இன்றைய குழந்தைகளுக்கு, பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கார்ட்டூன் படங்கள், இணையம், இணைய விளையாட்டுகள், கைபேசி, இப்படி தொழில்நுட்பம் அவர்களை, தன் பக்கம் இழுத்து, கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. அவர்களும், இணையம், இணையவழி விளையாட்டுகள் எனும் மாய வலையில் சிக்குண்டு, அதனின்று விடுபட வழியறியாது, சிலந்தி வலையில் அகப்பட்ட சிறு பூச்சியாய் மாறித்தான் போகிறார்கள். அவர்களை நெறிப்படுத்த உதவும் சிறந்த ஆயுதம் புத்தகம். ஆயுதம் என்று சொல்வதை விடவும், நண்பன் என்று சொல்லலாம்.
சமீபத்தில், சிறார்களைக் கவரும் புத்தகம் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அது, ஸ்ரீஜோதி விஜேந்திரன் அவர்களின் தேன்மிட்டாய் தேடிப் போறோம்.
தேன் மிட்டாய், நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று தான். பள்ளி நாட்களில், பெட்டிக் கடைகளிலும், பள்ளிக்கு வெளியே, சாக்குப்பை விரித்து, அதில், தேன் மிட்டாய், கடலை மிட்டாய், சூட மிட்டாய் என கடைபரப்பி, எட்டணாவிற்கு கை நிறைய, சீருடையின் சின்னஞ்சிறு பாக்கெட் நிறைய, நிரப்பி வைத்து, நண்பர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்ந்த தேன்மிட்டாய் தான்.
தேன் மிட்டாய் எப்படி செய்யப்படுகிறது, அது ஆரோக்கியமானதா, இயற்கையான தேன், தேன் அடை, தேனீக்கள், தேனீக்களின் வகைகள், இப்படி பல்வேறு விஷயங்களை எளிமையாக, குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையான வாக்கியங்களைக் கொண்டு, குழந்தைகளைக் கவரும் வகையில் எழுதி இருக்கிறார், ஆசிரியர் ஸ்ரீஜோதி அவர்கள்.
குழந்தைகளுக்கு வாசிப்பை அறிமுகப்படுத்தவும், தேன், தேனீக்கள் குறித்து கற்பிக்கவும் உகந்த நூல்.
பி. தமிழ் முகில்,
சென்னை
புத்தகம் – தேன் மிட்டாய் தேடிப் போறோம்
ஆசிரியர் – ஸ்ரீஜோதி விஜேந்திரன்
வெளியீடு – சுவடு பதிப்பகம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.