நானும் அதைக் கேட்டிருக்கிறேன்.நிறைய இரவுகளில் நடுராத்திரிகளில் இந்த உலகமெல்லாம் நன்றாகத் தூங்கும் போது அது என் இதயத்தின் அடியாழத்திலிருந்து. எபோதும் பீறிட்டெழுந்து வரும். அதனுடைய பிரதிபலிப்பு எனக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும். என்னை பாடாய்படுத்தும். அந்த வேதனை தான் இப்போது இந்த முதியவனுக்கும் ஏற்பட்டுள்ளது. நான் அவனுக்காக மிகவும் வருத்தப்பட்டேன். எனக்கு இதயத்தில் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொருபக்கம் துக்கமாகத் தான் இருந்தது .
ஒரு சிறிய சத்தம் கேட்டதிலிருந்து இன்னும் அந்த முதியவன் படுக்கையில் படுத்த படி தூங்காமலே விழித்திருப்பது தெரிந்தது. அவனுடைய பயமே வளர்ந்து வளர்ந்து அவன் மீது போர்வை போல மூடிவிட்டது. அவன் இது ஒரு கற்பனையான பயம் என்று நம்ப முயற்சித்தான். ஆனால் அவனால் முடியவில்லை. பிறகு அவன் தனக்குள்ளேயே ‘இது சிம்னியில் காற்றின் வேலை தான்‘’ என்று முனு முனுத்துக் கொண்டான். மறுபடியும்‘’பூனை ஏதாவது அந்தப்பக்கம் ஓடியிருக்கும் ‘என்றான்.
இன்னும் சற்று நேரம் பொறுத்து “ இது மழைப்பூச்சியாகத் தான் இருக்கும் அது தான் இப்படி சப்தமெழுப்பும் என்றான். அவன் இப்படித் தான் சமாதானம் சொல்லி சொல்லி தன்னைத்தானே தேற்றிக்கொண்டிருந்தான். இருந்தாலும் அவனது மனம் சமாதானமாகவில்லை என்பது எனக்குத்தெரிந்தது.
ஏனென்றால் மரணம் அவனை நெருங்கிக்கொண்டிருந்தது..வெகு அருகே நெருங்கிவிட்டது. அதனுடைய கருப்பு நிழல் அவன் கண் முன்னால் தெரிந்தது. இப்போது தன் இரையை அது முழுமையாக போர்த்தியும்விட்டது.
அவன் நான் இருப்பதை பார்க்கவில்லை , என்னுடைய சத்தத்தையும் கேட்கவில்லை. என்னுடைய தலை அவனுடைய பிரத்யேக அறைக்குள் நுழைந்து விட்டதை உணரவுமில்லை. ஆனால் துக்கத்தை தரக்கூடிய மரணத்தின் நிழல் ஏற்கனவே அங்கே நுழைந்து விட்டதை தனது உள்ளுணர்வால் கண்டு கொண்டான்.
நான் நீண்ட நேரம் பொறுமையாக காத்திருந்தேன். அவன் அப்போதும் படுக்கையில் படுக்காமல் உட்கார்ந்து கொண்டிருந்ததால் , என்னுடைய விளக்கில் சிறிய வெளிச்ச கீற்றை ஏற்றலாம் என்று முடிவெடுத்தேன். சிறிய விளக்கின் வெளிச்சத்தை ஏற்றுவதற்கு நான் எவ்வளவு தந்திரமாக செயல்பட வேண்டியதிருந்தது தெரியுமா ? சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். மெல்லிய சிலந்தி வலையின் நூலைப் போன்ற மெலிந்த ஒளி, சின்னஞ் சிறிய மங்கலான வெளிச்ச ரேகை அந்த கழுகு கண்களின் மீது விழுந்த நொடி , நான் அதிர்ந்து விட்டேன். அது திறந்தபடியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அதை உற்றுப் பார்த்த போது எனக்குள் கோபம் கொப்பளித்து விட்டது.
மீண்டும் அதை முழுமையாக உள் வாங்கி கொள்வதற்காக கவனமாகப் பார்த்தேன். வெளிர் நீலத்தில் அது பிரகாசித்தது, ஆனால் உள்ளே ஏதோ ஒன்றை ஒளித்து வைத்திருக்கும் ஒரு இரகசியத் திரை தான் அது என்று நான் கண்டு கொண்ட நொடியில், பயம் என் குருத்தெலும்பு வரைக்கும் ஊடுருவிப் பாய்ந்து விட்டது. அந்த முதியவனின் முகத்திலோ அல்லது அவையத்திலோ எந்த கபடத்தையும் நான் காண முடியவில்லை.
எனது உள்ளுணர்வின் காரணமாக சரியாக அவன் மார்பின் மீது எனது விளக்கின் ஒளி ரேகையைப் பாய்ச்சினேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நான் எவ்வளவு திறம்பட இந்த வேலையை செய்திருக்கிறேனென்று. என்னை அவ்வளவு அலட்சியமாக பைத்தியமென்று ஒதுக்கி விடக்கூடாது என்பதற்காகத் தான் நான் இவ்வளவையும் சொல்லுகிறேன்.
அப்போது ஒர் ஒலி துல்லியமாக என் காதில் விழுந்தது. ஒரு சுவர் கடிகாரத்தை துணி உறைக்குள் போட்டு மூடி வைத்து விட்டால் , எப்படி ஒலி எழுப்புமோ அப்படியான ஒரு ஒலி. சாரமற்ற , மெலிந்து , தேய்ந்து போன ஒலி முதலில்மெலிதாகவும்பிறகுவேகமாகவும் கேட்டது. அந்த இருட்டிலும் அது என்ன ஒலி என்று நான் கண்டு பிடித்துவிட்டேன். பயந்து நடுங்கும் அந்த முதியவனின் இதயத்திலிருந்து தான் அந்தஒலி வந்து கொண்டிருந்தது. போர் பறை ஓசை கேட்டதும் ஒரு சிப்பாய் எப்படி வெறி கொள்வானோ அது போல , இதைக் கேட்டதும் எனக்குள் ஒரு வெறி ஏறி விட்டது.ஆனாலும் நான் நிதானத்தை இழக்கவில்லை. அமைதியாகத்தான் இருந்தேன்.
மீண்டும் நிதானமாக அவன் கண்களின் மீது ஒளியைப் பாய்ச்சிப் பார்த்தேன் . பாழாய் போன அவனது இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிறிப் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது.ஒவ்வொரு நொடியும் அதன் ஓசை அதிகரித்துக் கொண்டேபோகும்போது. வேகமும் கூடிப்போய்க் கொண்டிருந்தது. கிழவனின் பயம் நொடிக்கு நொடி, ஆமாம் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருப்பதை என்னால் இங்கிருந்தே உணர்ந்து கொள்ள முடிந்தது. என்ன பயமோ! நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன் இல்லையா ? நானும் அவனைப் போலவே பதட்டத்தில் தான் இருந்தேன். இப்போது இரவு அதனுடைய உச்சத்தை அடைந்திருந்தது. அந்தப் பழைய வீடெங்கும் மயான அமைதி தலை விரித்தாடியதை என்கண்ணால் பார்த்தேன். அவனுடைய இதயத் துடிப்பின் ஒலி கேட்க சகிக்க முடியவில்லை. இனியும் என்னால் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதென்று தோன்றவில்லை. இருந்தாலும் சில நிமிடங்களுக்கு ஆடாமல் அசையாமல் நான் அப்படியே தான் நின்று கொண்டிருந்தேன்.
ஆனால் அவனது இதயத்தின் துடிப்பொலிதான் கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை . விநாடிக்கு விநாடி வெள்ளம் போல அதிகரித்துக் கொண்டே தான் சென்றது. எந்த நொடியிலும் அவனது இதயம் வெடித்து விடும் போல் அப்படி ஒருவேகம். என்னை புதியதொரு பதட்டம் இப்போது தொற்றிக் கொண்டது. ஆம் இவனது இதயத் துடிப்போசை பக்கத்து வீட்டுக் காரனுக்கு கேட்டு விட்டால்நான் என்ன செய்வது ? இனி மேலும் இவனை விட்டு வைக்க கூடாது. ஆமாம் இந்தக் கிழவனின் இறுதி முடிவுக்கு இதோ நேரம் வந்து விட்டது. அப்படி நினைத்த நொடியில் நான் கத்திக் கொண்டே வேகமாககதவை தள்ளி விட்டு அந்த அறைக்குள் புயலெனப் புகுந்தேன்.
அவன் அலறினான் ஆனால் ஒரே ஒரு முறை தான் அதற்கு வாய்ப்பிருந்தது. அதற்குள் நான் அவனை பிடித்து இழுத்து கீழே தரையில் கிடத்தினேன். கட்டிலிலிருந்த அவனுடைய கனமான மெத்தையை எடுத்து அவனது உடலைச் சுற்றி இறுக்கிமூடினேன். ஆம் மூச்சு விடக் கூட முடியாத படி இறுக்கினேன். அந்த நேரத்தில் இது வரையிலும் தொடர்ந்த என்னுடைய சமயோசிதமான செயல்களை நினைத்து வெற்றிப் புன்னகை என் உதட்டில் மின்னியது. ஆனால் போர்வைக்கும் மேலே அந்த கிழவனின் அசுரத்தனமான இதயத் துடிப்புவந்து முட்டி மோதிக்கொண்டு இருந்தது. அந்ததுடிப்பைஎப்படிவிவரிப்பது ? தோல் கருவியின் ஓசை தரும் துடிப்பு .இப்பொழுது இவனது துடிப்போசை சுவரைத்தாண்டி வெளியே கேட்காது. அதனால் அது எனக்கு அச்சுறுத்தக்கூடியதாக இல்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த ஓசை தன்னால் நின்று விட்டது. இப்போது அந்த முதியவன் இறந்து விட்டான்.
நான் போர்வையை நீக்கி விட்டு அவனது உடலை நன்றாகப் பரிசோதித்தேன் . கிழவன் கல்லைப் போல கிடந்தான்.அவன்சவமாகி விட்டது எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. நான் எனது கைகளை அவனது இதயத்தின் மீது வைத்துப்பார்த்தேன். நீண்ட நேரம் அப்படியேவைத்திருந்தேன் ம் ஹூம் துடிப்போசையேவரவில்லை . அவன் அசையாத கல்லைப் போல் கிடந்தான். அப்பாடா இனி மேல் இவனால் எனக்கு எந்த தொந்தரவும் இருக்காது.
நீங்கள் இன்னும் என்னை பைத்தியமென்றே நினைத்து வந்திருந்தால் , அடுத்து நான் சொல்லப்போவதை கேட்டவுடன் உங்கள் எண்ணத்தை தன்னால் மாற்றிக் கொள்வீர்கள்பாருங்கள். ஆம் இப்போது எனக்கு அதீத எச்சரிக்கை உணர்வு தோன்றி விட்டது. இந்த உடலை யார் கண்ணிலும் படாமல் மறைக்க வேண்டும்.இரவு வேறு வேகமாகத் தேய்ந்து கொண்டிருந்தது. நான் விரைவாகஎனது பணியை முடிக்க வேண்டும். ஆனால் அமைதியாக முடிக்க வேண்டும். முதலில் இந்த பருத்த உடலை சிறு சிறு துண்டங்களாக்கி எடையை குறைக்க வேண்டும் .உடனே நான் அவனது தலையை , கைகளை , கால்களை என்று முக்கியமான அவயங்களையெல்லாம் தனித் தனியாக வெட்டி எடுத்தேன்.
பிறகு அவனது படுக்கை அறையின் மேல் அடுக்கிலிருந்து மூன்று பெரிய பலகைகளை எடுத்துகீழேவைத்தேன். அதில் வெட்டப்பட்ட உடல் துண்டுகளையெல்லாம் நேர்த்தியாக அடுக்கி வைத்துவிட்டு , மீண்டும் பலகைகளை சாமர்த்தியமாக அதேஇடத்திலேயேஅடுக்கி வைத்தேன். இனிஎந்த மனிதக் கண்களாலும் இதை கண்டு பிடிக்க முடியாது. ஏன் இறந்து போனவனின் கண்கள் கூட அவனது உடலை கண்டு பிடிக்கவே முடியாது. அதைவிடஅற்புதம்என்னவென்றால்இந்தஇடத்தை கழுவி விட வேண்டிய அவசியமே இல்லை என்பது தான் எந்த இரத்தக் கறையும் எங்கும் தென்படவில்லையே !
ஆஹாநான் எவ்வளவு எச்சரிக்கையாக செயல்பட்டிருக்கிறேன்ஹா! ஹா ஹா! ஒரு பக்கெட்டுக்குள்வைத்து எலாவற்றையும் முடித்து விட்டேனே ! ஹா ஹா ஹா நான் இந்த வேலைகளையெல்லாம் முடித்திருந்த போது சரியாக அதிகாலை நான்கு மணிஅடித்தது. இன்னும் இருள்கூட பிரியவில்லை. பார்ப்பதற்கு நடு ராத்திரி போலவே இருந்ததுசுவர்கடிகாரம் சப்தம் எழுப்பிய, அதே நேரம் வாசலில் யாரோ கதவை தட்டும்சத்தம்கேட்டது.
நான் எதுவுமே நடவாதது போல் வாசலுக்கு சென்று கதவைத் திறந்தேன். நான் ஏன் பயப்பட வேண்டும் ?கதவைத் திறந்ததும் விறைப்பாக மூன்று பேர் உள்ளே நுழைந்தார்கள். தங்களை காவல் அதிகாரிகள் என்று என்னிடம்அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.
இந்த வீட்டில் நடு ராத்திரியில் எழுந்த அலறல் சத்தம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. உடனே போலிசுக்கு தகவல் கொடுத்து விட்டான். அதை விசாரிதுப் போவதற்காக இவர்கள் வந்திருக்கிறார்கள். இதைக் கேட்டதும் நான் சிரித்தேன். நான் எதற்காக பயப்பட வேண்டும். நான் அவர்களை வீட்டிற்குள் வரவேற்றேன். அந்த அலறல் சப்தம் நான் தூக்கத்தில் எழுப்பியது என்றுசாதாரணமாகஅவர்களிடம்பொய்சொன்னேன்.
நான் ஏன் அங்கே இருக்கிறேன் என்ற கேள்விக்கு அந்த முதியவரைப் பார்க்க அவருடைய வீட்டிற்கு வந்ததாகவும் , அவரைக் காணாததால் அங்கேயே நாள் முழுவதும் காத்திருந்ததாகவும் சாமர்த்தியமாக பொய் சொன்னேன். அவர்கள் என் மீது சந்தேகப்படக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் சோதனையிடுமாறு நானே அவர்களை வேண்டினேன். அவருடைய எல்லா அறைகளையும் அவர்களுக்கு சுற்றிக்காட்டினேன். அவருடைய கஜானாப் பெட்டியையும் கூட திறந்து காட்டினேன். பணம் மற்றும் ,விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என்று நம்பும் படியாகசொன்னேன் , என்னுடைய அளவற்ற திறமை மீதுஎனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு .
அடுத்து நான் செய்தது தான் அசாத்தியதமானது. அவர்களை அந்த கொலை நிகழ்ந்த அறையிலேயே அமருமாறு வேண்டிக் கொண்டு நாற்காலிகளை அங்கே கொண்டு வந்து போட்டேன். என்னுடைய வெற்றியை கொண்டாடும் விதமாக நானும் அங்கேயே ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்துகொண்டேன்.சற்று முன்னர் பிணத்தை கூறு போட்டு மறைத்தேனே அதே இடத்தில் தான்இப்போது நான் அமர்ந்தேன்.
காவல் துறை அதிகாரிகள் என்னுடைய பதில்களால் முழுமையாக திருப்தி அடைந்து விட்டார்கள். என்னுடைய நடவடிக்கைகள் அவர்களுடைய சந்தேகங்களை முற்றிலும் போக்கி விட்டது அவர்களது பேச்சிலேயே தெரிந்தது . அவர்கள் அங்கே உட்கார்ந்து சாதாரணமாக என்னிடம் சில கேள்விகளை கேட்டார்கள். நானும் மிகுந்த உற்சாகத்தோடு பதிலளித்தேன். அவர்கள் வேறு பலபொதுவான விசயங்களையும் உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்தில்எனக்கும்மகிழ்ச்சியாகத்தான்இருந்தது.
ஆனால் எவ்வளவு நேரம் பேசுகிறார்கள் ? அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் விரைவில் எழுந்துசெல்ல வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் மெல்ல தோன்ற ஆரம்பித்து விட்டது. என்னுடைய உடல் வெளுத்துப் போய் கொண்டிருப்பது போலஎனக்குத் தோன்றியது. தலை ஒரு பக்கம் வலிக்க ஆரம்பித்து விட்டது..காதுகளில் ஏதோ மணிச்சத்தம் கேட்பது போல் ஒரு பிரமை.ஆனால் அவர்கள் இதைப்பற்றியெல்லாம் எதுவும் கண்டு கொள்ளவேயில்லை. கிளம்புவதாகமில்லை இன்னும் பேசிக்கொண்டேயிருந்தார்கள். மணிச்சத்தம் என் காதுகளில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இப்போது அந்தச் சத்தம் எனக்குள் மிகுந்த எரிச்சலை உண்டு பண்ண ஆரம்பித்து விட்டது. நான் அதை அலட்சியம் செய்வதற்காக சாதாரணமாகப் பேசிக் கொண்டேயிருந்தேன். ஆனால் அது தாங்க முடியாத கொடுமையாக அதிகரித்துக் கொண்டே சென்றது.
ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் போன போது , அந்தச் சத்தம் உண்மையிலேயே எனக்குள்ளிருந்து கேட்கவில்லையென்பதை நான்கண்டு கொண்டேன். அதிர்ந்துபோனேன்.
சந்தேகமேயில்லை நான் வெளுத்துப் போய் விட்டேன் . மேலும் பதட்டமடைந்து கொண்டேபோகிறேன். அதைமறைக்க முன்னைக் காட்டிலும் இப்போது வேகமாக பேச ஆரம்பித்தேன். என் குரலின் தொனி மிகவும் அதிகரித்திருந்தது. ஆனாலும் என்ன பிரயோசனம் ? அந்த சத்தம் நிற்காமல் வந்து கொண்டே தானிருந்தது. மெலிதான, சீரற்ற வேகமான சத்தம். கடிகாரத்தை துணி மூட்டைக்குள் சுற்றி வைத்தால் , எப்படி சத்தம் வருமோ அப்படியானதொரு மந்தமான சத்தம்.
சற்று நேரத்தில்நான் மூச்சு விடுவதற்கே கூட சிரமப்பட்டுப் போனேன். ஆனால் சத்தம் வருவது மட்டும் நிற்கவேயில்லை. அதிகாரிகள் இதைப்பற்றி எதுவுமே கண்டு கொள்ளாமல் பேசிக்கொண்டேயிருந்தார்கள் எனக்கு பயங்கரமாக எரிச்சல் வந்தது. நான் குரலை உயர்த்தி கடுமையாக அவர்களிடம் பேசினேன். சிறிய விசயங்களுக்கெல்லாம் எழுந்து நின்று பயங்கரமாக வாக்குவாதம் செய்தேன். என்னுடைய உடலசைவுகள் மிகவும் மோசமாக இருந்தன . ஆனால் இத்தனைக்குப் பிறகும் அந்த சத்தம் வருவது மட்டும் நிற்கவேயில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டேசென்றது .ஏன் அவர்கள் இன்னும் செல்லாமல் அங்கேயே இருக்கிறார்கள் என்பது தான் எனக்குப்புரியவில்லை மேலும் ஆத்திரமூட்டியது. எழுந்து அந்த அறையில்குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தேன்.பெரிய பெரிய எட்டுக்களாக வைத்து நடந்தேன். என்னுடைய கோபத்தை அப்படித்தான் மடை மாற்ற முடியும் என்று ஒரு சின்ன நம்பிக்கை .ஆனால் இன்னும் சத்தம் நிற்கவில்லை.
அடக்கடவுளே ! நான் இப்போது என்ன செய்வது ? வெல வெலத்துப் போய்விட்டேனே. முகம் களையிழந்து முற்றிலும் வெளுத்துப் போய் விட்டது. ஒரு கட்டத்திருற்கு மேல் நான் உட்கார்ந்திருந்த நாற்காலியை வேக வேகமாக அசைத்தேன், பலகைகளில் தட்டி சப்தமெழுப்பினேன். அதை ஊஞ்சல் போல ஆட்டிஆட்டிப் பார்த்தேன் முடியவில்லை பிறகு அதை கைகளால் நோண்டி நோண்டி சிராய்புகளை பிய்த்து எடுக்கத் தொடங்கி விட்டேன்.ஆனால் இன்னும் அந்த டிக் டிக் சத்தம் அடக் கடவுளே தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது அதுவும் முன்பை விட வேகமாக. ஆனால் அந்த மனிதர்கள் அதைப்பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் மிகவும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டேயிருந்தார்கள்.
அவர்களுக்கு உண்மையிலேயே எதுவுமே கேட்கவில்லையா ? அடக் கடவுளே ! எல்லாம் எனக்குத் தெரியும் அப்படியெல்லாம் கேட்காமல் ஒன்றும் இல்லை. அவர்களுக்கு எல்லாம் தெரியும் , என்னை சந்தேகப்படுகிறார்கள். ஆனால் நடிக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் என்னைப் பித்தாக்கி அவர்கள் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள். ஆம் அப்படித்தான் நினைத்தேன். இப்போதும் அப்படித்தான் நினைக்கிறேன்.
ஆனால் எவ்வளவு நேரம் தான் இந்த வேதனையைத் தாங்குவது! ஏதாவது செய்தாக வேண்டும் நான். ஆம் இந்த ஏளனத்தை தாங்குவதை விட ஏதாவது செய்து விடுவது மேலானது! எவ்வளவு நேரம் தான் இவர்களின் தந்திரமான சிரிப்பை பொறுத்துக்கொள்வது? எவ்வளவு நேரம் இவர்களது நடிப்பை பொறுத்துக்கொள்வது ?இதற்குமேல் என்னால் முடியாது. ஆம் உடனே நான் சத்தம் போட்டுக் கத்தவேண்டும்அல்லது செத்துவிடவேண்டும். ஆம் அய்யோ இப்போது இன்னும் அந்தச் சத்தம்அதிகரிக்கிறதே. அதிகம் அதிகம் ! அதிகம் ! உச்சம் ! உச்சம் ! அய்யோ ! தாங்க முடியவில்லை நான் வாய் விட்டுக் கத்திவிட்டேன். “
‘’ எதிரிகளே போதும் போதும் உங்கள் நடிப்பு . இனியும் நடிக்க வேண்டாம். எல்லாவற்றையும் நான் ஒத்துக்கொள்கிறேன். ஆமாம் இதைச்செய்தது நான் தான். மேலேயிருக்கும்அந்தப் பலகைகளை ஒவ்வொனறாக கீழிறிக்குங்கள். ஆம் , உடனே அதை நார் நாராக கிழித்துப்போடுங்கள். அங்கிருந்து தான் இந்த சத்தம் வந்து கொண்டிருக்கிறது. உண்மை அங்கே மறைந்துகிடக்கும் அவனது இதயத்தின் துடிப்போசை தான் இது. “என்று சொன்னேன்.
எட்கர்ம் ஆலன் போ ( 19.01.1809 -07.10.1849 )
எட்கர் ஆலன் போமிகவும் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் கவிஞர்,தொகுப்பாளர் மற்றும் இலக்கிய விமர்சகர் ஆவார். அமெரிக்க இலக்கியத்தின் நவீன வடிவத்தை கட்டமைத்த முன்னோடிகளில் ஒருவர். புதுமை விரும்பி. உலகின் முதல்துப்பறியும் கதை, திகில்கதை , குற்றப்புனைவு , அங்கதம் . நகைசுவை இவைஎல்லாமே போவின் எழுத்துக்களுடன் தான் ஆரம்பிக்கிறது என்று அமெரிக்காவில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு . முதன் முதலாக எழுத்தை மட்டுமே தொழிலாக கொண்டு முழுநேர இலக்கியவாதியாகத் வாழ்ந்தவர் போ மட்டுமே. மொத்தமே நாற்பது ஆண்டுகள் தான் உயிர்வாழ்ந்த அவரின் எழுத்துக்கள் காலம் கடந்து நிற்பவை. அவருடைய படைப்புகளைப் போலவே அவருடைய வாழ்க்கையும் மிகவும் புதிரானது. குறிப்பாகவர் ஜீனியாகி ளெம் உடனான அவருடைய திருமணம் மிகவும் புதிர்தன்மை கொண்டது. இலக்கிய உலகில் மட்டுமில்லாமல் அண்டவியல் ,மறைமொழி போன்ற துறைகளிலும் அவரது எழுத்துக்களின் தாக்கம் அதிகமாக இன்று உணரப்படுகிறது. போவின் படைப்புகள் எண்ணற்ற புத்தகங்கள், திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் இசைத்தொகுப்புகள் என்று வந்துள்ளன. திரேவன், திபிளாக், கேட்திடெல்டேல்கார்ட் , திகேஸ்க் ஆப் அமோன்டிலாடா, திபால் ஆவ் தஹவுஸ் ஆவ் அஷர் ஆகியவை அவரது சிறந்த படைப்புகளாகும்.
மொழியாக்கம் : தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
, மிக்க நன்றி தோழர்