தேடன் கவிதைகள்கவிதை 1
கொசுக்கள் டியூப் லைட்டை
மோதி மோதித்
தடுமாறுகின்றன;
மீண்டும் மோதுகின்றன தொடர்ந்து.
உடைத்து விடுமோ என்ற அளவிற்கு
எழுப்பிய ஒலிக் கூச்சல்கள்.
அதன் பூதிக்கேனும் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கையில்
‘க்ரீக்’ என்ற ஒலி; ஒளி நின்று எறிந்தது!
கொசுக் கூச்சல்!


கவிதை 2
ராஜாஜி காய்கறி சந்தை!
ராஜாஜி திறந்து வைத்ததோ,
என்னவோ??
இன்னமும் அப்படியே இருக்கிறது!
தார்ப் பாய் பந்தல்,
பழங்குகையென வழிகள்
தரையெங்கும் மணல் அழுக்கு
எங்களூரின் காய்கறி சந்தை!
நுழையும் போதே இடமாகப்
பெரியவர் வாழையிலையைத் துண்டுப் போடுகிறார்,
வாழையடி வாழையாக
அங்கேயே அமர்ந்தவராய்!
வாய் சிவந்த
வெற்றிலை பாக்கு வியாபாரி
கூடைக்குப் பின் அலுத்து அலைக்கழிக்கிறார்.
நமக்கும் சிவக்கிறது!
மூட்டை சுமந்து போகும்
கூலிகள் இடும் சத்தம்,
கம்பீரமாக ஓடுகிறது
ஓயாத சுமையோடு!
வாழைப்பழம் விற்பவர்
வாய்விட்டுக் கூவுகிறார்
ஒரு டசன் முப்பதிற்கென
நாற்பதிற்கு விற்கும்
கூவிடாத கடையில் கூட்ட நெரிசல்!
வெங்காய வியாபாரி
தொங்கும் சணல் கயிற்றைப் பிடித்தபடியே அமர்ந்து
முன்னும் பின்னும் எதற்கோ
ஆடுகிறார்; ராகமாய் கூவுகிறார்!
தக்காளி வியாபாரி
பெங்களூரையும் சேர்த்து விற்கிறார்!
கருவேப்பிலை கொத்தமல்லி
சேர்ந்து தரும் வாசம் நிற்கவைக்கும்
(எப்)போதும் ஐந்து ரூபாய்க்கு!
கேரட் பீன்ஸ் நூக்கல்
உருளை முள்ளங்கி பீட்ரூட்
மாங்காய் முருங்கை கத்திரி
வரிசைப் படுத்துகிறான்
பள்ளிக் கூட வரிசையில் தப்பியவன்!
வெளிவாசல் பூ விற்கும் குடும்பம்
ஒரே சாயலில் சந்தை எங்கும்
கதம்பம் ஒரு பக்கம்
சிதறலென!
இம்மனிதர்கள் சந்தையின்
அடையாளமா?
சந்தை இம்மனிதர்களின்
அடையாளமா?
என்ற கோழி முட்டை கேள்வியோடு
மொத்தமாய் சந்தையைப் பொறுக்கி
குவித்து வீடு திரும்பும் போது
எதையோ மறந்துவிட்டோமே
என்ற உணர்வே இதுவரையிலும்!
– தேடன்