தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு பாவச் செயல்
தீண்டாமை மன்னிக்க முடியாதது
என்று அன்றிலிருந்து இன்று வரை பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டும் மாணவர்களுக்கு வாசிக்கப் பழக்கியும் இன்னும் தீராத கொடுமையாய் மண்ணில் மனிதர்களுக்கு இடர்களை விளைவிக்கும் தீண்டாமைக்கு எதிராக இன்றும் போராடிக் கொண்டிருக்கும் போராட்ட வீரர்கள் பற்றிய தொகுப்பு இது.

தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போர்க்களத்தில் தீரமிக்க போராளியாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு போராட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் எம் ஆர் முத்துசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய போராட்ட வீரர்களின் போராட்டத் தருணங்களைத் தொகுத்திருக்கும் இரண்டாவது நூல் இது.

ஒரு மாவட்டத்திலேயே தீண்டாமைக்கு எதிராக இத்தனை போராட்டங்கள் இத்தனை வழக்குகள் இத்தனை கொடுமைகள் இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கையில் சட்டத்தின் வழியாகவும் கல்வியின் வழியாகவும் மனித மனங்களுக்குள் நாம் இதுவரை கற்றுக் கொடுத்தது என்ன என்பதை எண்ணிப் பார்க்கையில் இன்னும் நாம் அடைய வேண்டிய இலக்கு வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது.

நகரங்களில் கல்வியின் வாயிலாக ஒரு மனிதன் தனக்கு எதிராக இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளைத் தாண்ட முடிகிறது என்றால் கிராமங்களில் இன்னும் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தடைகளும் வேலிகளும் தீண்டாமையைப் பாதுகாத்து வருகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் தீண்டாமைக் கொடுமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் போராட்ட வீரர்கள் எட்டு பேரின் வாழ்க்கை வரலாறும் அவர்கள் வாழ்வில் போராட்ட களத்தில் சந்தித்த அனுபவங்களும் எழுதப்பட்டிருக்கின்றன.

அடுத்த பகுதியில் மாவட்ட அளவில் எங்கெல்லாம் தீண்டாமைக் கொடுமைகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் இயக்கமும் மக்களும் சென்று அதற்கு எதிராக போராடிய செய்திகளைத் தொகுத்து கட்டுரையாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த கட்டுரைகளின் வாயிலாக நாம் அறிய முடிவது அதிகாரம் இன்றும் நிறைய இடங்களில் சட்டத்தையும் மனித நேயத்தையும் கட்டி போட்டு இருக்கிறது. அதிகாரத்தைக் கொண்டு உண்மையையும் மறைத்து விட முடியும் பொய்யையும் உண்மையாக்கி விடலாம் என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் இன்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அவலம் தொடர்வதை கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கியும் கல்வியறிவற்றும் உலவிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு தீண்டாமையின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருப்பதை இக்கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இத்தொகுப்பின் மூன்றாவது பகுதியில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த இளையோரை அறிமுகம் செய்து அவர்களின் வாழ்வை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. ஒவ்வொரு இணையரும் எப்படி எல்லாம் சாதிக்கு எதிராக போராடி தமது திருமணத்திற்காக போராட்டத்தின் எல்லை வரை சென்று வெற்றிகரமாக தங்கள் வாழ்வை நடத்துகிறார்கள் என்பதை கட்டுரைகள் நிரூபிக்கின்றன

தீணாடாமைக் கொடுமைகள் நிகழா வண்ணம் தடுப்பதற்கான முறையான சட்டங்களும் அந்தச் சட்டத்தை முறையாக எல்லோரிடமும் சமமாக பயன்படுத்தும் அதிகாரமும் உடைய அரசு நடுநிலைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். எங்கெல்லாம் தீண்டாமை பின்பற்றப்படுகிறதோ அங்கெல்லாம் சட்டம் முழுமையாக செயல்பட வேண்டும். அதே சமயம் இந்த நிலையிலிருந்து மக்கள் மாறுவதற்கு மிகச்சிறந்த ஆயுதம் கல்வி என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். கல்வியின் வாயிலாகவே தன்னைச் சுற்றி இருக்கும் எல்லாத் தடைகளையும் உடைத்து விடும் தைரியமும் தன்னம்பிக்கையும் மனிதனுக்கு கை கூடும். அந்த வகையில் தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள் ஏந்திய இந்த போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை வாசிப்பதுடன் நிறுத்தி விடாமல் அவர்களின் செயல்பாடுகளையும் தமிழகம் எங்கும் நாம் உணர்த்திட உறுதி செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர் இக்கட்டுரைகளின் வாயிலாக புலப்படுத்துகிறார்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள் 2

ஆசிரியர்  : எம் ஆர் முத்துசாமி

முதல் பதிப்பு : ஜூன் 2023

பக்கம் :  128

விலை ₹130

வெளியீடுபாரதி புத்தகாலயம்

 

எழுதியவர் 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *