பிரதமர் நரேந்திரமோடி தனக்கு மிகவும் பிடித்தமான “இரட்டை என்ஜின் வளர்ச்சி” (“double engine growth”) என்னும் சொற்றொடரை மீண்டும் ஒருமுறை பயன்படுத்தி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல்நாட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டபோதே, இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். இதன்மூலம் அவர் கூறவிரும்புவது என்ன என்பது மிகவும் தெளிவாகும். இது மதவெறி மற்றும் சாதிவெறி என்னும் நச்சுக் கலவையே தவிர வேறெதுவும் இல்லை.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதையடுத்து, மோடி-ஆதித்யநாத் தலைமையின்கீழ் பாஜக இவ்வாறு மதவெறி-சாதிவெறி நச்சுக் கலவை என்னும் இரட்டை என்ஜினை இயக்கத் தொடங்கி இருக்கிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் பின்னணியில் நரேந்திர மோடியின் பேச்சு பார்க்கப்பட வேண்டும். இப்போது அவர் பேசும்போதும் இங்கே ஐந்தாண்டுகளுக்கு முன் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர பயந்துகொண்டிருந்த நிலைமை இருந்ததாகக் கூறுவதற்குத் தவறவில்லை. இவ்வாறு பயப்படும் சூழ்நிலை இருந்ததால் பலர் தங்கள் மூதாதையர்களின் வீடுகளிலிருந்து ஓடிவிட்டார்கள் என்று பேசினார். பாஜக எம்பி, ஹூக்கும் சிங், 2016இல் சாம்லி மாவட்டத்தில் முஸ்லீம் கிரிமினல்களுக்குப் பயந்து நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஓடி விட்டார்கள் என்று கூறிய பொய்யை எதிரொலிக்கும் விதத்திலேயே மேற்படி பேச்சு அமைந்திருந்தது.
மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடித்த மகேந்திர பிரதாப் சிங்
மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகம் அமைக்கப்படுவது “ஜாட் சிரோமணி”க்கு அளிக்கப்படும் பாராட்டு என்ற விதத்திலும் இந்நிகழ்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் புகழ்மாலைகள் சூட்டப்பட்டன. மகேந்திர பிரதாப் சிங் ஒரு புரட்சியாளர்தான். அவர், இதர முஜாஹிதீன்களுடன் சேர்ந்து, 1915இல் ஆப்கானிஸ்தானில் காபூலில் இந்தியாவிற்கான தற்காலிக அரசாங்கத்தை (provisional government) அமைத்தார். அவர் அதன் தலைவரகவும், மௌல்வி பரகத்துல்லா அதன் பிரதமராகவும் இருந்தார்கள். அவருடைய சோசலிச மற்றும் மதச்சார்பின்மை கண்ணோட்டம் இவர்களுடைய மதவெறி மற்றும் சாதி வெறி அடையாளங்களுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல. ஆனாலும் பாஜக-வானது ஜாட் இனத்தாரின் மத்தியில் நல்லெண்ணத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக, அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் இவ்வாறு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
முற்றிலும் பொய்
ஆதித்யநாத், வழக்கம்போல இப்போதும் தன் மதவெறி நஞ்சை கக்கி இருக்கிறார். ஒருசில நாட்களுக்கு முன்பு அலிகார் அருகே, குஷிநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரைநிகழ்த்தும்போது, இப்போது அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதாகவும், ஆனால் “2017க்குமுன் ‘அப்பா ஜான்’ (‘abba jaan’) என்று என்று அழைக்கப்படும் முஸ்லீம்களுக்கு மட்டுமே கிடைத்து வந்ததாகவும்” பேசினார். இவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிராக மிகவும் குரூரமான விதத்தில் விஷத்தைக் கக்கினார். இது முற்றிலும் பொய்யான கூற்று. உத்தரப்பிரதேசத்தின் தரவுகள் அனைத்துமே எந்த அளவுக்கு முஸ்லீம்கள், அத்தியாவசியப் பணிகள் அனைத்திலும் மிகவும் மோசமான முறையில் உரிமைகள் பறிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.
இவ்வாறு இவர்கள் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்திடவும், இழிவானவர்களாகக் காட்டவும் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் அதே சமயத்தில், உத்தரப்பிரதேச மாநில அரசாங்கமும், ஒன்றிய அரசாங்கமும் தாங்கள் அனைவருக்குமான வளர்ச்சித் திட்டங்களை (“சப்கா விகாஷ்”) மேற்கொண்டு வருகிறோம் என்றும், அரசாங்கத்தின் நலத் திட்டங்களின் காரணமாக அனைத்துத்தரப்பு மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள் என்றும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய அணுகுமுறையுடன் பாஜக தலைமையிலான அரசாங்கங்கள் அரசின் திட்டங்களை பிரதமரின் பெயரிலும் கட்சியின் பெயரிலும் தமதாக்கிக்கொள்ள முயல்கின்றன. நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக, பாஜக, மோடியின் படத்துடன் 14 கோடி ரேஷன் பைகள் விநியோகிக்கத் தீர்மானித்திருக்கிறது. உணவு தான்யங்களை அளிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைத் தங்கள் கட்சியின் தலைவரைத் துதிபாடுவதுடன் இணைத்திருக்கிறது. பாஜக-வின் நிலப்பிரபுத்துவ சிந்தனை காரணமாக இந்திய மக்கள் அரசாங்கம் அளித்திடும் இனாம்களைப் பெறுபவர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்களே தவிர, அவர்கள் அனைவரும் சம உரிமைகளுடன் நடத்தப்பட வேண்டிய குடிமக்கள் என்று கருதி அவ்வாறு நடத்தப்படுவதில்லை.
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
(தமிழில்: ச.வீரமணி)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.