Theerapasi short story by Udhaya shankar தீராப்பசி

தீராப்பசி குறுங்கதை – உதயசங்கர்

ஒருநாள் காலையில் ஊரடங்கு தளர்வு அறிவித்திருந்த பொழுதில் எழுத்தாளர் காயசண்டிகையின் மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டு ஓடிப்போய் விட்டார்கள். எழுத்தாளர் காயசண்டிகை என்ற புனைபெயரில் எழுதிவந்த அவருடைய சித்ரவதையை அவர்களால் தாங்கமுடியவில்லை. 

 எழுதுவதின் மூலமே இந்த உலகம் உய்த்து நல்வழி காணுமென்று நம்புகிறவர் அவர்.. அவருடைய கிறுக்குத்தனங்களையெல்லாம் எழுதியெழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். அனுப்பிய பிரதிகளின் நகல்களைச் சேமித்து வைக்க பிரதிக்கிட்டங்கி ஒன்றைக் கட்டிவைத்திருந்தார். எப்போதும் பாராட்டு, அங்கீகாரம், விருது, புகழ், என்று ஏங்கிக் கொண்டேயிருக்கும் காயசண்டிகைக்கு திடீரென ஒரு நோய் வந்து விட்டது. எப்போதும் எழுதிக்கொண்டிருக்கிற நோய். கைவிரல்கள் வலிக்க வலிக்க எழுதிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் ஒருநாளைக்கு மூன்று கதைகள், முப்பது கவிதைகள், எழுதிக்கொண்டிருந்தவருக்கு திடீரென நோய் முற்றி விட்டது. நோபல்பரிசைப் பற்றி யாரோ அவரிடம் சொல்லி விட்டார்கள். 

இப்போது இரண்டு கைகளாலும் எழுத ஆரம்பித்தார். ஒருநாளில் நாற்பத்தியொன்பது கதைகள், நாலாயிரம் கவிதைகள், நாற்பது விமரிசனங்கள், நூறு தீர்க்கதரிசனங்கள் என்று எழுதிக் கொண்டேயிருந்தார். அவர் எழுதுகிற அனைத்தையும் அவருடைய மூணேமுக்கால் வாசகர்கள் அப்படியே அள்ளிப்பருகிக் கொண்டிருப்பதாக அவருக்குக் கற்பனையூற்று பொங்கிக் கொண்டிருந்தது. அவரால் எழுதாமலிருக்க முடியாது. தினமும் அவருடைய தலைக்குப் பின்னால் சுற்றுகிற ஒளிவட்டத்திலிருந்து சிதறுகிற ஒளிக்கீற்றுகளை படைப்புகளாக எழுதிக்குவிப்பவராகத் தன்னைப் பற்றிச் சொன்னார்.

 எப்படியாவது ஆயிரம் நூல் எழுதிய அபூர்வ எழுத்தாளரென்றோ, ஒரு லட்சம் பக்கங்கள் எழுதிய உலக எழுத்தாளனென்றோ புகழ் பெற வேண்டுமென்றோ அன்றாடம் பிதுக்கித் தள்ளிக்கொண்டிருந்த எழுத்தாளர் காயசண்டிகையின் தீராப்பசி நோய் திடீரெனக் குணமாகி விட்டது.

மனைவி குழந்தைகள் எல்லோரும் பயந்துபோய் ஊருக்குப் போய் விட்டார்கள். அவருக்கு உண்மையான பசி வந்து வயிற்றைக் கிள்ளியது. வீட்டை விட்டு கீழே இறங்கினார். நகரம் பாலைவனமாக மாறியிருந்தது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மணலைத் தவிர எதுவுமில்லை. தலைகுனிந்தபடி நோயும் பசியுமாக மனிதர்கள் அங்கங்கே அலைந்து கொண்டிருந்தார்கள். 

தெருவுக்கு வந்தார். தெருவிலிருந்து சாலைக்கு வந்தார். சாலையிலிருந்து நெடுஞ்சாலைக்கு வந்தார். நெடுஞ்சாலையிலிருந்து நாற்கரச்சாலைக்கு வந்தார்.அங்கே மனிதர்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். எங்கே போவதென்று தெரியாமல் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். எல்லாரும் பசிக்கும்போதெல்லாம் ஒரு கைமணலைத் தின்று கொண்டிருந்தார்கள். அவருக்கும் பசி கொடுங்காற்றாய் சுழன்றடித்தது. அவர் குனிந்து ஒரு கை மணலை எடுத்துத் தின்றார். 

அதன்பிறகு  அவருடைய எழுத்துநோய் குணமாகி விட்டது.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *