கறுப்புத் தோலின் மீது பதிக்கப்பட்டுள்ள அடிமை முத்திரை அகற்றப்படும் வரை, வெள்ளைத்தோலின் உழைப்பிற்கு விடுதலை கிட்டாது – அண்ணா.நாகரத்தினம்

கறுப்புத் தோலின் மீது பதிக்கப்பட்டுள்ள அடிமை முத்திரை அகற்றப்படும் வரை, வெள்ளைத்தோலின் உழைப்பிற்கு விடுதலை கிட்டாது – அண்ணா.நாகரத்தினம்

 

இன்றைய அமெரிக்கர்கள் ‘கம்பீரமான’ நாகரிகத்தை உருவாக்கிய ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆப்பிரிக்கர்கள். வெள்ளை இன அமெரிக்க மக்கள் பெரும்பான்மையினர். அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் சிறுபான்மையினர். இவர்கள் வளர்ந்த மொழியும், அறிவுசார்ந்த எந்த சாதனைகளும் இல்லாத பழங்குடியினரின் சமூக பின்னணியிலிருந்து வந்தவர்கள். என்றாலும் அமெரிக்கப் பொருளாதாரத்தை உருவாக்கியதில் அமெரிக்க தொழிலாளர்களுக்கு இருந்த பங்கைவிட, ஆப்பிரிக்கர்களின் பங்களிப்பு அதிகம். ஆனால் சிறு எண்ணிக்கையிலான அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், ஆப்பிரிக்கர்களின் அடிமை உழைப்பையும், அமெரிக்கர்களின் சுதந்திர உழைப்பையும் சுரண்டிக் கொழுத்தனர்.

வெள்ளைத் தொழிலாளர்களைப் பொருத்தவரை உழைப்புச் சுரண்டல் மட்டுமே அவர்களை ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் ஆப்பிரிக்கர்களைப் பொருத்தவரை, உழைப்புச் சுரண்டல் ஒருபுறம் நிறவெறி ஒடுக்குமுறை மற்றொரு புறம்.  இந்த இரண்டு விதமான ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டு இருந்தனர். அமெரிக்கா தோன்றியதிலிருந்து இன்று வரை நீடித்துவரும் நிறவெறிக்கும், சுரண்டலுக்கும் ஆளாகிவரும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலைக் குறித்த மார்க்சின் கருத்துரைகள் குறித்தும், பின்னர் வந்த மார்க்சியர்களின் கருத்துக்கள் குறித்தும் இக்கட்டுரை விவாதிக்க முற்படுகிறது. 

மார்க்சியத்தின் சமூக வளர்ச்சிக் கோட்பாடு

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார ரீதியான வளர்ச்சியானது, ​​18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய முதலாளித்துவம் மற்றும் அறிவொளி இயக்கத்துடன் பின்னிப் பிணைந்ததாகும். இந்தப் பின்னணியில்தான் ஐரோப்பிய மேன்மை பற்றிய கருத்துருவாக்கம் உருவானது என்று கூறப்படுகிறது. 

விரைவாக விரிவடைந்துவரும் முதலாளித்துவ அமைப்பைப் புரிந்துகொள்ள மார்க்ஸும் ஏங்கெல்ஸும் அதை முறையாகவும், கூர்மையாகவும் பயின்று வந்தனர். ​​அவர்கள் தங்கள் காலத்தில் பிரிட்டன் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்த முதலாளித்துவத்தையும் அதன் வளர்ச்சிப் போக்குகளிலும் ஆராய்வதில் மிகுந்த கவனம் செலுத்தினர். மார்க்சியமும் ஒரு குறிப்பிட்ட பரிணாம வளர்ச்சியின் அணுகுமுறையைப் பெற்றது.  இந்த ஆய்வின் அடிப்படையிலிருந்து சமூக வரலாறு என்பது கட்டம் கட்டமாக வளரக் கூடியது. அதாவது தொன்மைச் சமுதாயம், நிலப்பிரபுத்துவச் சமுதாயம், முதலாளியைச் சமுதாயம் ஆகியவற்றின் ஊடாக மனித சமூகம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. வரலாற்று ரீதியாக, ஒவ்வொன்றும் அதன் அடுத்த கட்டத்திற்குத் தேவையான இன்றியமையா நிலைமைகளை உருவாக்கிக் கொள்கின்றது என்ற கருத்தாக்கத்தினை உருவாக்கினர். 

Study Guide for Wage Labour and Capital

இவ்வாறு 1840 களில் அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான ஒரு பாதையை மார்க்ஸ் வலியுறுத்தினார். மார்க்சின் ஆரம்பக்கால ஆராய்ச்சியானது, முதலாளித்துவம் தோன்றிய ஐரோப்பாவின் சில பகுதிகளை மையமாகக் கொண்டது. திட்டவட்டமான வரலாற்றுக் கட்டங்களைக் கொண்ட இந்தக் கோட்பாடு உலகில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும் என்று  கூறினர்.  அதாவது உலகில் உள்ள ஒவ்வொரு சமூகத்திலும் வரலாற்று ரீதியில் வரிசைக் கிரமமான முறையில் மாற்றங்கள் நடக்கும் என்று தெரிவித்தனர். 

முதலாளித்துவ வளர்ச்சி இல்லாத பிற சமூகங்களில் முதலாளித்துவம் எவ்வாறு வளரும் என்ற கேள்வி எழுந்தது.  முதலாளித்துவம் காலனியாதிக்க வடிவில் பிற சமூகங்களை முதலாளித்துவத்தால் ஈர்க்கப்படும் என்று கணித்தனர். அதன்படி பிற சமூகங்கள், காலனிய ஆதிக்கத்தின் வழியாகப் பிற நாட்டுச் சமூகங்கள் உலக முதலாளித்துவச் சந்தையினுள் உள்ளிழுக்கப்பட்டு அடிப்படையான மாற்றங்களுக்கு உள்ளாகும் என்று மார்க்ஸ் கருதினார். எனவே காலனிய முதலாளியத்தை அவர் வரலாற்றின் தவிர்க்கவியலாத கருவி என்று கூறினார். இதன்படி, மேற்கு ஐரோப்பிய முதலாளியத்தின் முரட்டுத்தனமான தலையீடுகளின்றி ஐரோப்பா அல்லாத பிறநாடுகளின் நவீனமயமாக்கம் அமைய முடியாது என மார்க்ஸ் கருதினார். 

மார்க்சியத்தை விமரிசிக்கும் போக்குகள்

மேற்கண்ட மார்க்சின் கருத்துரைகள் யாவும் ஐரோப்பியச் சமூகத்தை மையப்படுத்தியவை என்றும், ஐரோப்பாவின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு மார்க்ஸ் தமது சமூக பொருளாதார ஆய்வை செய்தார் என்றும் விமர்சிக்கப்பட்டன. இதன் மூலம், இதர சமூகங்களின் தனித்துவமான வரலாற்று வளர்ச்சிப் போக்குகளைப் புறக்கணித்து விட்டனர் என்றும் விமர்சிக்கப்பட்டன. இவ்வாறாக, மார்க்சும் எங்கல்சும் ஐரோப்பிய மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தனர் என்ற விமரிசனம் இவர்கள் மீது வைக்கப்படுகிறது. 

“ஐரோப்பிய மையவாதம்” என்ற சொல்லை முதலில் 1970களில் எகிப்திய மார்க்சிஸ்ட் சமீர் அமீனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘யூரோ சென்ட்ரிஸம்’ (Ero Centricism) என்ற அவரது நூலில்  இது குறித்து மிகவும் விளக்கமாக விவரிக்கப்படுகிறது. 

மார்க்சியத்தை எதிர்க்கும் போக்குகளில் மிகவும் முக்கியமான அடுத்த போக்கு, கீழைத்தேய கொடுங்கோன்மை என்பதாகும். கீழைத்தேய கொடுங்கோன்மை என்ற சொல், பாலஸ்தீனிய எழுத்தாளரும், விமர்சகருமான எட்வர்ட் சைட் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் வெளியிட்ட தனது ‘ஓரியண்டலிசம்’ (Orientalism)  என்ற நூலில் இதைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறார். பிந்தைய காலனித்துவ ஆய்வுகளின் வளர்ச்சியில் இந்த விமரிசனங்கள், ஒரு முக்கிய அடிப்படையாக அமைந்தன என்று கூறலாம். 

இன்னொரு முக்கிய போக்கு கறுப்பின மார்க்சியம். இது ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றியது. செட்ரிக் ஜெ.ராபின்சன் என்பவர் ‘கறுப்பு மார்க்சியத்தில்’ (Black Marxism) (1983) என்ற தனது நூலில் எழுப்பப்பட்ட கருத்துக்கள் கறுப்பின தேசியவாதத்திற்கு நெருக்கமான பார்வையிலிருந்து மார்க்சியத்தைத் திறனாய்வு செய்து தனது கருத்துரைகளை வழங்குகிறார். இதைக் குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

Karl Marx, German political philosopher and economist stock image ...

முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவமற்ற முரண்பாடு 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்ட காலத்தில் மார்க்சும் எங்கல்சும் ‘ஐரோப்பிய மையவாதத்திற்கு’ ஆட்பட்டதில்லை என்பது கீழ்க்கண்ட மேற்கோள் நமக்குப் புலப்படுத்துகிறது.  

“எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. ”இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற ”பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது.” 

“கிராமப்புறம் நகரங்களைச் சார்ந்திருக்குமாறு செய்துள்ளதைப் போன்றே, அநாகரிக நிலையிலும் அரை-நாகரிக நிலையிலுமுள்ள நாடுகள் நாகரிக நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், விவசாயிகளின் நாடுகள் முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்குமாறும் செய்துள்ளது.” 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்த மேற்கோளில் கூட மார்க்சும் எங்கல்சும் ஐரோப்பியர் மற்றும் ஐரோப்பிய அல்லாதவைகள் என்ற முரண்பாட்டை முன்னிறுத்துவதைக் காட்டிலும் முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவமற்ற வடிவங்களுக்கு இடையிலான முரண்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தனர் என்பது புலனாகின்றது. 

மார்க்சின் கருத்துநிலையில் வளர்ச்சிப் போக்குகள்

மார்க்ஸ் பிரிட்டனுக்குக் குடியேறிய பின்னர், ஐரோப்பா அல்லாத சமூகங்களான முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்களை ஆய்வுக்கு உட்படுத்தினார். அவரது முந்தைய கருத்துநிலையில் சில வளர்ச்சிப் போக்குகள் தென்பட்டன. அதாவது இந்தியா, ரஷ்யா, சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகள், மேற்கு ஐரோப்பாவிலிருந்து வேறுபட்ட சமூக அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன என்பதை மார்க்ஸ் புரிந்து கொண்டார். இந்த நாடுகளில் உள்ள சமூகங்களின் தனித்தன்மைகளை மார்க்ஸ் ஆழமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியபோது, மேற்கு ஐரோப்பாவைச் சாராத தனித்த வளர்ச்சிப் பாதை இந்நாடுகளில் சாத்தியம் என மார்க்ஸ் உணர்ந்து கொண்டார். எனவே, ஐரோப்பாவை மையமாகக் கொண்ட மார்க்சின் வரலாற்றுக் கோட்பாடு ஒரு புறமிருக்க, மேற்கல்லாத நாடுகளுக்கான மற்றொரு வரலாற்றுப் பாதை அவரது சிந்தனையில் உருவானது என்று கூறலாம்.  எனவேதான் சமூகம் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அடுத்தடுத்த வரலாற்றுக் கட்டங்களின் மூலம் மாற்றம் பெறுவதில்லை. மாறாகப் போராட்டத்தின் மூலம் மாறுகின்றது என்று மார்க்ஸ் கூறினார்.

மேற்கல்லாத நாடுகளின் தனித்தன்மைகள்

 மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இனவெறி, பாலின ஒடுக்குமுறை அல்லது பேரரசுகளின் வளர்ச்சி குறித்து தனியாகவும் முறையாகவும் எழுதவில்லை. ஆனால் மேற்கு ஐரோப்பா அல்லாத நாடுகளைப் பற்றிய ஆய்வின் போது இவர்கள் ஒவ்வொன்றையும் ஆங்காகே தொட்டுக் காட்டியுள்ளனர். இந்த விசயங்கள் அனைத்தும் மார்க்சிஸ்டுகளின் அடுத்த தலைமுறைகளுக்கு விவாதத்தின் முக்கிய பிரச்சினைகளாக இருந்தன என்றே கூறவேண்டும். 

மேற்கல்லாத நாடுகளின் வரலாற்றுப் பாதையில் காலனிய எதிர்ப்பு, தேசியம், இன உணர்வு சார்ந்த இயக்கங்களுக்கும், நிறவெறி எதிர்ப்பியக்கங்களுக்கும் முக்கிய பாத்திரம் இருக்குமென மார்க்ஸ் கருதினார். குறிப்பாக, போலந்து, அயர்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் தேசிய விடுதலை, அமெரிக்காவில் கறுப்பினப் பிரச்சினை ஆகியவை பற்றிய மார்க்சின் கவனம் கூர்மையடைந்தபோது, அவர் ஒடுக்கப்பட்ட தேசியங்கள், இனங்கள் ஆகியோரின் சனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னிலைப்படுத்தினார். 

விளிம்புநிலை மார்க்ஸ் – கெவின் பி ஆண்டர்சன்

கெவின் பி ஆண்டர்சன் என்ற மார்க்சியர் தனது முக்கிய நூல்களில் ஒன்றான ‘விளிம்புநிலை மார்க்ஸ்’ (Marx at the Margins, On Nationalism , Ethnicity, and Non – Western Societies) என்ற நூலில் மார்க்சின் சிந்தனையின் முழுமையான பரப்பை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

Entrevista com Kevin B. Anderson: Marx nas margens do capitalismo

இந்த நூல் மார்க்சின் பரந்து விரிந்த படைப்புகளில் இரண்டு போக்குகளைச் சுட்டிக் காட்டுகிறது. (1)அவரது காலத்தின் மேற்கு அல்லாத சமூகங்களைப் பற்றிய ஆய்வை முன்வைத்தார். அதாவது இந்தியாவிலிருந்து ரஷ்யா வரை மற்றும் அல்ஜீரியாவிலிருந்து சீனா வரையிலுமான சமூகங்கள், மேலும் முதலாளித்துவம் மற்றும் காலனித்துவத்துடனான அவற்றின் உறவு போன்றவற்றை ஆய்வு செய்தார். (2) தேசிய விடுதலைக்கான இயக்கங்கள், குறிப்பாக போலந்து மற்றும் அயர்லாந்தில், மற்றும் அந்தக் கால ஜனநாயக மற்றும் சோசலிச இயக்கங்களுடனான அவர்களின் உறவுகள் பற்றிய அவரது எழுத்துக்களையும் எடுத்துக் காட்டுகிறது.  பிரிட்டனில் ஐரிஷ் தொழிலாளர் காலத்தில் அமெரிக்காவில் கறுப்பின தொழிலாளர்கள் இருவரையும் பொறுத்தவரை இனம் மற்றும் இனம் தொடர்பான அவரது கோட்பாடு ஆகும்.  அப்போதைய ஆய்வு, மார்க்ஸ் தனது வாழ்நாளில் முதலாளித்துவத்திற்குப் புறம்பான சமூகங்கள் குறித்த எழுத்துக்களில் கவனம் செலுத்துகிறது. 

இந்தியா பற்றி மார்க்ஸ் 

இந்தியாவின் பிரிட்டிஷ் காலனித்துவம் குறித்து 1853 ஆம் ஆண்டில் மார்க்ஸ் நான்கு கட்டுரைகளை மார்க்ஸ் எழுதினார். அதில், ‘முட்டாள்தனமான இந்த கிராம சமூகங்கள், எப்போதுமே கீழைத்தேய கொடுங்கோன்மையின் உறுதியான அடித்தளமாக இருந்தன என்பதையும், அவை மனித அறிவை மிகச்சிறிய திசைக்காட்டிக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது… எல்லா மேன்மையான மற்றும் வரலாற்று ஆற்றல்களையும் இழக்கிறது… இது உண்மைதான், இந்துஸ்தானில் ஒரு சமூகப் புரட்சியை ஏற்படுத்துவதற்கு, தனது மிக மோசமான நலன்களுக்காக மட்டுமே இங்கிலாந்து செயல்படுத்தப்பட்டது… ஆனால் அது பிரச்சனை அல்ல. பிரச்சனை என்னவென்றால், ஆசியாவின் சமூக நிலையில் ஒரு அடிப்படை புரட்சி இல்லாமல் மனிதக்குலம் தனது விதியை நிறைவேற்ற முடியுமா? இல்லையென்றால், இங்கிலாந்தின் குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அந்த புரட்சியைக் கொண்டுவருவதில் வரலாற்றின் அனிச்சையான கருவியாகச் செயல்பட்டது.’ என்று கூறினார்.

 மார்க்சின் மனிதநேயம், மக்களின் துயரங்களுக்கு அவர் காட்டிய அனுதாபம் தெளிவாகத் தெரிந்திருந்தாலும், ஐரோப்பாவின் முனைப்பு இல்லாமல் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்று எட்வர்ட் சையத் விமர்சிக்கிறார். மேலும் “ஆசியாவை அழிப்பதில்கூட, பிரிட்டன் ஒரு உண்மையான சமூகப் புரட்சியைச் சாத்தியமாக்குகிறது என்ற எண்ணத்திற்கு அவர் அதிக நம்பிக்கையுடன் இருந்தார் ” என்று அவர் கூறுகிறார்.

இங்கு இரண்டு கேள்விகள் இங்கே எழுகின்றன. பிரிட்டிஷ் படையெடுப்பை முற்போக்கானதாக மார்க்ஸ் பார்த்தாரா என்பது முதல் கேள்வி.  கீழைத் தேய கொடுங்கோன்மை என்று பேசுவதன் மூலம் ஐரோப்பாவிற்கு வெளியே உருவாகும் வளர்ச்சியை நிராகரிக்கிறாரா என்பது இரண்டாவது கேள்வி. 

முதலாவது கேள்வியில் வர்க்கப் போராட்டத்தின் மூலம் சமூக முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கும் சூழ்நிலைகளை இந்தியாவிற்குள் பிரிட்டிஷ் ஆட்சி வழங்கியது என்ற அனுமானம் உள்ளது.  ஆனால்  பிரிட்டிஷ் ஆட்சியை முற்போக்கானதாகக் கருதிய ஏகாதிபத்தியவாதிகளுடன் மார்க்ஸ் உடன்படுகிறார் என்பது உண்மையல்ல. அதற்கு பதிலாக அவர் இந்திய ஏழைகளைப் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு இணையாக நிறுத்துகிறார். அவர்களும் எழச்சிப்பெற வேண்டும், ஒடுக்குபவர்களைத் தூக்கியெறிய வேண்டும்.  பிரிட்டிஷ் முதலாளிகள் இருந்த இடத்தை தொழில்துறை பாட்டாளி வர்க்கம் இடம் பிடிக்க வேண்டும் அல்லது இந்தியர்கள் ஆங்கில நுகத்தடியை முழுவதுமாக தூக்கி எறியும் அளவுக்கு வலிமையாக வளர்ந்திருக்கும்போது நிலைமை மாறும் என்று மார்க்ஸ் கணித்துள்ளார். 

 நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1857 இல் நடந்த இந்திய எழுச்சியின் போது, ​​மார்க்ஸ் கிளர்ச்சியாளர்களை வெகுவாக ஆதரித்தார்.  1858 இல் கிளர்ச்சி தொடர்ந்தபோது இந்தியா இப்போது நமது சிறந்த நட்பு நாடு என்று மார்க்ஸ் ஏங்கெல்ஸுக்கு எழுதினார்:“ இந்த மாற்றம் காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களின் முக்கியத்துவத்தை மார்க்ஸ் உணர்ந்து கொண்டிருந்ததன் விளைவாகும். 

ஐரிஷ்  பிரச்சனைக் குறித்து

1869 ஆம் ஆண்டில் மார்க்ஸ் ஏங்கெல்ஸுக்கு எழுதிய கடிதத்தில், “நீண்ட காலமாக, ஐரிஷ் ஆட்சியை ஆங்கிலத் தொழிலாளி வர்க்கத்தின் வளர்ச்சியின் மூலம் கவிழ்க்க முடியும் என்று நான் நம்பினேன்… ஆனால், ஆழ்ந்த ஆய்வின் மூலம் கிடைத்த உண்மைகள் இப்போது அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அயர்லாந்திலிருந்து விடுபடுவதற்கு முன்பு ஆங்கிலத் தொழிலாளி வர்க்கம் ஒருபோதும் எதையும் சாதிக்காது. இனப் பிளவை ஊக்குவிப்பதன் மூலம் முதலாளித்துவ சுரண்டலுக்குச் சவால் விடும் முயற்சிகளை எவ்வளவு திறம்பட மேம்படுத்துகிறது என்பதை மார்க்ஸ் உணர்ந்தார். 

ரஷ்யப் புரட்சி குறித்து(1881)

Debating the Russian Revolution and its relevance | International ...

1881 ஆம் ஆண்டில் ரஷ்ய மார்க்சிஸ்ட் வேரா ஜாசுலிச் மார்க்ஸுக்கு கடிதம் எழுதினார். அவர் விவரித்த அனைத்து இடைப்பட்ட வரலாற்றுக் கட்டங்களையும் கடந்து செல்வதை விட, நிலத்தின் தனிப்பட்ட உடைமையின்றி, ஒப்சினாவிலிருந்து (விவசாயிகள் கம்யூன்) சோசலிசத்திற்கு நேராகச் செல்ல முடியும் என்று அவர் நினைத்தாரா என்று கேட்டார். விவசாயிகளை அபகரிப்பதன் மூலம் முதலாளித்துவம் எவ்வாறு வளர்ந்தது என்பது குறித்த தனது பகுப்பாய்வு இங்கிலாந்தில் முதல் அனுபவத்தைப் பின்பற்றியது என்று மார்க்ஸ் பதிலளித்தார். “மேற்கு ஐரோப்பாவின் மற்ற எல்லா நாடுகளும் ஒரே போக்கைப் பின்பற்றுகின்றன” எனவே, “இந்த  ​​வரலாற்றின் தவிர்க்க முடியாத தன்மை, மேற்கு ஐரோப்பாவின் நாடுகளுக்கு வெளிப்படையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது… எனவே மூலதனத்தின் பகுப்பாய்வு ரஷ்ய கம்யூனின் உயிர்ச்சக்திக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எந்த காரணங்களையும் அளிக்காது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் (1882) இரண்டாவது ரஷ்ய பதிப்பின் முன்னுரையில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எழுதினார்: “ரஷ்ய ஒப்சினா (விவசாயக் கம்யூன்)… சமூக உடைமையின் உயர்ந்த கம்யூனிச வடிவத்திற்கு நேரடியாகச் செல்ல முடியுமா? அல்லது அது முதலில் மேற்கின் வரலாற்று வளர்ச்சியைக் குறிக்கும் செயல்முறையின் வரலாற்று பரிணாமத்தின் வழியாகச் செல்ல வேண்டுமா?… ரஷ்ய புரட்சி மேற்கில் பாட்டாளி வர்க்க புரட்சிக்கான அறிகுறியாக மாறினால், இரண்டும் ஒன்றுக்கொன்று பூர்த்தி செய்தால், ரஷ்யாவின் விவசாய சமூக நில உடைமை ஒரு கம்யூனிச வளர்ச்சிக்கான துவக்கமாகச் செயல்படக்கூடும்” என்று எழுதினார்.

இது விவசாயிகள் சமூக நடைமுறைகளுக்கு மிகவும் முற்போக்கான பங்கை அளிக்கிறது, மேலும் சமூகத்தின் முதலாளித்துவத்திற்கு முந்தைய வடிவங்களில் உள்ள சாதகமான அம்சங்களை மார்க்ஸ் உள்வாங்கிக் கொண்டார் என்பதைக் காட்டுகிறது. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை அவர் விவரித்தபோது, ​​அது வளர்ச்சிக்கான ஒரே வழி என்றோ பிற வழிமுறைகள் சாத்தியமில்லை என்றோ அவர் கூறவில்லை. 

அமெரிக்க அடிமைமுறை குறித்து மார்க்ஸ்

அமெரிக்காவின் அடிமைத்தனம் தொழில்துறைப் புரட்சியின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது, ஏனெனில் பருத்தி நவீன தொழில்துறையின் அடிப்படையாக இருந்தது. மேலும் இங்கிலாந்தில் பருத்தித் தொழிலின் எழுச்சி அமெரிக்காவில் அடிமைத்தனத்தை வணிக சுரண்டலின் வடிவமாக மாற்றியது. நவீன முதலாளித்துவத்தை உருவாக்கிய அடிமைமுறை என்று அழுத்தம் திருத்தமாக மார்க்ஸ் கூறுகிறார். 

இதற்கிடையில் மார்க்ஸ் 1846ல் அவரது ரஷ்ய நண்பரான அனென்கோவிற்கு எழுதிய ஒரு கடிதத்தில் முதல் முறையாக அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கறுப்பின அடிமைமுறை வழக்கில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய தொழில் முதலாளியம் நேரடியாக அடிமைமுறைக்குக் கடன்பட்டிருக்கிறது, அடிமைமுறை இல்லையெனில் பருத்தி உற்பத்தி இல்லை, பருத்தி இல்லையெனில் நவீன ஆலைகள் இல்லை, எனவே காலனிகளில் அடிமைமுறையைக் கொண்டே நவீன தொழில்துறையும் சர்வதேச வர்த்தகமும் உருவாக்கப்பட்டுள்ளன, எனவே அடிமைமுறை என்பதை அதிமுக்கியமான ஒரு பொருளாதார நிறுவனமாகக் கொள்ளவேண்டும் என்று அக்கடிதத்தில் மார்க்ஸ் எழுதினார். மார்க்சின் எழுத்துக்களே அடிமைமுறைமைக்கும், தொழில் முதலாளியத்திற்கும் இடையிலான உறவுகளை முதலில் வெளிப்படுத்தின, நீக்ரோ அடிமை உருவாக்கம் என்ற விசயத்தை அம்பலப்படுத்தியவரும் மார்க்சே என்று செட்ரிக் ஜெ.ராபின்சன் என்ற சிந்தனையாளரும் குறிப்பிடுகிறார்.

தன்னிலை கொண்ட புரட்சிகர சக்திகள்

அமெரிக்க நீக்ரோக்கள் குறித்த மார்க்சின் எழுத்துக்களில் முக்கியமான திருப்புமுனை 1860ல் நிகழ்ந்தது என கெவின் ஆன்றர்சன் கருதுகிறார். 1860களில் தொடங்கிய, அமெரிக்க உள்நாட்டுப் போர் என அழைக்கப்படும், கறுப்பர் போராட்டங்கள் பற்றிய மார்க்சின் மதிப்பீடுகளை கெவின் ஆன்றர்சன் தனது மேற்குறிப்பிட்ட நூலில் பேசுகிறார்.  ஆப்பிரிக்க அமெரிக்கர்களைத் தன்னிலை கொண்ட புரட்சிகர சக்திகளாக மார்க்ஸ் இவ்வாண்டிலேயே அடையாளம் கண்டார் என்று கெவின் குறிப்பிடுகிறார். அமெரிக்கக் கண்டத்திலிருந்து மிகவும் குறிப்பிடத்தக்கத் தகவல் (Signal) கிடைத்திருப்பதாக மார்க்ஸ் எழுதினார். ஓர் அடிமைகள் புரட்சி தோற்றம் பெற்று வருவதாக மார்க்ஸ் அதனைக் கணித்தார். 

The rise and fall of New World slavery | International Socialist ...

தெற்கு மாநிலத்தவர் நிறவெறி அடிமை முறையை ஆதரிப்பது மட்டுமல்ல, அது தமது அடிப்படை உரிமை எனக் கோருகின்றனர். இன்னும் கூடுதலாக, தமது அடிமைமுறைக்கு அவர்கள் வடக்கிலும் நிலம் தேடுகின்றனர், நிற அடிப்படையிலான அடிமைமுறையைத் தென்மாநில உடைமையாளர்கள் பரப்ப முனைகின்றனர், இந்த முயற்சி வெற்றி பெற்றால் நிறம்/இனம் அடிப்படையிலான ஒரு புதுவகை முதலாளியம் இனி உருப்பெறும் என்று மார்க்ஸ் எச்சரிக்கிறார். நிற அடிமைத்தனத்திற்கு அவர்கள் தெய்வீக அங்கீகாரம் தேடுகின்றனர், அது நாகரீகத்தின் அடையாளம் என நிரூபிக்க முனைகின்றனர். 

மார்க்சின் இன/வர்க்க இயங்கியல்

அமெரிக்காவில் 1861-65 ஆண்டுகளில் நிகழ்ந்த கறுப்பின மக்களின் விடுதலைக்கான எழுச்சிகள் நடைபெற்றன.  இந்த நூற்றாண்டில் மானுட விடுதலைக்கான மிகப்பெரும் எழுச்சிகளில் ஒன்று இது என மார்க்ஸ் அமெரிக்க நீக்ரோக்களின் எழுச்சியை வர்ணித்தார். இந்த சமூகப் புரட்சி அரசியல் மாற்றங்களை மட்டுமல்லாமல், வர்க்க மற்றும் உடைமை உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று மார்க்ஸ் எழுதினார். அடிமைத்தனத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள வெள்ளை தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தியது.

கறுப்பின மக்களுக்கு மார்க்சின் பெரியளவில் ஆதரவு தெரிவித்தார். நீக்ரோ அடிமைமுறைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளெங்கிலும் ஆதரவைத் திரட்டுவதில் மார்க்ஸ் முன்னிலை வகித்தார். கோட்பாட்டுரீதியாக, வர்க்கமும், இனமும் (Class and Race) என்ற பிரச்சினையை மார்க்ஸ் இக்காலத்தில் இணைத்துச் சிந்தித்தார். 

அமெரிக்காவின் சமூகப் புரட்சி 

கருப்பின அடிமை முறையை ஒழிக்கவேண்டும் என தொழில் வளர்ச்சி பெற்ற வடமாநிலங்கள் கோரின. 50 லட்சம் கருப்பின மக்களை அடிமைகளாகக் கொண்டிருந்த தென்மாநில நில உடமையாளர்கள் அடிமை முறையைத் தொடரவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். ஒரே நாடாக ஒன்றிணைந்திருந்த அமெரிக்க ஐக்கிய நாடுகள் வடக்கு, தெற்கு என இரண்டாக முரண்பட்டு மோதின. தென்மாநிலங்களின் கருப்பின மக்கள் தமது உடமையாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினர். எனவே 1861-65 ஆம் ஆண்டுகளில் வடமாநிலங்களுக்கும் தென்மாநிலங்களுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தமாக மாறியது. இது சாராம்சத்தில் அமெரிக்க ஆப்பிரிக்க மக்களின் எழுச்சிகள் ஆகும்.

1867 ஆம் ஆண்டு மூலதனத்தின் முன்னுரையில், உள்நாட்டுப் போர்தான் வரவிருக்கும் சோசலிச புரட்சிகளின் முன்னோடி என்று எழுதினார். அரசியல் ஏற்பாடுகளை மட்டுமல்லாமல் வர்க்கம் மற்றும் சொத்து உறவுகளையும் மாற்றியமைத்த ஒரு சமூகப் புரட்சியாக அவர் அதைக் கருதினார். 

இங்கிலாந்து போன்ற நாடுகளின் முதலாளிகளும் தென்மாநிலங்களை ஆதரிக்கின்றனர், ஏனெனில் உருளைக்கிழங்கு, பருத்தி ஆகிய உற்பத்திப் பொருட்களுக்கு அவர்கள் அம்மாநிலங்களைச் சார்ந்திருக்கின்றனர். எனவே அமெரிக்காவில் நீக்ரோக்களின் சனநாயகப் புரட்சிக்கான சர்வதேச ஆதரவைத் திரட்டியாக வேண்டும் என மார்க்ஸ் எழுதுகிறார். இது அமெரிக்காவின் இரண்டாவது சுதந்திரப் போர், தென்மாநிலங்களின் கருப்பின மக்களை ஆயுதபாணிகளாக்க நாம் உதவ வேண்டும், இது ஓர் அறவியல் மற்றும் அரசியல், ராணுவத் தேவை என்று மார்க்ஸ் அறைகூவல் விடுத்தார்.

இனவெறி அடிமைத்தனம் பற்றி மார்க்ஸ்

An African slave taught America to vaccinate from smallpox ...

இன அடிமைத்தனம், கூலி அடிமைத்தனத்துடன் எவ்வாறு வேறுபடுகிறது, இரண்டிற்கும் இடையான முரண்பாடு எவ்வாறு தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு எதிராகத் தடையாக இருக்கின்றது என்பதைப் பற்றி மார்க்ஸ் ஆராய்ந்தார். 

கூலித் தொழிலாளர்களும் அவர்களின் உழைப்பும் பண்டமாக்கப் பட்டிருந்தாலும், கூலித் தொழிலாளர்கள் மாறும் மூலதனமாகவும், அவர்களின் உழைப்பு திட்டவட்டமான வடிவங்களிலும் இருக்கின்றது என்று மார்க்ஸ் விளக்கினார். அடிமையின் உழைப்பு இதற்கு நேர் மாறானது.  “அடிமை உரிமையாளர் தனது குதிரையை வாங்கும்போது தனது தொழிலாளியையும் [அடிமைகளை] சேர்த்தே வாங்குகிறார். அவர் தனது அடிமையை இழக்க நேரிட்டால், அவர் மூலதனத்தை இழக்கிறார். அடிமை முறையில், உழைப்பை வாங்குவதற்கு முதலீடு செய்யப்பட்ட மூலதனம் நிலையான மூலதனத்தின் வடிவமாக இருக்கின்றது. இது அடிமையின் ஆயுட்காலம் முடிந்த பிறகு படிப்படியாக மாற்றப்படுகிறது என்று இதை மார்க்ஸ் மேலும்  விளக்குகிறார்

ஒரு அடிமைத்தொழிலாளி ஒரு உயிருள்ள தொழிலாளியாகக் கூட அங்கீகரிக்கப்  படுவதில்லை. ஆனால் ஒரு இறந்த உழைப்பாளராக மட்டுமே பார்க்கப்படுகிறார். மேலும், அடிமையை நிலையான மூலதனமாக அடையாளம் காண்பதன் மூலம், கூலித் தொழிலாளியிடமிருந்து அந்நியப்படுவதை மார்க்ஸ் வேறுபடுத்திக் காட்டுகிறார், கூலித் தொழிலாளர் முன்னர் மாறும் மூலதனம் என்று குறிப்பிடப்பட்டார். எனவே, கூலி உழைப்பும் அடிமைத்தனமும் ஒன்றே என்று மார்க்ஸ் ஒருபோதும் கூறவில்லை. 

அடிமைத்தனம் மற்றும் முதலாளித்துவம்

மார்க்ஸ் அடிமைத்தனம் உலகம் தொடங்கியதிலிருந்து எல்லா நாடுகளிடமும் காணப்பட்டது. ஆனால் மேற்கத்திய முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்த அடிமைத்தனம் ஒரு தனித்துவமான மற்றும் மாறுபட்ட குணத்தைக் கொண்டிருந்தது, இது கடந்த காலத்தின் பிற சமூகங்களில் உள்ள அடிமை அமைப்புகளிலிருந்து வேறுபடுகிறது. முந்தைய அடிமை சமூகங்களில், மக்கள் போர்க் கைதிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவர்கள் அடிமைகளாக மாறினர் வெற்றிபெற்றவர்கள் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் கொல்வதை விடுத்து அடிமைகளாக ஏற்றுக் கொண்டனர். 

1865 இல் போரின் முடிவில் “தொழிலாளர்கள்… அடிமைத்தனத்தை தீட்டுப்படுத்த அனுமதித்தபோது குடியரசு, நீக்ரோவுக்கு முன்னர், அவரது ஒப்புதல் இல்லாமல் தேர்ச்சி பெற்ற மற்றும் விற்கப்பட்டபோது, ​​வெள்ளைத் தோல் உடைய தொழிலாளி தன்னை விற்கவும், தனது சொந்த எஜமானரைத் தேர்வுசெய்யவும் மிக உயர்ந்த உரிமையை அவர்கள் பெருமையாகக் கூறினார்கள், அவர்களால் உண்மையான தொழிலாளர் சுதந்திரத்தை அடைய முடியவில்லை” என்று கூறினார். 

மூலதனத்தில் அவர் அடிமைத்தனத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான உறவை வெளிப்படையாகக் கூறினார்.  பொருட்களின் சந்தையைப் போலவே, அடிமைகளின் சந்தையும் செயல்படுகின்றது. அதாவது போர் போன்ற காரணங்களால் உழைப்புச்சக்தியானது தொடர்ந்து விநியோகம் செய்யப்படுகிறது, எவ்வாறு தங்கத்தின் சந்தைக்குப் பல நூற்றாண்டுகளாக தங்கத்தைக் கையகப்படுத்தப்பட்டதைப் போலவே, தங்களை இனப்பெருக்கம் செய்து கொள்ளும் அடிமைகளும் கையகப்படுத்தப்படுகின்றனர். அடிமைத்தனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார வகையாகும். ஆப்பிரிக்க அடிமைகளின் வணிக ரீதியான கொள்முதல் மற்றும் விற்பனை மனிதத் தொழிலாளர்களை நிலையான மூலதனமாக மாற்றியது.  இது முதலாளித்துவ சமூகங்களுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்க உதவும் செல்வத்தை உருவாக்கியது.

அடிமைத்தனம் இல்லையேல் அமெரிக்கா கிடையாது

 

அடிமைத்தனம் இல்லை என்றால், மிகவும் வளர்ச்சியடைந்த நாடான வட அமெரிக்கா என்பது இல்லை. அது ஒரு பழமையான நாடாக மாற்றப்பட்டுவிடும். உலக வரைபடத்திலிருந்து வட அமெரிக்காவை அழிக்க நேரிடும்.  மிஞ்சுபவை அராஜகமும், வர்த்தகம் மற்றும் நவீன நாகரிகம் ஆகியவற்றின்  மொத்த சிதைவு மட்டுமே. ஆனால் அடிமைத்தனம் மறைந்து போவது என்பது வட அமெரிக்காவை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதாகும்.

தெற்கிற்கும் வடக்கிற்கும் இடையிலான தற்போதைய போராட்டம் இரண்டு சமூக அமைப்புகளுக்கிடையேயான மோதலைத் தவிர வேறில்லை, அடிமை முறை மற்றும் சுதந்திர உழைப்பு முறை. இரு அமைப்புகளும் இனி வட அமெரிக்கக் கண்டத்தில் அமைதியாக வாழ முடியாது என்பதால் போராட்டம் வெடித்தது. இது ஒரு அமைப்பின் வெற்றியின் மூலம் மட்டுமே முடியும்.

கறுப்பர் விடுதலைப் பிரகடனம் 

கறுப்பின மக்களின் விடுதலையை ஆதரித்து வந்த அதிபர் ஆபிரகாம் லிங்கன் மிதமான முறையில் அதனைக் கையாளுகிறார் என மார்க்ஸ் கருதினார். அடிக்கடி ஆமை போல் அவர் தன்னை உள்ளிழுத்துக் கொள்கிறார் என்று மார்க்ஸ் ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். பல்வேறு அரசியல் குழுவினரும் அக்காலத்தில் சட்டப்பூர்வமான வழிகளின் மூலமாகவே பிரச்சினையை எதிர்கொள்ள முடியும் எனக் கூறி வந்தனர். ஆயின் இம்மாதிரியான பிரச்சினைகள் புரட்சிகரமான வழிமுறைகளால் நேரடியாகக் கையாளப்படவேண்டும் என்று மார்க்ஸ் எழுதினார். விடுதலை பெற்ற ஹாய்த்தி, லிபேரியா போன்ற புதிய நீக்ரோ குடியரசுகளுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் வழங்கி, அந்நாடுகளின் கறுப்பினப் போராளிகளைத் தென்மாநிலங்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று மார்க்ஸ் எழுதினார். 

1863ல் அதிபர் லிங்கன் வெளியிட்ட கறுப்பர் விடுதலைப் பிரகடனத்தை மார்க்ஸ் ஆதரித்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பழைய சுதந்திரப் பிரகடனத்தை விடவும், இப்போதைய பிரகடனம் பலவகைகளில் விஞ்சிவிட்டது என்று மார்க்ஸ் லிங்கனைப் பாராட்டினார். முந்திய அமெரிக்க சுதந்திரப் போர் மத்தியதர வர்க்கத்தினரின் தொடர்ந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியது; இப்போதைய கறுப்பின எழுச்சிகள் உழைக்கும் வர்க்கத்தினரின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்று மார்க்ஸ் எழுதினார்.  

அமெரிக்காவைப் பற்றி மூலதனத்தில் “அடிமைத்தனம் அமெரிக்கக் குடியரசின் ஒரு பகுதியைச் சிதைக்கும் வரை ஒவ்வொரு சுதந்திரமான தொழிலாளர் இயக்கமும் முடங்கிப் போயிருந்தது. கருப்பு நிற தோலில் உள்ள அடிமை முத்திரையை நீக்கப் படாவிட்டால், வெள்ளைநிற உழைப்பு தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது” என்று கூறினார். 

முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்திற்கு இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது முற்றிலும் அவசியமானது என்று மார்க்ஸ் கண்டார். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, ​​அடிமைகளின் விடுதலையில் தாங்கள் ஒரு சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘ஒரு அடிமைப் புரட்சிக்கு’ அவர் அறைகூவல் விடுத்தார். 

உயிரோட்டமான இயங்கியல் அணுகுமுறை

Former Slaves' Stories of Abraham Lincoln in the South - The Atlantic

மேற்கு ஐரோப்பாவையும் பிரிட்டனையும் ஆராயும்போது அவை குறித்த மார்க்சின் கருத்துரைகளும்,  ஆசிய, ஆப்பிரிக்கா நாடுகளைச் சார்ந்த பிற சமூகங்கள் குறித்த அவரது ஆய்வுகளும் ஒன்றுக்கு ஒன்று எதிராக நிறுத்தப்படுகின்றன. இந்த இரண்டு ஆய்வுகளிலிருந்து அவர்கள் இரண்டு விதமான கருத்துக்களை வெளியிட்டதாகத் தோன்றலாம். ஆனால் இரண்டு கருத்துகளும் ஒன்றுக்கொன்று எதிரான தன்மை கொண்டதல்ல. பிந்தையது முந்தையதிலிருந்து வளர்ச்சி பெற்ற ஒன்றாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.  மார்க்சின் சிந்தனையில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்காகக் காண வேண்டும். 

மேற்கு ஐரோப்பியச் சமூகங்கள் குறித்த ஆய்வுரைகளை முற்றும் முழுதான கருத்தாக சில மரபு மார்க்சியர்கள் பார்க்கின்றனர். மார்க்சின் எந்தக் கருத்தும் முற்றுரிமையானது அல்ல. அவரது எல்லாக் கருத்துக்களிலும் வளர்ச்சிக்கான தொடுப்பு இருக்கும். அவை சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய வளர்ச்சி நிலைகளை கோரும்.  அதைப் பூர்த்தி செய்யவேண்டியது மார்க்சியர்களின் தலையாய கடமை ஆகும். மார்க்சியம், இயங்கியல் தன்மை கொண்டது என்பதன் பொருள் இதுதான். 

இனவெறியைக் கொண்ட நவீன சமூகமான அமெரிக்காவை மார்க்சிய அடிப்படையில் புரிந்துகொள்வதில் சிக்கல்கள் நீடிக்கும் வேளையில்,  மிகவும் பழைமையான சாதிய வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட இந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்வதில் இன்னும் உயிரோட்டமான இயங்கியல் அணுகுமுறை தேவைப்படுகின்றது. 

மார்க்சியமும் கருப்பின முற்போக்குவாதிகளும்

தொழிலாளர்களை இனம் மூலம் பிரிப்பதன் மூலமும், இனவெறிக்குத் தூண்டுவதன் மூலமும், பொருளாதார மற்றும் அரசியல் உயரடுக்கு தொழிலாளர்கள் ஒரு ஒருங்கிணைந்த வர்க்கம் உருவாகாது என்பதை உறுதிசெய்தது, இது கருப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்கள் இருவரையும் தீவிர பொருளாதார சுரண்டலுக்கு அனுமதித்தது. 

மார்க்சியத்தால் பரப்பப்படுகின்ற பலவிதமான ஐரோப்பிய மையவாத கோட்பாடுகள் ஒரு கருப்பு மார்க்சிய கோட்பாட்டை உருவாக்குவதற்கு பெரும் சவாலாக இருப்பதாகக் கறுப்பு மார்க்சியம் உணர்கின்றது. டபிள்யூ.ஈ.பி. டு போயிஸ், சி. எல். ஆர். ஜேம்ஸ், மற்றும் ரிச்சர்ட் ரைட்,  செட்ரிக் ஜெ.ராபின்சன் போன்றோர் இருபதாம் நூற்றாண்டின் கருப்பு தீவிர சிந்தனையாளர்களின் மரபில் வந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களின் சிலரை மட்டும் சிறிது விரிவாகப் பார்ப்போம்.

கறுப்பினக் கோட்பாட்டாளரான டபள்யூ.பி. டு போய்ஸ் 

W. E. B. Du Bois | The Hutchins Center for African & African ...

W.E.B. டு போயிஸ், ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கக் கறுப்பினச் சிந்தனையாளர்,  ஆசிரியர், சமூகவியலாளர் ஆவார், டு போயிஸ் கம்யூனிசம் மற்றும் சர்வதேச பிரச்சினைகளிலும் அதிக ஆர்வம் காட்டினார். மேலும் முற்போக்கான மற்றும் இடதுசாரி குழுக்களின் ஆதரவாளராக ஆனார். அமெரிக்காவில் கறுப்பின சிவில் உரிமைகளுக்கான இயக்கத்தின் முன்னணியிலிருந்தவராகவும் இருந்தார்.

அவருடைய பணி அமெரிக்க சமுதாயத்தில் கறுப்பின குடிமக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. அவரது காலத்திற்கு முன்பே கருதப்பட்ட டு போயிஸ், கறுப்பின சமூகத்திற்கான சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க கடுமையாக முனைந்தார். 

கட்டமைக்கப்பட்ட இனவெறி

1899 இல் ‘பிலடெல்பியா நீக்ரோ’ என்ற இவரது ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. இது டு போயிஸின் முதல் முக்கிய படைப்பாகும். சமூகவியல் நோக்கங்களுக்காகப் புள்ளிவிவரப் பணிகள் பயன்படுத்தப்படுவதற்கான ஆரம்ப எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இந்த ஆய்வு கருதப்படுகிறது. இது விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட சமூகவியலின் முதன்மையான ஆய்வுகளின் ஒன்றாக கருதப்படுகின்றது. 1897 ஆம் ஆண்டில் வர்ஜீனியாவின் ஃபார்ம்வில்லில் உள்ள கறுப்பின தெற்கு வீடுகளில் பல அடிப்படை ஆய்வுகளை நடத்தினார். இனவெறியின் யதார்த்தங்களையும், இந்த சமூகத்தின் வாழ்க்கையையும் வாய்ப்புகளையும் அது எவ்வாறு பாதித்தது என்பதை அவர் தெளிவாக விளக்கினார். கறுப்பின மக்களின் கலாச்சார மற்றும் அறிவுசார்ந்த தாழ்வு மனப்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களை வழங்கினார்.

பொதுவாக, W.E.B. டு போயிஸ் அவர்களின் சமூகவியல் ஆய்வுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. சமூகவியல் தூய தத்துவார்த்த வடிவங்களில் இருந்த நேரத்தில் இத்தகைய ஆய்வுகள் தீவிரமாகக் கருதப்பட்டன. விசாரணை மற்றும் தரவு பகுப்பாய்வை சமூகவியல் ஆய்வுக்கு பயன்படுத்துவதில் டு போயிஸ் முக்கிய பங்கு வகித்தார். 

இவர் அட்லாண்டா பல்கலைக்கழகத்திற்குக் குடிபெயர்ந்த போது, எழுதப்பட்ட நூல்களில் ‘கருப்பு நாட்டுப்புறங்களின் ஆத்மாக்கள்’  (The Souls of Black Folk (1903) என்பது அமெரிக்காவின் கருப்பின அனுபவத்தை ஆராயும் சமூகவியல் கட்டுரைகளின் தொகுப்பாகும். அவரது எழுத்துக்கள் அனைத்தும்  ஆப்பிரிக்க அமெரிக்க ஆய்வுகளில் இன்றியமையாத படைப்புகளாக ஆயின. இந்த நூல் “இரட்டை உணர்வு” என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியது, இதில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தங்களைப் பற்றிய தங்கள் பார்வையை மட்டுமல்லாமல், உலகம், குறிப்பாக வெள்ளையர்கள், வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் அவர்கள் மீது வைத்திருக்கும் கருத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது புக்கர் டி.வாஷிங்டன் போன்ற பழமைவாத கருப்பின குரல்களிலிருந்து டு போயிஸை வெளிப்படையாக வேறுபடுத்தியது.

அமெரிக்கக் கறுப்பினத் தொழிலாளி இருவரால் ஒடுக்கப்படுவதாக டு போய்ஸ் அதில் குறிப்பிடுகிறார். வெள்ளையின் தொழிலாளி நிறத்தை வைத்து கறுப்பினத் தொழிலாளியை விலக்குகிறார், வெள்ளையின முதலாளி கறுப்பினத்தவர்  தொழிலாளி என்பதாலும், ஆப்ரிக்கன் என்பதாலும் தம்மை ஒடுக்குகிறார், எனவே, இரண்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் கறுப்பின மக்களைக் கவனத்தில் கொள்ளாமல் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட முடியாது என்பது அவரது அடிப்படையான கூற்று.

இனவாதம் வர்க்க உணர்வைத் தடுக்கிறது

சமூகவியல் சார்ந்த ஆய்வை ஆழமாக முன்னெடுத்து முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களை எழுதினார். குறிப்பாக, அன்றைய சமூகவியலாளர்கள் இனம் மற்றும் இனவாதத்தை எவ்வாறு ஆராய்கின்றனர் என்று எடுத்துக் கூறினார். கார்ல் மார்க்ஸ், எமில் துர்கெய்ம், மேக்ஸ் வெபர் மற்றும் ஹாரியட் மார்டினோ ஆகியோரின் மார்க்சியப் போக்கை  நிறுவியவர்களில் ஒருவர். மேற்கத்திய வெள்ளை மூலதனம், கருப்பினத்தவரது அடிமை உழைப்பின் மீது கட்டியெழுப்பப் பட்டுள்ளது என்பதை மார்க்ஸ் இக்காலத்தில் புரிந்துகொண்டார் என்பதை வெளிப்படுத்தினார். “நிறவெறிச் சாதிமுறை” (Colour Caste) இல்லாமல் வெள்ளை மூலதனம் இத்தனைத் திமிர் கொண்டதாக உருவாகியிருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். நிறவெறி அடிமைமுறையானது நவீனக் காலம் உருவாக்கி அளித்த சனநாயக மாண்புகளைச் சிதைத்துவிட்டது என்று எழுதினார். 

இது இனவெறியின் உளரீதியான சமூக விளைவுகளைத் தெளிவாக விளக்குவதற்கு ஒரு வெள்ளை தேசத்தில் கறுப்பாக வளர்ந்த டு போயிஸின் சொந்த அனுபவத்தை எதிரொலிக்கின்றது. 

செட்ரிக் ஜெ.ராபின்சன்

What Did Cedric Robinson Mean by Racial Capitalism? | Boston Review

செட்ரிக் ஜெ.ராபின்சன் (Cedric J. Robinson) சமீபத்திய காலங்களில் மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க கறுப்பின தீவிர அறிஞர்களில் ஒருவராக இருந்தார். ‘செட்ரிக் ராபின்சன் ஒரு தலைசிறந்த அறிஞர். அவர் எழுதிய அனைத்தும் கணக்கிட முடியாத வகையில் மிகவும் மதிப்பு வாய்ந்தவை.  

இவர் பார்பராவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘கருப்பின ஆய்வுகள் மற்றும் அரசியல் அறிவியல் துறை’யில் பேராசிரியராக இருந்தார்.. கறுப்பின ஆய்வுத் துறை மற்றும் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருந்த அவர், கறுப்பு ஆய்வு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நூல்களில் குறிப்பிடத்தக்கவை: 1. ‘Black Marxism: The Making of the Black Radical Tradition’ (1983); 2. ‘Black Movements in America’ (1997); and 3. ‘Terms of Order: Political Science and the Myth of Leadership’ (1980), 4. An Anthropology of Marxism.

கருப்பின தீவிர பாரம்பரியத்தை உருவாக்குதல்

1983 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியிடப்பட்ட கறுப்பு மார்க்சியம்: கறுப்பின தீவிர பாரம்பரியத்தை உருவாக்குதல் என்ற நூல மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. செட்ரிக் ராபின்சன் இந்நூலில் கறுப்பின மக்களின் எதிர்ப்பின் வரலாற்றை மார்க்சிச முப்பட்டகத்தின் (Prism) மூலமாக மட்டுமே புரிந்துகொள்ளும் முயற்சிகள் முழுமையற்றவை மட்டுமல்ல தவறானவையும் கூட என்பதை நிரூபிக்கிறது. மார்க்சிய பகுப்பாய்வுகள் ஐரோப்பிய வரலாறு மற்றும் அனுபவத்தின் முன்மாதிரிகளைக் கொண்டு முன்வைக்கின்றன, அவை கறுப்பின மக்கள் மற்றும் கறுப்பின சமூகங்களின் தனித்தன்மைகளைக் குறைத்து மதிப்பிடுகின்றன. கறுப்பு தீவிரவாதமானது, ஆப்பிரிக்காவின் மரபுகள் மற்றும் மேற்கு கண்டங்களில் உள்ள கறுப்பர்களின் தனித்துவமான அனுபவங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று ராபின்சன் வலியுறுத்திக் கூறுகிறார். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வரலாற்றின் பகுப்பாய்வுகளும் இதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

ராபின்சன் தனது வாதத்தை நிறுவுவதற்கு, ஐரோப்பாவில் மார்க்சிய சித்தாந்தத்தின் தோற்றம், வரலாற்று ரீதியாக அடக்குமுறை சூழல்களில் கறுப்பர்களின் எதிர்ப்பு மற்றும் W.E.B. டு போயிஸ், சி.எல்.ஆர் ஜேம்ஸ் மற்றும் ரிச்சர்ட் ரைட் போன்ற இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான கருப்பு தீவிர சிந்தனையாளர்களின் மரபிலிருந்து ஆராய்கிறார்.  மேலும், மேற்கு மார்க்சியத்தால் முதலாளித்துவத்தின் இனத் தன்மையையோ அல்லது ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள வெகுஜன இயக்கங்களையோ புரிந்து கொள்ள முடியவில்லை என்று ராபின்சன் கூறுகிறார். ராபின்சன் அரசியல் கோட்பாடு, வரலாறு, தத்துவம் மற்றும் கலாச்சார பகுப்பாய்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து தனது வாதத்தை விளக்குகிறார். மேலும் W. E. B. டு போயிஸ், சி. எல். ஆர். ஜேம்ஸ் மற்றும் ரிச்சர்ட் ரைட் போன்ற முக்கியமான கறுப்பின தீவிர சிந்தனையாளர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் மார்க்சிச சித்தாந்தத்தையும்  கறுப்பின எதிர்ப்பையும் விவரிக்கிறார்.

இனவெறி முதலாளித்துவம், கருப்பு சர்வதேச வாதம் மற்றும் எதிர்ப்பின் கலாச்சாரங்கள் 

செட்ரிக் ஜே. ராபின்சன் தேர்ந்த கறுப்பின ஆய்வாளர்களில் ஒருவராகவும், தீவிர கறுப்பின வாதிகளின் பாரம்பரியத்தை ஆய்வு செய்வதில் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். இன முதலாளித்துவத்தை மறுகட்டமைப்பதிலும் பெர்குசனில் இருந்து மேற்குக்கரை வரையிலும் உள்ள கிளர்ச்சியாளர்களின் இயக்கங்களை ஊக்குவிப்பதிலும் இவரது படைப்புகள் இன்றியமையாத நூல்களாகும். முதன்முறையாக ராபின்சனின் நாற்பதாண்டு காலப் பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 

கலாச்சாரம் மற்றும் அரசியல், தீவிர சமூக கோட்பாடு மற்றும் நவீன அரசியல் தத்துவம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவுகளில் அவரது பன்முக ஆர்வங்கள் பிரதிபலிக்கின்றன. ஆப்பிரிக்கா மற்றும் கறுப்பு சர்வதேச வாதம், உலக அரசியல், இனம் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, பிரபலமான கலாச்சாரத்தில் கறுப்புத்தன்மையின் பிரதிநிதித்துவங்கள் மற்றும் இன முதலாளித்துவத்திற்கு மக்கள் எதிர்ப்பு, வெள்ளை மேலாதிக்கம் மற்றும் பலவற்றின் பிரதிபலிப்புகள் ஆகியவை அவரது ஆய்வுக்குள் அடங்கும்.

அரசியல் அறிவியல் மற்றும் தலைமைத்துவத்தின் கட்டுக்கதை

இந்நூல் முதலில் 1980 இல் ‘ஒழுங்கு விதிமுறைகள்: அரசியல் அறிவியல் மற்றும் தலைமைத்துவத்தின் கட்டுக்கதை’ என்ற நூல வெளியிடப்பட்டது.  எப்போதாவது வன்முறை மோதல்கள் வெடிக்கும் ஒழுங்கான சமூகங்களில் நாம் வாழ்கிறோமா அல்லது நம் சமூகங்களில் வன்முறை மற்றும் சீர்கேடுகளின் நிலையை நாம் உணரத் தவறுகிறோமா என்ற அடிப்படையான கேள்வியை இவர் எழுப்புகிறார்.  அரசியல் ஒழுங்கைப் பற்றிய நமது கருத்து ஒரு மாயை என்று இவர்  கூறுகிறார். இது சமூக ஒழுங்கை விவரிப்பதற்கான ஒரு அடிப்படையாகத் தலைமைத்துவத்தின் கருத்தை நம்பியிருக்கும் மேற்கத்திய அரசியல் மற்றும் சமூக கோட்பாட்டாளர்களால் நிலைநாட்டப்படுகிறது. 

தனது பகுப்பாய்வில் பலவிதமான விமர்சன அணுகுமுறைகளைப் பயன்படுத்தி, ராபின்சன் உளவியல் பகுப்பாய்வு, கட்டமைப்பு வாதம், மார்க்சியம், செவ்வியல் மற்றும் நவ செவ்வியல் அரசியல் தத்துவம் மற்றும் கலாச்சார மானுடவியல் ஆகியவற்றின் கூறுகளை ஒருங்கிணைக்கிறார். இதன் மூலம் மேற்கத்திய மரபில் தலைமை பற்றிய கருத்து என்பது மாயையானது என்பதை நிரூபிக்க முனைகிறார். 

பின்னர் அவர் வரலாற்று ரீதியாக வளர்ந்த நிலையற்ற சமூகங்களை அவற்றின் சமூக அமைப்புகளுடன் முன்வைக்கிறார். இவை மேற்குலகத்தில் உருவான அரசியல் ஒழுங்கு விதிமுறைகளுக்கு, கருத்தியல் ரீதியிலான மாற்றுகளைப் பரிந்துரைக்கிறது. மேற்கத்திய நிறுவனங்கள் மற்றும் அறிவுசார் மரபுகளில் ஒருங்கிணைந்த மக்களின் மேற்கத்தியச் சிந்தனையை ஆராய்கிறார். இதன் மூலம்  ​​ராபின்சன் தலைமை மற்றும் ஒழுங்கு போன்ற அடிப்படைக் கருத்துக்களைத் தீவிரமாக விமர்சிக்கிறார்.

மார்க்சியத்தின் ஒரு மானுடவியல்

இந்த படைப்பில், அவர் ஐரோப்பியத் தீவிர மரபுகளுக்குத் தனது கவனத்தைத் திருப்புகிறார். மேலும் மார்க்சியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய விடுதலை சிந்தனையையும், நடைமுறை இயக்கத்தினையும் ஆராய்கிறார், இவரது இத்தகைய கருத்துக்கள், இன்றும் விடுதலை இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கு வழிகாட்டுகிறது.

அமெரிக்காவில் கருப்பு இயக்கங்கள் 

செட்ரிக் ராபின்சன் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் அடிமை எதிர்ப்பிலிருந்து அமெரிக்காவில் கறுப்பு அரசியல் கலாச்சாரங்கள் தோன்றியது மற்றும் தற்போதைய சிவில் உரிமை இயக்கங்கள் வரை கண்டறிந்துள்ளார். வரலாற்றுப் பதிவுகளில் அடிப்படையில், அடிமைகள் மற்றும் சுதந்தர கறுப்பர்களின் முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஆராய்ந்து கறுப்பர்கள் எதிர்ப்பின் கலாச்சாரம் மற்றும் கலாச்சார இருப்பு ஆகிய இரண்டையும் உருவாக்கியுள்ளனர் என்று அவர் வாதிடுகிறார்.

கறுப்பர்களும் அமெரிக்கத் திரைப்படங்களும்

Finding ways to be one: The making of Cedric J. Robinson's ...

செட்ரிக் ஜே. ராபின்சன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாடகம் மற்றும் திரைப்படம் குறித்த தனது பகுப்பாய்வு மூலம் அமெரிக்காவில் இனம் குறித்த புதிய புரிதலை வழங்குகிறார். அமைதியான திரைப்படத்தின் காலங்களிலும், ஆரம்பக்கால “சினிமா கொட்டகைக்” காலத்திலும் இருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்திகள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் குறைந்தபட்ச பிரதிநிதித்துவங்களை நிலைநிறுத்தின என்று அவர் வாதிடுகிறார்.

ஷேக்ஸ்பியர் காலம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் வளர்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இன நம்பிக்கைகள் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் இணையான வளர்ச்சியைக் கொண்டிருந்த சூழல்களில் ராபின்சன் தனது ஆய்வை மேற்கொண்டார். தியேட்டரிலும், மோஷன் பிக்சர்களிலும், வெளியிடப்பட்ட ப்டங்கள் குறிப்பாக பெருந்தோட்ட மற்றும் ஜங்கிள் படங்கள் மூலம் அமெரிக்க வர்த்தகத்தின் தேவைகள் தொடர்ச்சியான இன ஆட்சிகளை எவ்வாறு நிர்ணயித்தன என்பதை அவர் நிரூபிக்கிறார். கறுப்பு பிரதிநிதித்துவ வரலாற்றில் புதிய ஆழத்தையும் சிக்கலையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், ராபின்சன் இத்தகைய நடைமுறைகளுக்கு கறுப்பினத்தவரின் எதிர்ப்பையும் ஆராய்கிறார். திரைப்படங்களில் அமெரிக்கத் தேசிய புராணங்கள் குறித்த வெளிப்படையான அரசியல் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ராபின்சனின் பகுப்பாய்வு அமெரிக்கக் கதை சினிமாவின் தொடக்கத்தில் இருக்கும் அறிவுசார், அரசியல் மற்றும் ஊடக இனவெறியை அணுகுவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கிறது.

கறுப்பின உயிர்களுக்கான இயக்கம் கறுப்பு தீவிரவாதத்தை உருவாக்கும் முன்பு, செட்ரிக் ராபின்சன் இன்று ஒரு அறிவுசார் வரலாற்றை அகழ்வாராய்ச்சிச் செய்தார் என்று கூறலாம்.  அபூர்வமான பல்துறை வல்லுநர். அவரது கண்ணோட்டம் அதன் தோற்றம் மற்றும் அதன் எதிர்காலம் ஆகிய முழுவதையும் பார்க்கும் திறன் கொண்டது.  அவர் ஆராயாத துறைகள் இல்லை. அந்தளவுக்கு புவியியலின் எல்லையும் அவர் சார்ந்த சகாப்தத்தின் எல்லையையும் தொட்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

References:

  1. How W.E.B. Du Bois Made His Mark on Sociology

  2. Black Marxism: The Making of the Black Radical Tradition, Cedric J. Robinson

  3. Marx at the Margins, On Nationalism, Ethnicity, and Non – Western Societies, Kevin B.Anderson.
  4. விளிம்புநிலை மார்க்ஸ் என்ற ஒரு புதிய நூல்,  ந. முத்து மோகன்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *