ஒருவர் “நாள்தோறும் இத்தனை முறை அடித்து இத்தனை அடி நடந்து, இத்தனை தடவை மூச்சுவிட்டு, இவ்வளவு வேலை செய்து, சராசரி ஐம்பது ஆண்டு வாழ முடியும் எனலாம். நாள்தோறும் இன்னும் இத்தனை முறை கூடுதலாய் அடித்து, இன்னும் இத்தனை அடி கூடுதலாய் நடந்து, இன்னும் இத்தனை தடவை கூடுதலாய் மூச்சுவிட்டு, மொத்தத்தில் தமது வாழ்வில் கால்பகுதிக்கு ஈடானதைக் கூடுதலாய்ச் செலவிட வேண்டியதாகிறது. இந்த முயற்சிக்கு அவர் ஈடு கொடுக்கிறார். இதன் விளைவாக, குறிப்பிட்ட காலத்தில் கால் பங்கு கூடுதலாய் வேலை செய்து, 50க்குப் பதில் 37 வயதிலேயே இறந்து போகிறார்”
19-ம் நூற்றாண்டில், தொழில்புரட்சிக்குப் பிந்தைய இங்கிலாந்தில் மிகைவேலை காரணமாக இயல்பான வாழ்நாளை வாழ்ந்து முடிப்பதற்கு முன்னமே இறந்து போகும் தொழிலாளர்கள் பற்றி சித்தரிக்க டாக்டர் ரிச்சர்ட்சன் என்பவர் எழுதியதை கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் மேற்கோள் காட்டுகிறார்.
மனித உடலை ஒரு இயந்திரமாகக் கருதி கசக்கிப் பிழியும் மூலதனத்தின் அடங்காப் பசி 21-ம் நூற்றாண்டிலும் தணியவில்லை, “உண்மையில் சுரண்டுவதற்கு சிறு தசைப்பற்றும், சிறிதளவே உணர்ச்சித் துடிப்பும், சொட்டு இரத்தமும் எஞ்சியிருக்கும் வரை தொழிலாளியை மூலதனம் என்ற இரத்தக்காட்டேறி தனது பிடியிலிருந்து விடுவதில்லை”.
நம் நாட்டில் பல்வேறு சமூக பிரச்சனைகள் பற்றியும், சமூகநீதி பற்றியும் குரல் கொடுக்கும் முதலாளித்துவ ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மிகை வேலையாலேயே “செத்து குழியில் விழும் வரை கடுமையாய் வேலை வாங்கப்படும், ஆனால், பெரும்பாலும் மௌனமாய் ஏங்கிச் சாகும்” தொழிலாளர்கள் பற்றியோ அவர்களது சாவுக்குக் காரணமான வேலை நிலைமைகள் பற்றியோ செய்தி கூட வெளியிடுவதில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக, பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் புதிய புதிய உச்சங்களை தொடும் போது, பெரும் முதலாளிகளின் செல்வம் உலக சாதனைகளை படைக்கும் போது, அவர்களது செல்வத்தை எல்லாம் படைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் முனையில், “துன்பதுயரமும், ஓயாமற் பாடுபடுவதன் வேதனையும் அடிமை இயல்பும் அறியாமையும் மிருகத்தனமும் ஒழுக்கச் சீர்கேடும் திரளக் காண்கிறோம்”.
இந்தக் கொடூரமான முதலாளித்துவ சுரண்டலின் நூற்றுக்கணக்கான களப்பலிகள் பொதுமக்களின் கவனத்துக்கு வராமலேயே, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படாமலேயே, தனிப்பட்ட இறப்புகளாகவும் தனிப்பட்ட சோகங்களாகவும் முடிந்து போகின்றன. ஆனால், இன்றைய நவீன உழைப்புச் சுரண்டலின் மையங்களாக விளங்கும் பல்வேறு துறைகளில், தொழிற்சங்க பாதுகாப்பு இல்லாமல், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் பின்பற்றப்படாமல் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மூலதனத்தின் கொடுங்கரங்களில் சிக்கி உடல்நலனையும் உயிரையும் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அத்தகைய பல நிகழ்வுகளில் ஒன்று ஒரு சிலநாட்களுக்கு முன்னதாக வாட்ஸ்-அப் செய்தி மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சென்னையை அடுத்த சிட்லபாக்கம் கிளையின் மேலாளர் மோகன் [பெயர் மாற்றப்பட்டது] கடந்த மாதம் 21-ம் தேதி மாரடைப்பால் இறந்திருக்கிறார். இது இயல்பான உடல்நலக் குறைவால் ஏற்பட்ட மரணம் என்று உண்மையை மூடிமறைக்க முயற்சித்தது அந்த வங்கியின் நிர்வாகம்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியானது 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. தமிழ்நாட்டின் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த வணிகர்களின் வளர்ச்சிக்கு அது முதுகெலும்பாகத் திகழ்ந்தது என்றால் மிகையாகாது. இன்றைக்கும் நாடார் சமுதாயத்தின் பெருமைக்குரிய நிறுவனமாக இந்த வங்கி திகழ்கிறது. 1990-களுக்குப் பிறகு இவ்வங்கியைக் கைப்பற்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகள் செய்த முயற்சியையும் நாடார் சமுதாய வர்த்தகர்கள், சமுதாயமாக ஒன்றிணைந்து முறியடித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டு மக்களின் தொழில்முனைவுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பெருமைக்குரியது என்பதிலும் அதனை ஒரு சுயேச்சையான வங்கியாக, வட இந்திய பனியா முதலாளிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதிலும் ஐயமில்லை.
அதே நேரம், முதலாளிகளுக்கு இடையேயான மோதலையும் போட்டிகளையும் தாண்டி இந்த வங்கியை கட்டி எழுப்பி, தமது உழைப்பால் தினம் தோறும் பாதுகாத்து வரும் இதில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின், உழைப்பாளர் வர்க்கத்தின் நிலையைப் பற்றிய பிரச்சனை மிக முக்கியமானது.
நமது சமுதாய முன்னேற்றத்திற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்குமாறு டி.எம். பி வங்கி போட்டிருக்கும் அன்புக்கட்டளையை ஏற்று, இந்த வங்கியில் அனைத்து விடுமுறை நாட்களிலும் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது என்பது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் தெரியும்.
டி.எம்.பி சிட்லபாக்கம் கிளை மேலாளரின் துயரம் மிகுந்த இறப்பின் பின்னணியைப் பார்க்கலாம்.
“ஆறு வருடங்களாக என் கணவர் என் கூட வாழவில்லை. தினமும் வங்கி வேலை முடிந்து இரவு பத்து மணிக்கே வருவார். நல்லது கெட்டதுக்கு கூட சென்றது கிடையாது. பிள்ளைகள் கூட விளையாடி மகிழ்ந்த நாட்களும் குறைவு” என்று சொல்லி அவரது மனைவி அழுதிருக்கிறார். அவரது குழந்தைக்கோ அப்பா இறந்து விட்டார் என்று கூட புரிந்து கொள்ள முடியாத வயது, மொபைல் ஃபோனில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான்.
மிகைவேலையால் உயிரிழந்த மோகன் மதுரை பகுதியைச் சேர்ந்தவர். கடந்த பல மாதங்களாக சிட்லபாக்கம் கிளையில் வேலை செய்து வருகிறார். அவர் தினமும் அதிகாலை 7 மணிக்கே கிளைக்கு போய் கிளையைத் திறந்து வேலை செய்ய ஆரம்பித்து விடுவார், இரவு 10 மணி வரை வேலை தொடர்வது என்பது வாடிக்கையாக இருந்திருக்கிறது.
மோகன் இறப்பதற்கு முந்தைய வாரம் கிளையில் இருக்கும் போதே நெஞ்சு வலி வந்து மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கேஸ்ட்ரிக் பிரச்சனைதான் என்று அனுப்பியிருக்கிறார்கள்.
இந்நிலையிலும் கூட அவருக்கு ஓய்வு கிடைக்கவில்லை. 20ம் தேதி இரவு 10 மணி வரை இணைய வழியில் மேலாளர்களின் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இது போன்ற கூட்டங்களில் மோகனுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிளையின் செயல்பாடு குறித்து அவர் சக ஊழியர்கள் மத்தியிலேயே மோசமாக திட்டப்பட்டிருக்கிறார். அதற்கு அடுத்த நாள்தான் அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி வந்து சிகிச்சை பயனில்லாமல் உயிரிழந்திருக்கிறார்.
கடந்த இரண்டு வாரங்களில், டி.எம்.பி வங்கியில் மென்பொருள் குளறுபடி காரணமாக ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 9,000 கோடி பணம் கணக்கில் சேர்க்கப்பட்டதைப் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் பிற ஊடகங்களிலும் பரவின; வங்கியின் தலைமை செயல்பாட்டு அலுவலர் திரு கிருஷ்ணன் அவர்கள் பதவி விலகப் போவதாக ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பியதும் செய்தியாக வெளிவந்தது.
ஆனால், வேலைச் சுமையாலேயே ஒரு ஊழியர் இறந்து போனது குறித்து ஊடகங்கள் கவலைப்படவில்லை. ஏனென்றால், கூலித் தொழிலாளி என்பவர் முதலாளிகளால் இரத்தம் உறிஞ்சப்பட்டு தன் உடல்நலனையும் ஏன் உயிரையும் கூட இழப்பதற்காகவே படைக்கப்பட்டவர் என்பதுதான் முதலாளித்துவ கருத்தியல்.
சட்டப்படியான வேலை நேரமான காலை 9.30 முதல் மாலை 6.30 வரை என தினமும் 8 மணி நேரம் வேலை செய்து, வீட்டுக்குச் சென்று குடும்பத்தோடு நேரம் செலவிட்டு, நண்பர்கள், சங்கச் செயல்பாடு என்று சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, 8 மணி நேரம் தூங்கி மீண்டும் அடுத்த நாள் வேலைக்கு வந்திருந்தால் அவரது உடலும் மூளையும் 8 மணி நேர வேலையில் ஈட்டிய சோர்வில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சியுடன் அடுத்த நாள் வேலையை தொடர்ந்திருக்க முடியும். மேலும், வார இறுதியில் ஞாயிற்றுக் கிழமை ஓய்வு, இரண்டாம் நான்காம் சனிக்கிழமைகளிலும் விடுப்பு என்று வாழ்ந்திருந்தால் மோகன் ஓய்வூதியம் பெறும் வயதைத் தாண்டி அதற்கு மேலும் 70-80 வயது வரையில் வாழ்ந்திருக்கலாம்.
மாறாக, அவர் தினமும் 7 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்து (15 மணி நேரம்), ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை நாட்களான சனிக்கிழமைகளிலும் வங்கிக்கு வந்து வேலை செய்ததன் மூலம், ஒரு கட்டத்தில் அவரது “உழைப்புச் சக்தி அயர்ந்து விட்டது. அசதி ஆட்கொண்டது. மூளை சிந்தனையிழந்தது. கண்கள் பார்வையிழந்தன”. அவர் தனது தனது ஆயுட்காலத்தில் பாதியை இழந்து, இளம் வயதிலேயே கொல்லப்பட்டிருக்கிறார்.
டி.எம்.பியில் ஊழியர்கள் அனைவரும் அவர்கள் கிளை மேலாளராக இருந்தாலும் சரி, எழுத்தராக இருந்தாலும் சரி, உதவியாளராக இருந்தாலும் சரி காலையில் கிளைக்கு வந்து விட்டால் இரவு 10 மணி வரை வீட்டுக்குப் போய் விடக் கூடாது என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. மேலும், வார இறுதிகளிலும் விடுமுறை நாட்களிலும் கூட வேலைக்கு வர வேண்டும் என்பது வாடிக்கையாக உள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிளைகளில் இதுதான் வேலைமுறை.
சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட நேரம் இல்லாமல் காலை 9.30 மணி முதல் இரவு பத்து மணி வரை வேலை, விடுமுறை நாட்களிலும் வேலை என்று கட்டுக்கடங்காமல் வேலை சுமத்தப்படுகிறது. குடும்பத்தோடு நேரம் செலவிட முடியாத காரணத்தால் மன இறுக்கமடைந்து குடும்ப வாழ்க்கையிலும், பணியிலும் சிறந்து செயல்பட இயலாத நிலை ஏற்படுகிறது.
நிர்வாகரீதியாக இணைய வழிக் கூட்டங்கள் இரவு 2 மணி வரை கூட நீடிப்பது, அதிகாலை 4 மணிக்கே தொலைபேசியில் அழைத்து இலக்கு நிலைமைகளைப் பற்றி விசாரிப்பது, இரவு 1 மணிக்கு வாடிக்கையாளர் வீட்டுக்குச் சென்று வாராக்கடனை வசூலிக்க நெருக்கடி கொடுப்பது, என தொலைபேசி மூலமும் வாட்ஸ்அப் மூலமும் வீடு சென்ற பிறகும் துரத்தும் பணி நிலைமை ஊழியர்களை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
வங்கிக் கிளைகளுக்கு போதுமான ஊழியர்களை நியமிக்காமல் ஏற்பட்ட ஆட்பற்றாக்குறை காரணமாக, வேலை செய்யும் ஊழியர்கள் சனி ஞாயிறு என்று விடுமுறை நாள்களிலும் வேலைக்கு வர வேண்டியிருக்கிறது. விடுமுறைகள் கிளைகளிலேயே கழிகின்றன. மதிய உணவு இடைவேளையில் பத்துநிமிடங்களில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வேலையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்ற அளவுக்கு அழுத்தம்.
அதாவது, “தொழிலாளி என்பவர், தன் வாழ்க்கை பூராவும், உழைப்புச் சக்தியே அன்றி வேறல்லர் என்பதும், எனவே அவரது பயன்படுத்தத்தக்க நேரம் முழுவதுமே, இயற்கையாலும் சட்டத்தாலும், மூலதனத்தின் தற்பெருக்கத்துக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டிய உழைப்பு நேரமே… கல்விக்கான நேரம், அறிவு வளர்ச்சிக்கான நேரம், சமூகப் பணிகளை நிறைவேற்றுவதற்கான நேரம், சமூகக் கலந்துறவாடலுக்கான நேரம், ஏன், அவரது உடலும் உள்ளமும் கட்டின்றிச் செயல்பட்டு மகிழ்வதற்கான நேரம், ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நேரம் – எல்லாமே பகற்கனவுதான்.”
விழித்திருக்கும் நேரம் முழுவதையும் வங்கிக்காகவே செலவழிக்க வேண்டியிருக்கும் நிலைமையின் காரணமாகவும் அதனால் ஏற்படும் உடல்நிலை சேர்வு காரணமாகவும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதோ, குழந்தைகளோடு விளையாடுவதோ கூட அரிதாகிப் போகிறது. குடும்ப விழாக்களில் சில நேரங்களில் கலந்து கொண்டாலும் மொபைல் மூலமாக பணிநிலைமை துரத்துவதால் அங்கும் முழு ஈடுபாடு செலுத்த இயலாமல் போகிறது.
வாட்ஸ்அப்பில் பல குழுக்களை ஆரம்பித்து அதில் குறிப்பிட்ட ஊழியரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது, அவர் மற்ற ஊழியர்கள் முன் அவமானப்படுவதை மேலதிகாரிகள் ரசிப்பது, ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் எதற்காக விடுப்பு கொடுக்கிறாய் என்று மேலாளரை மிரட்டுவது. தந்தை கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் போது கூட விடுமுறை தருவதில் சிக்கலை ஏற்படுத்துவது, கணவன் மனைவி பணிபுரியும் பட்சத்தில் அவர்களுக்கு வசிக்குமிடங்களில் இடமாற்றம் தராமல் 1500 கி.மீ தூரம் இடமாற்றம் செய்து பிரிப்பது என்று பல்வேறு வழிகளில் ஊழியர்கள் மனரீதியான அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
காலை கீ போர்டு தட்ட ஆரம்பித்து இரவு 10 மணிக்கு அதிலிருந்து கை எடுக்கும் போது இருக்கும் வலி சொல்லி மாளாது. ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்யும் போது வேலை மும்முரம் அதிகமாகி உட்காரும் இடத்திலேயே ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல வேலை நிலைமைகள் மாறி வருகின்றன.
இதன் விளைவாக முதுகுவலி, கண்வலி, கல்அடைப்பு, கால்வலி, பக்கவாதம், இளம்வயது மரணம் என்று பல்வேறு பிரச்சனைகளை ஊழியர்கள் எதிர்கொள்கிறார்கள்.
“மூலதனம் உபரி-உழைப்புக்கான தன் கண்மூடித்தனமான, கட்டுக்கடங்காத வெறியுணர்ச்சியால், அசுரப் பசியால் வேலை-நாளின் அதிகபட்ச எல்லைகளையும் மீறிச் செல்கிறது; தார்மிக எல்லைகளை மட்டுமல்லாமல், வெறும் பௌதிக எல்லைகளையும் கூட மீறிச் செல்கிறது. உடலின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும், ஆரோக்கியமான பராமரிப்புக்கும் உரிய நேரத்தை அது அபகரித்துக் கொள்கிறது. நல்ல காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைப் பெறுவதற்கு அவசியமான நேரத்தைக் களவாடுகிறது, சாப்பாட்டு நேரம் குறித்து தகராறு பண்ணுகிறது. கொதிகலனுக்கு நிலக்கரியும், இயந்திர சாதனத்துக்கு மசையும் எண்ணெயும் இடுவது போல, ஓர் உற்பத்திச் சாதனமாகவே பாவித்து தொழிலாளிக்கு உணவுதரும் விதத்தில், சாத்தியமான இடங்களில் சாப்பாட்டு நேரத்தை உற்பத்தி நிகழ்முறையுடனேயே மூலதனம் இணைத்து விடுகிறது. உடல் சக்திகளை மீட்கவும், ஈடு கட்டவும், ஊக்கவும் அவசியமான நல்ல தூக்கத்தை, அறவே ஓய்ந்து விட்ட உயிரமைப்பினை திரும்பவும் இயங்கச் செய்வதற்கு அத்தியாவசியமான இத்தனை மணி நேர முடக்கம் என்பதாகவே தாழ்த்தி விடுகிறது.” என்ற 19-ம் நூற்றாண்டு இங்கிலாந்தின் நிலைமை இன்று நமது தொழிலாளி வர்க்கத்தை எதிர்கொள்கிறது.
இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். இந்தியாவிலேயே தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ள ஒரு துறை வங்கித்துறை. பொதுத்துறை வங்கிகளில் மட்டுமின்றி டி.எம்.பி போன்ற பழைய தலைமுறை தனியார் வங்கிகளிலும் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் வங்கி தொழிற்சங்கங்களும் அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பும் முக்கிய பாத்திரம் வகிக்கின்றனவே, அப்படியிருந்தும் இது போன்ற நிலைமை எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழலாம்.
1990-களுக்குப் பிறகு புதிய தாராளவாத கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, ஐ.சி.ஐ.சி.ஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கி முதலான புதிய தலைமுறை தனியார் வங்கிகள் வேலை நேரம், வேலைச் சுமை தொடர்பான எந்த வரம்புகளையும் பின்பற்றாமல் செயல்பட ஆரம்பித்தன. வணிக வங்கி வேலைகளுக்கு மேல் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான சந்தைப்படுத்தல் செய்வது இவற்றோடு எந்த வித பணிபாதுகாப்பும் இல்லாத நிலையில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தின. அந்தத் தொற்று டி.எம்.பி, கரூர் வைஸ்யா வங்கி போன்ற பழைய தலைமுறை தனியார் வங்கிகளுக்கு மட்டுமின்றி, பொதுத்துறை வங்கிகளுக்கும் பரவியுள்ளது.
|
ஆண்டு |
அலுவலர்கள் | |||||||
| பழைய தனியார் | புதிய தனியார் | மொத்தம் தனியார் | வளர்ச்சி % | பொதுத் துறை |
வளர்ச்சி % | ஒட்டு மொத்தம் | வளர்ச்சி % | |
| 2017 | 36,058 | 3,33,797 | 3,69,855 | 3,97,797 | 7,67,652 | |||
| 2018 | 39,626 | 3,40,229 | 3,79,855 | 2.70% | 4,06,120 | 2.05% | 7,85,975 | 2.33% |
| 2019 | 41,977 | 3,74,306 | 4,16,283 | 9.59% | 3,89,029 | -4.39% | 8,05,312 | 2.40% |
| 2020 | 44,649 | 4,27,295 | 4,71,944 | 13.37% | 4,32,082 | 9.96% | 9,04,026 | 10.92% |
| 2021 | 43,641 | 4,46,441 | 4,90,082 | 3.84% | 3,96,366 | -9.01% | 8,86,448 | -1.98% |
| 2022 | தரவுகள் இல்லை | 3,97,305 | 0.24% | |||||
இதனால், தொழிற்சங்கங்களின் பேரம் பேசும் வலிமை குறைந்துள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலமும், மேலும் பல வேலைகளை தனியார் ஒப்பந்ததாரர்களிடம் கொடுப்பதன் மூலமும், பொதுத்துறை வங்கிகளை இணைப்பதன் மூலமும் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து போய், தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடுவதற்கான வலிமையும் குறைந்துள்ளது.
|
ஆண்டு |
தொழிலாளர்கள்
|
|||||||
| பழைய தனியார் |
புதிய தனியார் |
மொத்தம் | வளர்ச்சி % |
பொதுத் துறை |
வளர்ச்சி % |
ஒட்டு மொத்தம் |
வளர்ச்சி % |
|
| 2017 | 23,579 | 1,257 | 24,836 | 3,22,517 | 3,47,353 | |||
| 2018 | 23,236 | 1,881 | 25,117 | 1.13% | 3,08,968 | -4.20% | 3,34,085 | -3.97% |
| 2019 | 23,831 | 1,690 | 25,521 | 1.61% | 2,95,815 | -4.26% | 3,21,336 | -3.97% |
| 2020 | 23,067 | 1,201 | 24,268 | -4.91% | 3,04,895 | 3.07% | 3,29,163 | 2.38% |
| 2021 | 21,890 | 1,057 | 22,947 | -5.44% | 2,77,047 | -9.13% | 2,99,994 | -9.72% |
| 2022 | தரவு இல்லை | 2,66,353 | -3.86% | |||||
இதற்கான பொதுவான சூழல், அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களுக்கு சேவை செய்து கொடுப்பதற்காக இந்தியாவில் புற்றுநோய் போல வளர்ந்து விட்ட ஐ.டி சேவை நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது. அந்நிறுவனங்களில், தொழிற்சங்கம் என்றோ தொழிலாளர் உரிமைகள் என்றோ பேச்சே இருக்கவில்லை. ஒவ்வொரு ஊழியரும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள தனது மேலாளர், உயர் மேலாளர், அதற்கும் மேல் உள்ள இயக்குனர்கள் என்று ஒவ்வொருவருக்கும் கொத்தடிமைகளாக நடந்து கொண்டுதான் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வெளிநாட்டு வாய்ப்புகள் போன்றவற்றை உறுதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதன் விளைவாக, வங்கித் துறையைப் போலவே வசதியான, பாதுகாப்பான வேலை, நல்ல ஊதியம் என்று கருதப்படுகிற ஐ.டி சேவைத் துறை நிறுவனங்களிலும் இதே போன்ற உடல்நல பாதிப்புகளும் சிறு வயதிலேயே இறந்து போவதும் நோய்த் தொற்றைப் போல அதிகரித்துள்ளன.
ஐ.டி நிறுவனங்களில் பல ஊழியர்களுக்கு மிகை வேலையால் உடல்நலப் பிரச்சனைகள், உளவியல் பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. உடல்நலச் சீர்கேட்டையும் மீறி நிறுவனத்தின் தேவைகளுக்காக இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, 4 ஆண்டுகளுக்கு முன்னர் டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இளம் தொழிலாளியும் தொழிற்சங்க செயல்பாட்டாளருமான கண்ணன் [பெயர் மாற்றப்பட்டது] என்பவர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35-ஐக் கூடத் தாண்டவில்லை. அதற்கு முன்னதாகவே நிறுவன வேலையாக வெளிநாட்டில் வேலை செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று மீண்டு வந்திருக்கிறார். ஆனால், நிர்வாகமோ வெளிநாட்டு வாடிக்கையாளருக்கு சேவை வழங்குவதற்காக அவரை இரவு நேரப் பணியில் அமர்த்தியது. அவருக்கு இரண்டாவது முறை மாரடைப்பு வந்து இறந்து போனார். அவரது இளம் மனைவியும் இரண்டு வயது கூட நிரம்பாத குழந்தையும் கணவனையும் தந்தையையும் இழந்து தவித்தனர்.
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களு்ம கூட இந்தப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பணிகளில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் ஊழியர்களை அமர்த்துவது அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் புற்றீசலாய் முளைத்து இலாப நோக்கத்தையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆசிரியர்களும், குறிப்பாக பெண் ஆசிரியர்களும் இத்தகைய சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதன் விளைவாக அரசுப் பள்ளிகளிலும் இதே நோய் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை நியமிப்பது பற்றிய அறிவிப்பு வந்து, அது தொழிலாளர்களின் உறுதியான எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டாலும் இன்று வரை ஆள் பற்றாக்குறையாகவே போக்குவரத்துத் துறை இயங்கி வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்துக்கேற்ப 12 மணி நேர வேலை நாள் அனுமதிக்கப் போவதாக அரசாணை வெளியிடப்பட்டு, அது கடுமையான எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதும் நமக்குத் தெரிந்ததே. அதே போன்ற அரசாணை அண்டை மாநிலமான கர்நாடகாவில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது என்பது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
“சாகும் வரை வேலை செய்வது இன்றைய நடப்பாய் இருப்பது,… ஓராயிரம் இடங்களில் இப்படித்தான் நடக்கிறது. ‘வளங்கொழிக்கும் தொழில்’ நடக்க வேண்டிய ஒவ்வோரிடத்திலும் இப்படித்தான்…”. மூலதனத்துக்கு தளையிடும் வலுவான சட்டங்களும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான தொழிற்சங்க இயக்கமும் இல்லாத 19-ம் நூற்றாண்டு இங்கிலாந்தின் நிலைமை இன்றைய தமிழ்நாட்டுக்கும் பொருந்துகிறது.
“உழைப்புச் சக்தியினது ஆயுட் காலத்தின் அளவு பற்றி மூலதனத்துக்கு அக்கறையில்லை; அதன் அக்கறைக்குரியதெல்லாம் ஒரு வேலைநாளில் இயங்க வைக்கத்தக்க உழைப்புச் சக்தியின் அதிகபட்ச அளவு மட்டும்தான். மூலதனம் தொழிலாளியின் ஆயுட்காலத்தைக் குறுக்குவதன் மூலம் இந்த நோக்கத்தை அடைகிறது.”
“தங்களை வாட்டி வதைக்கும் கொடுஞ்சர்ப்பத்திடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஆலோசித்து ஒரு சட்டத்தை நிறைவேற்றுமாறு ஒரு வர்க்கம் என்ற முறையில் கட்டாயப்படுத்த வேண்டும்.” என்று 160 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸ் எழுதியபடி சட்டங்கள் இயற்றப்பட்டாலும் மூலதனத்தின் தொடர்ச்சியான தாக்குதலால் அவை நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருகின்றன. அவை ஏட்டளவிலானவையாக மாறி வருகின்றன.
“முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் வரலாற்றில் வேலை-நாள் என்றால் என்ன என்பது ஒரு போராட்டம் வாயிலாகத் தீர்மானிக்கப்படுகிறது; கூட்டு மூலதனத்துக்கும் கூட்டு உழைப்புக்கும் இடையிலான, அதாவது முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் வாயிலாகத் தீர்மானிக்கப்படுகிறது”
எனவே, தொழிலாளர்கள் வர்க்கமாக திரண்டு, தமது வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ள நினைக்கும் குறுகிய கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டு – உயிர் வாழும் உரிமையை மீட்கும் அபாயநிலையை நெருங்கி கொண்டிருக்கிறோம் என்றுணர்ந்து எழுச்சியடைய வேண்டிய தருணம் இது.
மா.சிவகுமார்,
பொறுப்பாளர் மூலதனம் கற்றல் அரங்கம்,
சென்னை

