சமூக முடக்கத்தில் நான் வாசித்த மூன்றாவது நூல் தெபாகா எழுச்சி.. இது இந்தியாவின் மிகப்பெரிய விவாசாயிகளின் போராட்டம். 1946 முதல் நாடு விடுதலையாகும் வரை ஒன்றுபட்ட வங்காளத்திலும் விடுதலைக்குப் பிறகு பிரிக்கப்பட்ட மேற்குவங்காளத்தில் 1950 வரை மொத்தம் 5 ஆண்டுகள் நீடித்த நிலபிரபுகளுக்கு எதிரான குத்தகை விவசாயிகளின் மாபெரும் போராட்டம்தான் தெபாகா எழுச்சி ஆகும். போராட்டத்தை முன்னெடுத்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபானி லகரி அவர்களின் நினைவலைகள் நூலாக உருவெடுத்துள்ளது. போராட்டம் நடந்து முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகத்தான அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ரணஜித் தாஸ்குப்தா என்பவர் அவரை நேர்காணல் செய்கிறார். அதன் எழுத்துவடிவம்தான் இந்தப் புத்தகம். சுப்ராதா பானர்ஜி அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். ஆங்கிலத்திலிருந்து தமிழில் வெ.கோவிந்தசாமி சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். விடியல் பதிப்பகம் 2001 இல் வெளியிட்டுள்ளது.
இந்த நூலின் மூலம் அபானி லகரி என்ற மகத்தான சுதந்திரப் போராட்ட வீரரை, மாணவர் சங்கத் தலைவரை, விவசாயிகளின் தலைவரை, மக்கள் போராளியை, புரட்சியாளரை, கம்யூனிஸ்டை அறிந்து மனது திக்குமுக்காடியது, 1930 இல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தனது 15 வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். பிறகு கொல்கத்தா ரிப்பன் கல்லூரியில் படிக்கும் போதும் மாணவர் போரட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றுள்ளார். சிறையில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் தொடர்பால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்டாக வெளிவந்தார். பிறகு வங்காள மாகாண மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளராக செயல்பட்டார். அப்போது சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்தான் தலைவர். வங்காளத்தில் மிகப்பெரும் மாணவர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.
1940 இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஏற்பட்ட பஞ்சத்தால் வங்காளத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் செத்து மடிந்தார்கள். கொல்கத்தா வீதிகளில் கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்த விவசாயிகளின் பிணங்கள் கூட்டங்கூட்டமாகக் கிடந்தது. அதன் பிறகு விவசாயிகள் மத்தியில் கடும் விரக்தியும் வறுமையும் நிலவியது. இந்த நிலையில்தான் அபானி லகரி தனது மாணவர் சங்கப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி வங்காளத்தில் விவசாயிகள் சங்கத்தைக் கட்டுவதற்காக கிராமங்களுக்குச் செல்கிறார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம். ஒவ்வொரு கிராமத்திற்கும் நடந்தே செல்கிறார்.
விவசாயிகள் கொடுத்த சணல் இலை கஞ்சியை குடித்து, விவசாயிகளின் மாட்டுத் தொழுவம், பன்றித் தொழுவம், மரத்தடி, திண்ணைகள் என இரவைக் கழிக்கிறார். போலிஸ் வேட்டையிலிருந்து தப்பிக்க ஒரே இரவில் பல கிராமங்களுக்கு இடம்பெயர்கிறார். இப்படி மூன்று ஆண்டுகளாக பாடுபட்டு விவசாயிகள் சங்கத்தை கட்டுகிறார். அவருடன் வேறு சில தோழர்களும் வேறு பகுதிகளில் இதே பணியைச் செய்கிறார்கள். பிறகு பகுதிவாரியாக விவசாயிகள் சங்க மாநாடுகள், மாகாண மாநாடு என சங்கத்தை வளர்க்கப் பாடுபடுகிறார். வங்காள மாகாண விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளராக செயல்படுகிறார்.
இப்படி 1940 லிருந்து 6 ஆண்டுகள் அபானி லகிரி மற்றும் வேறு தோழர்களின் உழைப்பில் 1946 இல் வெடித்ததுதான் தெபாகா எழுச்சி. சுதந்திரத்திற்குப் பிறகு பிரிபட்ட மேற்கு வங்காளத்தில் தெபாகா போராட்டத்தை தொடர்ந்து நடத்துகிறார்கள். 1948 இல் நேரு அரசு கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தது. அப்போது அபானி லகரி தலைமறைவாக இருந்தே தெபாகா எழுச்சியை வழிநடத்துகிறார். ஆனால் ஒரு கிராமத்தில் போராட்டத்தின் போது போலீசிடம் பிடிபட்டு 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 1952 இல் விடுதலை செய்யப்பட்டார். கொல்கத்தா பிரசிடெண்சி சிறையில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தியதால் டம்டம் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அங்கும் போராட்டத்தை தொடர்ந்ததால் அபானி லகரியும் வேறு சில தோழர்களும் நேபாள எல்லையில் அடர்ந்த காட்டுக்குள் சுதந்திரத்திற்குப் பிறகு மூடப்பட்டிருந்த கைவிடப்பட்டிருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 1952 இல் கம்யுனிஸ்ட் கட்சி நேரு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையால் கம்யூனிஸ்ட் கட்சி மீது விதிக்கப்படிருந்த தடை விலக்கப்பட்டு சிறையிலிருந்த கம்யூனிஸ்டுகள் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது அபானி லகரியும் விடுதலை செய்யப்பட்டார்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த அபானி லகரி அப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவிவந்த கருத்து மோதல்களால் மனம் வருந்தியும் குடும்பச் சூழலாலும் முழு நேர ஊழியர் பொறுப்பிலிருந்தும் விவசாயிகள் சங்கம் மற்றும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அதே சமயம் தீவிர கட்சி உறுப்பினராகத் தொடர்ந்தார். 1962 இல் கட்சியில் பிளவு ஏற்படக்கூடிய சூழலில் அதைத் தவிர்க்க முயற்சித்தார். கட்சி இரண்டாக பிரிவதற்கு முன்பு நடந்த மத்தியக்குழு கூட்டத்திற்கு செல்லவிருந்த மேற்குவங்க கட்சித் தலைவர்களை தனது வீட்டிற்கு அழைத்து கட்சிப் பிரிவுக்கு எதிராக பேசும்படி வேண்டியுள்ளார். அதில் ஜோதிபாசு மட்டுமே கட்சிப் பிளவைத் தவிர்க்கப் பாடுபட்டார் எனக் குறிப்பிடுகிறார்.
1996 இல் பங்களாதேஷில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெபாகா எழுச்சியின் 50 ஆண்டை கொண்டாட அபானி லகரியையும் வேறு சில தோழர்களையும் அழைத்துள்ளார்கள். தான் நடந்து திரிந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி போராட்டங்கள் நடத்திய கிராமங்களுக்கெல்லாம் சென்று அதன் இன்றையை துயர நிலையைப் பதிவு செய்து மனமுருகிறார். தெபாக எழுச்சி மட்டுமல்ல, ஒன்றுபட்ட வங்காளத்தில் நடந்தேறிய மாட்டுவண்டிக்காரர்கள் போராட்டம், டோலோபதி போராட்டம், சிட்டகாங் ஆயுதக் கிடங்கு கலகம், மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய சுதந்திரப் போராட்ட வெடிப்புகள், இயங்கிய அமைப்புகள், பிரிவினையின் போது கொல்கத்தாவிலும் நவகாளியிலும் நடந்த மதக்கலவரம், மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி உருவான வரலாறுகள், அதன் மாநாடுகள், மாநாடுகளில் நடந்த விவாதங்கள், தீர்மானங்கள், தேர்தெடுக்கப்பட்ட மாகாணக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான அரிய தகவல்கள் புத்தகம் முழுவதும் விரிந்துகிடக்கிறது.
பங்களாதேஷில் கம்யூனிஸ்ட் கட்சி
சில இடங்களில் தான் பணி செய்த விவசாயிகள் சங்கம் மற்றும் கட்சியின் மாகாண, மத்தியத் தலைமைகள் செய்த தவறுகளை சுய விமர்சணமாக ஆரோக்கியமான முறையில் முன் வைக்கிறார். ஒரு இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேறு மாதிரியாக முடிவு செய்திருந்தால் இந்தியா வேறு திசைவழியில் சென்றிருக்கும் என்கிறார். தெபாகா எழுச்சியின் நிறை குறைகளையும் வெற்றி தோல்விகளையும் நேர்மையாகப் பரிசீலனை செய்கிறார். தன்னுடன் பணியாற்றிய விவசாய சங்க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் பல தலைவர்கள் பிரிபட்ட கிழக்கு பாக்கிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) வாழ்ந்த போதும் அங்கு ஏன் தெபாகா எழுச்சி தொடரவில்லை, விவசாய சங்கமும் கம்யுனிஸ்ட் கட்சியும் வளரவில்லை என்பதற்கான காரணங்களை அவதானிக்கிறார்.
நான் காலவரிசைப்படி எழுதியுள்ளேன். நேர்காணல் வடிவத்தில் இருப்பதால் நூலில் இவை பல இடங்களில் முன்னும் பின்னுமாகச் சிதறிக்கிடக்கிறது.
நூலில் என்னை மிகவும் ஈர்த்த இரண்டு நிகழ்வுகளை மட்டும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாகாணசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி முதன் முதலாக போட்டியிருகிறது. கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிக்க தேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் தேசவிரோதிகள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்கிறது. கல்பனாதத் என்ற தோழரின் வெற்றி உறுதியான சுழலில் ஜவகர்லால்நேரு அவர்களே பிரச்சாரத்திற்கு வருகிறார். அவர் என்ன பிரச்சாரம் செய்தார் தெரியுமா. “கல்பனாதத் மிகவும் நல்லவர்தான், ஆனால் இது விடுதலைக்கான போராட்டம், விடுதலைக்கான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளை நம்ப முடியாது” என்று பிரச்சாரம் செய்துள்ளார். அதன் விளைவாக கல்பனாதத் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அப்போது காங்கிரஸ் செய்த பித்தலாட்டத்தை இன்று பா.ஜ.க. செய்கிறது.
அடுத்து நிகழ்வு நவகாளி.. நவகாளியில் இரத்த ஆறு ஓடிய போது மகாத்மா காந்தி நவகாளிக்குச் சென்ற நிகழ்வு அனைவரும் அறிந்தது. காந்தி நவகாளிக்குச் செல்வதற்கு முன்பாகவே அபானி லகரியும் சில தோழர்களும் அங்கு அமைதியை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்கள். சில உள்ளூர் கம்யூனிஸ்ட் தோழர்களுடன் வீடு வீடாகச் சென்று அமைதிக்காக பேசியுள்ளார்கள். வெளியிலிருந்து நவகாளிக்குச் சென்ற முதல் குழு அபானி லகரியும் அவருடை சகாக்களும்தான் என்ற அற்புதமானத் தகவலை ஓரிடத்தில் பகிர்கிறார். ஆமாம் இது உண்மையிலேயே அற்புதமான, அவசியமானத் தகவல்.
இப்படியாக நூல் முழுவதும் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளக்கூடிய ஏராளமான அரிய தகவல்களும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் எழுச்சிகரமான போராட்டங்களும் உக்கிரமான மோதல்களும் நிறைந்துள்ளது.
புத்தகத்தை வாசித்து முடித்த பிறகு, அபானி லகரி 1952 இல் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகாமல் தொடர்ந்திருந்தால் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகவோ அல்லது மாநிலத்தின் முக்கியத் தலைவராகவோ, அகில இந்தியத் தலைவராகவோ உயர்ந்திருப்பார் என எண்ணத் தோன்றுகிறது.
இனி அபானி லகரி என்ற ஒரு புரட்சியாளன், தீரமிகு கம்யூனிஸ்ட் தோழன் எனது மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் என்னோடு பயணித்துக் கொண்டே இருப்பார்.
மு.ஆனந்தன்….