சிறுகதைச் சுருக்கம் 71: தேனம்மை லெக்ஷ்மணனின் *எருமுட்டை* சிறுகதை

Thenammai Lakshmanan (தேனம்மை லெக்ஷ்மணன்) Short Story Erumuttai (எருமுட்டை) Synopsis Written by Ramachandra Vaidyanath.இவ்வாழ்க்கையின் அர்த்தமிழந்துபோன அன்றாட நிகழ்வுகள் வேறொரு கோணத்தில் அதே துடிப்புடன் உயிர் பெற்றுவிடுகிறது, 

எருமுட்டை
தேனம்மை லெக்ஷ்மணன்

தணலில் ஒளிர்ந்து கொண்டிருந்தன எருமுட்டைகள். மெல்ல மெல்ல கங்குகளைப் போலாகி ஒளிரும் நெருப்பின் முன் சாம்பல் நிற இருளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் குமரன். சாம்பலாகிக் கொண்டிருந்தன எருமுட்டைகள். சாம்பல், பிடி சாம்பலாகும் தேகத்துக்குள்ளேதான் எவ்வளவு அழுக்கு, காமம், ஆசை. காமமும் காதலும் பெருகக் கேவல் உள்ளேயே எழுந்தடங்கிற்று. அழுதழுது ஆற்றுப்போனதுபோல் குரல் அடைத்தது. ரோகிணி குளித்துக் கொண்டிருந்தாள்.
ஆம். அப்படித்தான் அவள் சொன்னாள். படுக்கையறைக் கதவு சாத்தியிருந்தது. வெளியே போய்விட்டு வந்து சரியாகக் கொக்கியிடாத வீட்டுக் கதவைத் திறந்து, தாழிட்டிருந்த படுக்கையறைக் கதவைத் தட்டியபோது ‘குளிச்சிட்டு இருக்கேன் இதோ வந்திடுறேன்’ என்றுதான் குரல் எழுப்பினாள். வீபூதிப் பாக்கெட்டுகளைப் போட்டுவிட்டு வழக்கமான எட்டுமணிக்குத்தான் வீடு திரும்புவது வழக்கம். இன்று சீக்கிரமே முடிந்துவிட்டதால் வீட்டுக்கு வந்துவிட்டான். கொசுத்தொல்லை அதிகம் இருப்பதால், பின் வாசல் வழியாகப் புழக்கடை பக்கத்து ஜன்னலை சாத்தச் சென்றான். அந்தப் படுக்கை அறையிலிருந்து குளியலறைக்கும், அதிலிருந்து புழக்கடைக்கும் வரலாம்.

புழக்கடையில் சுவற்றில் சாத்திய ஒரு சைக்கிளும், ஒரு ஜோடி செருப்புகளும் சிதறிக்கிடந்தன. திக்கென்றிருந்தது. இது மதியழகனோடதாச்சே. இங்கே ஏன். படுக்கையறைப்பக்கமிருந்து கண்ணாடி வளையல்கள் சத்தத்தோடு, லேசான சிரிப்பொலியும், சிணுங்கலும் அவன் வீட்டிலிருந்து ஜன்னல் வழி கசிந்து கொண்டிருந்தது.

அருவருப்பு நிறைந்து காறித் துப்ப வேண்டும் போலிருந்தது. எதனால் இப்பிடிச் செய்தாள் அவள். மதியழகன் சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். செகப்புத் தோல்காரன். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நெனைக்கிற பய. சேக்காளியா இருக்கறவன் பண்ற காவாலித்தனத்தை நினைக்க நினைக்க ஆத்திரம் தலைக்கேறியது.
கன்று ஈனாத பசுஞ்சாண உருண்டைகளோடு, அருகம்புல் போட்டுப் பிசைந்து காய வைச்ச எரு உருண்டைகள் கொல்லைத் திண்ணையில் வேட்டி பட்டு சலசலவென சத்தமிட்டன. கொட்டடியில் கட்டி வைத்திருந்த அரசங்குச்சிக் கட்டை எடுத்துக்கிட்டுப் போய் பொடம் போட உட்கார்ந்தான். மனசுல இருக்க அவசம்போல பத்தவெச்சதும் வெய்யில்ல சுக்காக் கெடந்த அரசங்குச்சி பத்திக்கிட்டு எரிஞ்சுது. ஆத்தாமைய அடக்க முடியல. புழக்கடைப் பக்கம் குளியலறைக் கதவோட லேசான கீச்சும், சரசரப்பும் பாம்புச் செவியா இருந்த குமரனுக்கு கேக்காம இல்லை. அதுக்கும் பொறவு குளிச்சிட்டு வந்து ரோகிணி ‘சாப்பிடவா’ன்னு கூப்பிட்டுப் போனா. நெஞ்சு நெறையக் கசந்து கிடந்த இவனுக்கு சாப்பிடப் பிடிக்கல. ‘வேணாம்’ என்றான். ‘இந்நேரத்திலே என்ன எரிச்சிக்கிட்ட இருக்க, வெளிய சாப்பிட்டியா?’ என்றபடி மல்லியைத் தண்ணீரில் நனைத்துத் தலையில் வச்சிக்கிட்டு உள்ளே போனாள்.

எரிந்து சாம்பலான எரு உருண்டைகளைப் பத்துக் குறடால் லாவகமாகக் தள்ளியபடி, கண்ணீரைக் கண்ணுக்குள்ளேயே விழுங்கிக் கொண்டு எழுந்தான். சோறும் குழம்பும் போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிந்தவளை கடந்து போய், வெளித் திண்ணையில் கோபமாகப் படுத்துக் கொண்டான். ஊமைக் கோவம். கங்குகூட இல்லாமல் சாம்பலாய்ப் போன கோவம். இந்தப் பயித்திக்காரி மேல பித்தா இருக்கமே, இவளை முடியப் பிடிச்சு இழுத்து அடிச்சுக் கேக்க முடியலையேன்னு தன் மேலேயே ஏலாமை. என்னத்த இந்தக் கழுதையப் போயித் தொட்டுக்கிட்டு. தலைக்குக் குளிச்சுக் காயவைச்சு மல்லிப் பூ வச்சு வாசமா ராத்திரில மோகினிப் பிசாசு மாதிரி எம்புட்டு அழகா இருப்பா இவ. வேர்வையும் புழுக்கமும் மல்லியை இன்னும் விசிறியடிக்க, அத அவ சடையிலிருந்து பிடுங்கி வீசணும்போல இருந்தது.
அதாச்சு பல மாசம். மதியழகன் வர்றதும் அரசல் புரசலா அக்கம் பக்கம் பேசறதும், அவனுக்கு ஈயத்தைக் காய்ச்சி ஊத்துன மாதிரித்தான் இருந்துச்சு. குருநாதன் மட்டும் இல்லைன்னா குமரன் தூக்குல தொங்கி இருப்பான். சேக்காளின்னா எல்லாருமே கெட்ட பயலுகளா இருக்கானுங்க?

வெளியூரு பஸ் ஸ்டாண்டுல ரெண்டு பேரும் பேசிக்கிட்டே போகும்போது, சைடால வந்த சரக்கு வேன் ஒண்ணு குமரனை அடிச்சிருச்சு. ரத்தம் வழிய வழியப் பக்கத்துல இருந்த ஆஸ்பத்ரிக்கு ஆட்டோவுல தூக்கிப் போட்டுக்கிட்டு ஓடினான் இந்த குருநாதன்தான். அதே டாக்டர்கிட்ட தனக்குப் பிள்ளை இன்னும் பிறக்காத காரணத்தை விசாரித்திருந்தான். அவரும் ரெண்டு மூணு டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு ‘விந்தணு கம்மியா இருக்கு. புள்ள பிறக்கறதுக்குத் தேவையான அளவு விந்தணு இல்ல’ என்று இடியைப் போட்டிருந்தார்.

‘இந்தக் காலத்துல விந்தணு இல்லாட்டா டோனர் கிட்ட வாங்கி கருவோடு செலுத்தி கரு உண்டாக்க வைக்கலாம். நல்ல ஆரோக்கியமான பிள்ளை பிறக்கும். அப்பிடி ஒரு நடைமுறை பிள்ளையே பிறக்காதவங்களுக்கு வரமா இருக்குன்’னு சொன்னார். போய்யா நீயும் உன் பிள்ளையும் என்று கோபத்தை அடக்கியபடி எழுந்து வெளியே வந்தான்.

இந்த சோகத்திலும் கோவத்திலும் வீட்டுக்கு வந்தவனிடம், ரோகிணி முழுகாம இருக்கும் நல்ல சேதியைச் சொன்னாள். திகுதிகுவென புடம்போட்ட எரு முட்டைபோல அவன் உடலெல்லாம் மனசெல்லாம் பற்றி எரிந்தது. தானே சாம்பலாகி அவளையும் சாம்பலாக்கி சுற்றிச் சுழலவேண்டும் என்ற தீரா நெருப்பு அவனிடம் தொற்றிக் கொண்டது. ரெண்டுபேர் மேலயும் மண்ணெண்ணையை ஊத்திப் பத்த வைச்சிக்கிடுவோமா என்றுகூட யோசித்தான்.

பிள்ளைப் பெற வக்கில்லாதவன் பெண்டாட்டிக்கு, இன்னொருத்தன் பிள்ளையா பிள்ளை பிறந்ததும் அவளுக்குத் தெரியாமல் செத்துப் போச்சுன்னு சொல்லி எங்கேயாவது கொண்டு போய் போட்டுவிடலாமா? சுவற்றில் மருந்துக்கடை காலண்டரில் இருந்த கொழு கொழு பாப்பா உஷ் என்று வாயில் விரல் வைத்து அதட்டியது. அதன் மென்மையையும் குழிவிழும் கன்னத்தையும் முன் நெத்தில விழும் முடியையும் பார்த்தான். பக்கத்தில் போய் அதை உண்மைக் குழந்தைபோலத் தொட்டுப் பார்த்தான். என்னவோ பொண்டாட்டியின் வயித்தையும் தொட்டுப் பார்க்கத் தோணியது. தங்கச்சிக்குப் பிறந்த பிஞ்சுக் குழந்தையின் வாசமும் அந்தப் பஞ்சுப் பொதியும் அவன் நெனைப்பில் ஒரு கணம் வந்து போனது.

இவங்க ரெண்டு பேரும் பண்ண துரோகத்துக்கு பொறக்கப் போற பச்சப்புள்ள என்ன பாவம் செஞ்சுது. பொறக்கட்டும். ஆணோ பெண்ணோ அதுக்கு நாந்தான் தகப்பன். அது என் கொழந்தை. அதுக்கு எந்த பாதகமும் பண்ண மாட்டேன். தீர்த்துக் கட்டவோ தீர்ப்பு சொல்லவோ எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? இது என் பிள்ளைன்னு கொஞ்சறதே அவங்க ரெண்டு பேருக்கும் நான் தரப் போற தண்டனைதானே.

மனசும் விரல்களும் நடுங்கிக் கொண்டிருந்தன. மனைவியின் கர்ப்பத்திலிருக்கும் சிசுவுடன் பேசுவதுபோலப் பேசிக் கொண்டிருந்தான். இது கையாலாகாத்தனம் இல்ல. பாவமன்னிப்பு. போறா போ. கொல்ல நினைத்த கைகளை உற்றுப் பார்த்தான். சாம்பல் படிந்து சாந்தமாய் இருந்தன. அவரவர் பாவ மூட்டைகளை அவரவரே சுமந்து அவரவரே எரிக்கட்டும். எரு முட்டைகள் அரசங்குச்சியில் பஸ்பமாகி மணம் வீசிக் கொண்டிருந்தன.
புதிய தரிசனம், ஜூலை 1-15, 2014

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.