இந்திய அறிவியலில் இடதுசாரிகளின் சொல்லப்படாத வரலாறு – பிரபீர் புர்கயஸ்தா (தமிழில்: தா.சந்திரகுரு)

இந்திய அறிவியலில் இடதுசாரிகளின் சொல்லப்படாத வரலாறு – பிரபீர் புர்கயஸ்தா (தமிழில்: தா.சந்திரகுரு)



நேருவால் இந்தியாவைத் தொழில்மயமாக்க உதவும் வகையில், பொதுவாக கட்டமைக்கப்பட்ட அறிவியல் நிறுவனங்கள் மீது மட்டுமே இந்திய அறிவியலின் வரலாறு குறித்த பதிவுகள் கவனம் செலுத்துகின்றன. அந்த வரலாறு, இந்திய அறிவியல் வரலாற்றில் மிகமுக்கியமானவர்களான இந்திய இடதுசாரி அறிவியலாளர்கள் மேக்நாத் சாஹா, சாஹிப் சிங் சோக்கே, சையத் ஹுசைன் ஜாகீர், சர்வதேச இடதுசாரிகள் ஜே.டி.பெர்னல் மற்றும் ஜே.பி.எஸ். ஹால்டேன் ஆகியோரின் பங்களிப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாததால் முழுமையற்றதாகவே உள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\Communist 100\Purkayastha Science\Haldane and Bernal.jpg

நவீன தேசத்தைக் கட்டமைப்பது, நேரு ‘அறிவியல் மனப்பான்மை’ என்று அழைத்த அறிவியல் கண்ணோட்டத்துடன், அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசின் முக்கிய பங்கு ஆகியவற்றைக் கொண்டு திட்டமிடுவதன் மூலமாக மட்டுமே முடியும் என்ற அறிவியல் பார்வையைக் கொண்டே இந்தியாவில் அறிவியல் நிலைநிறுத்தப்பட்டது. அது இன்று பொதுக் கருத்தாக இருந்து வரும் சூழலில், இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக அறிவியலைத் திட்டமிடுவது என்ற கருத்து அறிவியல் சமூகத்தில் முற்றிலும் முரணான பார்வையாகவே இருந்தது.

1917 புரட்சி, அதன் விளைவாக அறிவியலைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட தொழில்துறை மேம்பாடு, நவீன தேசத்தை உருவாக்குவது போன்றவை அறிவியல் சமூகத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த ஒழுங்கிற்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. 1931ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் வரலாறு மாநாட்டிற்கு புக்காரின் தலைமையில் சென்றிருந்த சோவியத் குழு, சமூகத்தில் அறிவியலின் மாறுபட்ட பார்வை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த வித்தியாசமான பார்வையை முன்வைத்தது. புத்திசாலித்தனமான, இளம் பிரிட்டிஷ் அறிவியலாளர்களான ஜே.டி.பெர்னல், ஜே.பி.எஸ்.ஹால்டேன், ஜோசப் நீதம், லான்சலோட் ஹோக்பென் ஆகியோர் அந்த சோவியத் ஆய்வுக்கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டனர். ‘அறிவியலின் சமூகச் செயல்பாடு’ என்ற பெர்னலின் புகழ்பெற்ற படைப்பு, அறிவியலுக்கான சமுதாய இயக்கத்தை உருவாக்கம் மற்றும் அறிவியலாளர்களை அறிவியல் தொழிலாளர்களாக ஒன்றிணைப்பதற்கும் அது வழிவகுத்துக் கொடுத்தது.

C:\Users\Chandraguru\Pictures\Communist 100\Purkayastha Science\download.jpg

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெற்ற அறிவியல் இயக்கம் உலக அறிவியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பிற்கு வழியேற்படுத்தித் தந்தது. உலக அமைதிக்கான இயக்கமான உலக அமைதி கவுன்சிலின் மிகமுக்கிய அங்கமாக அது மாறியது. பெர்னல், ஹால்டேன் ஆகியோர் இந்திய அறிவியலுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த அதே நேரத்தில், நீதம் தன்னுடைய சீன சகாக்களுடன் இணைந்து, சீன அறிவியல், நாகரிகம் குறித்த 16 வரலாற்றுத் தொகுதிகளை உருவாக்கும் வகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர்கள் மூவருமே கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர்.

அதேபோன்று 1930களில் கல்கத்தாவில் மேக்நாத் சாஹாவுடன் இருந்த இளம் விஞ்ஞானிகள் குழு, சோவியத் ஒன்றியத்தில் அறிவியல், திட்டமிடல், சோசலிசப் பரிசோதனைகள் குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தது. மேக்நாத் சாஹாதான், திட்டக்குழுவை அமைப்பதற்கான தாக்கத்தை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான சுபாஷ் சந்திரபோஸிடம் ஏற்படுத்தினார். அந்த திட்டமிடல் குழுவை நேருவின் தலைமையிலே போஸ் உருவாக்கினார். இந்தியாவின் தொழில்மயமாக்கல், அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கான வடிவமைப்பை அந்தக்குழு உருவாக்கியது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, திட்டக்கமிஷனாக மாறிய அந்தக்குழு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான அடிப்படையை உருவாக்கி வழங்கியது. இந்த திட்டமிடல் பார்வை, தற்சார்பு இந்தியாவிற்கான அறிவியலின் முக்கியத்துவம் ஆகியவற்றின் விளைவாகவே சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்கள், அணுசக்தி, விண்வெளி, ஐ.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் விரிவாக்கம் நடைபெற்றது.

இந்தியா தொழில்மயமாக்கப்பட வேண்டுமானால், பொருளாதாரத்தில் முக்கியமான பங்கை அரசு வகிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அத்தகைய பாதைக்கு ஆதரவளிக்கக்கூடிய அறிவியல் நிறுவனங்களையும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நேரு நன்கு அறிந்திருந்தார். அறிவியல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான தனது தேடலில், பெர்னலை இந்தியாவிற்கு அவர் பலமுறை வரவழைத்தார். மரபியலாளரான ஜே.பி.எஸ்.ஹால்டேன் இந்தியாவில் குடியேறி, இந்தியக் குடியுரிமையைப் பெற்றார். இந்தியாவின் அதிகாரத்துவ அறிவியல் நிர்வாகத்தை எதிர்கொள்ள முடியாத ஹால்டேன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை (CSIR – Council of Scientific and Industrial Research) சுதந்திரமான ஆராய்ச்சியை அடக்கி வைப்பற்கான மையம் (CSIR – Centre for Suppression of Independent Research) என்று மறுபெயரிட்டு அழைக்க வேண்டும் என்று நேருவிடம் கூறினார் (இர்பான் ஹபீப், ‘சுதந்திர போராட்டத்தின் மரபு: நேருவின் அறிவியல், கலாச்சாரப் பார்வை’, சோஷியல் சயன்டிஸ்ட், மார்ச்-ஏப்ரல், 2016).

C:\Users\Chandraguru\Pictures\Communist 100\Purkayastha Science\Saha and Husain.jpg

மேக்நாத் சாஹா, ஹுசைன் ஜாகீர், சஹாப் சிங் சோக்கே போன்ற இந்திய அறிவியலாளர்கள் பலரும் இந்திய அறிவியலை நிறுவியவர்களாக மட்டுமே இருக்கவில்லை. அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருந்தனர். மோசமான மெக்கார்த்தி சகாப்தத்தில் ‘பிரபலமான’ வார்த்தையாக அறியப்பட்ட ‘சக பயணிகள்’ என்பதாக அவர்கள் அமெரிக்க அறிஞர்களின் கௌரவப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். நாட்டின் அணு இயற்பியலுக்கு ஹோமிபாபாவுடன் இணைந்து மேக்னாத் சாஹாவும் அடித்தளம் அமைத்துத் தந்தனர். சி.எஸ்.ஐ.ஆரின் இயக்குநர் ஜெனரலாக இருந்த ஹுசைன் ஜாகீர் அதை பெருமளவிற்கு விரிவுபடுத்தினார்.

C:\Users\Chandraguru\Pictures\Communist 100\Purkayastha Science\Hoffkin Sikhey.jpg

1932ஆம் ஆண்டில் ஹாஃப்கைன் நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநராக சோக்கே நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தபோதிலும், அவர் இந்திய தேசிய காங்கிரஸின் திட்டக் குழுவின் சுகாதாரப் பிரிவிற்குத் தலைவராகவும் இருந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் தற்சார்பிற்கான பயணத்தைத் தொடங்கி வைக்கின்ற வகையில், இந்தியன் ட்ரக்ஸ்&பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் (ஐடிபிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) என்ற இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அடித்தளத்தை சோக்கே அமைத்துக் கொடுத்தார். பின்னர், உலக அமைதி கவுன்சிலின் அங்கமான அகில இந்திய அமைதி கவுன்சிலின் தலைவராகவும், உலக அறிவியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் இந்திய இணை நிறுவனமாக இருந்த இந்திய அறிவியல் தொழிலாளர்கள் சங்கத்தின் (ASWI) தலைவராகவும் ஆனார். 1947இல் ASWI அமைப்பின் முதல் தலைவராக ஜவஹர்லால் நேரு இருந்தார்.

கொரியா, சீனாவில் நடந்த பாக்டீரியா போர் குறித்த விசாரணைகளுக்கான சர்வதேச அறிவியல் ஆணையத்திற்கு ஜோசப் நீதம் தலைமை தாங்கினார். அது 1952ஆம் ஆண்டு அறிக்கையில் அமெரிக்கா மீது போர்க்குற்றங்களுக்கான  குற்றத்தைச் சாட்டியிருந்தது. அந்த ஆணையத்தில் சேர சோக்கே ஒப்புக் கொண்ட போதிலும், அதில் சேர வேண்டாம் என்று இந்திய அரசு அவரிடம் கேட்டுக் கொண்டது. கொரியர்களுக்கும் சீனர்களுக்கும் எதிராக உயிர் ஆயுதங்களுடனான தாக்குதல்களை நடத்தவில்லை என்று அமெரிக்கா நீண்ட காலமாக மறுத்து வந்தது. நீதம் கமிஷன் விவரித்த பல நிகழ்வுகளை அமெரிக்க ஆவணக் காப்பகங்கள் இப்போது உறுதிப்படுத்துகின்றன. சீனா மற்றும் நேச நாடுகளின் கைதிகள் மீது உயிரியல் போருக்கான பரிசோதனைகளை ஜப்பானிய பிரிவு 731 மேற்கொண்டது. அதில் 3,000 பேர் கொல்லப்பட்டதாக இப்போது பகிரங்கமாக இருக்கின்ற ஆவணக்காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களுடைய ‘ஆய்வுகள்’ முழுவதையும் அமெரிக்காவிடம் அளித்ததற்கு கைமாறாக, அந்தப் பிரிவின் தலைவர்களுக்கு போர்க்குற்றங்களுக்கு எதிராக முழுப்பாதுகாப்பை அமெரிக்கா வழங்கியது. அவர்களுடைய அந்த  ‘ஆய்வுகள்’தான் ஃபோர்ட் டெட்ரிக் என்ற மிகமோசமான உயிர்-ஆயுத ஆய்வு மையத்தை துவக்கி வைத்திருந்தன.

C:\Users\Chandraguru\Pictures\Communist 100\Purkayastha Science\Report-claiming-biological-weapons-deployed-in-Korea-up-for-auction.jpg

சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அறிவியல் உள்கட்டமைப்பில் இடதுசாரிகளின் பங்களிப்பு வெறுமனே அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை விரிவாக்குவது என்பதாக மட்டுமல்லாமல், நாட்டின் தற்சார்பிற்காகப் போராடுவதுமாகவும் இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களின் நலன்கள், அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் பலரின் காலனித்துவ மனநிலைக்கு எதிரான கசப்பான போர் இல்லாமல் அது நடந்திருப்பதற்கான வய்ப்பு இருந்திருக்கவில்லை.

ஒரு கட்டுரையிலேயே இந்திய அறிவியல், தொழில்நுட்பத்திற்கான இடதுசாரிகளின் பங்களிப்புகளை எழுதி முடிப்பதற்கான சாத்தியம் இருக்கவில்லை. அவர்களுடைய பங்களிப்புகளை வெளிக்கொணர, அறிவியலின் ஒரெயொரு பகுதியை மட்டுமே – மருந்துத் துறையை – நான் இங்கே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். அறிவியல் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதில் இடதுசாரிகளுடைய பங்களிப்பு என்பது, தற்சார்பு என்ற பெரிய போரில் தங்களுடைய பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்குவதாகவே இருந்தது. அறிவியலை முன்னேற்றுவதற்கான அவர்களுடைய பங்களிப்புகளும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவையாக இருந்தன. அவை குறித்த மிகப் பெரிய அளவிலான விவரங்கள், சமீபத்திய லெஃப்ட்வேர்டு வெளியீடான, ‘உடல்நலத்தில் அரசியல் பயணங்கள் – அமித் சென்குப்தா கட்டுரைகள்’ என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன.

C:\Users\Chandraguru\Pictures\Communist 100\Purkayastha Science\amit_sengupta_frontcover.jpg

பிரிட்டிஷார் வெளியேறிய போது, ​​ இங்கிலாந்தில் செயலூக்கம் உள்ள மருந்து மூலப்பொருளை (ஏபிஐ) தயாரித்து, அதை இங்கே விற்பனைக்காக மட்டுமே கொண்டு வந்த பிரிட்டிஷ் மூலதனத்தின் கைகளிலேயே மருந்துத் தொழில் முற்றிலுமாக இருந்தது. சிறிய அளவிலான இந்திய மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வந்தபோதிலும், அந்த நிறுவனங்களுக்குத் தேவையான  அறிவியல் ஆய்வுகளுக்கான உதவி கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாது, பிரிட்டிஷ் காலத்து இந்திய காப்புரிமைச் சட்டம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியிருந்த சட்டரீதியிலான ஏகபோகத்தை எவ்வாறு எதிர்ப்பது என்று அந்த நிறுவனங்கள் அறிந்திருக்கவில்லை.

அது இருமுனை கொண்ட போராக இருந்தது. இந்திய மக்களின் நலன்களுக்காக காப்புரிமை சட்டங்களை மாற்ற வேண்டிய போர் ஒருபக்கம்; மற்றொரு பக்கத்தில், அறிவியல் உள்கட்டமைப்பை உருவாக்கி உள்நாட்டு மருந்துத் தொழிலுக்குத் தேவையான அறிவைப் பெறுவதற்கான போர்.

இடதுசாரிகளின் அறிவியல் பங்களிப்புகளைப் பற்றி காணலாம். ஹாஃப்கைன் இன்ஸ்டிடியூட்டின் முதல் இந்திய இயக்குநராக இருந்த சாஹிப் சிங் சோக்கே, குடிசைத் தொழில் போன்று இருந்து வந்த தடுப்பூசி தயாரிப்பை முழுமையாக நவீன வசதியுடன் உள்ள நிறுவனங்களாக மாற்றினார். அவரது தலைமையில் இருந்த குழு தான் பின்னர் சோவியத் அரசாங்கம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் இந்தியாவில் அமைக்கப்பட்டிருந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கான – எச்ஏஎல், ஐடிபிஎல் – முழுத் திறனை வழங்கியது. ஹுசைன் ஜாகீர் தலைமையில் உருவாக்கப்பட்ட சி.எஸ்.ஐ.ஆர் உள்கட்டமைப்பு, நித்யானந்த் இயக்குனராக இருந்த லக்னோ மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம், புனே தேசிய ரசாயன ஆய்வகங்கள் ஆகியவையே இந்திய மருந்துத் தொழில்துறை மீது உலகளாவிய பெருநிறுவனங்கள் கொண்டிருந்த பிடியைத் தளர்த்துவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தித் தந்தன. இறுதியாக, ஹைதராபாத் சிசிஎம்பி மையத்தின் (செல்  & மூலக்கூறு உயிரியல்) தலைமையில் இருந்த பி.எம்.பார்கவாவின் முக்கிய பங்களிப்புகள் மருந்துகளில் இந்திய உயிரியல்துறையின் புரட்சிக்கு உறுதியான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்தன. இந்தியா இன்று உலகிலேயே பொதுவான மருந்துகள், தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறது. அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்து சென்றிருக்கும் இந்திய அறிவியாலாளர்களுக்கே நாம் நன்றி செலுத்த வேண்டும்.



மறைநூல்கள் மற்றும் தற்போதுள்ள ஒழுங்கை  கேள்விக்குட்படுத்தாத முழுமையான கீழ்ப்படிதலை விரும்புகின்ற படிநிலை ஆதிக்கம் கொண்ட, சாதி அடிப்படையிலான பிராமண ஒழுங்கின் மேலாதிக்கத்தை நாம் இன்னமும் எதிர்கொண்டு வருகின்றோம். பழைய காலனித்துவ எஜமானர்களை நோக்கி அல்லது தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசியல் கட்சியை நோக்கி இருக்கின்ற விமர்சன சிந்தனை, கேள்விகளை எழுப்புவது போன்ற செயல்பாடுகள் தேசத்துரோகம் என்றழைக்கப்படுகின்றன. மக்கள் அறிவியல் இயக்கத்தின் நோக்கமாக அறிவியலும், விமர்சனரீதியிலான பகுத்தறிவும் மக்கள் இயக்கங்களுடன் இணைக்கப்பட வேண்டும். வெறுப்பு கொண்டு, பிளவுபடுத்துகின்ற சமூக சக்திகளின் முட்டாள்தனம் நிரம்பிய தற்போதைய சூழலில், அறிவியலும் பகுத்தறிவுமே நமக்கான போராட்ட ஆயுதங்களாக இருக்க முடியும்.



https://www.newsclick.in/The-Untold-Story-Left-Indian-Science

நன்றி: நியூஸ்க்ளிக் இணைய இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *