குழந்தையை வளர்த்தெடுப்பதற்கு, கிராமம்தான் தேவை. குழந்தையின் வளர்ச்சிக்கு பலருடன் அணுகல், கற்றல் அணுகுமுறைகள் மற்றும் விருப்பங்கள் தேவைப்படுவதால், அவர்களுக்கான முக்கியமான கல்வியை இணையவழிக் கற்றல் முறையிடம் ஒருபோதும் ஒப்படைத்து விடக் கூடாது. 180 நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக சுமார் 120 கோடி குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியே இருப்பதால், அனைவராலும் இணையவழிக் கல்வியே மந்திரத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் கல்வியின் நோக்கங்களில் இருந்து வெகு தொலைவிலே இணையவழிக் கல்வி இருக்கிறது. இணையவழிக் கல்வி, கல்வி கற்பதற்கான துணையாக இருக்க முடியுமே தவிர, அது கல்வியைக் காக்க வந்ததொரு மீட்பராக ஒருபோதும் இருக்க முடியாது. இந்த கொரோனா வைரஸ் உலகில், நம் குழந்தைகளுக்கு மனிதர்களை மையமாகக் கொண்ட கற்றலை வழங்குவதற்கான முயற்சிகளை நாம் இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சிறந்த கற்றல் நேரடி முறையிலேயே சாத்தியம்
செயல் திறம் மிக்க, ஈடுபாடு கொண்ட குடிமக்களாக, தங்களுடைய வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதே கல்வியின் நோக்கம் ஆகும். நல்ல, திருப்திகரமான வேலைகளைத் தேடுவதோடு, இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கின்ற முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். இணையவழிக் கற்றல் அடிப்படைத் திறன்களை வளர்ப்பதற்கு உதவக்கூடும் என்றாலும், 21ஆம் நூற்றாண்டில் முழுமையாகச் செயல்படுபவராக ஒருவர் இருப்பதற்குத் தேவையான ஆர்வம், விமர்சன சிந்தனை, உணர்வு நுண்ணறிவு ஆகியவற்றை உருவாக்குவதற்கு அது நிச்சயமாக உதவாது.
உந்துதலுடனான களியாட்டமே கற்றலின் பெரும்பகுதியாக இருக்கின்றது. தங்களுடைய உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வதில் இயல்பாகவே குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர். நல்லதொரு ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வி, விளையாடுவதற்கும், ஆராய்வதற்கும், கற்றுக்கொள்வதற்குமான சூழலை உருவாக்கி வழங்க வேண்டும். அங்கே தொட்டுணரக்கூடிய வகையில் ஆய்வுகள் இருக்க வேண்டும். அதன் மூலம், குழந்தைகள் உலகின் கருத்தியல் மாதிரிகளை தங்களுடைய மனதில் உருவாக்கத் தொடங்கி, மேலும் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் அவற்றைச் செயலாக்கத் தொடங்குவார்கள். சிறுதுண்டுகளுடன் விளையாடுவதில் தொடங்கி, பின்னர் மிகவும் சிக்கலான கட்டிட கருவிகளைப் பயன்படுத்தி சிறந்த பொறியியலாளர் என்று பட்டம் பெறுவார்கள். இந்த வகையிலான உடல்ரீதியிலான தூண்டுதலை மெய்நிகர் உலகத்தால் மாணவர்களுக்கு வழங்கவே முடியாது.
நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நேரடியாக அனுபவிக்கும்போதுதான், அது நம்மிடையே ஆர்வத்தை உருவாக்குகிறது. ஏன் வானம் நீல நிறத்தில் இருக்கிறது? இவ்வளவு மின்னும் நட்சத்திரங்கள் இரவில் ஏன் தோன்றுகின்றன? மாம்பழம் எங்கே இருந்து வருகிறது? இத்தகைய கேள்விகள் குழந்தைகள் கேட்பதற்கும், ஆராய்வதற்குமான கேள்விகளாகும். இத்தகைய ஆய்வுகளுக்கு வழிகாட்டவும், அவர்களிடமிருக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டவும் தேவையானவற்றை ஆசிரியர்களும் பெற்றோர்களும் செய்ய வேண்டும். உண்மையில் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ளத் தொடங்குகையில், குழந்தைகள் இன்னும் விரிவாகக் கற்றுக்கொண்டு, மேலும் ஆழமாக ஈடுபடும் வகையில், தங்களுடைய வாழ்நாள் தேடலைத் தொடங்குவார்கள்.
வளர்ச்சி அவசியம்
இணையவழிக் கற்றல் முறையால் வாழ்நாள் முழுவதற்கும் ஆர்வத்தைத் தூண்ட முடியாது என்பதைப் போலவே, குழந்தைகளை நல்ல விமர்சன சிந்தனையாளர்களாக மாற்றுவதற்குப் போதுமானதாகவும் அது இருக்கவில்லை. ஆக்கப்பூர்வமான சிக்கல் தீர்க்கும் முறையும், கவனமாக விசாரிக்கும் செயல்முறையும் கூட்டிணைவானவை ஆகும். தங்களுடைய கருத்துக்களை வளர்த்தெடுத்துக் கொள்ளவும், வாதங்களை சோதித்தறிந்து கொள்ளவும் குழந்தைகள் ஆசிரியர்களுடனும், பிற குழந்தைகளுடனும் தொடர்பு கொள்ள வேண்டும். மிகக் கவனமான விவாதங்கள் மூலம் பல்பரிமாண முன்னோக்குகளை வகுத்து, தங்களுடைய பார்வையை அவர்கள் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். விமர்சன சிந்தனை, கவனமாகப் பரிசோதிப்பது போன்றவை கற்றறியும் கலைகளாகும். அவற்றை மனிதர்களுக்கிடையிலான தொடர்புகள், இலக்கு நோக்கிய விசாரணைகள் மூலமாகவே பெற முடியும். செயலற்ற கணினி தருகின்ற அறிவுறுத்தல்கள் வழியாக ஒருபோதும் அவற்றை அடைய முடியாது.
உணர்வு நுண்ணறிவு என்பது முதிர்வயதுக்குரியது அல்ல. வழக்கமான வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளைச் சமாளிக்கக் கூடிய, நல்ல மனநிலையுடன் இருக்கின்ற ஒருவர், தன்னிடமுள்ள சுய விழிப்புணர்வு, சுய மேலாண்மை, சமூக விழிப்புணர்வு மற்றும் உறவு மேலாண்மை போன்ற உணர்வு நுண்ணறிவின் அத்தியாவசியப் பண்புகளைக் கல்வியின் மூலமாகவே கற்றுக் கொள்கிறார். வழக்கமான பணிகளை இயந்திரங்களே அதிகமாக மேற்கொள்வதால், அறிவு சூப்பர் கிளௌடில் இருந்து எளிதில் பெறக்கூடிய பொருளாக மாற்றப்பட்டு, பகுப்பாய்வு செயலாக்கம் என்பது செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் அத்க ஆற்றல் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கும் இன்றைய நிலைமையில், இந்த மனித திறன்கள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. வழக்கமான பட்டறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த எளிய பகுப்பாய்வு சிக்கல் தீர்க்கும் முறை, இப்போது கணினிகளிடம் விடப்பட்டுள்ளது.
அறிவுத் திறனை (ஐ.க்யூ) விட இப்போது உணர்வு அளவே (ஈக்யூ) மிக முக்கியமானதாக இருக்கிறது. அடிப்படைத் திறன்களை கற்பிப்பதைத் தாண்டி, நமது கல்வி செல்ல வேண்டும். குழு உறுப்பினர்கள் மற்றும் திறமையான பயிற்றுநர்கள் இருக்கின்ற வளமையான கற்றல் சூழலில் குழந்தைகள் பயில வேண்டும். அந்தச் சூழலில். உணர்வுத் தேவைகள் தோன்ற வேண்டும். அவை பொருத்தமாக மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சவால்களின் மூலமாகவே, சுய மேலாண்மை மற்றும் சமூக விழிப்புணர்வை குழந்தைகள் வளர்த்துக் கொள்கிறார்கள். அணிகளாக இருந்து பணியாற்றுவது, முரண்களை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலமே, பெரும்பாலும் உணர்வுப்பூர்வமான கற்றல் கிடைக்கும். இந்த ஈக்யூவை உருவாக்குவது, 21ஆம் நூற்றாண்டில் வெற்றிகரமான வேலைவாய்ப்புகளுக்கு மிகவும் அவசியமானது.
கல்வியை இயந்திரங்களிடம் விட்டுவிட முடியாது
இணையவழிக் கற்றலால், விளையாட்டு, குறிப்பாக போட்டி விளையாட்டுகள் மூலம் நாம் பெறுகின்ற உடல்ரீதியான கற்றல் மற்றும் உணர்வு மேலாண்மையை வழங்க இயலாது. தங்கள் நிலையான பள்ளி பாடத்திட்டத்தின் பகுதியாக, பல விளையாட்டுகளையும் விளையாடுவதற்கு குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். சுய விழிப்புணர்வையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்வதற்கு, விளையாட்டு அணிகளின் ஒரு பகுதியாக அவர்கள் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு விடாமுயற்சியுடன் போட்டியிடக் கற்றுக்கொடுப்பதில், நாடகங்கள் மற்றும் வினாடி வினா போன்ற பிற பாடநெறி நடவடிக்கைகளுக்கும் சமபங்கு இருக்கிறது.
நெகிழ்வான குழந்தைகளே வாழ்க்கை, வேலை மற்றும் குடியுரிமை ஆகியவற்றில் நிலைத்து நிற்கக் கூடிய திறமையான பெரியவர்களை உருவாக்குகிறார்கள். கல்வி என்பது பெற்றோரின் முக்கிய பொறுப்பாக இருக்கின்றது. அந்தப் பொறுப்பை அவர்கள் இயந்திரங்களிடம் அவுட்சோர்ஸ் செய்து கொடுத்து விட முடியாது. உடனடி மனநிறைவை உறுதிப்படுத்தி தருகின்ற கல்வி தொழில்நுட்பங்களின் அபாய சங்கொலிக்கு எதிராக பெற்றோர்கள் அணிதிரள வேண்டும். அடிமைப்படுத்துகின்ற வகையில் பளபளப்பான திரைகளை உருவாக்க பொறியாளர்கள் கற்றுக் கொண்டிருக்கின்றனர். சூதாட்டம் மற்றும் வெகுமதி வழங்கும் வழிமுறைகள் குழந்தைகளை நீண்ட நேரம் கவர்ந்திழுக்கும் என்றாலும், குழந்தைகள் கணினித் திரைகளில் செலவழிக்கின்ற இந்த நேரம், மற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் கற்றலில் செலவழிக்கக்கூடிய விலைமதிப்பற்ற நேரத்தை அவர்களிடமிருந்து பறித்துக் கொள்வதாகவே இருக்கிறது.
மனிதர்களை ஒத்த இடைமுகம், மாணவர்களைக் கண்காணிப்பது, தனிப்பட்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உள்ளடக்கம், தொடர்ச்சியான தேர்வுகள் என்று இணையவழிக் கற்றலை சாத்தியமாக்குகின்ற தொழில்நுட்பங்களே, இணையவழிக் கற்றலை வழக்கற்றுப் போகவும் செய்கின்றன. அடிப்படைத் திறன்களில் மட்டும் சிறந்து விளங்குவதில் அர்த்தமில்லை. இவற்றை கணினிகள் மூலமாக சூப்பர் கிளௌடில் இன்னும் சிறப்பாக செய்ய முடியும்.
21ஆம் நூற்றாண்டிற்கான தீர்வுகளை உருவாக்க கற்பனை மற்றும் படைப்பாற்றல் தேவை. அவற்றை தொடர்ச்சியான மனித தொடர்புகளின் மூலம் மட்டுமே பெற முடியும். கொரோனா வைரஸ் உலகில், நமது கல்வி முறைகள் மனிதனை மையமாகக் கொண்ட கற்றலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். குழந்தைகளை வளர்த்தெடுக்க கிராமங்கள் தேவையே தவிர, கணினித் திரைகள் அல்ல.

ஜெயந்த் சின்ஹா எம்.பி
ஜார்கண்ட் மாநில ஹசாரிபாக் மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் மற்றும் நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர்
2020 மே 19, தி பிரிண்ட் இணைய இதழ்
தமிழில்
தா.சந்திரகுரு