காலமும் காத்திருப்பும்!
********************************
பிரிதொரு யுகத்தில்
எரிகல் வீச்சுக்காய்
நிலைக் குப்புற விழுந்துவிட்ட
மலைகளின் பள்ளங்களில்
செங்குத்தாய் வழிந்தொழுகி
ஒழுகி நிற்கும் காலம்.
உறைநிலையின் இருப்பிலிருக்கும்
டைனோசர் முட்டை
நெருப்புக் கோழியின் கால் தடம்
அணில்களின் எலும்புக் கூடுகளென அனைத்திலும்
எண்ணெய் கசிந்தொழுகுகிறது; கடந்தகாலக் கடலின் கருநீலம்.
மழையிற்கு நிரம்பியும்
வெயிலில் காய்ந்தும் விடும் பள்ளத்திற்குள்,
கீழாக விழுந்து கதைக்கப் போகும் ஒரு பட்டாம்பூச்சி;
ஊமை வெயில் நேரங்களில்.
டைனோசர் முட்டையின்
ஓட்டில் மறைந்திருக்கும் பாறை பல்லியொன்றை,
அணில்களின் எலும்புக் கூடு முதல்
நெருப்புக் கோழியின் கால் தடம் வரை கூட்டிச் சென்று விட்டு
வீடு திரும்பிவிடும் அப்பட்டாம்பூச்சி சிறகசைத்து;
தலை தூக்கிப் பார்த்த படி
அங்கேயே உறைந்து நின்றுவிடுகிறது
பல்லியும்.
– தேடன்