நான்காம் தொழிற்புரட்சியின் பல்வேறு பரிமாணங்கள்- அண்ணா.நாகரத்தினம்

 நான்காம் தொழிற்புரட்சியின் பல்வேறு பரிமாணங்கள்- அண்ணா.நாகரத்தினம்

 

தொழில்புரட்சி என்பது விவசாயத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தியிலிருந்து, இயந்திரத்தை அடிப்படையாக  கொண்ட உற்பத்தி முறைக்கு மாறியதைக் குறிக்கிறது. தொழில்புரட்சிகளில் முதல் தொழில்புரட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விவசாய உற்பத்தி முறையைப் புரட்டிப் போட்ட புரட்சியாகும். அடுத்தடுத்து வந்த தொழில்புரட்சிகள் சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் சமூகத்தின் உற்பத்தி முறையை முற்றிலும் மாற்றியமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக புதிய கண்டுபிடிப்புகளும் புதிய தொழில்நுட்பங்களும் இத்தகைய தொழிற்புரட்சிகளுக்கு அடிப்படையாக அமைந்தன. ஒவ்வொரு தொழிற்புரட்சியும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு தொழில்புரட்சியும் அதற்கே உரித்தான விளைவுகளைக் கொண்டிருக்கின்றது. முதலாளித்துவ காலகட்டத்தில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காம் தொழில் புரட்சிகளின் வீச்சும் விரிவும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து மார்க்ஸ்

தொழில்நுட்பம் பற்றி மார்க்சு திரட்டிய குறிப்புகள் அவரது சிறப்புப் பணிகளில் ஒன்றாகும் எனத் தங்கள் இருவரின் அறிவுசார் வேலைப்பிரிவினை குறித்த விளக்கக் கடிதத்தில் எங்கெல்சு குறிப்பிட்டுள்ளார். ஏங்கல்சுக்கு மார்க்சு 1863 ஜனவரி 28இல் எழுதிய கடிதத்தில் இக்குறிப்பேடுகளைப் பற்றி மேற்கோள் காட்டி இவ்வாறு கூறுகிறார்:

… ‘நான் எனது சுருக்கமான தொழில்நுட்ப  குறிப்பேடுகளை மீண்டும் படித்தேன்…. தொழிநுட்ப வரலாற்றுக் குறிப்புகளை மீளப் படித்தபோது வெடிமருந்துக் கண்டுபிடிப்பு மட்டுமன்றி, காந்தத் திசைக்காட்டியும் அச்சுத் தொழில்நுட்பமும் 16-18 ஆம் நூற்றாண்டுகளின் முதலாளித்துவப் பொருளியல் வளர்ச்சிக்கான முன் தேவைகளாக இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தேன். இக்காலகட்டத்தில் தான் கைவினைத்தொழில் முறையில் இருந்து பெருந்தொழில் முறைக்கு மாறியது. இந்த இரு பொருளாயத அடிப்படைகளும் சார்ந்துதான் எந்திரமயத் தொழிலகங்கள் உருவாகியுள்ளன.’

கார்ல் மார்க்ஸ்

தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து தனக்குள்ள ஆர்வம் பற்றி மார்க்சு தன் எழுத்துகளின் ஊடே அடிக்கடி மேற்கோள்களைச் சுட்டியுள்ளார். இந்தக் குறிப்புகளோடு மேலும் தன் மூலதனம் நூலின் தொகுதி ஒன்றில் எந்திரங்களும் பேரளவுத் தொழிலகங்களும் என்ற இயலின் தொடக்கத்தில் கண்ட அடிக்குறிப்பில் தொழில்நுட்பம் பற்றிய வரலாற்றின் தேவையைக் குறிப்பிடுகிறார்.

இனி மனித வரலாறு கண்டுள்ள தொழில்புரட்சிகளைப் பற்றியும் அவற்றால் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலாம் தொழிற்புரட்சி

உலகின் முதல் தொழில் புரட்சி என்பது 18வது நூற்றாண்டில் ஏற்பட்டது. குறிப்பாக, 1760 களில் பிரிட்டனில் இந்தத் தொழில்புரட்சி ஆரம்பித்தது. ரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் விளைவாக அறிவியல் துறையில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் முதலாம் தொழில்புரட்சிக்கு ஆதாரமாக அமைந்தது. இதன் மூலம் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பிற்போக்கு நிலையிலிருந்த மத்தியக் காலம் முடிவுக்கு வந்தது. எனவேதான் முதலாம் புரட்சி ஒட்டு மொத்த சமூகத்தைப் புரட்டிப் போட்ட புரட்சி என்று கூறப்படுகின்றது.

மனித ஆற்றலைப் பயன்படுத்திக் கைவினைத் தொழில் சார்ந்த விவசாய உற்பத்தியைக் கொண்டிருந்த நிலைமையை மாற்றி, நீராவி இயந்திரம் மூலம் செயல்படக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கியதுதான் முதலாம் தொழில்புரட்சியின் அடிப்படையாக இருந்தது. நீர் ஆற்றலும் நீராவி ஆற்றலும் இயந்திரங்களை இயக்கின. கரியைப் பயன்படுத்தி வந்த நிலைமாறி நிலக்கரியின் பயன்பாடு அதிகரித்தது. இயந்திரக் கருவிகளில் இருந்த மரத்தாலான பாகங்கள் நீக்கப்பட்டு முற்றிலும் உலோகத்தாலான கருவிகள் உருவாக்கப்பட்டன.  முக்கியமாக இரும்பின் பயன்பாடு அதிகரித்தது.

Industrial Revolution | Definition, Facts, & Summary | Britannica

சுமார் 1780-ல் இருந்து 1840 வரையில் நடந்த இந்த புரட்சியின் காலப் பகுதியில் கைவினைப் பட்டறைகளின் இடத்தை ஒருங்கிணைந்த பெரிய ஆலைகள் இடம் பிடித்தன. இதன் மூலம் பல மணி நேரம் பலர் செய்யும் வேலையை குறைந்த நேரத்தில் இயந்திரத்தின் மூலம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான நெசவாளர்கள் உருவாக்கும் துணிகள் ஒரு நூற்பாலையில் உற்பத்தியானது.

அறிவியல் துறைகளான உலோகவியல், வேதியியல், இயற்பியல், இயந்திரவியல் போன்றவற்றில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் வளர்ந்ததால், ஆலைத்தொழில் உற்பத்திக்குத் தேவையான புதிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறாக, தொழிற்துறையில் மலைக்கத்தக்க வளர்ச்சியைத் ஊக்குவித்தது.

நீராவி ஆற்றல் மூலம் இயந்திரங்கள் இயக்கப்பட்டது, ரயில் போக்குவரத்தைத் துரிதமாக்கியது, தொழில்துறையின் செயல்பாட்டை வேகப்படுத்தியது, தொலைபேசி போன்ற தொலைதொடர்பு கருவிகள் உருவானது, நிலக்கரியும் இரும்பும் பெருமளவில் வெட்டி எடுக்கப்பட்டது, போன்றவை முதலாம் தொழில் புரட்சியின் சாதனைகளாகும்.

இரண்டாம் தொழிற்புரட்சி

19வது நூற்றாண்டில் இரண்டாவது தொழிற்புரட்சி மின்சக்தியால் ஒளியூட்டப்பட்டது.  அதாவது நீராவி ஆற்றலுக்கு  பதில் அனைத்தையும் மின் சக்தியை  பயன்படுத்தி செய்வதுதான் இரண்டாம் தொழில்புரட்சியின் முதன்மையான அம்சமாக விளங்கியது.  இதன் மூலம் தொழில்துறையின் உற்பத்தி ஆற்றலை வெகுவாக வளர்த்தது.  இந்த வகையில் இரண்டாம் தொழில் புரட்சி தனித்துவம் பெற்ற ஒன்றாகும்.

குறிப்பாக, 1870-ல் இருந்து 1915 வரையிலான காலகட்டத்தில் தொழிற்துறையில் ஏற்பட்ட நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும், மிகப் பெருமளவில் எஃகு உற்பத்தித் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் இரண்டாம் தொழிற்புரட்சிக்கு வித்திட்டன.

The Bessemer Steel Process

முதன் முதலில் 1860 களில் எஃகு உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களும் இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக, பெசிமர் செயல்முறை (Bessemer process) என்பது வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை ஆகும்.

மேலும் உற்பத்திச் செயல்முறையிலும் புதிய தொழில்நுட்பங்கள் உருவாயின. உற்பத்திக்கு பயன்படும் பொருட்களைக் கொண்டு செல்ல இடைவிடாமல் நகரக்கூடிய  கன்வேயர் பெல்ட் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டன. உதிரிப் பாகங்களை இணைக்கும் தொகுப்பு வரிசை உற்பத்தியை (Assembly line) அடிப்படையாகக் கொண்ட பெரும் ஆலைகள் உருவானது. இந்த்க் கட்டத்தில், இது ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் ஹென்றி போர்டு உருவாக்கிய முறை ஆகும். இதனால் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் கூடியது. முழுவடிவம் பெற்ற பொருட்கள் பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டன.  இது இரண்டாம் தொழில்புரட்சியை மிகவேகமாக உந்தித்தள்ளியது.

தொழிற்புரட்சி – Back Bone

புதிய இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. பெட்ரோயப் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்தது. இதனால், தொழிற்துறை உற்பத்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டம் வரையில் தொலைபேசி வலைப்பின்னல் பரவலாகத் துவங்கியது. இந்தப் போக்கின் விளைவாக உலகளாவிய அளவில் சந்தையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை முதலாளித்துவம் பெற்றது.

மூன்றாம் தொழிற்புரட்சி

20வது நூற்றாண்டில் தோன்றியது மூன்றாவது தொழிற்புரட்சி ஆகும். குறிப்பாக, 1970-களில் தொடங்கி, பின்னர் 1980-களில் பரவலான மின்னணுவியல் தொழில்நுட்பம் மூன்றாம் தொழிற்புரட்சிக்கு அடித்தளம் இட்டது.   உற்பத்திச் செய்யக்கூடிய இயந்திரம் என்ன செய்ய வேண்டும் என்பதை   கணனி மொழியில் கட்டளை இட்டால், அதை உடனடியாகச் செய்து முடித்துவிடும்.

கணிப்பொறித் துறையின் வளர்ச்சியால்  இயந்திரங்களைக் கணினிமயமாக்கியது. தொழிற்துறை அதிவேகமாக கணினிமயமாக்கப் பட்டது. இது மூன்றாவது தொழில்புரட்சியின் காலகட்டம் ஆகும். இதன் தொடர்ச்சியாக ஆலை உற்பத்தி மற்றும் சந்தை ஆகியவற்றைக் கையாள்வதில் இணையத் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றியது.

An Emerging Third Industrial Revolution - Atlantic Council

இந்த காலகட்டத்தில் தான் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஏகாதிபத்திய அரசுள் உருவாயின. ஏகாதிபத்திய நிதிமூலதனம் தேசிய எல்லைகளை கடந்து தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டது.

நான்காம் தொழிற்புரட்சி

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப யுகம்தான் நான்காம் தொழிற்புரட்சியின் காலம் என்று அழைக்கப்படுகிறது.   டிஜிட்டல் தொழில்நுட்பம்தான் நான்காம் தொழிற்புரட்சிக்கு அடிப்படையாய் அமைந்ததுள்ளது. இது மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி  நம்மை நகர்த்திச் செல்கிறது. கணினி பயன்பாடுகள் அதிகரித்ததன் விளைவாக மின்தரவுகள் பெருமளவில் குவிந்தன. இந்த  மின்தரவுகளைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்யும் தொழில் நுட்பம்தான் நான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையாக கருதப்படுகிறது. இதன் பங்கு அளப்பரியது.

The Fourth Industrial Revolution: Changing how we live and work …

இத்துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு ஆற்றியுள்ள பங்கும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு மின் தரவுகளின் அளவற்ற பெருக்கம்தான் அடிப்படைக் காரணியாக விளங்குகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு மீப்பெரு மின்தரவுகள், பொருட்களின் இணையம்,  செயற்கை நுண்ணறிவு, தானியங்கல், முப்பரிமாண அச்சு போன்ற   தொழில்நுட்பங்கள் உருவாக்கப் பட்டன. உண்மையில், மூன்றாம் தொழிற்புரட்சியின் நீட்சியாகத்தான் நான்காம் தொழிற்புரட்சி  தோன்றியது.

இனி, நான்காம் தொழிற்புரட்சியின் தனிச்சிறப்பான அம்சங்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

மின் தரவுகளின் உற்பத்தியும் பெருக்கமும்

ஒரு பொருள் குறித்த ஆய்வுக்கு அதைப் பற்றிய பல்வேறு விவரங்களைப் பல்வேறு வழிமுறைகளில் சேகரிக்கிறோம். இந்த விவரங்களைத் தரவுகள் என்றழைக்கிறோம். கணினியின் பயன்பாடுகள் அதிகரித்ததன் விளைவாக இணையத்தில் நாளுக்கு நாள் ஏராளமான தரவுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இவை மின் தரவுகள் என்றழைக்கப்படுகின்றன.

திறன்பேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  மேலும் மடிக்கணினி, கணினி போன்றவை அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் இணைய வசதி ஆகும்.  உலகளவில்  இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. .

முகநூல், டிவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், நிலைத்தகவல்கள் இடைவிடாமல் பதிவேற்றம் செய்வது  படங்கள், காணொளிகள் பகிர்வது, விருப்பம் தெரிவிப்பது, இணைய உரையாடல், போன்ற தளங்களில் காணொளிகள் பார்ப்பது போன்ற வலைத்தள நடவடிக்கைகள் போன்றவை அனைத்தும் உலகளவில் குவிந்து வரும் மின் தரவுகளுக்கான மிக முக்கியமான மூலங்களாக உள்ளன

Online is a custom coding and web design company

அதுமட்டுமின்றி, நாம் குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களில் எதைப் பார்க்கிறோம், எதற்கு விருப்பம் தெரிவிக்கிறோம், யாரையெல்லாம் பின் தொடர்கிறோம் என்பவை உள்ளிட்டு – எப்போது எங்கே பயணிக்கிறோம் என்கிற விவரங்கள் வரை மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன. இது தவிர, இணையத்தில் பொருட்கள் வாங்குவது, இணையம் மூலம் பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, யூடியூபில் வீடியோக்கள் பார்ப்பது உள்ளிட்ட நமது நடவடிக்கைகள் பற்றிய அனைத்து விவரங்களும் மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன. யூடியூபில் ஒருவர் எவ்வளவு நேரம் காணொளிகள் பார்க்க செலவிடுகிறார், எந்த மாதிரியான காணொளிகளைப் பார்க்கிறார், எந்த வரிசையில் பார்க்கிறார், எவற்றுக்கெல்லாம் விருப்பம் தெரிவிக்கிறார், எவற்றைப் பகிர்கிறார் போன்ற விவரங்களும்கூட மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன.

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தின் வழி சேகரிக்கப்படும் பெரும் எண்ணிக்கையிலான மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் புதிய புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. மீப்பெரு மின்தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் தொழில்நுட்பம்தான் செயற்கை நுண்ணறிவுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக விளங்குகின்றது.

மீப்பெரு மின் தரவுகள்( Big Data)

சமூகத்தின் அனைத்துச் செயல்பாடுகளையும் கணினிமயமாக்குவதன்  மூலம் மிகப்பெரிய அளவில் மின் தகவல்கள் உருவாக்கப்பட்டு, சேமிக்கப்படுகிறது. இதைத்தான் மீப்பெரு மின் தரவுகள் என்பார்கள். இதன்மூலம்  கோடிக்கணக்கான தரவுகள் கையாளப்படுகின்றன..  இந்த நிகழ்முறையில் இரண்டு விதமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒன்று எண்ணற்ற மின் தரவுகளை தொகுப்பது, இரண்டு, அவ்வாறு தொகுக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வுச் செய்தல் ஆகும். இந்த பணிகளை மேற்கொள்வதில்  அதிஉயர் கணனியின் பங்கு மிக முக்கியமானது.

3 Ways Big Data Can Influence Decision-Making for Organizations

ஒரு நிமிடத்திற்கு லட்சக் கணக்கான  வீடியோக்கள்  பார்க்கப்படுகின்றன. அதேபோல கூகுள் என்ற இணையத் தேடு தளத்தில் ஒரு நிமிடத்திற்கு பல லட்சம்  தகவல்களை  நாம் தேடுகிறோம் என்பது புள்ளி விவரம் சொல்கிறது. இப்படி நாம் தேடக்கூடிய தகவல்கள் அனைத்தும் ஒரு சீராக சேகரிக்கப்படுகின்றன. எந்தெந்த தகவல்கள் தேடப்படுகின்றன,  எவை அதிகமாக தேடப்படுகின்றன, அவற்றை மக்கள் ஏன் தேடுகிறார்கள், எந்த வயதுடையவர் அதை தேடுகிறார்கள் என்ற பல தகவல்களை தானாக சேகரிக்கப்படும். பின்னர் இத்தகைய தகவல்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வகைப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தும்.

இணையத்தால் இணைக்கப்பட்ட பொருட்கள் (Internet of Things)

இணையத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள், சென்சார் பொருத்தப்பட்ட வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் திறன் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட திறன் சாதனங்கள் என இணையத்தால் இணைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மின் தரவுகளை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தகவல்களைப் பெறுவதற்கு இணையதளத்தை மையப்படுத்தி இயங்கக்கூடிய மின் பொருட்கள் மிக முக்கியமாக இதனை செய்கிறது இதைத்தான்  பொருட்களின் இணையம்  என்று அழைக்கின்றனர்.

உலகத்தின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமாக முகநூல் உள்ளது. ஆனால் அதற்கென உள்ளடக்கத்தை அது தயாரிப்பதில்லை. பயனாளிகளே அதனை தயாரிக்கின்றனர். அதேபோல உலகத்தின் முன்னணி வாடகை  டாக்சி நிறுவனமான உபர் நிறுவனம் நேரடியாக எந்த டாக்சியையும் ஓட்டுவதில்லை. டாக்சி வைத்திருப்பவர்களை மட்டுமே அவர்கள் தொடர்பு கொண்டு அவர்களுக்கான சேவையை வழங்குகிறார்கள். இப்படி செய்யப்படும் அனைத்து தகவல் அடிப்படையிலான சேவைகள் வருங்காலத்தில் முக்கியப்பங்காற்றும்.

Top 10 Internet of Things stories of 2015 | CIO

இணையத்தின் பரவலால் அபரிமிதமான மின் தரவுகள் உற்பத்தியாகின்றன. மேலும், கணினித் துறையிலும், ஆலை உற்பத்தித் துறையிலும் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சிகள் இணைய தொழில்நுட்பத்தின் மூலம் மையப்பட்ட ரீதியில் இணைக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களும் இணையத்தோடு இணைக்கப்பட்ட நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்னணுவியல் சாதனங்களும் மின் தரவுகளுக்கான மூலங்களாக இருக்கின்றன. சுருக்கமாக கீழ்கண்ட வழிகளில் மின்தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. 1.பதிவேற்றம் செய்யப்படும் தகவல், படம், வீடியோ போன்ற மின் தரவுகள், 2. பதிவேற்றம் செய்தவற்றை நுகரும் நபர்கள் குறித்த மின் தரவுகள், 3.இணையத்தோடு இணைக்கப்பட்ட பொருட்கள் குறித்த மின் தரவுகள் ஆகியன.

இவ்வாறு குவியும் மின் தரவுகள் மீப்பெரும் மின்தரவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மீப்பெரும் மின் தரவுக் குவியலை பகுப்பாய்வு செய்வதில் அடைந்த சாதனைதான் நான்காம் தொழிற்புரட்சியின் அடித்தளமாக அமைந்தது.

செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence)

சாதாரண தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இயங்கும் கணினித் தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட செயலை மட்டும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டது. இது கணினியின் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் தன்மை உடையது. சாதாரண கணினிகளுக்கு வழங்கப்படும் கட்டளைகளை மனிதன் உருவாக்குகிறான். அவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டளைகளை எந்த நேரத்தில் எந்த அளவுகளில் கணினியிடம் கொடுத்து என்ன மாதிரியான வேலைகளை நிறைவேற்றுவது என்பதையும் மனிதன் தீர்மானிக்கிறான்.

ஆனால் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரம் என்பது மனித மூளையைப் போன்று இயல்பாக கற்றல், கேட்டல் மற்றும் செய்தல் ஆகியவற்றை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் சொந்த முறையில் சிந்திக்கவும், முடிவுகளை எடுக்கவுமான ஆற்றலைக் கொண்டதாகும். அதாவது செயற்கை நுண்ணறிவு இயந்திரமானது  கணினிகள் எடுக்கும் முடிவுகள் குறித்தும், அவை இயங்க வேண்டிய முறைகள் குறித்தும் சொந்த முறையில் எடுத்துக் கொள்கின்றது.

தீர்மானிக்கும் அல்லது முடிவெடுக்கும் ஆற்றலை அது சொந்த முறையில் பெறுவதற்குத் தேவையான மின் தரவுகள் அனைத்தையும் செயற்கை நுண்ணறி இயந்திரத்தில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு உள்ளீடு செய்யப்பட்ட ஏராளமான மின் தரவுகளை அனைத்து கோணத்திலும் நின்று அலசி ஆராய்ந்து பகுத்தாராய்ந்து முடிவெடுக்கவும், அதன் முடிவுகளை ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பொருத்தமான முறையில் நடைமுறைப்படுத்தவுமான தொழில்நுட்பங்களையும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் கொண்டிருக்கும்.

ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுக் கணினிகளுக்குக் கிட்டிய தரவுகளுக்கு வரம்புகள் இருந்தன. உதாரணமாக, தொன்னூறுகளில் ஐ.பி.எம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட சதுரங்கம் விளையாடும் நுண்ணறிவுக் கணினியின் உள்ளே அந்த விளையாட்டின் லட்சக்கணக்கான சாத்தியமான நகர்வுகள் பதியப்பட்டிருந்தன; அதனடிப்படையில் தன்னுடன் விளையாடும் மனிதனின் நகர்வுகளுக்குப் பொருத்தமான எதிர் நகர்வுகளை அது மேற்கொண்டது.

What Artificial Intelligence(AI) will look like in 100 years from now?

ஆனால் மீப்பெரும் மின் தரவுகளின் வரவுக்குப் பின், திறன்பேசிகளின் (Smart phones) மூலமோ, தனிப்பட்ட கணினிகளின் மூலமோ உலகமெங்கும் இணையத்தில் பல கோடிக்கணக்கானவர்கள் சதுரங்கம் விளையாடும் முறை, அவர்களின் நகர்வுகள் மற்றும் எதிர் நகர்வுகள், வெற்றி தோல்விகள் என பல நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் மின் தரவுகளாக சேமிக்கப்பட்டு பகுத்தாயப்பட்ட நகர்வுகள் செயற்கை நுண்ணறிக் கணினிக்குக் கிடைக்கின்றன.

மனிதர்கள் குறிப்பான ஒரு தருணத்தில் மேற்கொள்ளும் கோடிக்கணக்கான எதிர்நகர்வுகளின் வகைமாதிரிகளும் மீப்பெரும் மின் தரவுகளாகப் பகுப்பாய்வுக்குக் கிடைக்கின்றன.  இப்போது செயற்கை நுண்ணறிக் கணினி எடுக்கும் முடிவுகளை மீப்பெரும் மின் தரவுகள் மேலும் மேலும் துல்லியமாக்குகின்றன.

அதியுயர் திறன் கொண்ட கணினிகளாக இருந்தாலும் ஆரம்ப கால தொழில்நுட்பமானது குறிப்பிட்ட நிரல்வரிசையின் (Algorithms) அடிப்படையிலேயே செயல்பட்டன. ஆனால், செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பமானது மீப்பெரும் மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் ”சொந்தமாகக் கற்றுக் கொள்கின்றது”.  ஆக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்தான் நான்காவது தொழிற்புரட்சியின் மிக அடிப்படையான, முதன்மையான தொழில்நுட்பமாகும்.

இயந்திரக் கற்றுணர்தல் (Machine Learning)

பொதுவாக உடல் ரீதியாக அன்றாடம்  நாம் செய்யக்கூடிய வேலைகள் வருங்காலத்தில் இந்தச் செயற்கை நுண்ணறிவு மூலம் இயந்திர மனிதர்களை கொண்டு செயல்படுத்தபடும்.   உதாரணத்திற்கு டாக்சியை அழைக்க வேண்டும்  என்றால் பதிவு செய்த உடன் நாம் இருக்கும் இடத்திற்கு அந்த குறிப்பிட்ட நிறுவனத்தோடு இணைப்பு   செய்துள்ள டாக்சி ஓட்டுநர் காரை ஓட்டி வந்து நம்மை அழைத்துச் செல்வார். ஆனால் இனிமேல்  ஓட்டுநர் இல்லாமல் நாம் இருக்கும் இடத்திற்கு  டாக்சி வரும்.  அப்படியான ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியைத்தான் வருங்காலத்தில் நாம் பார்க்கப் போகிறோம்.  இது சம்பந்தமாக கூகுள் நிறுவனம் ஒரு ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தானாக ஒரு கார் சாலையில் பயணிப்பதுதான் அது.  இந்த ஆராய்ச்சியை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாக்கியுள்ளது. அதற்கு பெயர்தான் கூகுள் வேமோ தானியங்கி கார். இந்த கார்  குறிப்பிட்ட சாலையில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், எங்கு நிற்க வேண்டும், அந்த கார் முன்பின் எத்தனை பேர் வந்தாலும் எவ்வளவு இடைவேளை அது இருக்க வேண்டும் என்ற பல அம்சங்களை அதற்கு கற்றுக் கொடுத்துள்ளனர். இதை இயந்திரக் கற்றுணர்தல் (Machine Learning) என்பார்கள். தற்போது இது சுமார் 80 லட்சம்  கி.மீ வரை தானாக  பயணிக்கிறது என்று ஒரு ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.

இயந்திரக் கற்றுணர்தல் எனப்படும் முறையின் மூலம், மின் தரவுகளில் இருந்து கற்றுக் கொண்டு அதனடிப்படையில் துல்லியமான முடிவுகளை எடுப்பது மட்டுமின்றி – தான் செயல்படுவதற்குத் தேவையான நிரல்வரிசையைத் தானே எழுதும் ஆற்றலையும் பெறுகின்றது. இணையத் தேடுபொறி இயந்திரமான கூகுள் மற்றும் சமூக வலைத்தள கார்ப்பரேட்டான முகநூல் போன்ற நிறுவனங்கள் மீப்பெரும் மின் தரவுகளின் அடிப்படையிலான பகுத்தாய்தலையும், செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தையும் வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றன.

நுண்ணறி இயந்திரங்கள் கற்றுக் கொள்கின்றன,

உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களின் இணையச் செயல்பாடுகளை பல நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக மின் தரவுகளாகச் சேமித்து அவற்றைப் பகுத்தாய்வுக்கு உட்படுத்துவதன் வழியே நுண்ணறி இயந்திரங்கள் ”என்ன செய்ய வேண்டும்” என்பதைக் கற்றுக் கொள்கின்றன.

The 10 Best Free Artificial Intelligence And Machine Learning …

அப்படிக் கற்றுக் கொள்வதன் அடிப்படையிலேயே செயற்கை நுண்ணறி இயந்திரங்கள் தமது செயல்பாடுகளையும் முடிவுகளையும் தீர்மானிக்கின்றன. இவ்வாறு மீப்பெரும் மின் தரவுகளின் அடிப்படையில் கற்றுக் கொள்வது இயந்திரக் கற்றுணர்தல் (Machine Learning) எனப்படுகின்றது.

இதே தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட ஒரு நோயைக் குறித்து ஆராய்வதற்கோ, நிகழவிருக்கும் இயற்கை சீற்றம் ஒன்றைக் குறித்து ஆராய்வதற்கோ, குறிப்பிட்ட ஒரு நபரின் நிதி நடவடிக்கைகளை ஆராய்ந்து அவருக்குக் கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கோ பயன்படுத்த முடியும் – பயன்படுத்தப்பட்டும் வருகின்றது. தற்போது இயந்திரக் கற்றுணர்தலின் அடுத்த கட்டமாக ஆழ்ந்து கற்றுணர்தல் (Deep Learning) வந்துள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட விசயம் தொடர்பான தரவுகளை வெவ்வேறு பரிமாணங்களில் வைத்து பகுத்துப் பார்த்த பின் அதைப் பற்றி ஒரு இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும்.

ஒரு விசயத்தின் ஆதித் துவக்கம், அது எதிலிருந்து கிளைத்து வந்தது, எந்த வகையில் படிப்படியாக வளர்ந்து வந்தது என்பதைப் புரிந்து கொள்கின்றது; கிடைக்கும் விவரங்களைச் சலித்து அதிலிருந்து தொகுப்பான ஒரு முடிவுக்கு வருகின்றது; கடைசியில் ஒரு விசயத்தை அதை ஒத்த பிறவற்றுடன் ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வந்தடைகின்றது. இந்தப் போக்கில் மேலே குறிப்பிட்டுள்ள பிற காரணிகளும் இணைத்து பரிசீலிக்கப்பட்ட பின்னரே அறுதி முடிவு அல்லது தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

தானியங்கல் (Automation)

உற்பத்தி மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளில் தானியங்கிகளைப் பயன்படுத்துவது தற்போது பெருகி வருகின்றது. உற்பத்தி மற்றும் தயாரித்தல் நடவடிக்கையில் தானியங்கிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தொகுப்புத் தொழிலில் பொருள் தயாரிக்கும் நடவடிக்கையில் தானியங்கிகளின் முக்கியத்துவம் வளர்ந்து வந்துள்ளது.

சான்றாக, கார் தயாரிக்கும் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் அது ஒரு தொகுப்புத் தொழிலாகும். அதே போல மோட்டர்களை உருவாக்கும் தொழிலும் ஒரு தொகுப்புத் தொழிலாகும்.  எந்த ஒரு தொகுப்பு தொழிலிலும், பல கட்டங்கள் உள்ளன. இன்றைய தொகுப்புத் தொழில்கள் பல்வேறு உப தொழில்களோடு இணைந்து  பல மாநிலங்கள், பல தேசங்கள் என்று மிகவும் விரிவாகவும் சிக்கலாகவும் உள்ளது.

4 Reasons Why Automation Is Good For Your Company

கார் தயாரிப்பு என்ற தொகுப்புத் தயாரிப்பு நிகழ்முறையில், கார் என்ற முழுபொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு தேவையான பாகங்கள்,  நாடு முழுவதிலுமிருந்து சரியான நேரத்திற்கு தயாரிப்பாளரிடம் வந்தடைய வேண்டும். இன்றைய சூழலில் இணையச் செயல்பாட்டினால் அது சாத்தியமாகின்றது. காரை வாங்கும் வியாபாரி தனது தேவையை இணையத்த்தின் மூலம் கார் தொழிற்சாலையை சென்றடைகிறது. பாகங்கள் சரியாக வந்தடைந்ததும், தயாரிப்பு வேலைத் துவங்கி, உருவாக்கப்பட்ட பொருள் சோதனை செய்யப்பட்டு ஏற்றுமதிச் செய்யப்படுகின்றதுகார் தயாரிப்பின் அனைத்து நிகழ்முறையிலும் தானியங்கிகளே ஈடுபடுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. ரோபோட்டிக்ஸ் எனப்படும் தானியங்கிப் பொறியானது, இது போன்று பல்வேறு உற்பத்தித் தொழில்களில் தானியங்கல் (Automation) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி வரும் காலத்தில் பெரும்பான்மையான உற்பத்தித் துறையிலும் சேவைத் துறையிலும் மருத்துவ துறையிலும் இன்ன பிற துறைகளிலும் ரோபோக்கள், செயற்கை அறிவுஜீவிகள், முற்றிலும் தானியங்கியாகச் செயல்படும் இயந்திரங்களின் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தானியங்கி ரோபோக்கள்

ரோபோக்கள் என்பவை கோடிக்கணக்கில் உருவாக்கப்படும் பொருட்களின் தரத்தை பரிசோதனை வகைப் பிரித்து, தரம் பிரிப்பது என்பது புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக செய்ய இயலுகின்றது. அதேபோல, இத்தகைய கருவிகள் உற்பத்தியான பொருட்களை ஓயாமல், ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்கு ஓடி, சரியாக பேக் செய்யும் நேர்த்தி, ஒரு நிறுவனத்திற்கு பல வகையிலும் உதவுகின்றன. நிதி சேவை, உற்பத்தி, போக்குவரத் துறை, கப்பல் வாணிபம், பேக்கேஜிங் போன்ற பரிவர்த்தனை தொடர்பான துறைகளில் கிட்டத்தட்ட 40-50 சதவீதம் வரை தானியங்கி ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.

அவை, பார்ப்பதற்கும், தூரத்தைக் கணக்கிட்டு அளவிடுவதற்கும்,  கணினியிலிருந்து ஆணைகளை பெறுவதற்கும், எடை அளப்பதற்கும் ஆன கருவிகளை கொண்டிருக்கும். இக்கருவிகளை உணர்விகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த உண்ர்விகளின் துணைக் கொண்டு உற்பத்தி செய்யும் இடங்களிலிருந்து  மனிதர்களுடன் இனைந்து செயலாற்றி உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது

கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சைக்கு உதவும் ரோபோக்கள்

அமேசானை எடுத்துக் கொண்டால், இரண்டாயிரம் ரோபோக்கள் இரவு பகலாக இவ்வாறு வேலை செய்வதால், அதன் வியாபாரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நுகர்வோரைப் பொறுத்த வரையில், இணையத்தில் கேட்ட பொருளை ஒரு நாளில் வீட்டிற்கு வந்து சேர்க்கும்.

டிரைவர் இல்லாத லாரிகள் மற்றும் ரோபோக்கள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள கனிமச் சுரங்கங்களில் தொடர்ந்து பணியில் இருக்கின்றன.

விமான  நிலையங்களில் பயணிகளை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு ரோபோக்கள் பயன்படுத்துவது இன்று சாதாரணமாகிவிட்டது. பயணிகளின் பயணச் சீட்டுகளை ஸ்கேன் செய்வது, புகார்களைப் பதிவு செய்வது,  அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது போன்ற அனைத்துவிதமான வேலைகளையும் செய்கிறது.

எதிர்காலத்தில் இது போன்று பல்வேறு வகையான அடிமட்ட சேவைத் துறைகளிலும் நவீன இயந்திரங்கள், ரோபோக்கள் பணியில் இறங்கும்  என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கின்றது. இத்தகைய  ரோபோக்களை  வடிவமைக்கவும் அவற்றைப் பயன்படுத்தி உற்பத்தியிலும் சேவைத் தொழில்களில் ஈடுபடுத்துவது அதிகரித்த வண்ணம் உள்ளது. நம் நாட்டில் விற்கப்படும் தொழில்துறை ரோபோக்களில் அறுபது சதவீதத்தை இந்த  நிறுவனங்கள்தான் வாங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் செயலாக்கத் தொழில்கள்

அடுத்தபடியாக, தொடர் செயலாக்கத் தொழில்களில் கருவி/ உணர்விகளின் தாக்கம் பற்றி பார்ப்போம்.  தொடர் செயலாக்கத் தொழில்களில் உதாரணத்திற்கு சுரங்கத் தொழில் மற்றும் எண்ணெய் கிணறுகள். இவற்றில் பெரிய நிலபரப்பில் ஆழமான பகுதிகளில் பலவகையான கருவிகளும் உணர்விகளும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு இடைவிடாமல் வெப்பம், அழுத்தம், மற்றும், ஓட்டம் போன்ற அளவுகளை தொடர்ந்து கண்கானித்து அனுப்பிக் கொண்டே இருக்கும்.

சில நேரங்களில் அளவுகளின் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிவிடாமல் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டிருக்கும். மேலும் 1000 டிகிரி வெப்பத்தினை அளக்கும் அபாயகரமான அளவுகளை உணர்விகள் மற்றும் கருவிகளின் துணை கொண்டு அளக்கப்படுகின்றன.  இவை அனைத்தும் இணையம் மூலம், கருவிகளுடன் தொடர்பில் இருக்கும் கணினியின் செயல்பாடுகளாகும்.

Can Nanotechnology Build The AI Of The Future? – Analytics India …

கருவிகள், உணர்சிகளின் துல்லியம் மற்றும் உடன் கட்டுப்படுத்தும் திறன். எந்திரங்களுடன், மனிதர்களின் செயல் முறைகள்  நுகர்வோர் பயன்பாடுகளில் மிகவும் அவசியமானது என்றாலும், உணர்விகளின் துல்லியம் எல்லா பயன்பாடுகளுக்கும் அவசியம். ஏனென்றால், இந்தத் தொழில்நுட்பம் வரும்வரை, அவ்வளவு துல்லியம் இல்லாத முறைகளால், மனிதர்கள் எந்திரங்களை கட்டுப்படுத்தி கொண்டுதான் வந்துள்ளார்கள், துல்லியம் மற்றும் உடன் செயல்பாடு உணர்விகள்/கருவிகளின் இணைய பயன்பாடுகளின் அடிப்படைத் தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

நானோ தொழில்நுட்பம்

நுண் தொழில்நுட்பம் (Nano Technology) என்பது அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு அளவில் உள்ள பொருட்களை கையாளும் தொழிற்கலையாகும். இத்தொழில்நுட்பம், அணு மற்றும் மூலக்கூறியல் விஞ்ஞானத்தில் பெரும் பாய்ச்சலான வளர்ச்சியை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மருத்துவ துறையில் குறிப்பாக புற்றுநோய் சம்பந்தப்பட்ட விசயங்களில் நானோ தொழில்நுட்பம் பெரும் சாதனைப் புரிந்துவருகின்றது.

முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் (3D Printing)

முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் தற்போது வெகுவாக முன்னேறி உள்ளன. 3D  அச்சு எந்திரத்தில் அச்சடிக்க முடியாத பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு நாம் அணியும் ஆடைகள் தொடங்கி,  வாகனங்கள், கட்டுமானப் பகுதிகள், நம் உடலுடன் பொருத்தக் கூடிய செயற்கை  கை, கால்கள், எலும்புகள் தயாரிக்கப்படுகின்றன.  உணவு வகைகள் தொடங்கி மனித இதயம் வரை என கிட்டத்தட்ட நமக்குத் தேவையான எல்லாவற்றையுமே இன்று 3D பிரிண்டரைக் கொண்டு அச்சடித்துக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

வேற்று கிரகங்களுக்கு செயற்கைக் கோள் அனுப்பி ஆராய்ச்சியில் ஈடுபடும் வேளையில் செயற்கைக் கோளின் ஒரு பகுதி செயலிழந்து போகும் நிலை ஏற்படும் பட்சத்தில் அதை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அதற்காக ஒரு விண்கலத்தில் அப்பகுதியை பூமியிலிருந்து அனுப்பவேண்டும். ஆனால் அதற்கு பதிலாக ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரத்தை எடுத்து சென்றிருந்தால் அதன் மூல்ம அந்த  செயலிழந்த பகுதியை அங்கேயே உடனடியாக உருவாக்கிக் கொள்ளமுடியும். அந்தளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் என்று கருதப்படுகிறது.

What Can 3D Printing Bring to the Healthcare Industry in 2020 …

இனி நமக்கு ஏதாவது நோய் என்றால் நாம் மருத்துவரை அணுக வேண்டியதில்லை.  மாறாக நாம் ஒரு செயற்கை நுண்ணறிவுடன்  கூடிய கணினி முன்னால் போனலே போதும். நமக்கு என்ன தேவையோ அதைச் சொன்னால் அதற்கான தீர்வு மற்றும் என்ன மருந்து  சாப்பிட வேண்டும் உள்ளிட்ட அனைத்தையும் அது சொல்லிவிடும். நாம் நம் கையில் ஒரு விரலை இழந்து மருத்துவமனைக்குச் சென்றால் இயற்கைத் திசுக்களைப் பயன்படுத்தி எந்த விரல் உடைந்ததோ அந்த விரலை செயற்கையாக முப்பரிமாண வடிவில்  வடிவமைத்து நம் கையில் இயந்திரமே பொருத்தும்.  இதுகுறித்த ஆராய்ச்சியும் வெற்றிபெற்றுள்ளது.

மருத்துவ துறையில் உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சி

மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஆராய்வதற்கு பிலிப்ஸ், ஐ.பி.எம் மற்றும் ஆல்ஃபாபெட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்த நான்காண்டுகளில் சுமார் 7 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவுள்ளதாக ஃப்ரோஸ்ட் & சல்லிவன் நிறுவனம் கணித்துள்ளது. இண்டெல் நிறுவனம் மட்டும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தானியங்கிக் கார்களுக்காக சுமார் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

அதே போல் மரபணுக்களை ஆய்வு செய்து புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களைகளைக் கூட செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான முன்னறிப் புலனாய்வின் மூலம் கண்டறிந்து கொள்ள முடியும்.

மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality)

இப்போது நாம் அடர்ந்த வனப்பகுதிகளூக்கு செல்வதோ அல்லது ஆழ்கடலுக்குள் செல்வதோ உடனடியான எளிதான காரியமல்ல. ஆனால் மெய்நிகர் எதார்த்தம் என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு அடந்த காடுகளுக்குள்  அல்லது ஆழ்கடலுக்குள் இருப்பதைப் போன்ற உணர்வைப் பெறமுடியும்.

The Important Difference Between Virtual Reality, Augmented …

மோட்டோ ஜிபி 19 (MotoGP19) என்ற வீடியோ விளையாட்டில் நடத்தப்பட்ட மோட்டார் பந்தயம் மோட்டோ ஜிபியின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பப் பட்டது.  வரலாற்றில் இதுதான் முதல்முறையாக மோட்டோ ஜிபி ரேஸ், வீடியோ விளையாட்டு நடத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட யதார்த்தம் (Augumented Reality)

 நாம் சிக்கலான தொழில்நுட்பம் கொண்ட மின்னணுக்கருவிகள் கையாளும் போது இத்தகைய தொழில் நுட்பம் தேவைப்படும். அதாவது ஒரு மின்னணு கருவி செயலிழந்து போகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட கண்ணாடி போன்ற  கருவிகளைக் கொண்டு செயலிழந்த அல்லது பழுதான கருவியைச் சரிசெய்ய இயலும். அதாவது அந்த கண்ணாடியை பயன்படுத்தும் போது அந்த கருவியில் என்ன பழுது ஏற்பட்டுள்ளது, அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு வழிகாட்டும்

நான்காம் தொழில்புரட்சியின் சாதனைகள்

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு கதிரியக்கவியலாளரை விட, எக்ஸ்ரேயில் இருந்து ஒருவருக்கு இருக்கும் நோயைக் கண்டறிய முடியும். இணைப்பு வரிசை தொழிலாளர்களை விட, ரோபோக்கள் கார்களை வேகமாகவும், துல்லியமாகவும் தயாரிக்க முடியும். 3 டி பிரிண்டிங் உற்பத்தி வணிக மாதிரிகளை கிட்டத்தட்ட நினைத்துப்பார்க்க முடியாத வழிகளில் மாற்றும். தானாக இயங்கும் வாகனங்கள் தடைகளைத் தவிர்ப்பதன் மூலம் போக்குவரத்து ஓட்டத்தை மாற்றும். ரிமோட் சென்சிங் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் உதவிகொண்டு சில நிமிடங்களில் புயல்கள் தடுக்கப்படும்,  நீர் வடிகட்டியைக் கண்டுபிடித்து நகர வெள்ளத்தைத் தவிர்க்கப்படும். செங்குத்து பண்ணைகளால் (Verticle Farmining) உணவு பாதுகாப்பு நெருக்கடிகளைத் தீர்க்க முடியும். இயந்திரங்கள் இன்னும் கற்கின்றன. ஆனால் மனித உதவியுடன் அவர்கள் விரைவில் நம்மை விட புத்திசாலியாக இருப்பார்கள்.

தொழில்நுட்பம் சமூக உழைப்பின் பிரதிநிதி

விஞ்ஞான தொழில்நுட்பம்

வரலாற்றில் தொழில்நுட்பமானது, உற்பத்திக் கருவிகளோடு இணைந்துதான் செயலாற்றுகின்றன. தொழிலாளி உணவை உட்கொள்வதைப் போலவே இயந்திரமும் பிற வகையான மூலப்பொருட்களைப் பயன்படுத்துகிறது. அதி உயர்ந்த உற்பத்தித் திறனை உருவாக்கியுள்ளது. ஆனால் ஒரு தனிப்பட்ட தொழிலாளியைப் போல, இயந்திரம் என்பது உழைப்புச் செலுத்தும் ஒரு கருவி யில்லை.  ஆனால் இன்று வளர்ச்சிப் பெற்ற இயந்திரமாக இருந்தாலும் அல்லது தொழில்நுப்டமாக இருந்தாலும், அது சமூகத்தின் ஒட்டுமொத்த உழைப்பை பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. நான்காம் தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்கள் உற்பத்தியை உழைப்பிலிருந்து பிரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதுவே நான்காம் தொழில்புரட்சியின் தொழில்நுட்பங்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதை உணர்த்துகிறது.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *