இந்திய நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியையும், தேசியவாதத்தின் மீதான அதன் ஆர்வத்தையும் புகழ்பெற்ற கல்வியாளர் யோகேந்திர சிங் விளக்குகிறார்.
உலகெங்கிலும் உள்ள சமூகவியல் துறைகளின் உலகளாவிய தர வரிசையில் சமீபத்தில் 51 ஆவது இடத்தைப் பிடித்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அமைப்புக்கான ஆய்வு மையத்தை வடிவமைத்த சிற்பி 84 வயதான பிரபல சமூகவியலாளர் யோகேந்திர சிங்.
ஸ்க்ரால் உடனான இந்த நேர்காணலில், ஜே.என்.யுவின் பேராசிரியர் எமரிட்டஸ் சமூக அமைப்புகளுக்கான ஆய்வு மையத்தின் ஆசிரியர் இந்தியாவை நுட்பமாக ஆய்வு செய்யும் பிரதிநிதியாக ஏன் இருக்க வேண்டும் என்று விளக்குவதுடன் இந்திய நடுத்தர வர்க்கத்தின் எழுச்சி, தேசியவாதத்தின் மீதான அவர்களின் ஆர்வம், அவர்களின் கவலைகள் மற்றும் பாரதிய ஜனதா மீதான அவர்கள் ஈர்ப்பின் பின்னணியில் உள்ள உளவியல் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறார்.
பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடுத்தர வர்க்கம் கொண்டுள்ள ஈர்ப்பின் சமூக, கலாச்சார அடிப்படை என்ன?
பாஜக போன்றவர்களின் சித்தாந்த எழுச்சிக்கு இந்தியா கடந்து வந்த தேசியவாத, முதலாளித்துவ மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த சமூக மாற்றமும் ஒரு முக்கிய காரணம். இந்த சித்தாந்தம் நம்பிக்கையையும், இலட்சியதிற்கான உயிர்ப்பையும் ஊக்குவிக்கிறது.
மாற்றத்தைத் தொடங்குவதில் முன்னோடியாக தொடக்கமாக இருந்த பிற அரசியல் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் எத்தனையோ காரணங்களுக்காக பின்னடைவைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியபோது நிலவிய சமூக–பொருளாதார நிலைமைகளின் காரணமாக அதன் நோக்கம் வறுமையை அகற்றுவதாக மட்டுமே இருந்தது. அந்தக் கருத்தியல் இன்னும் மறைந்துவிடவில்லை, ஆனால் அது முன்வைக்கும் தாக்கங்கள் இப்போது குறைவாக உள்ளது.
வறுமையை நீக்குவதற்கான கருத்தியலில் தற்போது தாக்கம் குறைந்து வருவது எதைக் காட்டுகிறது?
இந்தியாவில் நிலவும் சமூக இயக்கம்தான் இதற்குக் காரணமாக உள்ளது. ஒரு காலத்தில் ஏழைகளாக இருந்த ஏராளமான மக்கள் இன்று குறைந்தபட்சம் நல்ல வேலைக்காவது செல்ல முடியும். கிராமங்களைப் பற்றிய எனது ஆய்வில், மக்கள் தங்கள் நிலைமைகளை மேம்படுத்திக்கொள்ள விவசாயப் பொருள் உற்பத்திக் கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகளை மேற்கொள்வதைக் கண்டேன். ஆனால் அதைச் சந்தைப்படுத்துவதற்கான ஆதரவையும், தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதால் அவர்கள் நகரங்களுக்குச் செல்கிறார்கள்.
நடுத்தர வர்க்கத்தின் நகரங்களை நோக்கிய இந்தப் புலம்பெயர்தல் அதிகப்படியான தேடலையும், நுகர்வையும் நோக்கி நகர வழிவகுத்தது. ஆக நடுத்தர வர்க்கத்தின் எழுச்சி என்பது இந்தியாவில் சமூக இயக்கம் மற்றும் வர்க்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது ஏழைகளாக இருந்தவர்கள் இப்போது கீழ் நடுத்தர வர்க்கத்தினராக மாறியுள்ளனர். ஆனாலும் இந்தக் காரணங்கள் அனைத்தும் சேர்ந்து வறுமை ஒழிப்பு திட்டங்களை முன்னெடுக்கிற மக்களாக அவர்களை வளர்த்தெடுக்கவில்லை. மாறாக அரசியல் கட்சிகளிடமிருந்து அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டங்களை அறிய விரும்புகிறர்வளாக மட்டுமே மாறியுள்ளனர்.
இதில்தான் பாஜகவுக்கு ஒரு நன்மை கிடைத்தது. அதாவது வறுமையை நீக்குவதற்கான எந்தத் திட்டங்களோடும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. மாறாக அதன் உலகளாவிய பார்வை என்பது நேருவின் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்குக்கான சிந்தனைகளில் இருந்த புனைவியக்கத்தை இழந்ததாகத் தெரிகிறது.
ஆக இந்திய அரசு வறுமையை நீக்குவதற்கான கருத்தியலில் இருந்து மாறுபட்டு நிற்பது நடுத்தர வர்க்கத்தின் விரிவாக்கம் மற்றும் அதில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாகவா?
ஆம், இரண்டு தொடர்புடைய காரணிகளால் இந்த மாற்றம் நிகழ்ந்தது. ஒன்று நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியால் இயல்பில் உலகளவில் சில முக்கியமான அம்சங்களைப் பகிர்ந்து கொள்கிறது. அடுத்து நடுத்தர வர்க்கத்தின் ஒரு முக்கிய பண்பாக அது தேசியவாதத்தை கொண்டாடுகிறது. ஒரு பிரெஞ்சு எழுத்தாளரிடம் “பிரான்ஸை தேசமாக்கியது எது?” என்ற கேள்வி ஒருமுறை முன்வைக்கப்பட்டபோது “பிரெஞ்சு கல்வி முறை, பிரெஞ்சு இராணுவம் மற்றும் பிரெஞ்சு நடுத்தர வர்க்கங்கள் என மூன்று காரணிகளை அவர் பட்டியலிட்டார். ஆம் தேசியத்தின் கருத்தை உருவாக்குவதில் நடுத்தர வர்க்கம் எப்போதும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தியாவிலும் நடுத்தரவர்க்கம் அப்படித்தான். உதாரணமாக, பசுமைப் புரட்சியின் காரணமாக விவசாயத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றியபோது, அவை கிராமப்புற நடுத்தர வர்க்கத்தை உருவாக்கிய விவசாயிகளிடையே புதிய தொழில்நுட்ப உணர்வை ஏற்படுத்தியது. இது சந்தையின் தேவைகளையும், புதுமைகளுக்கான தேவையையும் அவர்களுக்கு உணர்த்துவாக இருந்தது. அதன் மூலம் அவர்கள் ஓரளவிற்கு வெற்றியடைந்திருந்தாலும் பெரும்பாலும் விரக்தியே அடைந்தனர்.
அவர்களின் விரக்திக்கான காரணங்கள் என்ன?
அவர்கள் அறிமுகப்படுத்த விரும்பிய புதுமைகள் வெற்றிபெறவில்லை காரணம் அதற்கேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லை. இதுவே அவர்கள் விரக்திக்கு காரணம். உதாரணமாக, போதுமான மின்சார வசதியின்மையால் அவர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குளிர் சேமிப்பு வசதிகள் இல்லாமல் போனது.
இது கிராமப்புற நடுத்தர வர்க்கத்திடம் தங்கள் வாழ்விடத்தை விட்டு அதாவது தங்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. இதன் விளைவாக அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய நகரங்கள், பெரிய நகரங்களுக்கு அதிக அளவில் குடிபெயர்ந்தனர்.
பிறகு புலம்பெயர்ந்த அந்த கிராமப்புற நடுத்தர வர்க்கம் தொழில் முனைவோருக்கான தங்கள் திறன்களை நகர்ப்புற இந்தியா என்ற அந்தப் புதிய வாழ்விடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தவும், மாற்றியமைக்கவும் முயன்றனர். சந்தை இணைப்புகள் இல்லாமல் பொருளாதார ரீதியாக வளர மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும். எனவே சந்தையுடன் இணைவதில் உள்ள பலவீனம் காரணமாகவே கிராமங்களில் இருந்து வெளியேறிய அவர்கள் நகரத்திற்குப் புலம்பெயர்ந்தபின் நேரடியாக சந்தையுடன் இணைக்கப்பட்டனர்.
உலகளாவிய அளவில் தகவல் மற்றும் தொழில்நுட்ப புரட்சி நிகழ்ந்தபோது, இந்திய சந்தையும் முன்பை விட ஒருங்கிணைந்ததாக மாறியது. இது இந்தியாவில் தொழில் முனைகிற நடுத்தர வர்க்கத்தின் எழுச்சிக்கு மிகவும் உதவியது.
ஆக, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தோடு இணைந்தவுடன் அங்கே உள்ள நடுத்தர வர்க்கத்திடம் ஏற்கனவே நங்கூரமிட்டு அமர்ந்திருக்கும் ‘பாஜக‘வால் இவர்களும் ஈர்க்கப்பட்டனரா?
ஆரம்பத்தில் இருந்தே, பாஜக விவசாயிகளுக்கு ஆதரவானதாக இல்லை. அது எப்போதும் கருத்தியல் ரீதியாக ஒரு நடுத்தர வர்க்கக் கட்சியாகவே இருந்து வருகிறது. அதன் அடிப்படை இந்துத்துவ இறையியல் பாடசாலைகள், அதில் பயிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தேசியவாத சித்தாந்தத்தை நோக்கி வழிநடத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் சித்தாந்தம் இந்தியாவிற்குள் மட்டுமல்லாதது உலகெங்கிலும் வாழும் இந்தியர்களை நோக்கிச் செயல்படுவதாகவும் இருக்கிறது. அவர்களின் முழக்கம் என்னவென்றால், இந்தியாவின் பெருமை குன்றிவிட்டதால் அதன் பழம்பெருமையை மீண்டும் பெற மீண்டும் வலிமையானதாக மாற வேண்டும். இது ஒரு கட்டுக்கதை. மேலும் அவர்களின் சித்தாந்தம் மதவாதத்துடன் இணைக்கப்பட்டுச் செயல்படுகிறது.
அது ஒரு பெரிய வேண்டுகோளை இலக்காகக் கொண்டுள்ளது. முன்னர் சிறிய நகரங்களில் உள்ள இளைஞர் குழுக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதன் சித்தாந்தம் பின்னர் கிராமங்களுக்கும் குடிபெயர்ந்தது. உண்மையில், பாஜகவின் எழுச்சி அதிக நடுத்தர வர்க்கங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. மேலும் அதற்கு மாறாக வகுப்புகள் வாரியாக பாஜகவின் சித்தாந்தம் பகிர்ந்து கொள்ளப் படுவதால், அது கட்சிக்கு அரசியல் ரீதியாகவும் உதவுகிறது. அதன்படி அதன் வளர்ச்சி புதிய நடுத்தர வர்க்கத்தின் தோற்றம் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் எழுச்சிக்கு முன்னதாக வறுமை எதிர்ப்பு சித்தாந்தமே அரசியலின் அடிப்படையாக இருந்தது.
இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இன்றளவும் ஏழைகளாகவே இருக்கும்போது வறுமைக்கு எதிரான கருத்தியல் முறையீடுகள் ஏன் வலிமை இழந்துள்ளது?
அவர்கள் ஏழைகள்தான், ஆனால் அவர்களது சுய பிம்பம் ஏழையாக இருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அல்ல. “என்ன வறுமை?”, “என் இலக்குகளை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளால் நான் என் வறுமையை வெல்வேன்” என்று கூறுகிறார்கள். அது இப்போது நிலவும் ஒரு மிகப்பெரிய கருத்தியல் பார்வையாகும். அதனால்தான் அவர்களை ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்கள் என முறையிடும் கட்சிகள் அனைத்தும் அவர்களிடம் பெரிய அதிர்வுகளையம், தாக்கங்களையும் கொண்டிருப்பதில்லை.
பொருளாதாரத்தின் மீதான இந்த பாஜக அரசின் கட்டுப்பாடும் படிப்படியாக பலவீனமடைந்துள்ளது. அதோடு பெருநிறுவனங்களும் முன்பைவிட இப்போது அதிகப்படியாக சந்தையைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் பொருளாதார அடிப்படையிலான செயலாக்கத் திட்டத்தை பெரியளவில் மட்டுமல்லாது உலகளாவிய அளவில் ஊக்குவிப்பதற்கான மூலதனமும் இந்த அரசிடம் இல்லை.
போதுமான உட்கட்டமைப்பு வசதியை அடைந்துவிட்டால் பொருளாதார ரீதியாக தாங்கள் வளரக்கூடும் என்ற நம்பிக்கை மக்களுக்குள் நிலவுகிறதா?
ஆம் , உண்மையில், நான் 1971 இல் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள சாரு கெரா என்ற கிராமத்தைப் பற்றி நான் ஆய்வு செய்தபோது , அங்கிருந்த பெரும்பாலான மக்கள் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்றே எதிர்பார்ப்பதைத் தெரிந்து கொண்டேன். அரசாங்கம் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் பல யோசனைகள் இருந்தன. ஆனால் 2007 இல் அதே சாரு கெரா கிராம மக்களை நான் பேட்டி கண்டபோது, இதை நான் கண்டுபிடிக்கவில்லை. உதாரணமாக, நல்ல தார்ச் சாலைகள் அமைத்து 24 மணி நேர மின்சாரத்தை வழங்குவதன் மூலம் அவர்கள் வெளி உலகத்துடனும் , சந்தையுடனும் இணைக்கப்படலாம் என்பதால் அரசாங்கம் தங்களுக்கான நல்ல வாழ்விடத்தை உருவாக்க வேண்டும் என்று மட்டுமே அவர்கள் விரும்பினர்.
இந்தப் பார்வை அனைத்து சாதிகளிடத்தும் வெளிப்பட்டதா?
ஆம், ஏழ்மையிலும் ஏழ்மையானவர்களான தலித்துகள் கூட இதே கோரிக்கையை முன்வைத்தனர்.
ஆனால் ஏன் நடுத்தர வர்க்கத்தினரிடையே மட்டும் மதவாதம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது?
பாஜகவின் எழுச்சி என்பது இந்திய சமுதாயத்தில் பொதிந்துள்ள மதவாதங்களின் அதிகரிப்பாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஐரோப்பிய அல்லது அமெரிக்க சமூகங்களைப் போலல்லாமல், மதம் இந்தியாவில் ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. இங்கே அது வழிபாடு சார்ந்ததாக மட்டும் இல்லை. ஆக பாஜகவின் வளர்ச்சி இந்து மத வழிபாட்டைச் சுற்றி அல்ல, மாறாக இந்து மதத்தின் சித்தாந்தத்தைச் சுற்றியே உள்ளது. (சிரிக்கிறார்) மேலும் பாஜக இந்துத்துவத்தை தேசியவாதத்திற்கு சமம் என்று வரையறுக்கிறது. அதன் தலைவர்களுக்கு அது மிகவும் எளிது. (மீண்டும் சிரிக்கிறார்)
இந்துத்துவத்தின் வழிபாட்டையும், சித்தாந்தத்தையும் நாம் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கலாம்?
இந்து மத வழிபாடு என்பதில் சடங்குகள், கோயில்கள், புனித இடங்கள் போன்ற மத ரீதியான கட்டமைப்புகள் மற்றும் மதச்சார்பற்ற தன்மைக்கும், புனிதமானவற்றுக்கும் இடையில் ஒரு தனி நபர் எவ்வாறு “பயணம் செய்கிறார்” போன்ற நடைமுறைகள் என அனைத்தும் அடங்கும். இருப்பினும், ஐரோப்பாவைப் போலல்லாமல், இந்தியாவில் மதச்சார்பின்மை என்பதிலே மத ரீதியான கூறுகள் இருந்தாலும் அவை முதன்மையான தன்மையைக் கொண்டிருப்பதில்லை. மத ரீதியான சடங்குகள் முழுமையாக இல்லாததை இது அர்த்தப்படுத்துவதில்லை. உதாரணமாக, இந்தியப் பொருளாதாரம் முற்றிலும் மதத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இல்லை, அதில் நிலவுகிற மத நடைமுறைகளுக்கு எதிராக யாரும் தலையிடுவதுமில்லை.
இதற்கு நேர்மாறாக, அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு அல்லது அதை விரிவுபடுத்துவதற்கு மதம் ஒரு ஊடகமாகப் பயன்படுத்தப்படும்போது மதத்தின் சித்தாந்தம் முடிவற்றதாகவும், வழிமுறையாகவும் மாறுகிறது.
மதத்தின் அடிப்படையிலான சித்தாந்தம் ஏன் நடுத்தர வர்க்கத்தை மட்டும் ஈர்க்கிறது?
கொல்கத்தாவில் நடத்தப்பட்ட சில கள ஆய்வுகள், பரீட்சை நேரத்திலும், வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படும் தருணங்களிலும், கோயில்களுக்குச் சென்று பூஜைகள் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றும் ஆனால் பிரச்சனைகள் இல்லாத இயல்பான தருணங்களில் அவர்களது ஆற்றாமை தணிந்து கோயில்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் குறைகிறது என்றும் கூறுகிறது. ஆக கவலையும், மதவாதமும் எப்போதும் இணைக்கப்பட்டுள்ளன என்றும் கவலைதான் மதவாத உணர்வின் அடிப்படை என்றும் அங்கே கள ஆய்வு செய்த மாணவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இன்றைய நடுத்தர வர்க்கத்திற்கு கவலைகள் பெரிதும் இல்லையா?
உண்மையில், இன்றைய நடுத்தர வர்க்கம்தான் அனைத்து வகுப்புகளிலும் மிகுந்த கவலைகளைக் சுமந்து கொண்டிருப்பதாக உள்ளது.
நடுத்தர வர்க்கத்தை நீங்கள் எவ்வாறு வரையறுக்கிறீர்கள் ?
தொடர்ந்து முயன்று கொண்டேயிருக்காவிட்டால் நடுத்தர வர்க்கத்தினரின் நிலை அவர்களின் பெற்றோர் மற்றும் சம நிலையினரை விட தாழ்வானதாகவே இருக்கும். இது அவர்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. எனவே, அவர்கள் அதற்கான தீர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள்.
நீங்கள் கூறுகிற அத்தகைய தீர்வு நடவடிக்கைக்கு ஒரு உதாரணம் தர முடியுமா?
தென்னிந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கல்வி என்பது பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு வாகனமாக மட்டுமே கருதப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. முன்பெல்லாம் உயர் சாதி பிள்ளைகள்தான் மனிதநேயம் சார்ந்த மற்றும் சமூக அறிவியல் சார்ந்த பாடங்களைப் படிப்பார்கள். ஆனால் ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் அந்தப் பாடங்களைப் படிக்கத் தொடங்கியபோது, உயர் சாதி மாணவர்கள் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியின் பக்கம் மாறினர். ஆனால் பின்னர் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் தொழில்நுட்பக் கல்வியைத் தேர்வு செய்யத் தொடங்கியபோது, பெரும்பாலான பிராமணர்களும் உயர் சாதியினரும் தங்கள் குழந்தைகளை அமெரிக்காவிற்கும், பிற நாடுகளுக்கும் மேற்கல்வி கற்க அனுப்பத் தொடங்கினர். அவர்கள்தான் இப்போது உலக சந்தையில் இருப்பவர்கள், இன்றைய மாற்றத்திற்கு நிதியுதவி அளிப்பவர்கள்.
மேற்சொன்ன இந்தக் கவலைகள் சமூகத்தின் பாதிப்புகளிலும் வெளிப்படுத்தப்படுகின்றனவா? இந்தக் கவலைகள் சமூக கட்டமைப்புகளை மாற்றியுள்ளனவா – உதாரணமாக குடும்ப அமைப்பு முறையை?
நிச்சயமாக, சிறிதளவான தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றத்தின் விளைவாக இந்தியாவில் உள்ள குடும்பங்கள் மெதுவாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது. வேலைகளுக்காக மக்கள் அவர்கள் சொந்த ஊரிலிருந்து அல்லது வளர்ந்த இடத்திலிருந்து வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருந்தது. அதனால் மன அழுத்தம் ஏற்பட்டது . எனவே கட்டமைப்பு ரீதியாகப் புலம்பெயர்ந்த தொழிலாளரும் அவரது குடும்பமும் பிரிக்கப்பட்டது. ஆனால் செயல்பாடு ரீதியாக பணம் அனுப்புதல், சடங்கு செய்தல் காரணமாக என அவர்கள் இணைக்கப்பட்டனர். மேலும் அதிமுக்கியமான காரணங்களுக்காக மட்டுமே அவர்கள் வீட்டிற்குச் செல்பவர்களாகவும், கருத்துகளை பரிமாறுபவர்களாகவும் மாறிப் போனார்கள்.
இந்த வகையான இணைப்பு இன்றும் தொடர்கிறது. ஆனால் வேலையின் அழுத்தம் , புதிய இடத்தின் ஈர்ப்பு ஆகியவற்றால் இது பலவீனமடைகிறது. மேலும் தகவல் தொலைத்தொடர்பு புரட்சி ஏற்பட்டுவிட்ட போதிலும், தொடர்பு கொள்ளும் திறன் காலப்போக்கில் பலவீனமடைகிறது. இது குடும்பத்திலிருந்து அவர்களை அந்நியப்படுத்துகிற சூழலை ஏற்படுத்துகிறது. ஆக வேலைக்காக வெளியூர் செல்லும் ஒவ்வொரு நபரிடமும் ஒரு வகை அந்நியப்படுதல் ஏற்படுகிறது. வேலையில்லாமல் இருக்கும் நபர்களிடம் மற்றொரு வகை அந்நியப்படுதல் நிகழ்கிறது. சமூகத்தில் ஏற்படுகிற இந்த வகையான பிழவுகளினால்தான் சீரற்ற குற்றங்களும், விரும்பத்தகாத வகையான அரசியல் அணிதிரட்டல்களும் நடைபெறுகிறது.
ஆனால் குடும்பம் இன்னும் இந்தியாவில் ஒரு முக்கியமான உறவாகவே உள்ளது. குடும்பம்தான் ஒரு மனிதனுக்கு நிதானத்தை அளிக்கிறது, சமூகப் பொறுப்பிலிருந்து விடுபடுவதிலிருந்து ஒரு நபரைத் தடுக்கும் உலகளாவிய கண்ணோட்டத்தை அளிக்கிறது.
ஆனால் நடுத்தர வர்க்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால் மாற்றம் மற்றும் நவீனத்துவம் ஆகியவையே அவர்களது வாழ்க்கை முறையில் முன்னிலை வகிக்கிறது. இருந்தும் ஏன் அது பழமைவாதங்களை ஆதரிக்கிறது. நடுத்தர வர்க்கம் ஒருவித மனக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கருதலாமா?
(மனதுக்குள் சிரிக்கிறார்) மிகுந்த பணக்காரர்களுக்கு இக்கட்டான காலகட்டங்களில் இருந்து மீள்வதற்கான ஆதாரங்கள் எப்போதுமே இருப்பதால் கவலை இல்லை. ஏழைகள் உயர்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதற்கு நேர்மாறாக, நடுத்தர வர்க்கத்தினர் தாங்களாகவே வகுத்துக் கொண்ட குறிக்கோள்களை அடைந்தவர்களாக உள்ளனர். ஆனால் இந்த இடம் எப்போது வேண்டுமானாலும் சரிவைத் தரக்கூடியதாக உள்ளது. ஒரு சிறு தோல்வியும் துவண்டுவிடக் கூடிய பாதிப்பைத் தரக் கூடியது. இத்தகைய ஆபத்துகள்தான் அவர்களிடத்தே குழப்பத்தையும், பதட்டத்தையம், தெளிவின்மையையும் உருவாக்குகிறது. அபாயங்களை ஏற்றவாறு கவலைகளும் அதிகமாக ஏற்படுகிறது. இது மனக் கோளாறு அல்ல….
பிளவுபட்ட சமூக உணர்வு கொண்ட ஒரு வர்க்க மக்களைப் போலவே நான் மனக்கோளாறு உள்ளவர்களையும் குறிப்பிடுகிறேன்.
இது உண்மையில் மிகப்பெரிய கவலைகளைக் கொண்டுள்ளது.
மதம் சார்ந்த பாஜகவின் சித்தாந்தம் நோக்கி அவர்களைக் கவர்ந்திழுக்க நடுத்தர வர்க்கத்தின் கவலை ஒரு முக்கிய காரணமா?
மிகவும் சரியே. நடுத்தர வர்க்கத்த்தின் கவலைகள்தான் பாஜகவின் சித்தாந்தம் நோக்கி அவர்களை ஈர்க்கிறது. நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.
ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஸ்ரீநகரில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினேன். பார்வையாளர்களில் இருந்து ஒரு மாணவர் என்னிடம் கேட்டார், “ஐயா, காஷ்மீருக்கு என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்தியாவிலிருந்து சுதந்திரம் பெறும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோமா? ” என்று.
நான் சொன்னேன், “இங்கே பாருங்கள், உலக வல்லரசுகளான சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து உங்களுக்கு ஆதரவளித்து, இந்தியா மீது அழுத்தத்தை அதிகரித்தால் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புண்டு. இல்லையெனில், உங்களுக்கான எந்த நம்பிக்கையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ”
எனவே மாணவர் என்னிடம், “ஏன் நம்பிக்கை இல்லை?” என்று கேட்டார்.
அதற்கு நான், “இந்தியாவில் நிகழும் ஒரு பெரிய மாற்றம் என்னவென்றால் இங்கே பெரியளவில் நடுத்தர வர்க்கம் விரிவடைகிறது. இன்னும் காலம் கடந்து செல்லச் செல்ல, அதிகமான இந்தியர்கள் நடுத்தர வர்க்கமாக மாறுவார்கள். உலகளாவிய ஆய்வுகள் பல இயற்கையில் நடுத்தர வர்க்கம்தான் பெரும்பாலும் தேசியவாத வர்க்கம் என்பதைக் காட்டுகிறது. அந்த தேசியவாதம் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டது ” என்று கூறினேன்.
இது ஏன் இப்படி இருக்கிறது ?
ஏனென்றால், எந்தவொரு தேசத்திலும் அந்த தேசத்தின் மாற்றத்திற்கு அல்லது வளர்ச்சிக்கு அதுவே பொறுப்பு என்று நடுத்தர வர்க்கம் கருதுகிறது. அந்த மாற்றத்தைச் சீர்குலைக்கும் அல்லது அச்சுறுத்தும் எந்தச் சக்தியையும் அது எதிர்க்கிறது. இந்த நடைமுறை எதார்த்தால் கவலை என்பது அதன் இயல்பான விளைவாகிறது. ஆனால் இந்தக் கவலை தேசத்தின் மாற்றத்தில் அதன் பங்கைப் பற்றி மேலும் அக்கறையை ஏற்படுத்துகிறது. அதனால் தேசியவாதத்தை மேலும் ஊக்குவிக்க அந்தக் கவலையே அவர்களைத் தூண்டுகிறது.
இந்தியாவில் சமூக மோதல்கள் அதிகரித்து வருகிறதா?
சமூக மோதலின் வெளிப்பாடு அதிகமாகிவிட்டது என்றே நினைக்கிறேன். சமூக மோதல் எப்போதும் இருக்கிறது. முன்பும் இருந்தது. அது இன்று போலவே தீங்கு விளைவிக்கும். ஆனால் இப்போது வேறுபட்டது என்னவென்றால், வெகுஜன ஊடகங்கள், மொபைல் போன்கள் மற்றும் இணையம் ஆகியவை சமூக மோதல்களின் இருப்பை மிகவும் தெளிவாக அனைவருக்கும் காட்டியுள்ளன.
உள்ளூர் மோதல்கள் இப்போது தேசியவாத அதிர்வுக்கு காரணமாகின்றனவா?
ஆம். இந்தியாவில் இனங்களுக்கிடையேயான மற்றும் பிராந்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் மிகவும் வலுவாக இல்லை. ஆனால் மதங்களுக்கு இடையிலான மோதல்கள் இருந்தன. ஏனென்றால் அதற்கு இவ்வளவு நீண்ட வரலாறு உண்டு.
வகுப்புவாத மோதல்கள் தற்போது வளர்ந்து வருவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
ஊடகங்களின் வெளிப்பாடு இப்போது மிக அதிகமாக இருப்பதால் அது அதிகரித்துள்ளது என்று நாங்கள் நினைக்கிறோம்.
இந்த தெரிவுநிலைக்கு சாதக, பாதகங்கள் உள்ளதாக நான் நினைக்கிறேன். இது நம்மை கவலையடையச் செய்கிறது, ஆனால் அவை ஏற்படுவதை உணரவும் செய்கின்றன.
ஆமாம் நீங்கள் கூறுவது சரி.
சாதிப் போட்டியும், மோதலும் வளர்ந்துள்ளதா?
அது மங்கிவிட்டது என்று நினைக்கிறேன். உங்கள் சாதியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வேலை பெற இப்போது நிறைய இடம் உள்ளது. அந்த இடம் தற்போது மேலும் விரிவடைகிறது. அது இறுதியில் சாதி இருந்தும் ஆனால் பெரிதும் அங்கீகரிக்கப்படாத ஒரு சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்றே கருதுகிறேன்.
மதம் பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள் ?
மதம் இருக்கும். ஆனால் அது இன்னும் குறிப்பிடத்தக்க அம்சங்களுக்கானதாக இருக்கும். அதேவேளையில் மத மோதல்கள் குறையும். மதமும் ,மதச்சார்பற்ற தன்மையும் பிரிக்கப்படும் இடம் விரிவடையப் போகிறது. அந்த இடம்தான் இந்தியாவுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் இந்தியாவை ஒருங்கிணைக்கும்.
ஒருங்கிணைந்த இந்தியாவின் இந்த யோசனை நீங்கள் புதிதாக உருவாக்கி இப்போது உலகில் 51 வது இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அமைப்புகளின் ஆய்வு மையத்தில் பிரதிபலிக்கிறதா?
எனது யோசனை என்னவென்றால், சி.எஸ்.எஸ்.எஸ் மற்ற மையங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதே. ஏனெனில் அது களப்பணி சார்ந்ததாக இருக்கும். களப்பணி சார்ந்த ஆசிரியர்களுக்கு வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்க வேண்டும். உதாரணமாக கேரளாவைப் பற்றிய ஆய்வு ஒரு அம்சம் என்றால், அதைப் படிக்கும் ஒரு கேரள மாணவர் மற்றொரு அம்சம். இடத்திற்கும், ஆய்வுக்கும் இடையில் ஒரு உண்மையான, கரிமத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற பார்வையில், நான் எல்லா பிராந்தியங்களிலிருந்தும், முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகள் போன்ற சமூகக் குழுக்களிலிருந்தும் ஆசிரியர்களை நியமித்தேன்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆசிரியப் பிரிவில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆட்சேர்ப்பில், நான் இந்த அம்சத்தை தீர்க்கமாகக் கட்டுப்படுத்தினேன். களப்பணி, அனுபவம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை இணைப்பதே எனது எண்ணமாக இருந்தது. அந்த வகையிலே எனது யோசனை நல்ல பலனைத் தந்தது என்றே நினைக்கிறேன்.