உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 2 : இளையவளும், அரக்கனும் (ஸ்காட்லாந்து நாட்டுக் கதை) தமிழில் – ச.சுப்பாராவ்

 

முன்னொரு காலத்தில் ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு ராஜா, ராணி இருந்தார்கள். ராஜா திடீரென்று இறந்து போனார். ராஜாவின் தூரத்து உறவினர் ஒருவர் ராஜா ஆகிவிட்டார். புது ராஜா ராணியையும், அவளது மூன்று மகள்களையும் அரண்மனையை விட்டுத் துரத்திவிட்டார். ஊருக்கு வெளியே குடிசையும், தோட்டமும் போட்டுக் கொள்ள சிறிதளவு நிலமும் கொடுத்தார்.

ராணி சுறுசுறுப்பானவள். இந்தத் துன்பத்தைக் கண்டு கலங்கவில்லை. புது ராஜா கொடுத்த நிலத்தில் சின்ன குடிசை கட்டிக் கொண்டு, தோட்டம் போட்டு, ஒரு பசு மாட்டை வளர்த்து உழைத்து வாழ்ந்தாள். மூத்த மகள்கள் இருவரும் தமது நிலை பற்றிப் புலம்பினாலும், உழைத்து வாழ்வதன் உயர்வு பற்றி ராணி எடுத்துக் கூறுவாள்.

ஒரு நாள் இரண்டாவது மகள் தோட்டத்தில் முட்டைக்கோஸ் பறிக்கச் சென்றாள்.  ”அம்மா, இங்கே பாருங்கள்,. யாரோ நமது முட்டைக் கோஸ்களை திருடிச் சென்றிருக்கிறார்கள்,” என்று அலறினாள்.

எல்லோரும் தோட்டத்திற்குச் சென்றார்கள். முட்டைக்கோஸ்கள் அனைத்தும் திருடப்பட்டிருந்ததைப் பார்த்து மூன்று பெண்களும் வேதனைப்பட்டார்கள். ராணி விரைவில் புதிய முட்டைக்கோஸ்கள் வளர்ந்துவிடும்என்று ஆறுதல் சொன்னாள். அக்காக்கள் இருவரும்அழுது கொண்டிருக்க, கடைசிப் பெண் தோட்டத்தில் இங்கும் அங்கும் சுற்றிப் பார்த்தாள்.

”அம்மா, வேலிக்கு அருகே பிரும்மாண்டமான காலடித் தடம் இருப்பதைப் பாருங்கள்,” என்றாள்.

எல்லோரும் அங்கு சென்று பார்த்தார்கள். அவ்வளவு பெரிய காலடித் தடம் என்றால் ஒரு அரக்கன் தான் வந்திருக்க வேண்டும். அவர்கள் இரவு காவல் இருந்து யார் அந்த அரக்கன் என்று பார்க்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

மூத்தவள் அன்றிரவு தான் காவல் இருப்பதாகச் சொன்னாள். அன்றிரவு ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு தோட்டத்தில் மறைந்து உட்கார்ந்தாள். திடீரென தரை அதிரும் விதமாக காலடி ஓசை கேட்டது. ஒரு பெரிய அரக்கன் வேலியைத் தாண்டி தோட்டத்தில் நுழைந்து முட்டைக்கோஸ்களைப் பறிக்க ஆரம்பித்தான்.

மூத்தவள், ”எங்கள் முட்டைக்கோஸ்களை ஏன் திருடுகிறாய்?“ என்று சத்தம் போட்டாள். அரக்கன் உடனே அவளைச் சட்டென்று பிடித்து தன் சாக்குப்பையில் போட்டுக்கொண்டான். சாக்கை தோளில் போட்டுக்கொண்டு, ஒரு பெரிய மலையைத் தாண்டி தன் வீட்டை அடைந்தான்.

அங்கு சாக்கிலிருந்து அவளை வெளியே போட்ட அரக்கன் அவளை மாட்டை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும், கம்பளியை சிக்கெடுத்து போர்வை நெய்ய வேண்டும், கஞ்சி காய்ச்ச வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டான்.  மூத்தவள் மாட்டை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கஞ்சி காய்ச்சினாள். மிகவும் பசித்தது. கஞ்சியைக் குடிக்க உட்கார்ந்தாள்.

அப்போது பரிதாபமான தோற்றத்தோடு ஒருவன் வந்து ”எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடு,” என்றான். ” போ.. போ..அரக்கன் வந்தால் உன்னைக் கொன்றுவிடுவான்,” என்று அவனை விரட்டிவிட்டு விட்டு, கஞ்சியைக் குடித்தாள்.

பிறகு கம்பளி நூல்களைச் சிக்கெடுக்க ஆரம்பித்தாள். அவை மிகவும் சிக்கலாக இருந்தன. அவளால் அதை சரிசெய்யமுடியவில்லை. பொறுமையின்றி சிக்கெடுத்த்தால், கம்பளி நூல்கள் அறுந்தன. அதற்குள் அரக்கனுக்காக அடுப்பில் வைத்திருந்த கஞ்சி தீய்ந்து விட்டது. வீடு வந்த அரக்கன் அவள் ஒரு வேலையையும் சரியாகச் செய்யவில்லை என்று அவளை சேந்தியில் தூக்கிப் போட்டுவிட்டான்.

இரண்டாம் நாள் இரண்டாவது மகள் காவலுக்கு இருக்க, அவளுக்கும் இதே கதிதான். அரக்கன் அவளைத் தூக்கி வந்தான். வேலைகள் தந்தான். அவள் வேலைகளைச் சரியாகச் செய்யவில்லை. பசி என்று வந்தவனுக்கு எதுவும் தரவில்லை. அவளும் சேந்தியில் தூக்கி எறியப்பட்டாள்.

மூன்றாம் நாள் அரக்கன் தோட்டத்திற்கு வந்த போது, இளைய மகள் காவலில் இருந்தாள். அரக்கனைப் பார்த்த்தும், ” இரவு வணக்கம்,” என்றாள் பணிவாக. ”நீ என்னுடன் வரவேண்டும்” என்றான் அரக்கன். ” நன்றி.. நான் தயார்,” என்றாள் இளையவள்.

அரக்கனுக்கு அவள் நடத்தை வியப்பாக இருந்த்து. தனது சாக்கில் அவளைப் போட்டுக் கொண்டான். இளையவள் தன் கையில் இருந்த கத்தியால் சாக்கில் சின்ன ஓட்டை போட்டு, அரக்கனின் வீட்டுக்குச் செல்லும் பாதையைத் தெரிந்து கொண்டாள்.

அரக்கன் அவளுக்கும் அதே வேலைகளைத் தந்துவிட்டு வெளியே சென்றான். அவளும் மாட்டை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு கஞ்சி காய்ச்ச ஆரம்பித்தாள்.

அப்போது வழக்கம் போல அந்தப் பிச்சைக்காரன் வந்து பசிக்கிறது என்றான். இளைவள் அவனுக்கு தான் குடிக்க வைத்திருந்த கஞ்சியைக் கொடுத்தாள். கஞ்சியைக் குடித்த அவன் இந்தக் கம்பளியைச் சிக்கெடுத்து நான் நெய்து தரவா என்றான். சரி என்றதும், அவள் கஞ்சி காய்ச்ச அவன்  வேகமாக ஒரு அழகான கம்பளியை நெய்து தந்துவிட்டுக் கிளம்பினான்.

அரக்கன் நல்ல கஞ்சியும், கம்பளியும் கண்டு மகிழ்ந்தான். உன் அக்காக்களுக்கும் இவற்றைக் கற்றுக் கொடு, என்று சொல்லி சேந்தியில் ஏற ஒரு ஏணி தந்தான்.

சேந்தியில் சகோதரிகள் மூவரும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டனர். மறுநாள் கீழே இறங்கி வந்த இளையவள், ” எங்கள் வீட்டில் மாட்டிற்கு புல் அறுக்க ஆள் யாரும் இல்லை. எனவே இந்த புல் மூட்டையை எங்கள் அம்மாவிடம் தருகிறீர்களா?” என்று பணிவாக அரக்கனிடம் கேட்டாள். அரக்கனும் சரி என்று புல் மூட்டையை அவள் அம்மா வீட்டில் தந்து வந்தான். அன்றிரவும் இளையவள் சேந்தியில் தான் உறங்கினாள்.

மறுநாளும் அரக்கனிடம் அம்மாவிற்கு புல்மூட்டையை அனுப்பினாள். அன்று மாலை அரக்கன் திரும்பி வந்த்தும் ”நான் காலையில் சீக்கிரமே வெளியே செல்லவேண்டும், நான் திரும்பி வரும்போது வீட்டை நன்றாக சுத்தம் செய்து வை,” என்றான். ”காலையில் நீங்கள் செல்லும்போது இந்த கூடையை மட்டும் எங்கள் அம்மா வீட்டில் கொடுத்து விடுங்கள்,” என்றாள் இளையவள்.

மறுநாள் அதிகாலையில் அரக்கன் எழுந்த போது, இளையவள் சேந்தியிலிருந்து இறங்கி வந்திருக்கவில்லை. நேற்று வீட்டை சுத்தம் செய்த அலுப்பு போலும், சின்னப் பெண் தானே என்று நினைத்தபடி அரக்கன் அவள் வைத்திருந்த பெரிய கூடையைத் தலையில் சுமந்தபடி கிளம்பினான். இரண்டு நாட்களாக புல் மூட்டையில் அவளது இரண்டு சகோதரிகளையும் அவள் அம்மா வீட்டில் போய் தந்ததைப் போல, இப்போது அந்தக் கூடையில் இளையவளை சுமந்து செல்கிறோம் என்பது அவனுக்குத் தெரியவில்லை, பாவம்.

வீட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிட்டார்கள். அப்போது அரசரிடமிருந்து ஒரு  சேவகன் வந்து அரசர் அவர்களை கையோடு அழைத்து வரச் சொன்னதாகச் சொன்னான். அவர்களும் அரண்மனை கிளம்பினார்கள்.

அரசன் தன் தவறுக்கு வருந்தி அவர்களை அரண்மனையிலேயே வசிக்கச் சொல்ல, அனைவரும் மகிழ்ந்தார்கள்.

இரவு வீடு திரும்பிய அரக்கன் வீட்டில் இளையவள் இல்லாதது கண்டு திகைத்தான். கஞ்சிக் கலயமும் காலியாக இருந்தது. என்ன செய்வது என்று நொந்தபடியே அரக்கன் அடுப்பைப் பற்ற வைத்து கஞ்சி காய்ச்ச ஆரம்பித்தான்.