தங்கேஸ் எழுதிய “தீர்வு” சிறுகதை
தோழர் சீருடையான் அவர்கள் ஒவ்வொரு ஆப்பிளாக எடுத்து கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்து சுத்தமான பூவாலைத் துண்டால் துடைத்து துடைத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். ஆப்பிளின் சுகந்த வாசனை நாசியை கிறு கிறுக்கச் செய்து கொண்டிருந்தது . பார்ப்பதற்கு நல்ல அரேபியக் குதிரைகள் போல உருண்டு, திரண்டு, இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலித்த அவைகள் நல்ல திரட்சியாக பிரம்புக் கூடையில் வீற்றிருந்தன . அப்போது அவரது கைபேசி ஒலித்தது . மேசை மீதிருந்த அதை எடுத்துப் பார்த்தார். திரையில் ஏதோ தெரியாத எண் ஒளிர்ந்தது .
கயல் பழமுதிர் நிலையம் தேனி பெரியகுளம் ரோட்டில் அல்லி நகரம் நகராட்சி தாண்டி ஹோட்டல் கௌமாரிக்கு எதிர்புறம் இருந்தது. வசந்தம் அண்டு கோ வாசலில் நின்று பார்த்தால் தோழர் கடையில் ஜுஸ் அடித்துக் கொண்டிருப்பது தெரியும் . ஓய்வு நேரங்களில் அவர் சும்மா உட்காருவதில்லை. ஏதாவது வேலைகள் செய்து கொண்டு தானிருப்பார். இந்த ரோடு எப்போதும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டே தானிருக்கும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து சென்று கொண்டேதானிருக்கும். திண்டுக்கல்லுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். பத்து நிமிடத்திற்கு ஒரு மினி பேருந்தும். ஒரு நிமிடத்திற்கு ஒரு ஆட்டோவும் ஓடிக் கொண்டேதானிருக்கும். தோழருக்கு இந்தச் சாலை இரைச்சல் எல்லாம் கேட்பதற்கு முதலில் தான் எரிச்சலாகத்தான் இருந்தது. இப்போது இதையெல்லாம் கேட்டு கேட்டுப் பழகிப் போய் விட்டது. ரோட்டிலிருந்து எவ்வளவு சத்தம் வந்தாலும் , ஒரு தவ யோகியைப் போல , அவரால் கடைக்குள்ளே வேலை செய்ய முடியும் .
இதே ரோட்டில் ஒரு குடை ஊன்றி கூடையில் பழங்களை வைத்து விற்றதும் , பிறகு தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு , தேனி சுற்று வட்டாரங்களுக்குப் போய் வியாபாரம் பார்த்து வந்ததையும் அனேகமாக அவருடைய எல்லா நாவல்களிலும் பார்க்கலாம். அவரைப் பார்க்க வரும் தோழர்கள் எங்கேயும் விலாசம் விசாரிக்கத் தேவையில்லை. அவருடைய புத்தகங்களை வாசித்திருந்தாலே யாரையும் விசாரிக்காமல் நேரடியாக இங்கே வந்து இறங்கி விடலாம். இப்படியே இன்னும் சிறிது தூரம் இதே ரோட்டில் நடந்து போனால் காமுத்துரை தோழர் பாத்திரக்கடை வந்து விடும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தான். எழுத்தாளர் அல்லி உதயன் வீடும் கட்சி அலுவலகம் தாண்டி அடுத்த தெருவில் தான் இருந்தது . இவ்வாறாக தேனி வைகை இலக்கியத்தின் மும்மூர்த்திகள் என்று சொல்லப்படுகிற மூன்று படைப்பாளிகளின் வீடுகளும் கடைகளும் அருகருகே தான் இருந்தன. தினமும் ஒரு முறையாவது அவர்களின் சந்திப்பு நிகழாமல் போகாது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இப்படித்தான் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பொதுவாக சீருடையான் தோழர் இது போன்ற மதிய நேரங்களில் , தெரியாத எண்களில் இருந்து ஏதும் அழைப்புகள் வந்தால் , தோழர் அதை எடுப்பதில்லை. அந்த அழைப்புகளை ஏற்பது , சில நேரங்களில் நமது நேரத்தை நாமே காவு கொடுப்பது போல ஆபத்தில் முடிந்துவிடும் விடும் என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு . சில சமயங்களில் பெர்சனல் லோன் கொடுக்கிறோம் , கடன் அட்டை தருகிறோம் என்று ஆண்களும் , இளம் பெண்களும் சேர்ந்து , வியாபாரம் பார்க்க விடாமல் , படுத்தி எடுத்து விடுவார்கள். எதிர் முனையில் ஆளை சரியாக விசாரிக்காமல் கூட உயர்கல்வி சேர்க்கை , நீட்கோச்சிங் அகாடமிகள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் சல சல வென்று பேசிக் கொண்டே இருப்பார்கள். தான் இந்த அட்டவணைக்குள் வருவதில்லை என்று எடுத்து சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு போதும் போதுமென்றாகி விடும்.
சமீப காலமாக சொல்லி வைத்தார் போல சில தவறான அழைப்புகளும் அவருக்கு வந்து கொண்டேதான் இருக்கின்றன. ’ தோழர் சீருடையான் தானே நீங்கள் என்று ஆரம்பிக்கும் உரையாடல்கள் , இலக்கியம் பேசுகிறேன் பேர் வழி என்று , வறட்டுத் தனமாக நீண்டு அழுகிய பழக்ளை யெல்லாம் என்ன செய்வீர்கள் தோழர் என்பதாக வந்து முடியும் . சில நேரம் விளையாட்டாக ஆரம்பிக்கும் மஉரையாடல்கள் இலக்கிய சர்ச்சைகளாக நீண்டு போவதும் உண்டு . என்ன தான் இருந்தாலும் ’ போன கூட்டத்துல நீங்க வனா உனாவை மைக்கில அப்படி ஒருமையில பேசியிருக்க கூடாது என்று கருத்துச் சொல்லும் அவருடைய சங்கத் தோழர்கள் சிலர் , அவர் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டே செல்வார்கள் .
தோழர் மற்று மொரு ஆப்பிளை எடுத்து உற்றுப்பார்த்தார். அது நுனியில் அடிபட்டு கன்றி வெம்பிப் போயிருந்தது .அதற்கும் முன்பே அதிலிருந்து எழுந்த ஒரு அழுகல் வாசனை அவர் நாசிக்குள் பிரவேசித்து விட்டது. அதை எடுத்து தனியாக மூலையில் இருந்த ஒரு பிரம்புக் கூடையில் போட்டு வைத்தார்.
கடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த நீளமான மரப் பெஞ்சுகளில் நார் கூடைகளில் கருந்திராட்சை , பச்சைதிராட்சை ஆப்பிள் , ஆரஞ்சு என்று பழ வகைகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன . கூடைகளுக்குள் சுற்றிலும் வைக்கோலை நிரப்பி , அதற்குள் குருவிக் குஞ்சுகளைப் போல மிகவும் பதனமாக பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குங்குமச் சிவப்பில் சிவந்திருந்த செந்தூரமும் , மஞ்சள் குளித்து விட்டு வந்த குமரிப் பெண்ணைப் போன்ற அல்போன்சாவும் , காசாலட்டும் தோதாபுரியும் , கவர்ச்சியாக அடுத்தடுத்த கூடைகளில் பார்வைக்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. என்னைப்பார் உன்னைப் பார் என்று வெள்ளைக் கொய்யாவும் இளஞ்சிவப்பு கொய்யாவும் பார்வையாளர்களை போட்டிக்கு அழைத்தன. இது தவிர தனித் தனி பெட்டிகளில் பூவன் பழங்களும் , செவ்வாழையும் , சப்போட்டா பழங்களும் வரிசையாக அடுக்கி வைகப்பட்டிருந்தன. பச்சை உலக உருண்டைகள் போல இன்னொரு பக்கம் பெரிய பெரிய தர்பூசணிபழங்கள் தொப்பையை தள்ளிக்கொண்டு மரப் பலகை மேல் கிடந்தன.
இது போல மதியம் வாடிக்கையாளர்கள் வராத நேரங்களில் , தோழர் சீருடையான் கடையை ஒரு முறை நேர்த்தியாக ஒழுங்குபடுத்தி வைத்துவிடுவார் .கடைப் பையன்களுக்கு எவ்வளவு சொன்னாலும் கடையை நேர்த்தியாக வைத்துக் கொள்ள மாட்டார்கள் .பழங்களை அடுக்கி வைப்பதோடு மட்டுமில்லாமல் ஜுஸ் போடும் மிக்சிகளையும் பிசிறில்லாமல் துடைத்து வைத்து விடுவார் , வாய் நீண்ட கண்ணாடி தம்ளர்களை இன்னொரு முறை கழுவி அழகாக டிரேயில்கவிழ்த்தி வைப்பார்.
அவருக்கு வியாபாரம் சுத்தமாக இருக்க வேண்டும் . .அது போல வாடிக்கையாளருக்கு சுத்தமான தரமான பொருட்களை கொடுக்க வேண்டும் . பெரும்பாலும் அவர் கடைக்கு வருகிறவர்களெல்லோரும் அவருடைய நண்பர்கள் மற்றும் தோழர்கள் தான். எல்லோரும் அவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்களாகையால் , யாரும் பேரம் பேசுவதில்லை. வெளியூர்கார்கள் யாரவது வந்து கசறிக் கொண்டிருந்தாலும் , தோழர் ஓரிரு வார்த்தைகளில் முடித்துக்கொள்வார். “ பாருங்க சார் , நம்ம கிட்ட வியாபாரம் சுத்தமா இருக்கும் . விலையும் மத்த இடத்தை விட சகாயமாத்தான் இருக்கும் பார்த்துக்கோங்க ., உங்களுக்கு திருப்தி இல்லைன்னா , உங்க பணத்தை தாராளமா ரிட்டர்ன் வாங்கிக்கலாம் “ . பெரும்பாலும் அதற்கு மேல் யாரும் அவரிடம் பேரம் பேச மாட்டார்கள்.
தோழர் நேரம் பார்த்தார் மணி இரண்டாகி விட்டிருந்தது . இன்னும் சற்று நேரத்தில் கடைப் பையன்கள் அவரை மாற்றுவதற்கு வந்து விடுவார்கள். அவர் தனது பழைய டிவிஎஸ்பிப்டியை எடுத்துக் கொண்டு மதிய உணவுக்குச் சென்றாரென்றால் , உணவு முடித்து ,ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு , மீண்டும் கடைக்கு வருவதற்கு மாலை ஆறுமணிக்கு மேல் ஆகிவிடும் . .அதற்கு மேல் தோழர்கள் ஒவ்வொருவராக கடைக்கு வர ஆரம்பிப்பார்கள். வரும் தோழர்கள் யாரும் சம்பிராதய வார்த்தைகள் ஏதும் சொல்லமாட்டார்கள். சேது தோழர் வந்தால் நேராக கடைக்கு வெளியே போட்டிருக்கும் நீளமான பெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்வார்.
அப்படியே ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விடுவார்கள். சிறிது நேரம் மழை வெய்யிலைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். எழுத்தாளர் அல்லி உதயன் தோழர் நாற்பது வருடங்களுக்கு முன்பாக இருந்த தேனி அல்லி நகரம் பேரூராட்சியைப் பற்றி எப்படியும் இரண்டொரு வார்த்தைகள் ஆதங்கத்தில் பேசாமல் இருக்கமாட்டார். அப்படி பேசும்போது இப்போது மாசடைத்துப் போன தேனி யைப் பற்றியும் பேசத் தவறமாட்டார். எழுத்தாளர் காமுத்துரை தோழர் , ராம மூர்த்தி தோழர் , சேது தோழர் , மாதா தோழர் , நிலவன் தோழர் என்று அடுத்தடுத்து தோழர்கள் அங்கே வந்து போய் கொண்டே இருப்பார்கள் . உரையாடலும் தொய்வின்றி நீண்டு கொண்டே போய்க் கொண்டிருக்கும் இப்படியே போகும் உரையாடல்கள் சில நேரம் , நீண்டு நீண்டு ரஷ்யா , உக்ரைன் , அமெரிக்கா சீனா , என்று சுற்றி அலைந்து விட்டு , ஆன்டன்செகாவ் . மபசான் , கார்க்கி , காப்கா என்று உலக எழுத்தாளர்களை தொட்டு புதுமைப்பித்தன் தி. ஜானகிராம்மன் , மௌனி , கரிச்சான் குஞ்சு , எஸ்ரா , தமிழ் செல்வன் என்று ஒரு சுற்று சுற்றி வந்து , கடைசியில் தேனி மாவட்ட எழுத்தாளர்களின் பக்கம் வந்து முடியும் .
தேனி மாவட்டம் இலக்கியம் தழைத்து செழித்து வளர்ந்த ஊர் ,இங்கு பேர் சொல்லும் படியாக அடுத்த தலைமுறையில் இன்னும் இளைஞர்கள் , பெண்கள் எழுத வரவில்லையே என்ற ஏக்கத்தை அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள் , சீருடையான் தோழர் அனேகமாக நம்பிக்கை இழக்காமல் பேசுவார் . இரவு ஏழுமணிக்குமேல் கௌமாரியில் ஒரு பார்சல் தேனீரை வாங்கி தாக சாந்தி பண்ணி விட்டு ஆளாளுக்கு கிளம்புவார்கள். ஆனாலும் மறு நாளைக்கு உரையாடலை மிச்சம் வைத்து விட்டு செல்லுவார்கள். இடையில் சீருடையான் தோழர் அவசியப்பட்டால் மட்டுமே கடைக்குள் செல்லுவார் . இல்லையென்றால் பையன்களே வியாபாரத்தைப் பார்த்துவிடுவார்கள். தோழருக்கு எப்படியும் ஒரு கண் கடைக்குள்ளேதான் பார்த்துக் கொண்டிருக்கும் .
இரண்டாவது முறை கைபேசி ஒலித்த போது தோழர் கவனமாக ஒளிரும் பச்சை வண்ண தொலை பேசிக் குறியை ஆட்காட்டி விரலால் மேலே தள்ளி விட்டு , காதில் கை பேசியை வைத்துக் கொண்டு ‘ வணக்கம் சொல்லுங்க ‘ என்றார். மறுமுனையில் இருந்து ஒரு முதிராத குரல் ‘ மிகுந்த பரபரப்போடு ‘ தோழர் வணக்கம் நான் கவிப்பிரியன் முத்தையா பேசறேன் ‘ என்றது . தோழர் சில நொடிகள் ஞாபகத்தில் தேடிப் பார்த்து ஆளை அடையாளம் கண்டவுடன் ‘ வணக்கம் தோழர் நல்லா இருக்கீங்களா என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் ?’ என்று கேட்டார். ‘ ஏதோ இருக்கேன் தோழர் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்னு தோணுச்சு , உடனே போன் போட்டுட்டேன் ‘ என்றான் கவிப்பிரியன் முத்தையா . பதட்டம் குரலில் தெளிவாக தெரிந்தது. ’ தோழர் எதுவா இருந்தாலும் சொல்லுங்க , ஏன் பதறிப் பதறி பேசறீங்க ? ஏதாவது அவசரமான செய்தியா ? என்று கேட்டார்
பதிலுக்கு கவிப்பிரியன் முத்தையா ‘ ஆமா தோழர் அவசரமான செய்தி தான் , இன்னும் கொஞ்ச நேரத்தில நான் சாகப் போறேன் . என்றான். அவருக்கு ஒரு நிமிடத்தில் பதட்டமாகி விட்டது. தொடர்ந்து அவனே ’ உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செத்துடலாம்னு தான் உங்களுக்குப் போன் போட்டேன் ‘ என்றான்.
அவர் அடுத்து என்ன பேசுவது என்று யோசிக்கும் முன்பே ‘ எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிருச்சு தோழர் , எதுக்காக வாழனும்னு இருக்கு . அதனால தான் அம்மாபட்டி அணைக்கட்டுக்கு வந்திருக்கேன் . நல்ல மட்ட மதியம் இங்க ஆளுகளும் யாருமில்லை . இப்ப அப்படியே உள்ள பாஞ்சிட்டேன்னா , நீங்க என்னை அனேகமா வீரபாண்டி பாலத்துக்கு அடியில பார்த்து எடுத்துக்கிறலாம். ‘ என்றான்.
‘ தோழர் அவசரப்படாதீங்க உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்சினைன்னு புரியுது. அந்த விவரம் தெரியாம , நான் எதுவும் தெளிவா சொல்ல முடியாது. ஆனா எந்தப் பிரச்சினைக்கும் சாகிறது தீர்வு இல்லைன்னு மட்டும் இப்ப என்னால சொல்ல முடியும் . பொறுமையா நான் சொல்லுறதை கேட்டீங்கன்னா ….. ‘
‘ தோழர் எனக்குப் பிடித்த எழுத்தாளரோட குரலை சாகிறதுக்கு முன்னாடி கடைசியா ஒரு தடவையாவது கேட்கனும்னு தான் நான் இப்ப உங்க கிட்ட பேசிட்டிருக்கேன் . உங்களோட எல்லாச் சிறுகதைகளையும் நாவலையும் நான் படிச்சி ரசிச்ருக்கேன் தோழர் . உங்க எல்லா படைப்புகளின் பேரையும் மனப்பாடம் கூட பண்ணி வச்சிருக்கேன் . ‘ என்று ஒவ்வொரு புத்தகமாக சொல்ல ஆரம்பித்து விட்டான். அனைத்தையும் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த தோழர் இவனைப் பேச விட்டுப் பிடித்தால் தான் சரியாக வரும் என்று நினைத்துக் கொண்டார் . அவன் பேசி முடித்தவுடன் ’ சரி தோழர் உங்க பக்கமும் நியாயம் இருக்கிற மாதிரித் தான் தெரியுது . நீங்க என்ன முடிவு எடுக்கிறதுன்னாலும் கடைசியா கடைக்கு வந்து என்னை சந்திச்சுட்டுப் போங்க , உண்மையிலேயே என் மேல மரியாதை இருந்தா வந்துட்டுப் போங்க .. மரியாதை இருக்கில்ல ? என்று கேட்டார் .எதிர் முனை அமைதியாக இருந்தது . என்னால அவ்வளவு தூரம் வரமுடியாது தோழர். நீங்க வாங்க , உங்களை மாதிரி நானும் எத்தனையோ முறை தற்கொலை செஞ்சுக்கனும்னு நினைச்சவன் தான் , வாங்க பேசலாம் ’ என்றார் . எதிர் முனையில் கவிப்பிரியன் இணைப்பை துண்டித்து விட்டான்.
இந்தப் பையனை எப்போது முதன் முதலில் பார்த்தோம் என்று ஞாபகத்திற்குள் கொண்டு வரப் பார்த்தவருக்கு துல்லியமாக எதுவும் ஞாபகம் வரவில்லை . சுமார் இரண்டு வருடங்கள் இருக்குமா ? பெரியகுளத்தில் கட்சி அலுவலக மாடியில் நடந்த கவிதை பயிலரங்கிற்கு நிறைய கல்லூரி மாணவர்கள் வந்திருந்தார்கள். மதிய உணவோடு சேர்த்து ஐம்பது ரூபாய் தான் நுழைவுக் கட்டணம் . தோழர் சீருடையான் வழக்கம் போல , வரவேற்பறையில் ஒரு நான்கு முழ வெள்ளை வேட்டி வெள்ளை அரைக்கை சட்டையில் உட்கார்ந்து கொண்டு , பெரிய கட்டுரை நோட்டில் , பெயர் , முகவரி , மற்றும் அலைபேசி எண்களை வகுப்பில் கலந்து கொள்கிறவர்களிடம் கேட்டு எழுதிக் கொண்டிருந்தார். குறிப்பெடுத்துக் கொள்ள ஒரு குறிப்பேடும் , ஒரு பால் பாயிண்ட பேனாவும் பிரபல உள்ளுர் கவிஞர் ஒருவரின் கவிதைப் புத்தகம் ஒன்றும் ( ’ கை நிறைய நிலா ’ புத்தகம் வெளியாகி ஒரு வாரம் தான் ஆகியிருந்தது .) கொடுத்தார்கள். இந்தப் பையன் பெயரைப் பதிவு செய்து விட்டு புத்தகத்தையும் இதர பொருட்களையும் பெற்றுக் கொண்டு , பணத்தை கொடுக்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவர் பணம் கேட்டதற்கு , ’ என் பிரண்ட்ஸ் கொண்டு வாராங்க ’ என்று சொல்லி விட்டு அங்கே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கவிதை நூலை வாசிக்க ஆரம்பித்து விட்டான் . தோழருக்கு இவனிடம் இருந்து சல்லி காசு வராது என்று தெரிந்து விட்டது. அவன் புத்தகத்தில் இருந்த சில வரிகளை தீவிரமாக வாசித்து பென்சிலை எடுத்து அடிக்கோடிட்டான் . நாற்காலியில் கையை ஊன்றி முகவாய் கட்டையை தாங்கி , தீவிர ஆலோசனை செய்வது போல் வைத்துக் கொண்டான். இவன் நிச்சயமாக கவிதை எழுதுகிறவனாகத்தான் இருக்க வேண்டுமென்று அவர் நினைத்துக் கொண்டார்.
‘ நெற்றியில் நிலா அழிந்து வழிந்தது ‘ என்று எழுதியிருந்த வரிகளைப் படித்து விட்டு , ரொம்பவும் சிலாகித்து பேச ஆரம்பித்து விட்டான். சார் ‘ நெற்றியில நிலா அழிகிறதுன்னா பொட்டு அழிகிறதுன்னு தானே அர்த்தம் ? ’ என்று இவரைப் பார்த்து ஒரு அறிவு பூர்வமான கேள்வியை கேட்ட போது , இவர் பதிலுக்கு ’ தம்பி இப்படிப்பட்ட கவிதையைப் படிக்க ஆரம்பிச்சா நீயே அழிஞ்சு போயிருவ ’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். ’ தம்பிக்கு என்ன பேரு ? அவன் ‘ கவிஞர் கவிப்பிரியன் முத்தையா ‘ என்றான் . கொஞ்சம் விசாரித்த போது முத்தையா என்ற பெயருக்கு முன்னால் இரண்டு அடை மொழிகளையும் இவனாகவே சேர்த்துக் கொண்டது தெரிய வந்தது . ‘ தம்பிக்கு கவிதையில ஆர்வமோ ? ’ ஆமா எப்படியும் புத்தகம் போடனும் ’ என்றான் . ‘ போட்டுடலாம் போட்டுடலாம் ,ஆமா இது வரைக்கும் எத்தனை கவிதைகள் எழுதியிருக்கீங்க ? ‘ அது இருக்கும் ஒரு ஐநூறுக்கு மேல ’ ‘ அப்ப தம்பி படிப்பை படிக்கிறதில்ல போலயிருக்கு , ஒரே கவிதை மயம் தான்னு சொல்லுங்க ‘ என்றார் . அந்த நேரத்தில் வாசலில் நிழலாடியது. இள மஞ்சள் வண்ணத்தில் சுடிதார் அணிந்த , காட்டுக் கொடி போல , நெகு நெகுவென வளர்த்தியான ஒரு இளம் பெண் , தோளில் லேடிஸ் பேக்கும் , கையில் ஒரு சிறிய கட்டைப் பையுமாக அங்கே வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும் கவிப்பிரியனுடைய முகம் அனிச்சையாக பெரிதானதை அவர் கவனித்தார் .

இவர் அவளிடம் பெயர் மற்ற விவரங்களை கேட்ட போது அவைகளையெல்லாம் , இந்த அடை மொழிக் கவிஞன் மனதிற்குள்ளாகவே பதிந்து கொண்டான் . கடைசியில் ஏதாவது பேசியே ஆக வேண்டுமென்ற கட்டாயத்திற்கு வந்தது போல ‘ நீங்க என் . எஸ் லேடீஸ் காலேஜா ? ’ என்று கேட்டான் ’ அந்தப் பெண் ’ இல்லை மேரி மாதா கல்லூரி ‘ என்றது. ‘ நல்ல காலேஜ் ‘ என்றான் அவன் . அது போனால் போகிறதெஎன்று கொஞ்சம் சிரித்து வைத்தது . அந்தப் பெண் இவனைப் பற்றி எதுவும் கேட்கவில்லை என்றாலும் , இவனாகவே ’ நான் உங்களை இன்டர் காலேஜ் காம்ப்டிசன்ல பார்த்திருக்கேன். கவிதையில நான் பர்ஸ்ட் பிரைஸ் வாங்குனேன் பார்த்திருக்கீங்களா ? ‘ என்று கேட்டான். அவள் தெற்றுப் பல் ஈறு தெரிய ’ எனக்கு கவிதையில ஆர்வமில்ல , சிறுகதைகள்ல தான் ஆர்வம் ‘ என்று முடித்து விட்டாள் .
உடனே அவன் முகம் தொட்டா சிணுங்கியைப் போல தொங்கி விட்டது. தோழர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். ‘ இவனைப் போல தத்தியாக இருக்கிற ஆண்களை சமாளிப்பதில் , இந்தப் பெண்கள் தான் எவ்வளவு கில்லாடியாக இருக்கிறார்கள் ! என்று ஆச்சர்யமாக இருந்தது . அந்தப் பெண்ணைப் பார்த்தால் , நல்ல மாநிறமாக களையாக எடுப்பாக இருந்தது . காது கழுத்தில் பொட்டு நகையில்லை. ஆனால் புத்திக் கூர்மையுடையவளாக தெரிந்தாள். வார்த்தைகளை நன்றாக யோசித்து விழிப்புணர்வுடன் பேசினாள். இவளைப் போல பெண்கள் தான் எதார்த்த்த்தில் ஜெயிக்க முடியும் என்று அவர் மனதுக்குள் நினைத்துக் கொண்டார் .
அந்தப் பையனைப் பார்த்தால் அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருந்தான். கால் தரையில் படவேயில்லை . எப்போதும் வானத்தில் பறப்பது போன்ற மனநிலையிலேயே இருந்தான் . கவிஞனென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று இவனாக தவறாக கற்பிதம் செய்து கொண்டிருக்கிறான் . இவனைச் சொல்லி குற்றம் இல்லை. சமூகத்தில் பிரபலமான கவிஞர்களெல்லாம் , இந்த மாதிரி இளைய தலை முறையை எதார்த்தம் தெரியாமல் ஏதேதோ பேசி கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார். மனதுக்குள் வேதனை எழுந்தது . இவர்களுக்கெல்லாம் அரிசி தக்காளி , சின்ன வெங்காயம் கிலோ என்ன விலை என்று கேட்டால் எதுவும் தெரியாது . மனித குலத்தின் அடிப்படை வரலாறு , சித்தாந்தம் , பொருளாதாரம் இவைகளைப் பற்றி எதுவும் தெரியாது. உக்ரைன் ரஷ்யா போர் பற்றி மூச்சு விட மாட்டார்கள் . ’ ஆனால் அழிந்த நிலா , உடையாத கண்ணிர் என்று சொற்சேர்க்கை மட்டும் கவர்ச்சியாக தெரிகிறது. நினைக்க நினைக்க அவருக்கு அயர்ச்சியாக இருந்தது. இவன் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கவலைப் பட்டார்.
அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்த போது அவள் பெயர் மதுமதி என்றாள். மேரி மாதா கல்லூரியில் பி ஏ தமிழ் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் , ஜீவிதத்திற்கே கஷ்டப்படுகிற குடும்பத்தை சேர்ந்தவள் என்பதும் தெரிந்தது தெரிந்தது . அவள் தேனி வீரபாண்டி அருகே உள்ள வயல் பட்டி கிராமத்திலிருந்து வருகிறாள். அவளுக்கு இரண்டு தங்கைகள் , அப்பா மார்க்கெட்டில் லோடு மேனாக இருக்கிறார் . அம்மா விவசாயக் கூலி . இவளுக்கு தமிழ் நாவல் வாசிக்கவும் சிறுகதைகளை வாசிப்பதற்கும் , எழுதுவதற்கும் ஆர்வம் இருக்கிறது . அவர் அவளிடம் பிடித்த எழுத்தாளர்களின் பெயர்களைக் கேட்ட போது அவள் சொன்ன பதில் தான் அவருக்கு உண்மையிலேயே ஆச்சரி யத்தை கொடுத்தது . கி .ரா. , பூ மணி , சோ . தர்மன் , புதுமைப்பித்தன் தொடங்கி , எஸ் ரா , கோணங்கி , கு . அழகிரி சாமி என்று நீண்டு கொண்டே சென்றது . கடைசியில் அவள் நமது மாவட்ட எழுத்தாளர்களில் தேனி சீருடையான் , காமுத்துரை மற்றும் அல்லி உதயன் வரை பிடிக்கும் என்று முடித்தாள். இது வரையிலும் கல்லூரியில் படிக்கும் எந்தப் பெண் இவ்வளவு எழுத்தாளர்களின் பெயர்களை சொன்னது கூட இல்லை. உதயன் தோழரும் , காமுத்துரை தோழரும் இங்கே இருந்திருந்தால் , நிச்சயமாக மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டார். இது வரையிலும் அவர் தான் இந்த மாவட்டத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் தேனி சீருடையான் என்பது அவளுக்குத் தெரியவில்லை . அவர் அமைதியாக தான் தான் அந்த சீருடையான் என்று அவளிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார் . ஒரு கணம் அவள் விழிகள் விரிய ஆச்சர்யப்பட்டுப் போனாள். இவ்வளவு எளிமையை அவள் ஒரு எழுத்தாளரிடம் எதிர்பார்த்திருக்க வில்லையென்பது , அவளது நடவடிக்கைகளிலிருந்து அவருக்கு நன்றாகத் தெரிந்தது . இது வரை கண்டு கொள்ளாமல் இருந்த அந்த கவிஞன் பையனும் உடனடியாக அவருக்கு கை கொடுத்தான் . அடுத்த நொடியில் அவனும் அவரைப் போல பெரிய எழுத்தாளராக மாற வேண்டுமென்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் .
ஆனால் அந்தப் பெண் நிறுத்தி நிதானமாக அவரின் படைப்புகளை அதாவது நிறங்களின் உலகத்திலிருந்து , கடை , நாகராணியின் முற்றம் . விழுது . கந்துக் காரன் கூண்டு ‘ ஒற்றை வாசம் , ஊத்து என்று ஒவ்வொன்றாக எடுத்து சிலாகித்துப் பேச ஆரம்பித்து விட்டது . அவள் அவரிடம் அவ்வளவு சிலாகித்துப் பேசுவதைப் பார்த்து விட்டு அவனும் அவள் அருகினில் அமர்ந்து அவரிடம் , ’ உங்களுடைய கடை சிறுகதை எங்கள் பாடத்திட்டத்தில் இருக்குது ஐயா ’ என்றான் • அதற்கு அவர் ’ நீங்க இரண்டு பேரும் என்னை தோழர்ன்னே கூப்பிடலாம் ’ என்றார்.
அப்படி ஆரம்பித்த அவர்களின் அறிமுகம் இந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. அனேகமாக தோழர்கள் நடத்துகிற எல்லா இலக்கியக் கூட்டங்களிலும் இவர்கள் இருவரையும் காணலாம் . வா போ என்று ஆரம்பித்த நட்பு இன்று வாடா போடா என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்குள் வளர்ந்திருக்கிறது. இவர்கள் இப்படி பால் பேதம் மறந்து நட்பாகப் பழகுவது , ஒரு விததில் அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது . அவர் அவர்களை பேச விட்டு கேட்டுக் கொண்டிருந்தார் . சில சமயங்களில் கல்லூரி வகுப்புகள் விரைவில் முடிந்து விட்டால் , இருவரும் நேராக கிளம்பி அவரைப் பார்க்க கடைக்கு வந்து விடுவார்கள். இருவருமே பழங்களை விற்பதில் , ஜுஸ் போட்டு கொடுப்பதில் , நிறுத்துப் போடுவதில் அவருக்கு உதவியாக இருந்தார்கள். வீட்டிற்கு செல்லும் போது அவர் அவர்களுக்கு ஒரு சீப்பு வாழைப்பழத்தையோ , அல்லது கொய்யாப் பழங்களையோ , மாம்பழங்களையோ தந்து விட்டார் . சமயத்தில் அவர்களுக்கு அவர் கல்லூரி கட்டணம் கட்டியிருக்கிறார் . ஆனால் அவர் யாரிடமும் சொல்லிக் கொள்ள மாட்டார். அதை விட முக்கியம் என்ன வென்றால் , அவர் அவர்களுக்கு வாசிக்க வேண்டிய புத்தகங்களின் அறிமுகத்தை தந்தார். தன்னிடமிருந்த புத்தகங்களையும் வாசிக்க சொல்லி தந்தார்.
புத்தகங்களைப் படித்து விட்டு வந்து , அவர்கள் சிறுகதைகள் நாவல்கள் குறித்து அவர் முன்னால் பேசினார்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டார்கள் . பிறகு சமாதானமாகி இருவரும் சேர்ந்து பேருந்து நிலையம் வரைக்கும் இவருடைய டிவிஎஸ் பைக்கில் சென்றார்கள். தோழர் ‘ அட பரவாயில்லையே இந்த தலைமுறையிலும் கள்ளம் கபடமற்ற நட்பு காணக்கிடைக்கிறதே ‘ என்று அதிசயப்பட்டுக் கொண்டார். அதைக் காட்டிலும் செல்போன்களுக்கு அடிமையாகி தங்களையும் அழித்துக் கொண்டு , இந்த சமூகத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்திலும் , இப்படி இலக்கியம் படிக்கும் இளைஞர்கள் அத்தி பூத்தார் போல இன்னும் இருக்கிறார்களே என்று நினைத்துப் பார்க்கும் போது அவருக்கு பெருமிதமாக இருந்தது . இந்தச் சூழலில் இந்தப் பையன் இப்படி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக இவரிடம் சொன்னது உண்மையிலேயே இவருக்கு வேதனையாக இருந்தது . அவன் போன் போட்ட உடனே ஒருவாறாக கதை எப்படி இருக்குமென்று அவர் ஊகித்திருந்தார் .எதற்கும் அவனிடமே கேட்டு விடலாமென்று தான் மதிய உணவிற்கு கூட வீட்டுக்குப் போகாமல் அவனுக்காக கடையிலேயே காத்திருந்தார்.
சற்று நேரத்தில் கவிப்பிரியன் முத்தையா சேர்ந்தான். முகமெல்லாம் வீங்கிப் போய் , அழுக்கு உடையுடன் ஆளே அரை உயிராகிப் போனது போல நடந்து வந்தான். கடைக்குள் நுழைந்தவன் ஒன்றும் சொல்லாமல் பழங்களை அடுக்கி வைத்திருக்கும் மரப் பலகைக்கு பக்கத்தில் இருந்த சிறிய மர ஸ்டூலில் அமர்ந்து கொண்டான். அவர் எதுவும் விசாரிக்கவில்லை . சரி அவனாகவே பேசட்டும் என்று காத்திருந்தார்.
சற்று நேரத்தில் அந்தப் பெண் மது வெம்பிப் போன வெள்ளரிக்காய் போல , வாடிப் போய் கடைக்கு வந்து சேர்ந்தாள் . கையில் இரண்டு கட்டைப் பைகள் நிறைய காய்கறிகள் நிறைந்திருந்தது . தோளில் ஒரு ஹேண்ட் பேக் தொற்றிக் கொண்டிருந்தது. முகத்தில் பழைய உற்சாகம் சுத்தமாக இல்லை. தோழருக்கு ஒரு நொடியில் எல்லாம் புரிந்தது போல் இருந்தது . உள்ளே நுழைந்ததும் பழங்களை அடுக்கி வைத்திருக்கும் கடப்பாக் கல் அருகே கட்டைப் பைகளை வைத்து விட்டு நேராகப் போய் , பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீருக்குள் கிடந்த பெரிய பெரிய கண்ணாடி தம்ளர்களை எடுத்து கழுவி வைக்க ஆரம்பித்து விட்டாள். தோழர் ஒரு வாடிக்கையாளருக்கு ஆரஞ்ச் , சாத்துக் குடி மற்றும் விதையில்லாத கருப்பு முந்திரியை நிறுத்து எடுத்து அதை பேப்பர் பையில் போட்டுக் கொடுத்து விட்டு , பணத்தை வாங்கிக் கொண்டு வருவதற்குள் , மது பாதி தம்ளர்களை கழுவி கவிழ்த்தி வைத்திருந்தாள். கவிஞர் கவிப்பிரியன் முத்தையா எதுவும் பேசாமல் மதுவையே பார்த்துக் கொண்டிருந்தான். தோழர் மெதுவாக இருவரையும் பார்ததபடி உள்ளே வந்து ‘ ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா ? ‘ என்று கேட்டார். அவள் தலையாட்டினாள். அவன் இப்போ சாப்பாட்டுக்கு என்ன கேடு தோழர் ? என்று அவரையே திருப்பி கேட்டான். ‘ என்ன தோழர் இப்படி சொல்லீட்டிங்க சாப்பாட்டுக்காகத் தான , ஒவ்வொரு மனுசனும் நாயாய் , பேயாய் கஷ்டப்படுறான். பசி தான மனுசனை உலகத்துல ஆட்டிப் படைக்குது ’ என்றார் அவர் அவன் . ‘ எனக்குப் பசிக்கலை ‘ என்றான் ‘ சரி தான் நிசமாவே பசிக்கலையா ? இல்லை உங்களுக்கு சாப்பிட பிடிக்கலையா ? ‘ என்று கேட்டார். ‘ எப்படி வேணாம்னாலும் எடுத்துக்கோங்க , சாகப் போறவனுக்கு எதுக்கு சாப்பாடுன்னு கேட்குறேன் ?’ என்று அவன் காட்டமாக கேட்டான் . மது வாயைத் திறந்து ‘ இவன் எதுக்கு இப்ப சாகனும்னு கேளுங்க தோழர் ? ’ என்று இவரைப் பார்த்து கேட்டாள். ‘ நான் எதுக்கு உயிரோட இருக்கனும்னு அவ கிட்டயே நீங்க கேளுங்க தோழர் ? ‘ என்று இவனும் தன் பங்குக்கு அவரை விரட்டினான்.
சீருடையான் தோழர் இப்போது இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். அவள் அவரைப் பார்த்து ‘ ஏன் தோழர் நீங்க கதை எழுத்தறவர் தானே , இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க , ஒரு பொண்ணு ஒரு பையன்கிட்ட சரளமாப் பேசி பழகுனா , உடனே அவள் அவனை காதலிக்கிறான்னு அர்த்தமாயிருமா ? என்று கேட்டாள் . தோழர் ஒன்றும் பேசாமல் அவனை திரும்பி பார்த்தார் . அவன் ‘ காதலிக்கிற மாதிரி பேசிப் பழகுனா யாரும் அப்டித்தான் நெனப்பாங்கன்னு சொல்லுங்க ’ என்றான் . மது ‘ தோழர் நான் உங்ககிட்ட கூட அன்பாத்தான் பழகுறேன் அதுக்காக நீங்களும் , நான் உங்களை காதலிக்கிறேன்னு சொல்லுவீங்களா ? ’ என்று கேட்டாள் . தோழர் பதறிப் போய் ‘ மது என்னம்மா சொல்லுற , நான் உங்கப்பா மாதிரியில்லையா ? ‘ என்று கேட்டார். ‘ ஆமா தோழர் நீங்க எங்கப்பா மாதிரி தான் . ஆனால் நான் என்னைக்காது நீங்க எங்கப்பா மாதிரின்னு சொல்லிருக்கேன்னா ? என்று மறுபடியும் கேட்டாள். அவர் இல்லையென்று தலையாட்டினார் . அவள்’ அதெல்லாம் சொல்லாமலே தானா மனசுக்குள்ள இருக்கும் தோழர் , நல்லா பழகுறவங்ககிட்ட ஒவ்வொரு முறையும் நீங்க எங்கப்பா மாதிரி , நீங்க எங்கப்பா மாதிரின்னு யாராவது சொல்லுவாங்களா தோழர் ? என்று கேட்டாள். அவர் ‘ அது எப்படி முடியும்மா , மரியாதை பாசமெல்லாம் மனசுக்குள்ள தான இருக்கனும் ‘ என்றார் . அவள் அவனைப் பார்த்து கை நீட்டி ‘ எல்லாம் அங்க சொல்லுங்க ‘ என்றாள். கவிப்பிரியன் கோபாமாக அவளைப் பார்த்த படி ‘ அப்போ அவரும் நானும் ஒண்ணா ? ’ என்று நேரடியாகவே கேட்டான்.
அவள் அவனை தவிர்த்து விட்டு தோழரைப் பார்த்து பேச ஆரம்பித்தாள். ’ தோழர் ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நாகரிகமா பழகுற ஆம்பளைகளைப் பார்த்தா , அவங்க வயதைப் பொறுத்து அண்ணனாகவோ , தம்பியாகவோ , அப்பாவாகவோ , சித்தப்பாவாகவோ ஒரு உறவு முறையோட இணைச்சுப் பார்த்து தான் பழகத் தோணும். இதைத் தான நீங்க எழுதின நாகராணியின் முற்றம் நாவலிலிருந்து . கடை , கந்துக் காரன் கூண்டு ,ஒரே வாசல் , ஊத்து , நிறங்களின் உலகம் அப்டின்னு , உங்களுடைய ஒவ்வொரு படைப்பிலும் எழுதிட்டு வர்றீங்க. உங்களை உண்மையிலேயே ஆழமா வாசிச்சா இப்படி நட்பை காதலுன்னு குழப்பிக்க தோணுமா ? என்று கேட்டாள். அவருக்கு வியப்பாக இருந்தது. ஆஹா ! இந்தப் பெண் எவ்வளவு ஆழமாக தன் படைப்புகளை வாசித்திருக்கிறது. இதுவே தன் மகளாக இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் ஒரு கணம் அவர் மனதில் எழுந்ததை தடுக்க முடியவில்லை . அப்படி இருந்திருந்தால் இலக்கியத்தில் நான் முடிவுறும் இடத்தில் இந்தப் பெண் என் தொடர்ச்சியாக இருப்பாளே ‘ என்று ஆதங்கப்பட்டார் மது ’ நான் இவனையும் ஒரு நண்பனைப் போல தான் பார்த்தேன் தோழர் , ஆனா இவன் தான் எல்லாத்தையும் தப்புத் தப்பா புரிஞ்சிகிட்டு என்னென்னமோ உளர்றான் ‘ என்று உடைந்த குரலில் சொன்னாள். தளு தளுத்த கண்களில் அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் உடைந்து , கரை புரண்டோடியது . அவள் கடைசி வார்த்தையை பேசி முடித்த போது கடைக்கண்களிலிருந்து சாரை சாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . அதைப் பார்த்த அவருக்கு உள்ளம் கரைந்து நெக்குருகி விட்டது . கவிப் பிரியன் எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக இருந்தான் .அங்கே ஒரு பெண் அழுது கொண்டேயிருந்தாள். இரு ஆண்கள் கையறு நிலையில் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரு ஆண்களாலும் ஒரு பெண்ணின் கண்ணீரை நிறுத்துவதற்கான , எந்த சமாதானமும் சொல்ல முடியவில்லை.
யாரும் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை ’ சரி அப்டின்னா ஏன் தியேட்டர்ல படம் பார்க்கும் போது என் கையை பிடிச்சுகிட்ட ? என்று அவன் அவளிடம் கே ட்டான். ’ பிடிக்கனும் போல இருந்துச்சு, பிடிச்சுக்கிட்டேன் , ஏன் ஆண்கள் நீங்க உங்களுக்குள்ள கையை பிடிச்சுக்கிறதில்லையா ? உடனே அது காதல்னு அர்த்தம் பண்ணிக்கிறதா ? என்று மது அவனை திருப்பி கேட்டாள் . அவனிடம் பதிலில்லை.
தோழருக்கு இப்போதுதான் எல்லாமே ஒரு வழியாகப் புரிந்தது . அந்தப் பெண் இவனிடம் சகஜமாகத்தான் பழகி இருக்கிறது . நட்பாகத்தான் கையைப் பிடித்து இருக்கிறது . முற்போக்கு மேடைகளிலும் , கூட்டங்களிலும் பழகிய தோழர்கள் பாலின வேற்றுமை பாராமல் கைகளைப் பிடித்து நலம் விசாரிப்பது ஒரு சாதாரண நிகழ்வு தான். அதை கவனித்ததில் , இந்தப் பெண்ணும் , இவனை அவ்வாறு சக தோழன் என்று தான் நினைத்திருக்கிறது . இவன்தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இப்போது அந்தப் பெண் காதலிக்கவில்லையென்று தெரிந்த உடனேயே இவன் தற் கொலை மிரட்டல் விடுக்கிறான்.
அவர் அவனைப் பார்த்து ’ கவிஞரே ஒருத்தரு நம்ம கையைப் பிடித்துப் பேசினாலே , உடனே காதல் கத்தரிக்காயெல்லாம் வந்திருச்சுன்னு கிடையாது . நீங்க தான் உங்க மனசுல ஏதோ தவறான எண்ணத்தை ஏற்படுத்திகிட்டு இருக்கீங்கன்னு தெரியுது ‘ என்றார் . அவன் அமைதியானான் பிறகு இருவரையும் பார்த்து ’ உண்மையிலேயே உங்க இரண்டு பேரையும் பார்த்து எனக்கு பெருமிதமா இருந்துச்சு தோழர் . இந்தக் கால ஆண்களும் , பெண்களும் எப்படி , புத்திசாலியா , நட்போட பழகுறாங்கன்னு , நான் நம்ம தோழர் கிட்டயெல்லாம் அடிக்கடி சொல்லி வியந்திருக்கேன். அவுங்களும் உங்களைப் பத்தி நிறைய பேசுவாங்க . எங்க நம்பிக்கையெல்லாம் இப்படி பொய்யா போகும்னு நான் நினைக்கலை , ’ என்றார் . பிறகு மதுவைப் பார்த்து ’ மது தோழர் உண்மையிலேயே என்ன நடந்தது நீங்க சொல்லுங்க ’ என்றார் .
மதுவுக்கு கண்களில் அழுகை முட்டிக் கொண்டு நின்றது . இவரைப் பார்த்து ‘ தோழர் இவன் போன ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் , தேனி மைய நூலகத்திற்கு அவசரமா வரச் சொல்லி செய்தி அனுப்புனான் . நானும் ஏதோ அவசரமா இருக்கும்னு நினைச்சு , ஊரில இருந்து மினி பஸ் பிடிச்சு அங்க போய் சேர்ந்தேன். ஏதாவது புது புத்தகம் தான் படிக்கிறதுக்கு எடுத்து வச்சிருப்பான் போலன்னு நினைச்சுக்கிட்டுத் தான் சத்தியமா நான் அங்கே போனேன். ஆனா அங்க போனதுமே, இவன் என்கிட்ட ஒரு பெரிய கடிதத்தை பேண்ட் பாக்கெட்ல இருந்து எடுத்து நீட்டுறான். அப்பவே எனக்கு அதிர்ச்சியாகிருச்சு ? ’ என்ன இதுன்னு ? கேட்டேன் . அதுக்கு இவன் ’ படிச்சுப் பாரு லவ் லெட்டர் மாதிரியே இருக்காது , எல்லாம் கவிதையாத்தான் இருக்கும் ’ அப்டின்னு சொன்னான் . எனக்கு வந்த கோபத்துல அதை அங்கேயே நாலா , மூணா கிழிச்சு , அவன் மூஞ்சியில வீசிட்டு வீட்டுக்குப் போயிட்டேன். அதுக்கப்புறம் அவன் போன் போட்டதுக்கு நான் எடுக்கலை. ஆனா இப்ப இரண்டு மணி நேரத்துக்கு முன்னால , நான் உங்க கடைக்கு உடனே வரலேன்னா ஆத்துல விழுந்து செத்துருவேன்னு மெசேஜ் அனுப்பி விட்டுட்டு , போனை ஆப் பண்ணிட்டான் . அது தான் அம்மாகிட்ட சந்தைக்குப் போறேன்னு சொல்லிட்டு அவசரமாக இங்க ஓடி வந்தேன் ’ என்று சொன்னாள்.
தோழர் அவளிடம் ‘ ஏந் தோழர் பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிட்டு , பேசாம கடந்து போக வேண்டியது தான ? ஏன் சினிமா காட்சி மாதிரி கடிதத்தை கிழிச்சு மூஞ்சி மேல விட்டெறியனும் ? ‘ என்று கேட்டார்.
அவள் சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு அவரைப் பார்த்து ‘ தோழர் நான் இவன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன் ? . இவனை நம்பி எங்க வேணாலும் தனியாக போகலாம்கிற அளவுக்கு அவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். அப்படித்தான் இவன் கூட நான் ஆத்மார்த்தமா பழகி கிட்டிருந்தேன். ஆனா இவன் என்னோட இவ்வளவு நாளும் தப்பான அர்த்தத்துல தான் பழகியிருக்கிறான்னு தெரிஞ்ச உடனே எனக்கு பயங்கரமாக கோபம் வந்திருச்சு , அதான் அப்படி நடந்துகிட்டேன் ’ என்றாள்.
அவள் தொடர்ந்து ’ நீங்க என்னோட நிலைமையில இருந்து பார்த்தா தான் இது உங்களுக்குப் புரியும் தோழர் . எனக்கு இந்த காதல் கத்திரிக்காய் இதுலயெல்லாம் சுத்தமா நம்பிக்கை கிடையாது . எங்க ஊரு வயல் பட்டில . எங்கம்மா விவசாய கூலி வேலைக்குத்தான் போகுது . எனக்கு இரண்டு தங்கச்சி இருக்கிறாங்க . ஒருத்தி பிளஸ் டூ படிக்கிறா . அடுத்தவ பத்தாவது . எங்க அப்பா மார்க்கெட்டுல , லோடுமேனா இருக்கார். நினைச்சாத்தான் மார்க்கெட்டுக்கு வேலைக்குப் போவாரு . அப்படியே போனாலும் கூலில பாதியை குடிச்சே அழிச்சிட்டுத்தான் வீட்டுக்கு வருவாரு .
என் ஆசையெல்லாம் நல்லா படிச்சு , சிவில் சர்வீஸ் எக்ஸாம்ல பாஸ் பண்ணி ஒரு ஐஏஎஸ் ஆகணும்கிறது தான். வேற நினைப்பே கிடையாது தோழர் . எங்க காலேஜ் சேர்மன் , புரொபசர்கள் , எல்லாரும் நான் கல்லூரி சார்பா , பேச்சுப் போட்டி எழுத்துப் போட்டி , கட்டுரைப் போட்டின்னு , எல்லாப் போட்டிகள்ளயும் கல்லூரி சார்பா ,கலந்துக் கிட்டு நிறைய பரிசுகள் வாங்குறதுன்னால , என்னால கல்லூரிக்கு பெருமைன்னு சொல்லி , எனக்கு உதவுறதுக்கு தயாரா இருக்கிறதா சொன்னாங்க . நான் அப்பத்தான் அவங்கிட்ட என்னோட லட்சியத்தை சொல்லி , என்னோட வறுமையான குடும்ப நிலையையும் சொல்லி அழுதேன் . அவுங்க என்னை நல்ல சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டர்ல சென்னையில கொண்டு போய் சேர்த்து விட்டு , அங்க ஆகுற செலவுகளையெல்லாம் ஏத்துக்கிறதா சொல்லியிருக்காங்க . இந்த நேரத்தில நான் காதல் அப்படி இப்படின்னு இறங்குன்னா , என் கனவு முழுசும் வீணாப் போயிரும் . ’ என்றாள்.
சற்று நேரம் அமைதியாக இருந்தவள் ’எங்கப்பாவுக்கு சும்மாவே நாங்க மூனு பேரும் பொம்பளப் புள்ளைகளா பொறந்திட்டோம்னு புடிக்காது . கழுதைக படிச்சி என்னத்த கிழிக்கப் போகுதுங்க என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் . இதில நான் இவன் கூட சேர்ந்து , பேரைக் கெடுத்துக்கிட்டேன்னா , அவர் என்னை மட்டுமில்ல ,என் தங்கச்சிகளையும் பள்ளிக்கூடத்துப் பக்கமே போக தலை காட்ட விடமாட்டார். எங்கம்மாவை அடிச்சே கொன்னாலும் கொன்னுருவாரு .
அப்புறம் நான் மட்டும் எதுக்கு உசிரோட இருக்கனும் ? , நானும் செத்துருவேன் . இப்ப சொல்லுங்க இதெல்லாம் தேவையா தோழர் ? என்று கேட்டாள் . அவருக்குப் பதில் சொல்ல முடியவில்லை . ’ எல்லாருக்கும் மனசுன்னு ஒன்னு இருக்குது . முதல்ல அதைப் புரிஞ்சுக்கோங்க ’ என்று சொல்லி விட்டு , இருவரையும் பொதுவாகப் பார்த்த படியே , கண்ணீரை கைகளால் துடைத்துக் கொண்டாள். கைப் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள் . காய் கறிகள் நிரப்பப்பட்ட இரண்டு கட்டைப் பைகளையும் , இரண்டு கைகளில் எடுத்துக் கொண்டு வேகமாக தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். கண்களிலிருந்து மறையும் வரை தோழர் அவள் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் . தன்னையுமறியாமல் தன் கண்கள் பனித்ததை யாரும் அறியாத வண்ணம் மேல் துண்டால் துடைத்துவிட்டு , கண்ணாடியை மறுபடியும் அணிந்து கொண்டு , கடைக்குள் மெதுவாக நடந்து வந்தவர் நேராக அவனிடம் சென்றார். அவன் தோளில் கை மெதுவாக கை வைத்தார். அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரை உருண்டோடிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார்.
எழுதியவர் :
✍🏻 – தங்கேஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.