ஒருவன் தினமும் வேலைக்குப் போய் வரும் வழியில் ஒரு குளம்.
அதைச் சுற்றிலும் வயல் பரப்பு.
சில்லென காற்று வீசும் வேப்பமரமும் முதிர்ந்த ஓரு புளியமரமும்.
அக்குளத்தில் கால் வைத்து இளைப்பாற வேண்டும்
ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அவன் தினமும் எண்ணிக் கொள்வான்.
இன்று வேண்டாம் கொஞ்சம் தூங்கலாம் வீட்டிற்கு முன்னதாகச் சென்றால்.
இன்று வேண்டாம் கோவிலுக்குப் போகலாம்.
இன்று வேண்டாம் நண்பர்களை சந்திக்கலாம்.
இன்று வேண்டாம்
இன்று வேண்டாம்
என்று பல மாதங்களைக் கடந்து போய்விட்டான்.
திடீரென சாலை விரிவாக்கம்
குளம் மரம் வயல் எல்லாம் காணாமாற் போய்விட்டன.
அவன் இப்போதும் அதே வழியில் தான் போய் வருகிறான்.
இனி அவனுக்கு அனைத்திற்கும் நேரம் இருக்கும்!
– தேடன்

