theeviravaathigalaakkapptaa paalastina makkal article wreitten by munaivar arun kannan கட்டுரை: தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் -முனைவர்.அருண்கண்ணன்
theeviravaathigalaakkapptaa paalastina makkal article wreitten by munaivar arun kannan கட்டுரை: தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் -முனைவர்.அருண்கண்ணன்

கட்டுரை: தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் -முனைவர்.அருண்கண்ணன்

தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் 

அக்டோபர் 7ஆம் தேதி அன்று ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது மிகக் கடுமையான தாக்குதலை தொடுத்தனர். இத்தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இறந்துள்ளனர் என்கிறது செய்தி ஊடகங்கள். இத்தாக்குதல் இஸ்ரேல் உட்பட உலகத்தில் உள்ள பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியின் மக்கள் மீது மிகக் கொடுமையான தாக்குதலைத் தொடுக்கிறது இஸ்ரேல் அரசு.

இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தனியாகு தலைமையிலான வலதுசாரி அரசு நீதித்துறையில் மேற்கொண்ட மாற்றத்திற்கு எதிராக இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி அந்த நாட்டு மக்கள் மிகத் தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் இஸ்ரேல் வரலாற்றின் மிகப்பெரிய நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் உளவு பார்ப்பதில் மிகவும் பிரசித்தி பெற்ற இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாத்திற்குத்’ தெரியாமல் இத்தாக்குதல் நடந்திருக்கும் என்று நம்புவது சற்றுக் கடினமாக இருக்கிறது.இந்தத் தாக்குதலுக்கான காரணம் எதுவாகினும் காசா பகுதி மக்கள் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். 25 லட்சம் மக்கள் வாழும் காசா பகுதி முழுமையாக அடைக்கப்பட்டு குண்டு மழைகளை பொழிகிறது இஸ்ரேல் அரசு. இப்படி பாலஸ்தீன மக்கள் மீது கடந்த 75 ஆண்டுகளாக பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது இஸ்ரேல் அரசு.

எனவே தற்போது நடைபெறும் இந்த நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் இஸ்ரேல் உருவான பின்னணியையும் பாலஸ்தீன மக்கள் மீது அது தொடுக்கும் தொடர் தாக்குதல்களையும் அதற்கு பாலஸ்தீன மக்களின் எதிர்வினைகளையும் புரிந்துகொள்வது அவசியமாகும். இந்த வரலாற்றை மிக அற்புதமாக விளக்குகிறது இப.சிந்தன் எழுதிய பாலஸ்தீன வரலாறும் சினிமாவும் என்கிற புத்தகம்.
சியோனிஸத்தின் வளர்ச்சி, அதன் பின்னணியில் யூதர்களுக்கான தனி நாடு உருவாக்க வேண்டும் என்கிற கருத்தாக்கங்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உருவானதை தியோடர் கஸல் எழுதிய ‘யூதர் தேசம்’ புத்தகத்தின் வாயிலாக நாம் புரிந்து கொள்ளமுடிகிறது. மேலும் பல்லவேறு இடங்கள் யூதர் தேசம் உருவாவதற்குப் பரிசீலிக்கப்படுகிறது. இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் முதல்பகுதியில் ஓட்டமான் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரிட்டன் உதவியுடன் பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியை பிளந்து இஸ்ரேலை உருவாக்கும் திட்டம் இறுதி செய்யப்படுகிறது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அதற்கான வேலைகள் மிகத் தீவிரமாக தொடங்கப்பட்டு 1948 இல் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளின் உதவியுடன் இஸ்ரேல் உருவாக்கபடுகிறது.இஸ்ரேல் உருவாக்கத்தின் பின்னணியில் 4,00,000 த்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் தங்களுடைய சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றபட்டு அகதிகளாக்கப்பட்டார்கள்.இந்நிகழ்வை ‘Al NAKKABA’ என்று வருடந்தோறும் நினைவு கூறுகின்றனர் பாலஸ்தீனியர்கள். 1948 க்குப் பிறகு மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகள் ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டு பாலஸ்தீனம் என்கிற நாட்டை அழித்து உருவானதுதான் இஸ்ரேல் என்கிற வரலாற்று பின்னணியைப் பேசுகிறது புத்தகத்தின் முதல் பகுதி.

அதன் தொடர்ச்சியாக பாலஸ்தீனிய மக்களின் அடையாளங்கள், வழிபாட்டு உரிமைகள், பண்பாட்டு விடயங்களை அளிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது இஸ்ரேல். இதன் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட எழுபதாயிரத்திற்க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொள்ளையடித்துள்ளது இஸ்ரேல் ராணுவமும் அதன் கூலிப்படையும். மேலும் ஒவ்வவாறு கிராமத்தையும் கைப்பற்றி அங்குள்ள நூலகங்களில் புத்தகங்களைக் கொள்ளையடிப்பது மற்றும் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பது என மிகத் தீவிரமாகச் செயல்பட்டுள்ளது இஸ்ரேல் அரசு. இன்றும் இவற்றில் ஐந்தாயிரம் புத்தகங்கள் இஸ்ரேல் நூலகத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
வாழ்விடத்தை விட்டு விரட்டியதுடன் பாலஸ்தீன மக்களின் கலாச்சாரத்தை அழித்ததோடு எவ்வாறு அந்த மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப் பட்டதைப் பேசுகிறது புத்தகத்தின் இரண்டாவது பகுதி.

1948க்கு முன்பாக 10 % கிருஸ்த்துவர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்துள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு இன்று அது வெறும் 2 சதவீதமாக குறைந்துள்ளது. பலரும் இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்னை யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே என்றே நம்புகின்றனர். ஆனால் இஸ்ரேலியத்தின் தொடக்கம் முதலே அதற்கு எதிரான அனைத்துப் போராட்டங்களிலும் கிருஸ்த்துவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது என்பதை விவரிக்கிறது புத்தகத்தின் மூன்றாம் பகுதி.

புத்தகத்தின் நான்காவது பகுதியில் இருபதாம் நூற்றாண்டில் தொடங்கி இஸ்ரேலின் உருவாக்கத்துக்குப் பின்னரும் தொடரும் சட்ட விரோத யூதக்குடியேற்றம் மேற்குக் கரை மற்றும் ஜெருசலத்திலும் நடந்து கொண்டே இருக்கிறது. 1970 களில் வலதுசாரிகள் இஸ்ரேலில் ஆட்சிக்கு வந்த பிறகு இது இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வேலி என்கிற பெயரில் ஒரு கிராமத்தின் நடுவே சுவரெழுப்பப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன இது போன்ற வேலி பெரும்பலான பாலஸ்தீனப் பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை படிக்கின்ற பொழுது ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட்ட“OMAR” என்கிற பாலஸ்தீனப் படத்தின் காட்சிகள் மனதிற்குள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
1967 இல் நடந்த யுத்தத்தில் ஜோர்டன் மற்றும் எகிப்தின் கட்டுப்பாட்டிலிருந்த காசா மற்றும் மேற்குக் கரைப் பகுதிகள் முற்றிலும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது. கிட்டத்தட்ட இந்த இரண்டு பகுதியையும் திறந்தவெளி சிறைசாலையாகவே மாற்றிவிட்டது இஸ்ரேல் அரசாங்கத்தின் ராணுவம். அத்துடன் மேற்குக் கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் பாலஸ்தீன மக்களளின் அன்றாட அவலங்களை நம் கன்முன்னே காட்சிப்படுத்துகிறது இப்புத்தகம்.

மேலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை ஆரம்பம் முதலே பாலஸ்தீனர்கள் எதிர்த்து வெவ்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கியமாக 1987 -1993 ஆம் ஆண்டுகள் நடந்த போராட்டங்களை முதலாம் எழுச்சி (intifada-1) என்றும் 2000-2006 ஆம் ஆண்டுகள் நடந்த போராட்டங்களை இரண்டாம்எழுச்சி (intifada-2) என்றும் சொல்லப்படுகிறது. முதல் எழுச்சியில் யாசர் அராபத்தின் தலைமையில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) பங்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முதல் எழுச்சிக்குப் பிறகு ஏற்பட்ட ஒஸ்லோ அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) தலைமையிலான அரசாங்கம் செய்த தவறுகள் உட்பட பல்வேறு காரணங்களால் ஹமாஸ் அமைப்பு வளருகிறது. அதன் பின்னணியில் இரண்டாவது எழுச்சியின் போது ஹமாஸின் பங்கு அதிகரிக்கிறது. இதையெல்லாம் புத்தகத்தின் ஐந்து மற்றும் ஆறாவது பகுதி விவரிக்கிறது.

ஹமாஸ் ஒரு தீவிரவாத இயக்கமா என்ற கேள்வியின் மூலம் அந்த இயக்கத்தை விமர்சனப்பூர்வமாக அணுகுகிறது புத்தகத்தின் அடுத்த பகுதி. அடுத்ததடுத்த பகுதிகளில் அங்கே நடந்த பல்வேறு அறவழிப் போராட்டங்களையும் விவரிக்கிறது. குறிப்பாக The wanted 18 திரைப்படத்தில் விவரிக்கப்பட்ட பசுமாடு போராட்டம் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது. புத்தகத்தின் கடைசிப் பகுதியில் அமெரிக்காவின் தொடர் இஸ்ரேல் ஆதரவு மற்றும் ஐநா அவையில் அதன் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்து வருவதால் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதகங்களையும் விவரிக்கிறது. மேலும்  இஸ்ரேலை புறக்கணிப்போம் என்ற Bycott Disvestment sanctions movement யின்  மூலம் பாலஸ்தீனர்கள் நடத்தும் போராட்டம் உலகம் முழுவதும் ஏற்படுத்தி வரும் தாக்கத்தையும் இப் போராட்டத்தில்  பங்கேற்ற முக்கியமான தனி நபர்கள், இயக்கங்கள் மற்றும் அரசாங்கங்கள் கொடுக்கும் ஆதரவையும் விவரிக்கிறது. அதேபோல் இப்போராட்ட வடிவத்தின் மூலம் பாலஸ்தீன மக்களின் குரலுக்கு உலகில் ஆதரவு பெருகி உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது கடைசிப் பகுதி.

யாசர் அராபத்திற்குப் பிறகு பாலஸ்தீன மக்களின் பெரும் அன்பை பெற்ற ‘மார்வன் பகோர்த்தி’ இவர் இன்று வரை இஸ்ரேல் சிறையில் இருந்துவருகிறார் என்பதும் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம். அவருடைய வரிகளோடு புத்தகம் நிறைவடைகிறது. “பாலஸ்தீன ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்தாதவரை, இருவரில் எவருக்கும் அமைதி கிடைக்க வாய்ப்பில்லை.” “இரு மக்களும் தனித்தனியே அமைதியோடு வாழ்கிற இருநாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.” கிட்டத்தட்ட ஒரு நாவலை வாசிப்பது போன்ற அனுபவத்துடன் மிக எளிமையாக ஒரு நூறு ஆண்டுகால வரலாற்றை எழுதியிருக்கிறார் சிந்தன். பொதுவாகப் புத்தகங்களின் கடைசியில் இப்புத்தகம் எழுத உதவிய நூல்களின் பட்டியல் நூலின் ஆசிரியரால் தரப்படும். ஆனால் இந்தப் புத்தகத்தை எழுத உதவிய திரைப்படங்கள் என்று 147 திரைப்படங்களை குறிப்பிட்டுள்ளது இன்னும் ஒரு சிறப்பு அம்சம்.

இ.பா. சிந்தன் எழுதிய ’பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்’ புத்தகம் குறித்தான ஒரு மீள் பார்வை.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை:160/-

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/palasthinam-varalarum-cinemaum/

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *