நமது சமூகத்தில் ஒருவரை மிகவும் இழிவாக, திட்டுவதற்கு கழுதையை மட்டுமே அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் கழுதை பொது மக்களின் தினசரி வாழ்வில் மிகவும் உபயோகமான கால்நடை மிருகம். மிகவும் கேவலமன முறையில் பார்த்து வரும் மிருக வகை.
ஆனால் எனக்கு கழுதை மீது எப்போதும் ஒரு அன்பு உண்டு. எனது இளமைக் காலத்தில் பதினாறு வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததென பாடலில் கச்சிதமாக கழுதைக் குரலை பயன்படுத்தியிருப்பார்கள். சிரிப்பை வரவழைக்கும்.
பஞ்சகல்யாணி படத்தில் கழுதை மிகப் புகழ் பெற்றது. கழுதைக்காகவே படம் ஓடியது.
கழுதை மாதிரி கனைக்காதே, கழுத மாதிரி ஆயிடாத, போடா கழுதை, கழுதை மாதிரி மேஞ்சிட்டு திங்க வந்திட்டான் பாரு என்று ஏன் கழுதையை மையமிட்டே குடும்பங்களில் சாதரணமாக திட்டுகிறார்கள். ஆனால் துணி துவைக்கும் வண்ணார் பிரிவினருக்கு எவ்வளவு தூரம் அந்த மிருகம் பயன்பட்டது.
சூளை சோமசுந்தரநாயக்கர் அத்வைதிகளை திட்டும் போது ஒரு இடத்தில் “ வண்ணாரக் கழுதையாகிய முடிச்சூர் முதலி இரு சமய விளக்கஞ் சொன்னவன் கோவேறு கழுதையாகையால், நம்ம வண்ணாரக் கழுதையைக் காட்டிலும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தை காட்டினார் “ என்று குறிப்பிடுவார்.
கழுதையறியுமோ கற்பூர வாசனை – கழுதையின் இயல்பு பாரத்தைச் சுமப்பது. தன் மேல் ஏற்றப்பட்டிருக்கும் மூட்டை உப்பு மூட்டையோ, கற்பூர மூட்டையோ எதைக் குறித்தும் கவலை இல்லாமல் மூக்கு வாசனையில் கூட முகராமல் சென்று கொண்டிருப்பதால் இந்த பழமொழி வந்திருக்கலாம்.
The voice of a
வேதங்களை கசடறக் கற்று அதன் பொருள் புரியாத ஒருவனை வேதமென்னும் பெரும் சுமையைத் தூக்கும் பிராமண கழுதை என்று சாஸ்திரக்காரர்கள் கிண்டலடிப்பார்கள்.
பீகார் மற்றும் ஜார்கண்ட் பகுதியில் வழிபடும் மாரியம்மனை ஒத்த சீதலா தேவியின் வாகனம் கழுதை. இத் தேவியை திருநங்கைகள் பெரும்பாலும் வழிபடுவர்.
ஏழுகழுத வயதாகப் போகுது என்ற நாட்டுப்புறச் சொல்லாடல் கேள்விப்ப்ட்டிருப்பீர்கள்.கழுதைக்கு ஆயுள் நீண்டது. அல்பாயுசில் சாகாது. அவ்வாறு குறைந்த காலத்தில் கழுதை செத்தால் ஏதோ பெரிய இடர் வரப்போகிறது என்ற நம்பிக்கை
வாழ்த்து திரு நாகை வாகன தேவடியாள் பாழ்த்த குரலெடுத்து பாடினாள் – நேற்று கழுதை கெட்ட வண்ணான் கண்டேன் கண்டேனென்று பழுதையெடுத்தோடி வந்தான் பார்.
சங்கீதப் பயிற்சியும் சரீரவளமில்லாத ஒரு தேவடியாள் தம்புரா மீட்டி குரலெடுத்து பாட கேட்ட பொழுது அதி கர்ண கொடூரமாய் சகிக்க முடியாமல் தமக்கு வெறுப்புண்டாகி யாவரும் வாழ்த்தா நின்ற நாகையில் இருக்கும் அழகுள்ள தேவடியாள் தன்னுடைய பாழுங்குரலால் படிக்க ஆரம்பித்தாள். இப்பாடலைக் கேட்டவுடன் நேற்றைய தினத்தில் கழுதையக் காணாமல் ஊரெங்கும் தேடி அலைந்து கொண்டிருந்த வண்ணார் என் கழுதையைக் கண்டேன் கண்டேனென்று சந்தோசமாக ஒடி வந்து பார்த்தான் என காளமேகப் புலவரும் பாடியுள்ளார்.
விசய நகர நாயக்கர் காலச் சிற்பங்களில் கழுதை முக்கியமாக இடம்பெறும்.
சங்க காலத்தில் ஏதாவது குற்றம் செய்து விட்டால் அவரை அவமானப்படுத்த மக்கள் அனைவரும் அறியும்படி கரும்புள்ளி செம்புள்ளி இட்டு கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் விடும் பழக்கம் இருந்துள்ளது.
கழுதைக்கு மயிர் எத்தனை இருந்தால் என்ன? அதை எண்ணுவதால் ஆவது என்ன என்பதை கர்த்தப ரோம கண நியாயம் என்ற வடமொழியில் பழமொழியும் உண்டு.
கழுதை கெட்டா குட்டிசுவரு என்று ஏளனமாக திட்டுவதிலும் உண்மை இருக்கிறது. கழுதையின் நிறம் சாம்பல்.சாம்பலிலிருந்துதான் கழுதை பிறந்ததாக வேதத்தில் குறிப்பூ உள்ளது. மண் உள்ள இடத்தில் பிரண்டு படுக்கும் தன்மையும் இருக்கிறது.
தான் காரியம் ஆகணும்னா கழுதையானாலும் காலைப்பிடி என்ற பழமொழி கிருஷ்ணன் பிறக்கும் சூழலில் கம்சன், காவலாளிகளை நம்பாமல் கழுதயையும் காவலுக்கு வைத்திருந்தான். கழுதைக்கு முகரும் சக்தி அதிகம். ஆகையால் குழந்தை பிறந்ததும் கத்த தொடங்குவதற்கு முன்பாக வசுதேவன் கழுதை காலில் விழுந்து கத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம். கழுதையும் கத்தவில்லை. இந்த நிகழ்வை விளக்கும் சிற்பம் கர்நாடாகாவில் அமிர்தபுரம் அமிர்தேசுவரர் கோவிலில் வடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தானிப்பாடி அருகே சின்னியம்பேட்டை காமசூத்திர குளத்தில் கழுதை புணர்தல் சிற்பம் புகழ்பெற்றது.
கன்யாகுமரி மாவட்டம் கோட்டாறு சவேரியர் கோவில் அருகே முத்தாரம்மன் கோவில் கழுதை சந்தை மிகவும் புகழ் பெற்றது. இப்பொழுது நடைபெறுகிறதா என்று தெரியவில்லை. இங்குதான் ஏகாலியர் ஊர்மடம் என்ற உமிக்கரிமடத்து கல்வெட்டு உண்டு. ஆய்வுக்குரிய விசயம்.
இல்லாத பொருள் குறிக்குமிடத்து ஒரு கழுதப்பயலையும் காணோம் என்று விளிப்பதும்
கழுதையின் குரல் தொடக்கத்தில் பெரிதாகவே தொடங்கி உச்சத்துக்கு சென்று பின் இறங்கி மத்யமாகி படிபடிபடியே இறங்கி அடங்கி விடும் தன்மை கொண்டது. இதை கீழோர் அன்பும் பெரிதாகவே தொடங்கி வளர்ந்து பின் படிபடியாக தேய்ந்து பின் ஒன்றும் இல்லாத்தாகி விடுவதை வட மொழியில் ராயபருத நியாயம் என்று கூறுவர்.
வேத பாடியக்காரர் சாயணர் சந்தோச மிகுதியினால் கழுதை உரத்த குரலில் வெகுதூரம் கேட்கும்படி கத்தும். கழுதைக்கு சமஸ்கிருதத்தில் கர்தப, ராஸப, கர போன்ற பெயர்கள் காணப்படுகிறது. ராஸப என்றால் உரத்த குரலில் சத்தம் செய்வது. கர்தபகானே ஸ்ருகாலவிஸ்மய என்ற பழமொழிக்கு கழுதை சங்கீதம் பாடுகிறது. குள்ளநரி அதை ஆனந்தமாய் கேட்கிறது என்று பொருள்.
நாட்டுப்புற நம்பிக்கையில் சகுணம் பார்த்தலில் நான்கு வகை உண்டு. காண்பதும் கேட்பதும் சுபம் ( கருடன்), 2.) காண்பதும் கேட்பதும் அசுபம் (பூனை) 3.) காண்பது சுபம்; கேட்பது அசுபம் (குள்ள நரி), 4.) காண்பது அசுபம் கேட்பது சுபம் (கழுதை) . ஆனால் பல வீடுகளில் என்னைப் பார் யோகம் வரும் என்று கழுதை படத்தை வீட்டின் முன்பு மாட்டி வைத்து மரியாதை செய்து வரும் நம்பிக்கை இருக்கிறது.
வேதங்களில் முதண்மையானது ரிக்வேதம் ஒலி வடிவமானது. மங்களகரமான ஒலியை எழுப்புவதும் பிரபஞ்ச சிருஷ்டியை தொடக்கத்தில் படைக்கப்பட்டதுமான கழுதையே ரிக் வேதத்தின் வடிவம். மகாகவி பாரதி கழுதைக்குட்டியைத் தூக்கி கொண்டாடினானே இப்பொழுது புரிகிறதா அவன் வேதத்தில் திளைத்தவன். அதனால் கழுதையின் பெருமை அறிந்தவன்.
பட உதவி: சுளுந்தீ நாவலாசிரியர் முத்துநாகு. (இக்கழுதை படத்திற்காகவே சிறு குறிப்புகளுடன் பதிவிட நேர்ந்தது.)
உதவிய நூல்கள்;
1.விநோதரசமஞ்சரி
2.நியாய களஞ்சியம்
3. வேத விஞ்ஞானம். -ரெங்கையா முருகன்