மின்மினிகள், தூரிகையில் விரியும் காடு, என இரண்டு ஹைக்கூத் தொகுப்புகளை வெளியிட்ட எழுத்தாளரும் ஆசிரியருமான திரு இளையவன் சிவா அவர்களுக்கு இது மூன்றாவது கவிதைத் தொகுப்பாகும், எழுத்தாளர் திரு. இளையவன் சிவா அவர்கள்
ஆனந்த விகடன், கணையாழி போன்ற முன்னணி இதழ்கள் மட்டுமல்லாமல்
அனைத்து சிறு மற்றும் குறு பத்திரிகையிலும்,சமூக வலைதளங்களிலும் எழுதி வருகிறார், இந்த தீரா கனவை இசைக்கும் கடலிலே,
“அம்மாவின் கையளவு மனசுக்குள்
ஒளிச்சுடரென மின்னுகிறது
அப்பாவின் பைத்தியக்காரிப் பட்டம்
என்று ஆரம்பிக்கும் கண்ணீரின் வரிகள்,
ஒரு மகனுக்கு தாயின் மேல் உள்ள பற்றையும், பாசத்தையும் அதிகமாகக் காட்டுகிறது,
இவரது கவிதைகளில் சமூக அக்கறை அதிகமாகவே தென்படுகிறது,
“இனம் மொழி சாதி பேசி
இருக்கையில் தரம் பிரித்து
ஒட்டாமல் பயணித்து
தரிசனங்களில் பாதை பிரித்து
கண்டதென்னவோ ஒரே கடவுளை
கொடுத்தென்னவோ
ஒற்றைப் பெட்டியில் அடைக்கப்பட்ட
காணிக்கை மயிரை “
என்று சமூகத்தை தனதுக் கவிதை சாட்டையால் சாடுகிறார்,
21 வது நூற்றாண்டிலும் தமிழகத்தில் இன்னும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிற
சாதி மத வெறியை எதிர்த்து எழுதிக் கொண்டிருக்கும் முற்போக்கு எழுத்தாளர் இவர்
ஒரு ஆசிரியராய் இவருடைய அனுபவங்கள் நாளைய எதிர்காலம் மாணவர்களுக்கு
நல்ல பாடமாகவே அமைந்திருக்கிறது, இயற்கையும் மற்ற உயிரினங்களும்
எப்படி ஒரு ஒழுங்கை கடைபிடிக்கின்றன? அல்லது மனித இனத்திற்கு கற்பிக்கின்றன?
இவரது கவிதையில்
“மாடிப்படிகளின் மேலே தூவி விடுகிறேன்
தானிய துகள்களை
ஒவ்வொரு படியிலும் வெவ்வேரெனப் பறவைகள்
வரிசை கலையாமல் வந்தமர்கின்றன “
என்ற வரிகள்
இதயக்கோட்டில் சிம்மாசனம் போட்டு அமர்கிறது, மனித வாழ்வில் கவலையும் துக்கங்களும் நிறைந்து இருந்தாலும் அதை தன்னம்பிக்கையாய் எப்படி எழுதப்பட்டிருக்கிற இவரது கவிதையில்
“போகும் இடமெங்கும் புன்னகையை
விட்டுச்செல்லும் பூக்களைப் போல
காணும் பொழுதெல்லாம்
அழகை கூட்டும் கண்ணாடியை போல
உதிக்கும் ஒவ்வொரு தருணத்திலும்
நம்பிக்கையை வெளிச்சமாக்கும் சூரியனைப் போல”
என்று அருமையாக வர்ணித்து இருக்கிறார்
இயற்கை அன்னையை,
நகரமயமாக்குவதின் விளைவையும் இறந்து போன கிராமத்து மண்வாசனையும்
காண்பிக்கும் விதத்தில் இவர் இருக்கிற ஒரு கவிதையில்
“நதிகளின் பயணத்திலிருந்து வழி தவறிய
மீன் குஞ்சு வாய்க்கால் வழியே
வயலை எட்டிப் பார்க்கிறது “
அண்டை அயலார் வீட்டுடன் நமக்கு இருக்கும் இன்றைய காலகட்டத்தின் அன்னோனியத்தைப் படம்பிடித்து காட்டும் இவரதுக் கவிதை,
“பக்கத்து வீட்டுடன்
பல நாள் பல நாள் பகை
பார்க்கும்போதெல்லாம் பற்றி கொள்கிறது
கண்ணில் வன்மம்
சொல்ல முடியாத எண்ணங்களுக்குள்
நீளும் பொழுதுகளில்
என்னதான் செய்வது
சுவர் தாண்டும் பூனையை “
என்று அழகாக உயிரினங்களின் ஒற்றுமையை விளக்கிச் சொல்லியிருக்கிறார் ஒவ்வொரு கவிதையும் மிகவும் அருமையாக தான் இருக்கிறது,
இது கவிதை புத்தகம் மட்டும் அல்ல,
“தீரா கனவை இசைக்கும் கடல் “ஒரு கருத்து பெட்டகமும் தான் என, ஆசிரியர் இன்னும் இலக்கிய உலகுக்கு பலத் தொகுப்புகள் கொடுத்து தமிழ் எழுத்து உலகத்திற்கு சேவை செய்யும்படி ஆசிரியை வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
நூல்:”தீராத கனவை இசைக்கும் கடல்”
ஆசிரியர் : ஆசிரியர் திரு.இளையவன் சிவா அவர்கள்.
வெளியீடு : பொள்ளாச்சி வாசகர் வட்டம்
பதிப்பு : டிசம்பர் 2023.நூல் வாங்க : 9095507547,9842275662.
இரா மதிராஜ்,
காங்கேயம்