மனித பரிணாம வளர்ச்சியின் முழுக்கதை (full story of human evolution in tamil) | பண்டைய குரங்கிலிருந்து லூசி வழியாக நாம் வரை, ஒரு நீண்ட வாசிப்பு

மனித பரிணாம வளர்ச்சியின் முழுக்கதை 

மனித பரிணாம வளர்ச்சியின் முழுக்கதை 

(பண்டைய குரங்கிலிருந்து லூசி வழியாக நாம் வரை – ஒரு நீண்ட வாசிப்பு)

ஜான் கவ்லெட் (தமிழில் – மோ. மோகனப்பிரியா)

அறிவுத் தேடலில், மனித பரிணாம வளர்ச்சியானது, உயிரினங்களின் தோற்றம் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், புதிய அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும்போது தவிர, பழங்கால மானுடவியல் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளுக்கு அறிவியல் ஆதரவும் நிதியும் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன – குறிப்பாக முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களுக்கு.

மனித பரிணாம வளர்ச்சியின் ஆரம்பகால சான்றுகளில் ஒன்று, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் டவுங் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. சுரங்கத் தொழிலாளர்கள், மனிதனைப் போன்ற பற்களைக் கொண்ட 28 இலட்சம் ஆண்டுகள் பழமையான குழந்தையின் மண்டை ஓட்டைக் கண்டெடுத்தனர். அதன் புதைபடிவ உடற்கூறியல், ஆரம்பகால மனிதர்கள் நிமிர்ந்து நடந்ததற்கான சான்றுகளை வழங்கியது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பண்டைய மனித கண்டுபிடிப்புகளுக்கான ஒரு முக்கிய இடமாக மாறிய வடக்கு எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில், லூசியின் கண்டுபிடிப்புடன் இந்த புரிதல் காலப்போக்கில் மேலும் ஒரு பாய்ச்சலை எடுத்தது.

சிறிய உடலும், ஒப்பீட்டளவில் சிறிய மூளையும் கொண்ட அந்தப் பெண்ணின் எலும்புக்கூட்டின் ஒரு பகுதி, மக்களின் கவனத்தைக் கவர்ந்தது. “பழங்கால ராக் ஸ்டார்” என்று அழைக்கப்படும் லூசி, இரு கால்களில் நடக்கும் மனிதனைப் போன்ற உயிரினங்கள் (ஹோமினின்கள் என பொதுவாக அழைக்கப்படுகின்றன) 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததற்கான முக்கிய புதைபடிவ ஆதாரத்தை முதன்முறையாக நமக்கு வழங்கியது. மனிதர்கள் இன்று நாம் இருக்கும் நிலையை எவ்வாறு அடைந்தார்கள் என்பதை விளக்குவதற்கான போட்டி உண்மையிலேயே தொடங்கியது.

அன்றிலிருந்து, புதிய புதைபடிவக் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நுட்பங்களின் அலைகளால் மனிதப் பரிமாணம் பற்றிய கருத்துகள் மீண்டும், மீண்டும் வியத்தகு முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிரின் ஒவ்வொரு புதிய பகுதியும் கண்டுபிடிக்கப்படும்போதும், அதன் உண்மைத்தன்மை குறித்த விவாதங்களும் பெரும்பாலும் எழுந்துள்ளன.

“மனிதன்” என்ற சொல்லே ஒரு விவாதப் பொருளாக உள்ளது. நாம் நியாண்டர்தால் மரபணுக்களைக் கொண்டிருந்தாலும், சுமார் 80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நமது ஹோமினின் வரலாற்றில் குறைந்தது 90% அவர்களுடன் பகிர்ந்து கொண்டாலும், பல அறிஞர்கள் இந்தச் சொல்லை நம்மைப் போன்ற நவீன மனிதர்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஹோமினின் இனத்தின் பரிணாம வளர்ச்சியானது, தொடக்க காலம் முதலே படிப்படியான மாற்றங்களைக் கொண்டதாகவே இருந்து வருகிறது. இருப்பினும், அவ்வப்போது சில விரைவான பரிணாம மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஹோமோ எனப்படும் நம்முடைய இனத்தின் புதைபடிவ ஆதாரங்கள், நம்மை மற்ற ஹோமினின்களிடமிருந்து முழுமையாகத் தனித்துப் பிரிக்க முடியாது என்பதையே காட்டுகின்றன.

(70 இலட்சம் ஆண்டுகளின் மனித பரிமாணம் – அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தரவு காட்சிப்படுத்தல் – காணொளி இணைப்பு)

இருப்பினும், ஆரம்பகால குரங்குகளிலிருந்து நவீன மனிதர்கள் வரை மனித பரிணாம வளர்ச்சியின் கதையைத் தொகுப்பதற்கு போதுமான அளவு ஒருமித்த கருத்து உள்ளது. இந்தக் கதையின் பெரும்பகுதி ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டது. கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகள் “மனிதகுலத்தின் தொட்டில்கள்” என்ற தங்கள் பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்கின்றன . மேற்கத்திய நாடுகளை விட, அவற்றின் பள்ளிக் குழந்தைகளுக்கு “நாம் எப்படி இங்கு வந்தோம்?” என்ற எளிய கேள்விக்கு மிகவும் முழுமையான பதிலை வழங்குகின்றன

ஆரம்பகால குரங்குகள் முதல் ‘மனிதமயமாக்கல்’ வரை (சுமார் 3.5 கோடி  முதல் 80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு)

மனித பரிணாம வளர்ச்சியின் கதை பொதுவாக நமது தொலைதூர மூதாதையர்கள் குரங்குகளிடமிருந்து பிரிந்து செல்லத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தொடங்குகிறது. குரங்குகளின் மூதாதையர்களை குறைந்தது 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கண்டறிய முடியும், மேலும் அவை புதைபடிவங்களாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மியோசீன் காலத்தில், உலகம் வெப்பமாகவும், ஈரப்பதமாகவும், காடுகளால் சூழப்பட்டதாகவும் இருந்தது. ஐரோப்பா முதல் சீனா வரை குரங்குகள் பரவலாக வாழ்ந்தன. இருப்பினும், அவை குறிப்பாக ஆப்பிரிக்காவில் அதிகமாகக் காணப்படுகின்றன. அங்கு பண்டைய எரிமலைகளின் வண்டல் படிவுகள் அவற்றின் எச்சங்களைப் பாதுகாக்கின்றன.

No description available.
லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமினின் இனங்கள்

நாம் வாழும் இந்த உலகம், குளிர்ச்சியான வெப்பநிலை மற்றும் சில பகுதிகளில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. இந்த மாற்றம் மத்திய தரைக்கடல் பகுதியைச் சுற்றி தெளிவாகத் தெரிந்தது. கண்டத் தட்டுகள் நகர்ந்ததால், ஜிப்ரால்டர் ஜலசந்தி மூடப்பட்டு, மத்திய தரைக்கடல் பல முறை வறண்டு போனது. இதனால், இன்றைய கடலின் அடிப்பகுதியில் பெரிய அளவிலான உப்புப் படிவுகள் உருவாகின. சுமார் 70 முதல் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல பகுதிகளிலும் பரவலான வறட்சி ஏற்பட்டதாக புவியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், உலகின் பெரும்பாலான பகுதிகளில் பருவகால மாற்றங்கள் தீவிரமடைந்தன – தாவர மற்றும் விலங்கு இனங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.

ஏற்கனவே 80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மை நோக்கி வழிவகுத்த ஹோமினின் வம்சம்  பண்டைய குரங்குகளிடமிருந்து பிரிந்தது  தொடங்கியிருக்கலாம். இந்தக் காலக்கணிப்பு, புதைபடிவங்களை விட மற்ற விலங்குகளுடனான டி.என்.ஏ மூலக்கூறு ஒப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது.

டி.என்.ஏ ஆய்வுகள், சிம்பன்சிகளும் அவற்றின் நெருங்கிய உறவினர்களான போனோபோ குரங்குகளும் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. சுமார் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கக் குரங்குகள் மற்ற முதனி விலங்குகளிடமிருந்து பிரிந்தது போன்ற நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பரிணாம நிகழ்வுகளுடன் ஒப்பிடுவதன் மூலம், ஹோமினின் வம்சம் எப்போது பிரிந்தது என்பதை மதிப்பிட முடியும்.

மரபணு அறிவியலின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு என்னவென்றால், கொரில்லாக்களை விட சிம்பன்சிகள்தான் மனிதர்களின் மிக நெருங்கிய உறவினர்கள். ஒரு சிம்பன்சி பேசும் திறன் கொண்டிருந்தால், அது நம்மிடம், “கொரில்லாக்கள் என் சகோதரர்கள் போல தோன்றலாம், ஆனால் உண்மையில் நான் உங்களுடனே மிகவும் நெருக்கமான உறவு கொண்டவன்” என்று கூறியிருக்கலாம். இவை இரண்டும் வெப்பமண்டல காடுகளில் வாழும் குரங்குகள் என்பதாலும், ஒத்த தகவமைப்புகளைக் கொண்டிருப்பதாலும் அவை ஒரே மாதிரியாகத் தெரிகின்றன. ஆனால், ஆரம்பகால ஹோமினின்கள் தங்கள் வறண்ட சூழலில் வாழ்வதற்கு எவ்வளவு மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. அதுவும் எவ்வளவு விரைவாக என்பதை இந்த உண்மை நமக்கு உணர்த்துகிறது.

சிம்பன்சியை “கடைசி பொதுவான மூதாதையர்” என்று கருதுவதில் இன்னும் சில விவாதங்கள் நிலவுகின்றன. சிம்பன்சிகளும் தங்கள் சொந்த தனித்துவமான தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. எனவே, சிம்பன்சியை “சிறந்த வாழும் மாதிரி” என்று அழைப்பது மிகவும் பொருத்தமானது. இருப்பினும், சிம்பன்சியின் சமூக நடத்தை, தொடர்பு மற்றும் கருவி தயாரிக்கும் திறன் ஆகியவை “ஹோமினிசேஷன்” என்று அழைக்கப்படும் மனித பரிணாம செயல்முறைகளைப் புரிந்துகொள்வதில் விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வழங்குகின்றன.

ஆரம்பகால ஹோமினின்கள் (சுமார் 70 லட்சம் முதல் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு)

இதுவரை அறியப்பட்ட மிகப் பழமையான ஹோமினின் புதைபடிவம் சுமார் 70 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இது ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியில், சாட் ஏரிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு கிடைத்த இந்த அரிய கண்டுபிடிப்பு சஹேலந்த்ரோபஸ் சாடென்சிஸ் என அழைக்கப்படுகிறது. இதன் மண்டை ஓடு (“டூமை” என்று அதன் கண்டுபிடிப்பாளர்களால் செல்லப்பெயர் பெற்றது), தொடை எலும்பு மற்றும் பற்கள் ஆகியவை கிடைத்துள்ளன – இவை அனைத்தும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என நம்பப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்புகள் மிகக் குறைவாக இருந்தபோதிலும், இந்த ஹோமினின் இரு கால்களில் நடக்கக்கூடியது மற்றும் மரங்களில் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்புகளைக் கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்த போதுமானதாக இருந்தன. மேலும், இந்த ஹோமினின் காடுகள் மற்றும் புல்வெளிகள் ஆகிய இரண்டு வகையான வாழ்விடங்களிலும் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.

No description available.
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு பல யுகங்களின் தொல்லியல் தளங்களைப் பாதுகாக்கிறது

அதன் பின்னர், சுமார் 10 லட்சம் ஆண்டுகளுக்கு நமது பதிவுகள் எதுவும் இல்லை. கென்யாவின் துகென் மலைகளில் கண்டெடுக்கப்பட்ட மற்றும் சுமார் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓரோரின் துகெனென்சிஸ் என்ற வேறொரு ஹோமினின் இனத்தின் சில துண்டு துண்டான எச்சங்களைத் தவிர.

ஹோமினின்கள் சுமார் 55 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு புதிய இனத்துடன், ஆர்டிபிதேகஸ் கடாபாவுடன் மீண்டும் தென்படுகின்றன. 1997 ஆம் ஆண்டில், வடக்கு எத்தியோப்பியாவின் மிடில் அவாஷ் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆர்டிபிதேகஸ் கடாபா (ஆ. கடாபா) வின் பகுதி தாடை எலும்பு மற்றும் பற்கள், பின்னர் தோன்றிய அனைத்து ஹோமினின்களுக்கும் வழிவகுத்த “தண்டு மூதாதையர்” ஏதுவாக இருந்திருக்கலாம் என்பது குறித்து மேலும் விளக்கமளிக்கின்றன. இந்த உயிரினங்களைப் பற்றிய விரிவான ஆய்வுகள், அவற்றின் முழுமையான உடற்கூறியல் விவரங்களையும், குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சூழலையும் வெளிப்படுத்தியுள்ளன. மேலும், ஆர்டிபிதேகஸ் குரங்குகள் மற்றும் பின்னர் தோன்றிய ஹோமினின்கள் இரண்டின் பண்புகளையும் கொண்டிருந்ததைக் காட்டுகின்றன

ஆர்டிபிதேகஸ் கடாபாவின் கண்டுபிடிப்பாளர்கள், அதன் உடல் விகிதாச்சாரத்தில் சிம்பன்சியைப் போல இருக்கவில்லை என்றும், சிம்பன்சியைப் போல மிகைப்படுத்தப்பட்ட மண்வெட்டி போன்ற முன் பற்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டனர். ஹோமினின்கள் மரங்களிலிருந்து சவன்னாக்களுக்கு இறங்கி வந்து, இரு கால்களில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்ற பழைய கோட்பாட்டையும் இது மாற்றியமைத்தது. மாறாக, ஆர்டிபிதேகஸ் அடர்ந்த காடுகளில் வாழ்ந்தது. இரு கால்களில் நடப்பது முதலில் மரக்கிளைகளில் நடப்பதற்கான ஒரு தகவமைப்பாக எழுந்தது என்ற கருத்தை இது ஆதரிக்கிறது – ஒருவேளை மேலே உள்ள கிளைகளைப் பற்றிக் கொண்டிருக்கும் போது.

தண்டு ஹோமினின் என்ற கருத்து சரியாக இருக்கலாம், ஆனால் சமீபத்திய கண்டுபிடிப்புகள் பல ஹோமினின் இனங்கள் ஒரே நேரத்தில் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகின்றன. ஆர்டிபிதேகஸ் புதைபடிவங்கள் தற்போது எத்தியோப்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், ஆப்பிரிக்காவின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற ஹோமினின் இனங்கள் வாழ்ந்திருக்கலாம். புவியியல் காரணங்களால், கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கைப் போல மற்ற பகுதிகள் இந்த ரகசியங்களை வெளிப்படுத்தவில்லை..

ஆர்டிபிதேகஸின் பாதங்கள் குரங்குகளைப் போலவே இருந்தன. அதன் பெருவிரல் பிற விரல்களிலிருந்து விலகி இருந்தது. இது மரங்களில் ஏறுவது அவற்றுக்கு இன்னும் முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. ஆர்டிபிதேகஸின் பிற்கால மற்றொரு இனமான ஆர்டிபிதேகஸ் ராமிடஸ், 1976 ஆம் ஆண்டு தான்சானியாவின் லேட்டோலியில் கண்டறியப்பட்ட பிரபலமான கால்தடங்களுக்கு ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது. லேட்டோலி கால்தடங்கள் முழுமையான மனித பண்புகளைக் காட்டுகின்றன. இந்த இரண்டு உயிரினங்களும் நேரடியாகத் தொடர்புடையவையாக இருக்க வேண்டுமெனில், பரிணாமம் மிக வேகமாக நிகழ்ந்திருக்க வேண்டும்.

அக்காலகட்ட ஹோமினின்களின் உடற்கூறியல் பண்புகளைப் புரிந்துகொள்வதில், ஆர்டிபிதேகஸ் முக்கியப் பங்காற்றுகிறது. இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகப் பழமையான இடுப்பு எலும்பைக் கொண்ட இந்த ஹோமினின், பிற்கால ஹோமினின்களைப் போலவே குட்டையான, படுகை வடிவிலான இடுப்பைக் கொண்டிருந்தது. இருப்பினும், அதன் கீழ்ப்பகுதி குரங்குகளின் இடுப்பை ஒத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆர்டிபிதேகஸ்ஸின் பற்கள், ஆப்பிரிக்கக் குரங்குகளை விட தடிமனான பற்சிப்பியைக் (எனாமல்) கொண்டிருந்தாலும், நவீன மனிதர்களை விட மெல்லியதாகவே இருந்தன. இந்தப் பண்பு, அவை அனைத்துண்ணிகள் என்பதற்கான சான்றாக அமைகிறது.

ஆஸ்ட்ராலோபிதேசின்கள் (சுமார் 43 இலட்சம் முதல் 14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு)

சுமார் 40 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஹோமினின்களின் மற்றொரு குழு தோன்றத் தொடங்கியது: ஆஸ்ட்ராலோபிதேகஸ் எனும் இனம். இந்த இனத்தின் பெயர், 100 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் ஒரு சுண்ணாம்பு குவாரியில் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்ட “டவுங் குழந்தை”யின் மண்டை ஓட்டின் பெயரால் சூட்டப்பட்டது.

“தெற்கு குரங்கு” என்று பொருள்படும் இந்த பெயர் சற்று தவறாக வழிநடத்தினாலும், ஆஸ்ட்ராலோபிதேசின்கள் நிச்சயமாக ஹோமினின்கள்தான். முழுமையாக இரு கால்களில் நடக்கும் இந்த உயிரினங்களின் பற்கள், நவீன மனிதர்களைப் போலவே அமைந்திருந்தன. அவற்றின் கோரைப் பற்கள் மிகவும் சிறியதாக இருந்தன – சில சமயங்களில் அசாதாரண அளவிற்கு – மேலும் அவை பல்வேறு வகைகளில் காணப்பட்டன.

No description available.
தென்னாப்பிரிக்காவில் உள்ள இப்பழமையான சுண்ணாம்புக்கல் சுரங்கம், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ‘டவுங் குழந்தை’ என்ற முக்கியமான கண்டுபிடிப்பு நடந்த இடமாகும்.

புதைபடிவக் கண்டுபிடிப்புகள் பெருகப் பெருக, இந்த குழுவில் குறைந்தது பத்து இனங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது “தகவமைப்பு கதிர்வீச்சு” எனப்படும் நிகழ்வைக் குறிக்கிறது. அதாவது, ஹோமினின்கள் மிகவும் வெற்றிகரமாக பரிணமித்து, பல்வேறு வாழ்விடங்கள் மற்றும் காலநிலைகளுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டன என்று பொருள். ஆஸ்ட்ராலோபிதேசின்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்பட்டாலும், அவை தெற்கிலிருந்து கிழக்கு வரை மற்றும் சாட் ஏரிக்கு அருகில் மேற்கு வரை பரவலாக வாழ்ந்தன. இந்த பரவல், ஹோமினின்கள் ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்க வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. இது ஆப்பிரிக்கக் குரங்குகளுடனான நமது பகிரப்பட்ட பரம்பரை காரணமாக நீண்ட காலமாக நம்பப்பட்டு வருகிறது.

கண்டறியப்பட்டவற்றில் மிகப் பழமையான ஆஸ்ட்ராலோபிதேகஸ் இனம், ஆ. அனமென்சிஸ் ஆகும். இது வடக்கு கென்யாவில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 40 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதனைத் தொடர்ந்து எத்தியோப்பியாவில்  ஆ. அஃபரென்சிஸ் (லூசி இந்த இனத்தைச் சேர்ந்தது) மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஆ. புரோமிதியஸ் ஆகிய இனங்கள் தோன்றின.

மேலும், ஆ. ஆப்பிரிக்கானஸ் மற்றும் ஆ. கர்ஹி போன்ற இனங்களுடன், மிகப்பெரிய மெல்லும் பற்களையும் குரங்கு அளவிலான மூளையையும் கொண்ட மற்றொரு குழுவும் உள்ளது. இவற்றின் பெரிய தாடைகள் மற்றும் மண்டை ஓடுகள் காரணமாக இவை “வலுவானவை” என்று அழைக்கப்பட்டன. பெரும்பாலும் ஆஸ்ட்ராலோபிதேகஸ் என்பதை விட பராந்த்ரோபஸ் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் இவை, தென்னாப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் மூன்று தனித்தனி இனங்களாக காணப்பட்டன. இவை குறைந்தது 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, சுமார் 14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தன.

(லூசியுடன் ஒரு நடைப்பயணம் – ஒரு சிம்பன்சி, ‘லூசி’ மற்றும் ஒரு நவீன மனிதனின் நடைமுறைகளை ஒப்பிடுதல். கலிபோர்னியா அறிவியல் அகாடமி.- காணொளி இணைப்பு)

அவற்றின் பற்களில் காணப்படும் நுண்ணிய உராய்வுக் கீறல்கள் குறித்த ஆய்வுகள், அவை பல்வேறு வகையான உணவுகளை உண்டன என்பதைக் காட்டுகின்றன. இருப்பினும், அவற்றின் பற்களின் அளவு மிகப் பெரியதாக இருப்பது, அந்த உணவுகள் பெரும்பாலும் குறைந்த சத்தூட்டம் உடையவை என்பதையும் உணர்த்துகிறது. புற்கள் மற்றும் கொடிகளே அவற்றின் உணவில் பெரும்பகுதியாக இருந்திருக்க வேண்டும். இந்த உயிரினங்களின் பெரிய கடைவாய் பற்களின் ஆதிக்கத்தால், அவற்றின் முன் பற்கள் சுருங்கிவிட்டன. அதனால், அவற்றின் வெட்டும் பற்கள் மற்றும் கோரைப் பற்கள் இன்று நம்முடையதை விட சிறியதாக இருந்தன.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் நீண்டுள்ள ரிஃப்ட் பள்ளத்தாக்கு, பெரும்பாலும் ஹோமினின் தோற்றத்தின் மையமாகக் கருதப்பட்டாலும், ஆஸ்ட்ராலோபிதேசின்களின் பரவல், ரிஃப்ட் பள்ளத்தாக்கு மட்டுமே மனிதகுலத்தின் தொட்டில் அல்ல என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான ஹோமினின் புதைபடிவங்கள் இந்தப் பகுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், தென்னாப்பிரிக்காவின் டோலமைட் குகைகளும் ஹோமினின் பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் அதிகரித்து வருகின்றன. மேலும், சாட் நாட்டில் கண்டறியப்பட்ட ஆ. பஹ்ரெல்கசாலி புதைபடிவம், ரிஃப்ட் பள்ளத்தாக்கின் மேற்கே வெகு தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோமோவின் தொடக்கங்கள் (சுமார் 28 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு)

நம்முடைய சொந்த இனமான ஹோமோ, ஆஸ்ட்ராலோபிதேசின்களிலிருந்து பரிணமித்தது என்பது உறுதி. ஆனால், அது எவ்வாறு, எப்போது நிகழ்ந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது மேலும் கடினமாக உள்ளது. ஏனெனில், 30 முதல் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தின் மண்டை ஓடு புதைபடிவங்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன.

இது தற்செயலானது; இந்தக் காலகட்டத்திற்கு முன்னும் பின்னும், நம்மிடம் ஏராளமான மண்டை ஓடுகள் உள்ளன. இந்தக் காலகட்டத்தில் ஹோமினின்கள் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததற்கு ஏராளமான பற்கள் சான்றாக உள்ளன. பா. எத்தியோபிகஸ் மற்றும்  ஆ. கர்ஹி போன்ற மண்டை ஓடுகளின் அரிய கண்டுபிடிப்புகள், வேறு ஹோமினின் இனங்கள் எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கப்படலாம் என்பதைக் காட்டுகின்றன.

No description available.
தான்சானியாவில் உள்ள ஓல்டுவை கோர்ஜ் அருங்காட்சியகத்தில் பாரந்த்ரோபஸ் மற்றும் ஹோமோ ஹேபிலிஸை சித்தரிக்கும் சிலை.

பிற்காலத்தில், ஹோமோ இனம் அதன் மிகப் பெரிய மூளையால் வேறுபடுகிறது – ஒரு சிம்பன்சியின் மூளையை விட சுமார் மூன்று மடங்கு பெரியது. ஆனால், தொடக்கத்தில் இது அப்படி இல்லை. ஆரம்ப காலத்தில், ஹோமோ இனத்தை ஆஸ்ட்ராலோபிதேசின்களிடமிருந்து வேறுபடுத்துவது கடினமாக இருந்திருக்கும். சில சிறிய உடற்கூறியல் விவரங்கள் மட்டுமே அவற்றை வேறுபடுத்திக் காட்டியிருக்கும், குறிப்பாக அவற்றின் பின்கடைவாய் மற்றும் முன்கடைவாய் பற்களின் வடிவம். எத்தியோப்பியாவில் உள்ள லெடி கெரரு மற்றும் ஹாதர் பகுதிகளிலிருந்தும், பின்னர் கென்யாவில் உள்ள கெமரோன் பகுதியிலிருந்தும் கிடைத்த துண்டு துண்டான தாடைகள் மற்றும் பற்கள், 28 முதல் 24 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது நேரடி மூதாதையர்களின் ஆரம்ப கால வரலாற்றை விளக்குகின்றன.

நாம் 20 இலட்சம் ஆண்டுகளை நெருங்கும்போது, ஹோமோ இனம் பிரபலமான மண்டை ஓடு மற்றும் மற்ற புதைபடிவ கண்டுபிடிப்புகளில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஓல்டுவை கோர்ஜ் (தான்சானியா), கிழக்கு துர்கானா (கென்யா) மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆப்பிரிக்காவில் குறைந்தது மூன்று இனங்கள் – ஹோமோ ஹபிலிஸ், ஹோமோ ருடால்பென்சிஸ் மற்றும் ஹோமோ எரெக்டஸ் . ஆச்சரியம் என்னவென்றால், இக்காலத்தைச் சேர்ந்த ஹோமோ புதைபடிவங்கள் திடீரென்று ஆப்பிரிக்காவிற்கு வெளியேயும் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக, நவீன ஜார்ஜியாவில் உள்ள டிமானிசியில் கிடைத்த புதைபடிவங்கள், ஓல்டுவையிலிருந்து கிடைத்தவை போலவே பழமையானவை

கல் கருவிகள் மற்றும் விலங்கு எலும்புகளில் காணப்படும் வெட்டு குறிகள் போன்ற தொல்பொருள் கண்டுபிடிப்புகள், இந்தப் புதைபடிவங்களுடன் இணைந்து, ஹோமோ இனம் தோன்றிய 10 இலட்சம் ஆண்டுகளுக்குள்ளாகவே மிகவும் வெற்றிகரமாக வளர்ச்சியடைந்து, ஆசியா முழுவதும் சீனா வரை பரவியது என்பதைக் காட்டுகின்றன. இம்முதல் குடியேறிகள் ஆரம்பகால ஹோமோ இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஜார்ஜியாவில் உள்ள டிமானிசி மற்றும் சீனாவில் உள்ள லான்டியன் ஆகிய இடங்களில் மட்டுமே ஆரம்பகால ஹோமோ புதைபடிவ எச்சங்கள் கிடைத்துள்ளன

இந்தப் பரந்த விரிவாக்கத்தை சாத்தியமாக்கிய தகவமைப்புகளில், தொழில்நுட்பம் கண்டிப்பாக ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கும். ஆரம்பகால மனித கலாச்சாரத்தில், கருவி தயாரித்தல் மிக முக்கியமான அம்சமாக இருந்தது. கல் கருவிகளின் கண்டுபிடிப்பு, இதற்கு ஒரு தெளிவான சான்றாக விளங்குகிறது.

கல் கருவிகள் தயாரிக்கப்பட்டதற்கான ஆரம்பகால தேதிகள் வியக்கத்தக்க வகையில் பின்னோக்கி நகர்ந்துள்ளன. 20 இலட்சம் ஆண்டு கால எல்லையானது 1970 வாக்கில் உடைக்கப்பட்டது. சமீபத்தில், கென்யாவின் லோமெக்வி மற்றும் நயாங்காவில் கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், 30 இலட்சம் ஆண்டு கால எல்லையும் தாண்டப்பட்டது. இந்த கருவிகளை யார் செய்தார்கள் என்று நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்பகால ஹோமோ இனம் ஆஸ்ட்ராலோபிதேசின்கள் காலத்திலேயே கல் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளின் ஐசக் இந்த கல் கருவிகளை “கற்கால முகவரி அட்டைகள்” என்று வருணித்தார். ஹோமினின்கள் எங்கு சென்றார்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்துகொள்வதில் இந்த “அட்டைகள்” மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

விவாதப் புள்ளி : முதல் கருவிகளை உருவாக்கியது யார் ?

ஒரு தலைமுறைக்கு முன்பு, கருவிகளின் தோற்றமும் ஹோமோ இனத்தின் தோற்றமும் பிரிக்க முடியாதவை என்றும், அவை ஆரம்பகால மனித கலாச்சாரத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய படியைக் குறிக்கின்றன என்றும் கருதப்பட்டது. ஆனால், இன்று வாழும் விலங்குகள் குறித்த விரிவான ஆய்வுகளின் விளைவாக, இது குறித்த புதிய கண்ணோட்டம் உருவாகியுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், சிம்பன்சிகள் பல்வேறு கருவிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவற்றைத் திறம்படப் பயன்படுத்தவும் செய்கின்றன. தென் அமெரிக்காவின் சிறிய கேபுசின் குரங்குகளும் இவ்வாறே செய்கின்றன. பறவைகளும் கருவி பயன்பாட்டில் சிறந்து விளங்குகின்றன. குறிப்பாக நியூ கலிடோனியன் காகம். அவற்றின் கருவிகள் எளிமையானவையாக இருக்கலாம் – பெரும்பாலும் தாவரப் பொருட்களால் ஆனவை – ஆனால் அவை கற்களை சுத்தியலாகப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியது.

No description available.
கென்ய ஆராய்ச்சியாளர்களான ஜேம்ஸ் முனீன் மற்றும் ஸ்டீபன் ருசினா ஆகியோர்  வண்டல்களில் கண்டெடுக்கப்பட்ட மத்திய கற்காலக் கருவியை ஆய்வு செய்கின்றனர்.

விலங்குகளின் இந்த நடத்தை கலாச்சார ரீதியாக பரிணமித்து, கற்றறிந்த பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. நாம், ஹோமோ சேபியன்கள், அனைத்து உயிரினங்களிலும் மிகவும் கலாச்சார ரீதியாக வளர்ச்சியடைந்த உயிரினம் என்பதை கருத்தில் கொண்டால், அனைத்து ஹோமினின்களும் கருவிகளை உருவாக்கி பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், அனைத்து புதைபடிவ ஹோமினின்களும் சிம்பன்சியை விட நம்முடன் மிக நெருக்கமான உறவு கொண்டவை. சிம்பன்சிகளே கருவிகளை தொடர்ச்சியாக உருவாக்கி பயன்படுத்தும் உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஆரம்பகால கற்கருவிகளை உருவாக்கியது யார் என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை. பாராந்த்ரோபஸ் மற்றும் பிற ஆஸ்ட்ராலோபிதேசின்கள் இறுதியில் அழிந்துபோன பிறகும், கருவி தயாரித்தல் தொடர்ந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த இனங்களுக்கும் முன்பே சில இனங்கள் கருவிகளைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது என்பதையும் நாம் நிராகரிக்க முடியாது.

பெரும்பாலான ஆரம்பகால கல் கருவிகள், சுமார் 30 முதல் 18 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவை, “ஓல்டோவன் பாரம்பரியத்தைச்” சேர்ந்தவை. இந்தப் பெயர், தான்சானியாவில் உள்ள ஓல்டுவை கோர்ஜ் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட ஏராளமான கருவிகளைக் குறிக்கிறது. இவை பொதுவாக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிமலைக் கற்கள் அல்லது குவார்ட்சைட் பாறைகளிலிருந்து தயாரிக்கப்பட்டன. வெட்டக்கூடிய கனமான கருவிகள் மற்றும் கூர்மையான கல் செதில்கள் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. விலங்குகளை வெட்டுவது, தாவர உணவுகளைத் தயாரிப்பது மற்றும் மரக் கருவிகளை வடிவமைப்பது போன்ற பணிகளுக்கு இவை பயன்பட்டன என்று கருதப்படுகிறது. (மரக் கருவிகள் நமக்குக் கிடைக்கும் வகையில் பாதுகாக்கப்படவில்லை.)

இந்தக் கருவித்தொகுப்பு ஆரம்பகால ஹோமோ இனங்களுக்கு மாறுபட்ட சூழல்களில் உயிர்வாழ்வதற்கான ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது. 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஜோர்டான், வட இந்தியா மற்றும் சீனா உட்பட புதிய பகுதிகளுக்குப் பரவுவதற்கும் இந்தக் கருவிகள் உதவின.

ஹோமோ எரெக்டஸ் (சுமார் 18 இலட்சம் முதல் 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு)

வேகமாகப் பரவிய ஆஸ்ட்ராலோபிதேசின்களுக்கு பிறகு, அடுத்த 15 இலட்சம் ஆண்டுகளில் மனித பரிணாமம் ஒப்பீட்டளவில் எளிமையாக இருந்தது. ஹோமோ எரெக்டஸ் என்ற ஒரே ஒரு ஹோமினின் இனம் முக்கியத்துவம் பெற்றது. இக்காலகட்டத்தின் தொல்பொருள் ஆய்வுகளில் கைக்கோடரி அல்லது அச்சுலியன் பாரம்பரியம் ஆதிக்கம் செலுத்தியது.

ஹோமோ எரெக்டஸ் சுமார் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இனமாகும். அதன் புதைபடிவ எச்சங்கள் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய மற்றும் தூர கிழக்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இது முந்தைய ஹோமினின்களை விட மிகவும் மனித உருவத்தை ஒத்திருந்தது. ஆரம்பகால ஹோமோ எரெக்டஸ் மண்டை ஓடுகளின் அளவு சுமார் 500 கன சென்டிமீட்டர் ஆக இருந்தது. பிற்காலத்தில் அது 1,000 கன சென்டிமீட்டர்க்கும் அதிகமாக வளர்ந்தது. இது நவீன மனிதர்களின் மண்டை ஓட்டின் கொள்ளளவில் சுமார் 70% ஆகும். அதன் கை மற்றும் கால் எலும்புகளின் விகிதாச்சாரமும் நவீன மனிதர்களைப் போலவே இருந்தது. இது நேராக நின்று நடக்கும் திறனைக் காட்டுகிறது. ஜார்ஜியாவில் உள்ள டிமானிசி மற்றும் கென்யாவில் உள்ள “துர்கானா பையன்” என்ற புதைபடிவ எலும்புக்கூடு இதற்கு சான்றாக அமைகின்றன.

No description available.
ஹோமோ எரெக்டஸ் மண்டை ஓடு மற்றும் முக புனரமைப்பு.

ஹோமோ எரெக்டஸ் பரந்த பரவலையும் திறமையையும் கொண்டிருந்தது என்பதை அதன் கருவிகள் உறுதிப்படுத்துகின்றன. இந்த கருவிகள் ஆப்பிரிக்கா முழுவதும் மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. கைக்கோடரி சுமார் 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. அன்றாட தேவைகளுக்கான பல்துறை கருவியாக இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த கைக்கோடரிகள் எரிமலைக் கற்களாலோ அல்லது குவார்ட்சைட்டாலோ செய்யப்பட்டன. கைக்கோடரி தயாரிக்கும் தொழில்நுட்பம் மிக விரைவாகப் பரவியது. இது “கருத்துப் பரிமாற்றத்தின்” முதல் பெரிய நிகழ்வாக இருந்திருக்கலாம். சில கைக்கோடரிகள் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டதால், அவை முதல் கலை வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. அவை அழகியல் உணர்வின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

உண்மையில், ஹோமோ எரெக்டஸ் என்பது ஒரே மாதிரியான பல இனங்களின் குழுவாக இருந்திருக்கலாம். இந்த இனங்கள் ஒன்றுக்கொன்று இணையாக வாழ்ந்திருக்கலாம் மற்றும் சில இடங்களில் மாறுபட்ட பண்புகளைக் கொண்டிருந்திருக்கலாம். டிமானிசி என்ற ஒரே தொல்லியல் தளத்தில் கண்டறியப்பட்ட ஐந்து மண்டை ஓடுகள், ஆப்பிரிக்கா முழுவதும் கண்டறியப்பட்ட மண்டை ஓடுகளைப் போலவே பன்முகத்தன்மை கொண்டவை. தற்போது கிடைத்துள்ள கண்டுபிடிப்புகள், ஜார்ஜியாவிலிருந்து சீனா வரை தெற்காசியா முழுவதும் நடுவில் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லாத ஒரு “புவியியல் டோனட்டை” உருவாக்குகின்றன.

தூரக் கிழக்கு ஹோமோ எரெக்டஸ் ஆப்பிரிக்க இனங்களுடன் மிகவும் ஒத்திருந்தாலும், இந்த பகுதியில் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக, ஹோமோ ஃப்ளோரேசியன்சிஸ் என்ற குள்ள ஹோமினின் இனம் 2003-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. “தி ஹாபிட்” என்ற செல்லப்பெயர் கொண்ட இந்த இனத்தின் உடற்கூறியல் அமைப்பு, குறிப்பாக அதன் மணிக்கட்டுகள், ஹோமோ எரெக்டஸ்ஸை விட முந்தைய ஹோமோ இனத்திலிருந்து பிரிந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஹோமோ நலேடி ஒரு பழமையான தோற்றமுடைய இனமாகும். இது சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது ஆரம்பகால ஹோமோ எரெக்டஸ்ஸின் சிறிய மூளையுடைய சந்ததியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது நீரோடைகளுக்கு அருகிலுள்ள காடுகளில் வாழ்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் உயிர் பிழைத்திருக்கலாம்.

கைக்கோடாரிகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. கைக்கோடாரிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் பல இடங்களுக்குப் பரவியிருந்தாலும், சில பகுதிகளில் இல்லை. எடுத்துக்காட்டாக, தூரக் கிழக்கின் பெரும்பகுதியில் கைக்கோடாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில கைக்கோடாரிகள் சீனாவில் கண்டறியப்பட்டாலும், பெய்ஜிங்கிற்கு அருகிலுள்ள ஜோகோடியன் என்ற புதைபடிவ தளத்தில் அவை இல்லை. 40-க்கும் மேற்பட்ட ஹோமோ எரெக்டஸ் நபர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட இந்த தளத்தில் கைக்கோடாரிகள் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில், பனியுகங்களும், மிதவெப்ப மண்டல காலங்களும் மாறி மாறி வந்ததால், கடந்த பத்து இலட்சம் ஆண்டுகளில் ஆரம்பகால மனித வாழ்க்கை குறித்த பல ஆதாரங்கள் அழிந்துவிட்டன. ஹோமோ எரெக்டஸ் வாழ்ந்ததற்கான உறுதியான சான்றுகள் இல்லை. ஆனால், அதன் சகோதர இனமான ஹோமோ ஆன்டெசெஸர், வடக்கு ஸ்பெயினின் அட்டாபுர்காவில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அவை சுமார் 14 இலட்சம் ஆண்டுகள் பழமையானவை. இந்த கடினமான காலநிலையில், “பழமையான” மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால், பிரான்சின் மத்தியதரைக் கடற்கரைக்கு அருகிலுள்ள பைரனீஸ் மலைத்தொடரில் உள்ள அராகோ குகையில் கிடைத்த சான்றுகள், அவர்கள் 6,00,000 ஆண்டுகளுக்கு முன்பே கலைமான்களை வேட்டையாடி, கடுமையான குளிரையும் தாங்கி வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகின்றன.

கென்யாவின் கிலோம்பேயில் கண்டுபிடிக்கப்பட்ட பத்து லட்சம் ஆண்டுகள் பழமையான கை கோடரி

ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த ஹோமினின்களைப் பற்றி நாம் கூறக்கூடிய மூன்று முக்கிய விஷயங்கள் இவை: அவர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவி வாழ்ந்தார்கள் (எனவே அவர்கள் மிகவும் தகவமைப்பு திறன் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும்); அவர்களில் சிலர் நெருப்பைப் பயன்படுத்தும் அளவுக்கு தொழில்நுட்ப அறிவு பெற்றிருந்தார்கள்; மேலும் அவர்கள் பெரிய மூளையை வளர்த்துக் கொண்டிருந்தார்கள், இது அவர்களின் சமூக நடத்தையைப் பிரதிபலிக்கிறது.

நெருப்பு மனித பரிணாமத்தில் மிக முக்கியமான பங்காற்றியுள்ளது. இது சமைத்தல் மூலம் உணவை சத்தானதாக மாற்றி, மூளைக்குத் தேவையான சக்தியை அளித்தது. மேலும், இரவில் நெருப்பைச் சுற்றிக்கூடி, சமூக உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் நெருப்பு உதவியது. நெருப்பு மற்ற தொழில்நுட்பங்களுக்கும் வழிவகுத்தது. காலப்போக்கில், இந்த ஆரம்பகால மனிதர்கள் மட்பாண்டங்கள் செய்தல் மற்றும் உலோக வேலைகளைச் செய்யக் கற்றுக்கொண்டார்கள்.

நெருப்பைக் கட்டுப்படுத்தும் திறன் எப்போது தோன்றியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அது குறைந்தபட்சம் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கலாம். ஆரம்பத்தில், மனிதர்கள் இயற்கையாக ஏற்படும் நெருப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள். பின்னர், தாங்களாகவே நெருப்பை உருவாக்கக் கற்றுக்கொண்டார்கள். இது அவர்களை நெருப்பைத் தேடி அலைய வேண்டிய நிலையிலிருந்து விடுவித்தது.

விவாதப் புள்ளி: பெரிய மூளையின் நன்மைகள்

மூளையின் அளவைப் பொறுத்தவரை, ஹோமோ எரெக்டஸ் நிச்சயமாக ஒரே மாதிரியாக இல்லை. ஹோமோவில் பெரும்பாலான மூளை வளர்ச்சி ஒப்பீட்டளவில் சமீபத்தில் நிகழ்ந்தது என்ற பொதுவான கருத்துக்கு மாறாக, ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நவீன மனிதர்களைப் போலவே சில ஹோமோ எரெக்டஸ் இனங்கள் பெரிய மூளையைக் கொண்டிருந்தன.

புத்திசாலித்தனம் ஒரு இலக்கு என்று நினைப்பது இயல்பானது என்றாலும், நம்முடையதைப் போன்ற பெரிய மூளைகள் நமது உடலின் ஆற்றலில் 20 முதல் 30 சதவீதத்தை எடுத்துக் கொள்கின்றன. எனவே, அவை தங்கள் செலவை ஈடுகட்ட வேண்டும். பெரும்பாலான உயிரினங்கள் ஹோமினின்களை விட மிகச் சிறிய மூளையுடன் வெற்றிகரமாக வாழ்கின்றன. இருபது இலட்சம் ஆண்டுகளில் மூளையின் அளவு மூன்று மடங்கு அதிகரித்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. உயர்தர உணவு மற்றும் பிற முக்கிய உறுப்புகளின் அளவைக் குறைப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய விரிவாக்கம் சாத்தியமானது.

No description available.
பல்வேறு ஹோமோ இனங்களின் மண்டை ஓடு அம்சங்களின் ஒப்பீடு. 

பெரிய மூளை அதிக ஆற்றலை செலவழிப்பதால், அது பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும். இதற்கான காரணங்களில் ஒன்று “சமூக மூளை கருதுகோள்“. இந்த கருதுகோளின்படி, சில சூழல்களில், பெரிய குழுக்களாக வாழ்வது சுற்றுச்சூழல் உயிர்வாழ்வுக்கு சாதகமாக இருந்தது. 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, ஹோமினின்கள் தங்கள் கல் கருவிகளை 5 முதல் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு எடுத்துச் சென்றதையும், சில சமயங்களில் 20 முதல் 30 கிலோமீட்டர் தொலைவுக்கு கூட எடுத்துச் சென்றதையும் நாம் அறிவோம். இது குரங்குகளை விட மிக அதிக தூரம்.  பெரிய குழுக்களை சமூக ரீதியாக நிர்வகிப்பது மிகவும் சவாலானது. இந்த சவால்தான் பெரிய மூளையை வளர்ப்பதற்கான ஒரு ஊக்கமாக இருந்திருக்கலாம்.

நவீன வாழ்க்கையை வடிவமைத்த மாற்றங்கள் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. ஆப்பிரிக்காவில், ஹோமோ எரெக்டஸ் இனத்திலிருந்து ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் போன்ற பெரிய மூளையுடைய ஹோமினின்கள் தோன்றின. இந்த இனம் ஐரோப்பாவிலும் காணப்பட்டது.

ஆரம்பகால நவீன மனித புதைபடிவங்கள் கிடைப்பதற்கு முன்பே, தொல்பொருள் ஆராய்ச்சியில் சில முக்கிய முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக, ஈட்டி முனைகள் தோன்றியதும், பொருட்களை நீண்ட தூரம் எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள். கல் ஈட்டி முனைகள் தயாரிப்பதற்கு, அவற்றை மரக் கம்புகளில் பொருத்த வேண்டும். இதற்கு பசை அல்லது நார் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த நுட்பத்தில் ஹோமினின்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதை ஈட்டி முனைகள் காட்டுகின்றன. தென்னாப்பிரிக்காவில், இந்த முன்னேற்றங்கள் சுமார் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன.

பெரிய மூளை, பெரிய சமூகக் குழுக்கள் மற்றும் சிறந்த ஆயுதங்கள் இவற்றின் உதவியுடன், ஹோமினின்கள் தனித்துவமான வேட்டை முறைகளை வளர்த்துக் கொண்டன. அவை பெரும்பாலும் பதுங்கி இருந்து வேட்டையாடின. வயதான அல்லது இளம் விலங்குகளை விட, முதன்மை விலங்குகளையே அவை வேட்டையாடின. இந்த முறை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கலாம். ஆனால், கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளில் இந்த நடைமுறை மிகவும் தீவிரமடைந்தது. இதனால், மாமத், மாஸ்டோடான் மற்றும் ராட்சத மார்சுபியல் உட்பட பல பெரிய விலங்குகள் அழிந்து போயின.

இந்த முன்னேற்றங்களுக்கு சான்றாக, ஹோமினின்களின் உயர்ந்த திறமையை நாம் காணலாம். உதாரணமாக, லெவல்லோயிஸ் என்ற கல் கருவி தயாரிக்கும் நுட்பத்தில், கவனமாக கல்லை செதுக்கி ஒரு மையப்பகுதியை உருவாக்குவார்கள். இந்த மையப்பகுதியில் இருந்து  கருவியை உருவாக்க வேண்டும். இந்த நுட்பம் மிகவும் சிரமமானது. இன்று சிலரால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

Ancient tools made from obsidian, a black volcanic glass
கருப்பு எரிமலைப் படிகங்களால்  செய்யப்பட்ட மத்திய கற்காலக் கருவிகள், அவற்றின் மூலங்களிலிருந்து 200 கி.மீ வரை கொண்டு செல்லப்பட்டன அல்லது வணிகம் செய்யப்பட்டன. 

இத்தகைய திறமைகள் கலைத்திறனை நெருங்குகின்றன. கைக்கோடாரிகள் உட்பட பல பண்டைய கலைப்பொருட்கள் நவீன வரையறைகளின்படி கலையாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், அவற்றை உருவாக்கியவர்களின் நோக்கம் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. இத்தகைய கண்டுபிடிப்புகள், கலைக்கான அடிப்படைத் திறன்கள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தன என்பதைக் காட்டுகின்றன. பயன்பாட்டுக்கு அப்பாற்பட்ட வடிவங்களில் கலை வெளிப்படுத்தப்பட்டது என்பது மனித அறிவின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு சான்றாக அமைகிறது.

நவீன மனிதர்கள் (சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு)

பலர் மனித பரிணாமம் என்பதை, முக்கியமாக நம்மை, ஹோமோ சேபியன்களை விளக்குவதற்கு என்றே கருதுகின்றனர். ஆனால், நாம் ஒரு நீண்ட பரிணாம செயல்முறையின் உச்ச கட்டம் மட்டுமே. இந்த கிரகத்தில் மனிதர்கள் செலவழித்த காலத்தின் அடிப்படையில், முழு ஹோமினின் வரலாற்றிலும் 5% மட்டுமே நமக்கு உரியது.

1980கள் வரை, நமது இனம் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு “மனித புரட்சி”யில் தோன்றியதாகக் கருதப்பட்டது. இந்த புரட்சி, குகை ஓவியங்கள் மற்றும் அதிநவீன கருவிகளின் வளர்ச்சியால் குறிக்கப்பட்டது. இருப்பினும், ரேடியோகார்பன் காலக்கணிப்பு முறையின் வரம்புகளால், இந்த பகுப்பாய்வில் பல நிகழ்வுகள் தவறாக ஒன்றிணைக்கப்பட்டன. கார்பன்-14 ஐசோடோப்பின் விரைவான சிதைவு விகிதம், சுமார் 40,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான பொருட்களின் வயதைக் கணிக்க முடியாமல் செய்தது.

அதன் பின்னர், புதிய ரேடியோ ஐசோடோப்புகளை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், ஹோமோ சேபியன்களின் தோற்றத்திற்கான கால அளவை கிட்டத்தட்ட பத்து மடங்கு விரிவுபடுத்தியுள்ளன. உண்மையில், நம்மைப் போலவே இருக்கும் முதல் ஆரம்பகால நவீன மனிதர்கள் சுமார் மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றினர். கால அளவிலான இந்த மாற்றம், மனித பரிணாமத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைத்துள்ளது.

ஆரம்பகால நவீன மனிதர்கள் தொடக்கத்தில்,  நீண்ட காலமாக தனியாக இல்லை என்பதை இப்போது நாம் அறிவோம். அவர்கள் ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் (நியாண்டர்தால்கள்) என்ற மற்றொரு ஹோமினின் இனத்துடன் நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்தனர். நியாண்டர்தால்கள் மேற்கு ஐரோப்பாவிலிருந்து சைபீரியா வரை பரவியிருந்தனர்.

(நியாண்டர்தால் மனிதர்களைப் பற்றிய ஒரு சுருக்கமான வழிகாட்டி – நேஷனல் ஜியோகிரபிக் – காணொளி இணைப்பு)

கிழக்கு ஆசியாவில், டி.என்.ஏ. ஆய்வுகள் மூலம் நியாண்டர்தால்களின் உறவினர்களான டெனிசோவன்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் சைபீரியாவின் அல்தாய் மலைகளில் உள்ள டெனிசோவா குகையில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில், ஹோமோ நலேடி என்ற மற்றொரு ஹோமினின் இனம் வாழ்ந்தது. ஜாம்பியாவில் கண்டறியப்பட்ட கப்வே மண்டை ஓடு, இன்னும் ஒரு ஹோமினின் இனம் இருந்ததற்கான சான்றாக அமைகிறது.

மரபணு ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க முன்னேற்றம், நியாண்டர்தால்கள் மற்றும் டெனிசோவான்கள் தனித்தனி இனங்களாக இருந்தபோதிலும், நமது ஹோமோ சேபியன்ஸ் மூதாதையர்களுடன் மிகவும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தன என்பதையும், அவர்களுடன் இனப்பெருக்கம் சாத்தியமானது என்பதையும் காட்டுகிறது. இந்த இனங்கள் தொடர்பு கொள்ளும் திறனைக் கொண்டிருந்தன என்பது அவர்களுக்கு மொழி இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறது. நெருப்பைப் போலவே, மொழியின் தோற்றமும் பேலியோஆந்த்ரோபாலஜியில் பல விவாதங்களுக்குரிய ஒரு கருப்பொருளாகும். இதுவரை கிடைத்துள்ள குறிப்புகள் மிகவும் குறைவு.

சுமார் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மரபணு மாற்றம் மனித மூதாதையர்களின் மெல்லும் தசைகளின் வலிமையைக் குறைத்தது. இது, அவர்கள் உணவை சமைத்து உண்பதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டார்கள் என்பதையோ, அல்லது தங்கள் வாய்களை மிகவும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் என்பதையோ குறிக்கலாம். ஹோமோ எரெக்டஸ் என்ற மனித இனத்தில், மார்பு முதுகெலும்புகளில் நரம்புகள் செல்லும் வழி பெரிதாக இருந்தது. இது, மொழிக்கு தேவையான சுவாச கட்டுப்பாட்டை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.

வடக்கு ஸ்பெயினின் அட்டாபுர்காவில் கண்டெடுக்கப்பட்ட 4,00,000 ஆண்டுகள் பழமையான ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் என்ற மனித இனத்தின் எச்சங்களில், நன்கு பாதுகாக்கப்பட்ட காது கால்வாய்கள் இருந்தன. இந்த காது கால்வாய்கள், மனித மொழியில் பயன்படுத்தப்படும் ஒலி அலைவரிசைகளைக் கேட்கும் திறன் கொண்டவை. இந்த ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் மனிதர்கள் நியாண்டர்தால்களின் மூதாதையர்களாக இருக்கலாம் என்பதால், அக்காலகட்டத்தில் எளிய வடிவிலான மொழி பரவலாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருத முடிகிறது.

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்புதான் ஓவியங்கள் தோன்றின அல்லது பாதுகாக்கப்பட்டன. ஆனால், மணிகள் மற்றும் அலங்காரங்கள் மிகவும் முன்னதாகவே உருவாக்கப்பட்டன. இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகப் பழமையான மணிகள், இஸ்ரேலில் உள்ள மவுண்ட் கார்மலில் உள்ள எஸ்-ஸ்கல் குகையில் கிடைத்த சிப்பி மணிகள். இவை சுமார் 1,30,000 ஆண்டுகள் பழமையானவை. இந்த மணிகள், தனிப்பட்ட அடையாளத்தையும், ஒரு மனிதர் மற்றொருவரின் அடையாளத்தைப் புரிந்துகொள்ளும் திறனையும் காட்டுகின்றன. தென்னாப்பிரிக்காவின் ப்ளம்போஸில் சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு சிப்பி மணிகள் மீண்டும் தோன்றின. அங்கு ஓச்சர் என்ற கனிமத்தால் செய்யப்பட்ட ஒரு செதுக்கப்பட்ட பொருளும் கிடைத்துள்ளது.

Remains of a Neanderthal burial site
தென்மேற்கு பிரான்சில், லா ஃபெராஸியில் உள்ள நியாண்டர்தால் கல்லறை. 

அடக்கம் செய்யும் புதைகுழிகள் அதே காலகட்டத்தைச் சேர்ந்தவை. நியாண்டர்தால்கள் மற்றும் ஆரம்பகால நவீன மனிதர்கள் இருவருமே சுமார் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்பே இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஸ்பெயினின் அட்டாபுர்காவில் உள்ள ஒரு குகையில் ஏராளமான மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எத்தியோப்பியாவில் உள்ள போடோவில் ஒரு மண்டை ஓட்டில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. இந்த கண்டுபிடிப்புகள், ஆரம்பகால மனிதர்கள் மனித உடல்கள் மீது சிறப்பு ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டுகின்றன. புதைகுழிகள், ஆரம்பகால மனிதர்களுக்கு மற்றவர்களின் தேவைகள் பற்றிய புரிதல் இருந்தது என்பதையும் காட்டுகின்றன.

சில புதைகுழிகளில் – ஆரம்பகால நவீன மனிதர்கள் மற்றும் நியாண்டர்தால்கள் இருவரின் புதைகுழிகளிலும் – இறந்தவர்களின் உடலில் சிவப்பு ஓச்சர் என்ற கனிமம் பூசப்பட்டிருந்தது. இது அடையாள முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். “சின்னங்கள்” நவீன மனித நடத்தையில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. அவை மொழி, மதம் மற்றும் கலை ஆகியவற்றின் அடிப்படையாக அமைகின்றன. ஆனால், சின்னங்களின் தோற்றத்தைப் பற்றி ஆராய்வது சற்று சவாலானது. ஏனெனில், மற்ற விலங்குகளும் சின்னங்களைப் பயன்படுத்தும் திறன் கொண்டவை என்று தெரிகிறது. உதாரணமாக, ஒரு சிம்பன்சி மற்றொரு சிம்பன்சிக்கு ஒரு கிழிந்த இலையை வழங்கும் போது, அது ஒரு சின்னமாக கருதப்படலாம்.

“அறிகுறிகள்” மற்றும் “சின்னங்கள்” ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு தெளிவற்றதாக இருக்கலாம். ஆனால், பொருள் மற்றும் பொருள்களின் வடிவத்தில் சின்னங்களை வெளிப்படுத்துவது ஒரு முக்கியமான படியாகும். மணிகள் மற்றும் புதைகுழிகள் போன்றவை, ஆரம்பகால மனிதர்களின் நடத்தையைப் பற்றிய முக்கியமான சான்றுகளாகும்.

பெரும் புலம்பெயர்வு (சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு)

ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகால நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே விரிவடையத் தொடங்கினர். இது மனித வரலாற்றில் மிகப்பெரிய புலம்பெயர்வுக்கு வழிவகுத்தது. நவீன மனித டி.என்.ஏவில் உள்ள வேறுபாடுகள், கடந்த கால மக்களின் இடம்பெயர்வுகள் பற்றி நமக்குச் சொல்லும் புவியியல் சமிக்ஞைகளைப் பாதுகாக்கின்றன. இன்னும் சிறப்பாக, குளிர்ந்த காலநிலையில் 50,000 ஆண்டுகள் பழமையான எலும்பு மாதிரிகளிலிருந்து, சில சமயங்களில் அதற்கும் பழமையான புதைபடிவ டி.என்.ஏவை தனிமைப்படுத்த முடியும்.

நியாண்டர்தால்கள் உண்மையிலேயே ஒரு தனி இனம் என்பதை முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன, அவர்களின் மூதாதையர்கள் 5 இலடசம் முதல் 7 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடமிருந்து பிரிந்து, சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தனர்.

Map of early modern humans' dispersal around the world.
The dispersal of Homo around the world: following limited advances between 1 million and 100,000 years ago, the ‘great breakout’ saw modern humans reach the rest of the world. (Ma = millions of years; ka = thousands of years). John Gowlett., CC BY-NC-SA

தெளிவான மரபணு சமிக்ஞைகள், ஒவ்வொரு தலைமுறையிலும் மறுசீரமைக்கப்படாத மரபணுவின் பகுதிகளிலிருந்து வருகின்றன – அதாவது, Y-குரோமோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. இவை, அனைத்து நவீன மனிதர்களும் (ஹோமோ சேபியன்ஸ்) சுமார் 1,50,000 ஆண்டுகளுக்குள் தொடர்புடையவர்கள் என்பதைக் காட்டும் “குடும்ப மரங்களை” விஞ்ஞானிகள் உருவாக்க உதவியுள்ளன. மேலும், தொல்பொருள் சான்றுகளுடன் இணைந்து, நவீன மனிதர்கள் அந்த காலத்திற்குப் பிறகு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, உலகம் முழுவதும் பரவி, இறுதியில் நியாண்டர்தால்கள் மற்றும் டெனிசோவான்கள் போன்ற பிற ஹோமினின்களின் வாழ்விடங்களை முழுமையாக ஆக்கிரமித்தனர் என்பதையும் இவை உணர்த்துகின்றன. இருப்பினும், அவர்களின் சில மரபணுக்கள் நம்மில் எஞ்சியுள்ளன. இனங்களுக்கு இடையே நிகழ்ந்த அரிய இனச்சேர்க்கைகளுக்கு நன்றி.

உண்மையில், இது வெறும் புலம்பெயர்வு மட்டுமல்லாமல், ஒரு பெரிய மக்கள்தொகை விரிவாக்கமாகும். மக்கள் ஆப்பிரிக்காவிலும், வழியிலும் தங்கியிருந்தாலும், இந்த அசாத்திய முன்னேற்ற அலை கிழக்கு நோக்கி ஆசியா முழுவதும் பரவி, பின்னர் வடக்கே ஐரோப்பாவிற்கும், இறுதியில் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றது.

இந்தப் பரவல் வடகிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து தொடங்கியது. இது மத்திய கிழக்கிற்கு ஒரு நிலப் பாதையையும், கடல் மட்டம் குறைவாக இருந்த சமயங்களில் அரேபியாவிற்கு ஒரு தெற்குப் பாதையையும் வழங்கியது. காலநிலை மாற்றங்கள் இதில் முக்கிய பங்கு வகித்தன. பனி யுகங்களின் தாள மாற்றங்களில், “பசுமையான சஹாரா” பாலைவன சஹாராவாக மாறியபோதெல்லாம், மக்கள் லிவெண்ட் பகுதிக்கு விரட்டப்பட்டனர்.

நவீன மனிதர்கள் அங்கு சுமார் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் தட்பவெப்ப நிலை மீண்டும் குளிராக மாறியபோது, நியாண்டர்தால் மனிதர்கள் அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தினர். அதற்கு முன்பே, கிழக்கு நோக்கிய பெரும் பயணம் தொடங்கி இருக்கலாம். ஆரம்பகால நவீன மனிதர்கள் 70,000 ஆண்டுகளுக்கு முன்பே 12,000 கிலோமீட்டர்கள் பயணித்து ஆஸ்திரேலியாவை அடைந்திருந்தனர்.

குறைந்தது 45,000 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் வடகிழக்கு சீனாவில் இருந்தனர். அவர்கள் இமயமலைக்கு வடக்கே உள்ள பாதை வழியாக அங்கு வந்திருக்கலாம். அங்கிருந்து, அலாஸ்காவிற்கு வழிவகுக்கும் பெரிங் நிலப்பாலத்திற்கு 6,000 கி.மீ. தொலைவு. 14,500 ஆண்டுகளுக்கு முன்பு, நவீன மனிதர்கள் 15,000 கிமீ பயணத்திற்குப் பிறகு சிலியின் மான்டே வெர்டேவை அடைந்தனர்.

20,000 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய கடைசி பனியுகத்தின் உச்சக்கட்டத்தில், கடுமையான குளிர்ச்சி மனிதர்களின் இடம்பெயர்வைத் தாமதப்படுத்தியிருக்க வேண்டும். கடல் மட்டம் 100 மீட்டருக்கும் அதிகமாகக் குறைந்ததால், வடக்குப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பனிப்பாறைகளின் முன்னேற்றத்தால் தெற்கு நோக்கி தள்ளப்பட்டனர். பல அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் அமெரிக்கக் கண்டத்தில் மனிதர்கள் குடியேறியது இந்த பனியுகத்திற்குப் பிறகுதான் என்று நம்புகிறார்கள். ஆனால், நியூ மெக்ஸிகோவில் கிமு 20,000 காலகட்டத்தைச் சேர்ந்த கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மனிதர்கள் அமெரிக்காவில் அதற்கு முன்பே குடியேறியிருக்கலாம் என்பதற்கான சான்றுகளாக அமைகின்றன.

இத்தகைய விவாதங்கள் முக்கிய விஷயத்தை மாற்றாது: சில சமயங்களில், நமது நேரடி மூதாதையர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு கிலோமீட்டர் என்ற வேகத்தில் முன்னேறினர்; மற்ற சமயங்களில், அவர்கள் நீண்ட தூரம் விரைவாக நகர்ந்தனர். அவர்களில் சிலர், நவீன ஆய்வாளர்களைப் போலவே, புதிய இடங்களை ஆராயும் ஆர்வம் கொண்ட சாகசக்காரர்களாக மாறினர்.

அவர்கள் உள்நாட்டிலும், கடற்கரையோரங்களிலும் கால்நடையாகவும், படகுகளிலும் பயணம் செய்தனர். அவர்கள் மலைகள், சமவெளிகள், வெப்பமான மற்றும் குளிர்ந்த பகுதிகள், ஈரமான மற்றும் வறண்ட பகுதிகள் என பல்வேறு நிலப்பரப்புகளில் வாழ்ந்தனர். எல்லா நேரங்களிலும், வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல் என்ற பழமையான வாழ்க்கை முறைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டனர்.

A reconstructed Neanderthal skeleton, right, and modern human skeleton
“முதல் ஐரோப்பியர்கள்: அட்டாபுர்காவின் மலைகளிலிருந்து புதையல்கள்”  கண்காட்சியில் உள்ள மறுகட்டமைக்கப்பட்ட நியாண்டர்தால் எலும்புக்கூடு (வலது), மற்றும் நவீன மனித எலும்புக்கூடு. 

கடைசி நியாண்டர்தால்கள் (சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு)

வரலாற்று ரீதியாக, மனித பரிணாம ஆய்வுகள் ஐரோப்பாவை மையமாகக் கொண்டே நடத்தப்பட்டன. கடந்த 50 ஆண்டுகளில், இந்த நிலை மாறி, உலகளாவிய கண்ணோட்டம் மேலோங்கி வருகிறது என்றாலும், ஐரோப்பா நமது பரிணாம வரலாற்றுப் பதிவுகளில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு: முதலாவதாக, ஐரோப்பாவின் வடக்கு காலநிலை டி.என்.ஏ உட்பட கரிம எச்சங்களை சிறப்பாகப் பாதுகாக்கிறது. இரண்டாவதாக, இந்த வளமான பரிணாம வரலாற்றுப் பதிவுகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

ஆரம்பகால நவீன மனிதர்களின் பெரும் புலம்பெயர்வின் போது, கடைசி நியாண்டர்தால்கள் ஐரோப்பாவிலிருந்து மறைவதற்குள், முழுமையான நவீன மனிதர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் தூர கிழக்கு நாடுகளில் பரவியிருந்தனர் என்பது ஒரு புதிய கண்ணோட்டமாகும். ஆனால் இந்த நிகழ்வுகள் இன்னும் புதிராகவே உள்ளன. ஏனெனில் நியாண்டர்தால்கள் ஆரம்பகால நவீன மனிதர்களுடன் நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு வாழ்ந்தனர். மேலும் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தினர்.

நியாண்டர்தால்கள் நம்மைப் போலவே இருப்பதாலும், அதே சமயம் சில வித்தியாசங்களைக் கொண்டிருப்பதாலும் அவர்கள் நம்மை எப்போதும் கவர்ந்திழுக்கின்றனர். அவர்கள் பருமனாகவும் வலிமையாகவும் இருந்தனர் மேலும் நம்மைப் போலவே பெரிய மூளையைக் கொண்டிருந்தனர். அவர்களின் திறன்கள் பற்றி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவர்கள் தாழ்ந்த மனித இனம் என்பதை விட மாற்று மனித இனம் என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. அவர்கள் நெருப்பைக் கட்டுப்படுத்த தெரிந்தவர்கள், எலும்பு கருவிகளை உருவாக்கினர், நிறமிகளைப் பயன்படுத்தினர், மற்றும் அவர்களின் இறந்தவர்களை அடக்கம் செய்தனர்.

நியாண்டர்தால்களின் இடம் நவீன மனிதர்களால் முற்றிலும் ஆக்ரமிக்கப்பட்டது 50,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. நவீன மனிதர்களுக்கு எது சாதகமாக அமைந்தது? அடுத்தடுத்து ஏற்பட்ட விரைவான காலநிலை மாற்றங்கள் நியாண்டர்தால் மக்களை நிலைகுலைய வைத்திருக்கலாம். அவர்கள் சிறிய குழுக்களாக, மன அழுத்தத்தின் கீழ் வாழ்ந்ததற்கும், உறவினர்களுக்குள் திருமணம் செய்துகொண்டதற்கும் சான்றுகள் உள்ளன. மக்கள்தொகை சார்ந்த காரணங்களே அவர்கள் மறைவதற்கு முக்கிய காரணம் என்பது இப்போது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

விவாதப் புள்ளி: கலை மற்றும் தொழில்நுட்பம்

ஐரோப்பாவில், சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்கள் மறைந்துபோனதும், புதிய கருவித்தொகுப்புகளுடன் புதிய மக்கள் வந்ததும் ஒரு “படைப்புப் புரட்சிக்கு” வழிவகுத்தது. இந்தப் புதிய மக்கள், கூர்மையான கற்கருவிகள், எலும்புக் கருவிகள் மற்றும் கலைப்படைப்புகள் ஆகியவற்றை உருவாக்கும் திறன் கொண்டவர்களாக இருந்தனர். இந்த காலகட்டம் “மேல் பழங்காலத்தொல் காலம்” என்று அழைக்கப்படுகிறது.

மற்ற பகுதிகளில், இத்தகைய மேம்பட்ட பண்புகள் இதைவிட முன்னதாகவே தோன்றின. தற்போது அறியப்பட்ட மிகப் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவின் சுலவேசியில் உள்ள கரம்புவாங் மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில், 51,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் மற்றும் விலங்குகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

Ancient cave paintings depicting human hands.
இந்தோனேஷியாவின் சுலவேசியில் உள்ள இந்த குகைகளில் உள்ள கை ஓவியங்கள் உலகின் மிகப் பழமையானவற்றில் ஒன்றாகும், 39,000 ஆண்டுகள் பழமையானவை. 

நியாண்டர்தால்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய சில குறியீடுகளைத் தவிர, ஐரோப்பிய கலை கணிசமாக பிற்காலத்தியது. நியாண்டர்தால்கள் நிச்சயமாக நிறமிகளைப் பயன்படுத்தினர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, விதிவிலக்கான முக்கியத்துவம் வாய்ந்த பல கலைப்படைப்புகள் தோன்ற தொடங்கின. அவற்றில் ஒன்று, தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு குகையில் காணப்படும் மாமூத் தந்தத்தால் ஆன ஒரு சிறிய சிலை. இந்த சிலை ஒரு சிங்கத்தின் தலையை மனித உடலுடன் இணைத்து, கலைஞரின் கற்பனைத் திறனையும், மத சார்புடைய 3D வடிவங்களை உருவாக்கும் திறனையும் காட்டுகிறது.

கி.மு. 20,000 காலகட்டத்தில், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களின் பல அறிகுறிகளைக் காண்கிறோம்: மத்திய ஐரோப்பாவின் கிராவெட்டியன் காலத்தில் கூடை பின்னல்; சீனாவில் முதல் மட்பாண்டங்கள்; ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவில் மெருகூட்டப்பட்ட கோடாரிகள்; தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா மற்றும் பிற இடங்களில் கடல் வளங்களை சிறப்பாக பயன்படுத்துதல். மேலும், முதல் வளர்ப்பு நாய்களும் இந்த காலகட்டத்தில் தோன்றின. அவை சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

பனியுகத்திற்குப் பின் (சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு)

கடைசிப் பனி யுகத்தின் உச்சக்கட்டத்தைத் தொடர்ந்து, பூமி படிப்படியாக வெப்பமடையத் தொடங்கியது. இந்த வெப்பமயமாதல், ஹோலோசீன் எனப்படும் புவியியல் காலகட்டத்தில் உச்சத்தை எட்டியது. பனிப்பாறைகள் வடக்கு நோக்கி பின்வாங்க, மிதவெப்ப மண்டலத் தாவரங்கள் தோன்றின. கடல் மட்டம் உயர்ந்ததால், உலகெங்கிலும் உள்ள கடலோரக் குடியிருப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்தப் புதிய சுற்றுச்சூழல் மாற்றங்களுடன், சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய திருப்புமுனை ஏற்பட்டது: விவசாயப் புரட்சி. தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்க்கத் தொடங்கியதால், மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்தது. கிராமங்கள், நகரங்கள் மற்றும் நாகரிகங்கள் உருவாகின. வேட்டைக்காரர்களும் சேகரிப்பாளர்களும் கொண்டிராத உணவு உற்பத்தியின் மீதான கட்டுப்பாடு இதற்குக் காரணமாக அமைந்தது. ஆனால், இந்த வளர்ச்சி தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சிக்கலான சமூக நடத்தைகளை சார்ந்தே இருந்தது.

நாம் மனிதர்கள் என்பதை எளிதில் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், மனித பரிணாம வரலாற்றை ஆராய்ந்தால், சில சமயங்களில் ஒரு சில புதைபடிவத் துண்டுகள் கூட, நாம் இன்று இருக்கும் வடிவத்தில் இருந்திருக்க மாட்டோம் என்பதை உணர்த்துகின்றன. காலநிலை மாற்றங்கள் சற்று வேறுபட்டிருந்தால், நியாண்டர்தால்கள் இன்றும் உயிருடன் இருந்திருக்கலாம். அவர்களோ அல்லது டெனிசோவன்களோ வேறு வழியில், வேறு வேகத்தில் பரிணாம முன்னேற்றத்தை அடைந்திருக்கலாம்.

இன்றைய உலகில், நாம் இன்னும் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. உலகில் நிகழும் பெரும் மாற்றங்கள் மனிதனால் உருவாக்கப்படுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் மேலாக, நமது மிகப்பெரிய எண்ணிக்கையிலிருந்து உருவாகின்றன. ஹோமோ இனத்தின் வரலாற்றில் குறைந்தது 99.5% நேரத்திற்கு, நமது முன்னோர்கள் வேட்டைக்காரர்களாகவும் சேகரிப்பாளர்களாகவும் வாழ்ந்தனர். அப்போது உலக மக்கள் தொகை சில இலட்சங்களைத் தாண்டவில்லை. ஆனால் இப்போது, ஒரே மனித வாழ்நாளில், உலக மக்கள் தொகை நான்கு மடங்கு அதிகரித்து, 200 கோடியிலிருந்து  800 கோடியாக உயர்ந்துள்ளது.

மனித பரிணாம வளர்ச்சியின் கதை வெறும் எலும்புகளையும் கற்களையும் பற்றியதல்ல. அது நமது பல பலங்களையும், வரம்புகளையும் உணர்த்துகிறது. விரைவான கலாச்சார மாற்றங்களை, குறிப்பாக தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களை நிர்வகிக்கும் திறன் நமது முக்கிய பலங்களில் ஒன்று. இத்திறனே நீண்ட காலமாக நமது உயிர்வாழ்விற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது, மேலும் சுற்றுச்சூழல் மாற்றங்களைச் சமாளிக்கவும் இன்றியமையாததாக உள்ளது. ஆனால் இந்த திறன் நமது கிரகத்திற்கும், அதன் பல்லுயிர் பெருக்கத்திற்கும், நமது சொந்த மனித சமூகங்களுக்கும் பல எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இன்று உயிருடன் இருக்கும் 800 கோடி மனிதர்களில் பெரும்பாலோர் ஒப்பீட்டளவில் மகிழ்ச்சியாக வாழ்வது ஒரு வெற்றியாகும். நவீன மருத்துவத்தின் உதவியால், நாம் முன்னெப்போதையும் விட நீண்ட காலம் வாழ்கிறோம். ஆனால் இவை அனைத்தும் சுமார் 80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய மனித பரிணாம கதையின் ஒரு பகுதியாகும். இது உயிர்வாழ்வதற்காகப் பெரும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் இன உத்தியாகும்.

இந்தக் கதையில், வெற்றிகளுக்குப் பின்னர் தொடர்ச்சியாகப்  பல புதிய பிரச்சினைகள் உருவாயின. நமது பண்டைய மூதாதையர்கள், தெரியாதவற்றை நோக்கி முன்னேறிச் சென்று, உயிர்வாழ்வதற்காகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் போலவோ அல்லது அதைவிட பெரிய சவால்களையோ பல முறை வெற்றிகரமாக எதிர்கொண்டனர்.

கட்டுரையாளர்: 

ஜான் கவ்லெட்

தொல்பொருள் மற்றும் பரிணாம மானுடவியல் பேராசிரியர்,
தொல்பொருள், கிளாசிக்ஸ் மற்றும் எகிப்தியல் துறை,
லிவர்பூல் பல்கலைக்கழகம்

தமிழில்: மோ. மோகனப்பிரியா

இந்தக் கட்டுரை “தி கான்வர்சேஷன்” என்ற இணையதளத்தில் வெளியானது. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

மூலக் கட்டுரையைப் படிக்க

https://theconversation.com/the-whole-story-of-human-evolution-from-ancient-apes-via-lucy-to-us-in-one-long-read-243960

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *