உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 9: பன்னிரண்டு சகோதரர்கள் (ஜெர்மனி தேசத்துக் கதை) – ச.சுப்பாராவ்

ஒரு ராஜா ராணிக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள். ராணி கர்ப்பமாக இருந்தாள். ஒரு நாள் ராஜா ராணியிடம், ”உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாக இருந்தால் நான் இந்த பன்னிரண்டு மகன்களையும் கொன்றுவிடுவேன். அப்போதுதான் என் மகளுக்கு எனது செல்வம் அத்தனையும் முழுமையாகக் கிடைக்கும்,” என்றார்.  அதற்காக பன்னிரண்டு சவப்பெட்டிகளும் செய்து வைத்தார்.  அவற்றை ஒரு அறையில் வைத்துப் பூட்டி, சாவியை ராணியிடம் தந்தார். இது பற்றி யாரிடமும் சொல்லாதே என்று எச்சரித்தார்.

ராணி சோகமாகவே இருப்பதை உணர்ந்த கடைசி மகனாக பெஞ்சமின்,    ” அன்பான அம்மா, நீங்கள் ஏன் சோகமாகவே இருக்கிறீர்கள்?” என்றான்.

”மகனே, அதை நான் சொல்ல முடியாது,”

ஆனால் பெஞ்சமின் பிடிவாதம் பிடித்ததால் அந்த அறையில் இருக்கும் சவப்பெட்டிகளைக் காட்டி,” உங்கள் அப்பா இதை உனக்காகவும், உன் அண்ணன்களுக்காகவும் செய்து வைத்திருக்கிறார் .உங்களுக்கு தங்கச்சிப் பாப்பா பிறந்தால் உங்களைக் கொன்று இவற்றில் வைத்து புதைத்து விடுவார்,” என்றாள்.

அம்மா அழுவதைப் பார்த்த பெஞ்சமின், ”அம்மா, கவலை வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,” என்றான்.

ராணி, ” மகனே, உன் அண்ணன்களோடு நீ ஊருக்கு வெளியே உள்ள காட்டிற்குச் சென்றுவிடு, அங்கு உள்ள உயரமான மரத்தின் உச்சியில் மாற்றி மாற்றி உட்கார்ந்து கோட்டையை கவனித்துக கொண்டே இருங்கள். தம்பி பிறந்தால் நான் வெள்ளைக் கொடி ஏற்றுவேன். நீங்கள் திரும்பி வரலாம். தங்கை என்றால் சிவப்புக் கொடி ஏற்றுவேன். நீங்கள் உடனே வேறெங்காவது தப்பிச் சென்றுவிட வேண்டும். கடவுள் உங்களைக் காப்பாற்றுவார். நான் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்வேன்,” என்றாள்.

அவர்களும் தாயை வணங்கி காடு சென்றனர். அங்கே இருந்த உயரமான ஓக் மரத்தின் உச்சியில் ஒருவர் மாற்றி ஒருவர் உட்கார்ந்து கோட்டையை கவனித்து வந்தனர். பதினோரு நாட்கள் கழிந்தன. பெஞ்சமினின் முறை வந்த்து. அவன் சிவப்புக் கொடி ஏற்றப்படுவதைப் பார்த்தான். 

சிவப்புக் கொடியைப் பார்த்து சகோதரர்கள் கோப்ப்பட்டார்கள். ”ஒரு பெண் குழந்தையால் நாம் சாக வேண்டுமா? இதற்குப் பழி வாங்க வேண்டும். நாம் முதலில் பார்க்கும் பெண்ணைக் கொல்வோம்,” என்றார்கள்.

பின்னர் காட்டிற்குள் வெகு தொலைவு சென்றார்கள். ஓரிடத்தில் ஒரு பாழடைந்த மாளிகை ஒன்று இருந்தது. ”நாம் இங்கே தங்குவோம். பெஞ்சமின் இங்கே தங்கி சமையல் செய்யட்டும். நாம் அனைவரும் உணவு தேடிக் கொண்டுவருவோம்,” என்றார் பெரிய அண்ணன்.

அவர்கள் முயல், மான், பறவைகள் போன்றவற்றை வேட்டையாடி வந்தார்கள். பெஞ்சமின் சமையல் செய்தான். இப்படியாக பத்தாண்டு காலம் கழிந்தது.

இச்சமயத்தில் அரசியின் மகள் வளர்ந்துவிட்டாள். அவள் எப்போதும் நெற்றியில் ஒரு தங்க நெற்றிச்சுட்டி அணிவாள். ஒருநாள் அரண்மனையில் ஓர் அறையில் பன்னிரண்டு ஆண்கள் சட்டை இருப்பதைப் பார்த்தாள். 

”இவை யாருடையவை? அப்பாவிற்கு இவை சின்னதாக இருக்குமே?” என்று தாயிடம் கேட்டாள்.

அம்மா சோகமாக, ”குழந்தாய், அவை உன் அண்ணன்களுடையவை,” என்றாள்.

”என் அண்ணன்கள் எங்கே? நான் கேள்விப்பட்டதே இல்லையே?”

”எங்கிருக்கிறார்களோ? கடவுளுக்குத்தான் தெரியும்,” என்ற அரசி பழைய கதைகள் அனைத்தையும் மகளிடம் சொன்னாள். பன்னிரண்டு சவப்பெட்டிகளையும் காட்டினாள்.

”அம்மா, அழாதே. நான் அண்ணன்களைக் கண்டுபிடிப்பேன்,” என்றாள் மகள். பன்னிரண்டு சட்டைகளை எடுத்துக் கொண்டு காட்டில் தேட ஆரம்பித்தாள். மாலைவேளையில் காட்டிற்குள் இருந்த மாளிகையை அடைந்தாள். அங்கே பெஞ்சமின் இருந்தான்.

அவளது அழகான உடையையும். நெற்றிச்சுட்டியையும் பார்த்து வியந்த அவன்,” நீ யார்? உனக்கு என்ன வேண்டும்” என்றான்.

அவள்,” நான் அரசரின் மகள். எனது பன்னிரண்டு அண்ணன்களைத் தேடி வந்தேன். அவர்களைக் கண்டுபிடிக்கும் வரை நான் ஓய மாட்டேன்,” என்றாள். பன்னிரண்டு சட்டைகளையும் அவனிடம் காட்டினாள்.

அவள் தங்கள் தங்கைதான் என்று உணர்ந்த பெஞ்சமின், ” நான் பெஞ்சமின். உன் கடைசி அண்ணன்,” என்றான்.

அவள் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டாள். பெஞ்சமினும் அவளோடு சேர்ந்து கண் கலங்கினான். அவர்கள் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டார்கள். பின்னர் பெஞ்சமி,” தங்கையே, ஒரு சிக்கல் இருக்கிறது. தாம் பார்க்கும் முதல் பெண்ணைப்  கொன்று போடுவதாக நம் அண்ணன்கள் சபதம் போட்டிருக்கிறார்கள்,” என்றான்.

”அண்ணன்கள் கையால் நான் மகிழ்ச்சியாக உயிர் விடுவேன்.”

”இல்லை. இந்த கூடையில் ஒளிந்து கொள். நான் அவர்கள் மனதை மாற்றிய பிறகு வெளியே வா,” என்று அவளை ஒரு கூடையில் மறைத்து வைத்தான்.

இரவு அண்ணன்கள் வேட்டையிலிருந்து திரும்பினார்கள். சாப்பிட உட்கார்ந்த போது தம்பியிடம்,” இன்று என்ன விசேஷ செய்தி?” என்றார்கள்.

”நான் வீட்டிலேயே இருப்பவன். அனாலும் உங்களை விட எனக்கு நிறைய தெரியும்,” என்றான் பெஞ்சமின்.

”அதைச் சொல்,”

”நாம் பார்க்கும் முதல் பெண்ணை கொல்ல மாட்டோம் என்று சத்தியம் செய்யுங்கள். சொல்கிறேன்.”

”சரி, சத்தியம் செய்கிறோம். நீ விஷயத்தைச் சொல்,” என்றார்கள் அவர்கள்.

”நம் தங்கை இங்கேதான் இருக்கிறாள்,” என்ற கூடையைத் தூக்கி வந்து திறந்தான். பட்டாடையோடு, நெற்றிச்சுட்டியோடு தங்கை வெளியே வந்தாள். அவள் மிக அழகாக இருந்ததால், அண்ணன்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

பின்னர் அவள் அங்கேயே தங்கி, வீட்டு வேலைகளில் பெஞ்சமினுக்கு உதவினாள். வீட்டை சுத்தமாக,அழகாக வைத்திருக்க உதவினாள்.

ஒரு நாள் இருவரும் சமையல் செய்து கொண்டிருந்த போது, அண்ணன்கள் வேட்டையிலிருந்த திரும்பினார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வீட்டின் பின்புறம் ஒரு தோட்டம் இருந்தது. அதில் பன்னிரண்டு லில்லி மலர்கள் இருந்தன. தங்கை தன் அண்ணன்களுக்குத் தரலாம் என்று ஆசையாக அந்த லில்லி மலர்களைப் பறித்தவுடன், அண்ணன்கள் அனைவரும் அண்டங்காக்கைகளாக மாறிவிட்டார்கள். எங்கோ பறந்து போய்விட்டார்கள். மாளிகையும், தோட்டமும் மறைந்தன. இளவரசி காட்டில் தனியாக நின்றுகொண்டிருக்கும் போது ஒரு கிழவி தன்னருகே நிற்பதைப் பார்த்தாள்.

”குழந்தாய், அந்த மலர்களை ஏன் பறித்தாய்? அவை மந்திர மலர்கள். நீ பறித்ததால் அவர்கள் அண்டங்காக்கைகளாக மாறிவிட்டார்கள்,” என்றாள்.

”இதற்கு என்ன செய்வது?” என்றாள் இளவரசி

”இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது மிகக் கடினமானது. நீ ஏழாண்டுகள் மௌன விரதம் இருக்கவேண்டும். பேசக்கூடாது. சிரிக்க்க் கூடாது. ஏழாவதாண்டின் கடைசி நேரத்தில் இப்படிச் செய்தாலும் கூட, எல்லாம் வீணாகிவிடும். உன் சகோதரர்கள் இறந்து விடுவார்கள்,” என்றாள் கிழவி.

நான் மௌன விரதம் இருக்கிறேன் என்று உறுதி செய்து கொண்டு இளவரசி ஒரு உயர்ந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து மௌன விரதத்தை ஆரம்பித்தாள். 

ஒருநாள் ஒரு அரசன் வேட்டைக்காக காட்டிற்குள் வர அவனது வேட்டை நாய் அந்த மரத்தின் கீழே நின்று குரைத்தது. நாய் ஏன் குரைக்கிறது என்று மேலே பார்த்த அரசன் இளவரசியைக் கண்டான். தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினான். அவள் பதில் சொல்லாமல் தலையசைத்தாள். அரசன் தன் அரண்மனைக்கு அவளை அழைத்துச் சென்று மணந்து கொண்டான். மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தாலும். இளவரசி ஒரு வார்த்தை பேசவோ, சிரிக்கவோ மாட்டாள். இப்படி சில ஆண்டுகள் சென்றன.

அரசனின் தாயார் கொடுமைக்காரி. அவள் தன் மகனிடம், ”இவள் யார் என்ன என்றே தெரியவில்லை. என்ன திட்டத்தோடு வந்திருக்கிறாளோ? பேசாவிட்டாலும் பரவாயில்லை. சிரிக்கக் கூட முடியாதோ? குற்றமுள்ள மனதுடையவர்கள்தான் சிரிக்க மாட்டார்கள்,” என்று தூபம் போட்டாள். 

அரசன் முதலில் தாய் சொன்னதை நம்பவில்லை. ஆனால் தாய் திரும்பத் திரும்ப சொன்னதும் மனைவிக்கு மரண தண்டனை விதித்து விட்டான். அவளை உயிரோடு எரிப்பதற்காக அரண்மனை முற்றத்தில் தீ மூட்டப் பட்டது. அரசன் கண்ணீரோடு மரண தண்டனை நிறைவேறப் போவதைப் பார்க்க மாடத்தில் நின்றான். நெருப்பிற்கு நடுவே நின்ற தூணில் அவள் கட்டப்பட்ட போது, ஏழாவதாண்டின் கடைசி நிமிடம் முடிந்துவிட்டது.

காற்றில் ஏதோ சலசலப்பு. பன்னிரண்டு அண்டங்காக்கைகள் பறந்துவந்தன. பூமியைத் தொட்டதும் அவை அழகான வாலிபர்களாக மாறின. பன்னிரண்டு சகோதரர்களும் தீயை அணைத்தார்கள். தன் தங்கையை விடுவித்து, அவளை அணைத்து, முத்தமிட்டு, கண்ணீர் வடித்தார்கள். இப்போது அவள் பேசலாம் என்பதால் அவள் அனைத்தையும் அரசனிடம் கூறினாள். அவளது தியாகத்தை உணர்ந்த அரசன் மகிழ்ச்சி அடைந்தான். எல்லோரும் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.

ச.சுப்பாராவ்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/ilam-kudumbaththalaivi-series/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-youngest-girl-and-the-monster-a-scottish-tale/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-american-children-stories/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-7-red-white-black-narmandi-story-s-subba-rao-in-tamil/