மிகப்பெரிய உப்புத் தளம் (The World’s largest salt flat) – ஏற்காடு இளங்கோ
அமெரிக்காவில் உட்டா என்ற பகுதியில் போன்வில்லி உப்புத் தளம் மிகவும் புகழ்பெற்றது. இதைவிட 100 மடங்கு பெரிய உப்புத் தளம் தெற்கு பொலிவியாவில் உள்ளது. இது பூமியில் யாரும் நம்ப முடியாத அளவிற்கு மிகப்பெரியது. இது உலகின் மிகப்பெரிய உப்புத் தளம் (The World’s largest salt flat) ஆகும். இதை உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனம் என்கின்றனர்.
இது சாலார் டி உயுனி (Salar de Uyuni) என்றப் பெயரில் அழைக்கப்படுகிறது. ஸ்பானிய மொழியில் சாலார் என்றால் உப்புத் தளம் என்று பொருள். அதே சமயத்தில் உயுனி என்பது அருகில் உள்ள நகரத்தின் பெயர் ஆகும். உப்புத் தளத்துக்குச் செல்லும் பெரும்பாலான மக்கள் இந்த நகரத்திலிருந்தே புறப்படுகின்றனர். ஆகவே இது உயினியில் உள்ள உப்புத் தளம் என மக்களால் அழைக்கப்படுகிறது.
இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 12,000 அடி (3,660 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இந்தத் தட்டையான உப்புத் தளம் சுமார் 9,500 முதல் 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் சுமார் 10 பில்லியன் டன்கள் அளவிற்கு உப்பு இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 25,000 டன்கள் உப்பு பிரித்து எடுக்கப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய ஏரிகள் சுமார் 30,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வறண்டு போகத் தொடங்கியது. ஏரிகள் ஆவியாகியதால் அதில் உள்ள உப்பு மேலும் மேலும் அடர்த்தியாகி இறுதியில் படிகமாக மாறியது. இது 10 முதல் 32 அடி தடிமன் கொண்ட மேலோடாக உருவானது. இந்த உப்புத் தளம் பனியால் மூடப்பட்ட மலைகள் மற்றும் எரிமலைகளால் சூழப்பட்டுள்ளது.
உப்பு நீரை விட நன்னீர் அடர்த்தி குறைவாக இருப்பதால் அது உண்மையில் உப்புத் தளத்தின் மீது மிதக்கிறது. இது ஆழமற்ற நீரால் மூடப்பட்டிருக்கும். இது கண்ணாடி போல் தெரியும். இதில் உங்கள் முகத்தைப் பார்க்கலாம். ஆகவே இது உலகின் மிகப்பெரிய கண்ணாடி (The lagest mirror on Earth) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வறண்ட மூலைகளில் தேன்கூடு போல் அறுகோண வடிவங்களையும் காணலாம். இந்தத் தளத்திற்கு கீழே உலகிலேயே அதிகமான லித்தியம் (11 மில்லியன் டன்கள்) நிறைந்துள்ளது.
கட்டுரையாளர் :
– ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.