மா. சிந்தனா (Chinthana) எழுதிய தென்றிசை மாதெய்வங்கள் (Thendrisai maaDeivangal) - நூல் அறிமுகம் - கருப்பு அன்பரசன் ( Karuppu Anbarasan) https://bookday.in/

தென்றிசை மாதெய்வங்கள் – நூல் அறிமுகம்

தென்றிசை மாதெய்வங்கள் – நூல் அறிமுகம்

காரைக்கால் அம்மையாரில் தொடங்கி பழையனூர் நீலி வழியாக தொன்மங்களுக்குள் நுழைந்து எதிர் கேள்வி கேட்டிருக்கிறார்.!

பழக்கப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கும் சிந்தனைக்குள் சிறு நெருப்பாக விழுந்திருக்கிறது சித்தனாவின் கேள்விகள். மனித மூளைக்குள் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பேய்கள் எல்லாம் ஊரின் ஒதுக்குப்புறத்தில் அலைந்து கொண்டிருப்பதின் மர்மம் என்ன..? பேய்கள் எல்லாம் பெண்களாகவே இருப்பதின் சூட்சுமம் என்ன என்கிற கேள்விகள் நீண்டு கொண்டே இருக்கிறது சிந்தனாவிடம் இருந்து கொலை செய்யப்பட்ட நீலிகளுக்காக.

பெரும் படை நடத்தி
தன் குடிகளை காத்து நின்றவள்..
தன் குடிகளின் உணவுத் தேவைக்காக
காடு மலைகளில், மலை முகடுகளில் பள்ளத்தாக்குகளில் நுழைந்து
உணவை சேகரிதத்து அளித்தவள் பெண்.

“இவள்தான் இவனை பெற்றெடுத்தவர். இவளின் குழந்தைதான் இவன். இவர்களின் தாய் இவர்தான்” என்று தாயின் வழியாக பிள்ளைகள் அடையாளம் காட்டப்பட்ட காலம் அது. எல்லா பொழுதுகளிலும் பெண்களே முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். சமூகத்தின் அனைத்தும் பெண்கள் வழியே அடையாளப் படுத்தப்பட்டது. முன்னணியில் நின்று குடிகளுக்காக தன் உயிர் துறந்தார்கள் பெண் மக்களே ஆவார். அவர்களின் வழியில் நடை பயின்றவர்கள்தான் தாய் வழிச் சமூகத்தில் ஆண்கள்.

பல நூறு ஆண்டு காலங்களுக்குப் பிறகு நிலத்தை பண்படுத்தி உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்கிற நிலைக்குள் சமூகம் நுழைகிறது. காடு மலைகள் எல்லாம் அலைந்து திரிந்த பெண் குறிப்பிட்ட எல்லையில் இருக்கும் நிலத்திற்குள் மட்டும் வைக்கப்படுகிறார். நில எல்லைக்குள் வைக்கப்பட்டவள் பிறகு எல்லைக்குள் வடிவமைக்கப்பட்ட குடிசைக்குள் வைக்கப்படுகிறாள்.. குடிசைக்குள் வைக்கப்பட்டவர் பிறகு அடுப்பை கவனிப்பதற்காக பணிக்கப் படுகிறார்.

அடுப்பின் எல்லைக்குள் வைக்கப்பட்ட தாய்வழி சமூகத்தின் உடல் சதையின் மேல் ஆண்களின் கௌரவம் எழுதி வைக்கப் படுகிறது. குடிகளின் கௌரவம் பிறகு சமூகத்தின் கௌரமாகி.. அது அப்படியே சாதியின் கௌரவமாக தன்னை வடிவு வைத்துக் கொள்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய் மேலத்தெரு கௌரவமாகி கீழத் தெருவில் கொடூரங்களை கொலைகளை குடிசை எரிப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது இன்றளவும். எல்லோருக்கும் எல்லாமும் என்று வாழ்ந்த சமூகம் இப்பொழுது இருப்பவனுக்கு மட்டுமே உயிர் வாழ்வதற்கான சூழலுக்குள் என்னை நிறுத்திக் கொண்டிருக்கிறது.

பலப்பல ஆயிரம் ஆண்டுகளாய் வாய்மொழியாக பாடப்பட்டும் சிற்பங்களாக வடிக்கப்பட்டும் ஓவியங்களாக வரையப்பட்டும் எழுத்துருவில் புடைக்கப்பட்டும் பெண்களின் வீரமும், சூழ்ச்சிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகளும் தியாகமாக்கப் பட்டிருக்கின்றன. ஆண் மக்களின் வீரம், சூழ்ச்சி, வன்மம், வஞ்சகம், வாழும் சமூகத்தின் பெருமை என பலதும் பெண் உடல் மீது மட்டுமே எழுதி வைக்கப்பட்டு இருக்கின்றன சமூகத்தில்.

மா. சிந்தனா (Chinthana) எழுதிய தென்றிசை மாதெய்வங்கள் (Thendrisai  maaDeivangal) - நூல் அறிமுகம் - கருப்பு அன்பரசன் ( Karuppu Anbarasan) https://bookday.in/

பாஞ்சாலியை பொருளாக்கியும்; சேலையை உரித்தும் சீதையை தீக்கிரையாக்கியும், மண்டோதரியின் மூக்கறுத்தும் ஆண்களின் வீரமும் பெருமையும் கௌரவமும் பேசப்பட்டு வந்திருக்கிறது. சமூகக் கலப்பின் துரோகமாக பெண்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இன்று அளவும் நீதியாகவே போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. பெண் பேசும் வார்த்தைகளை உண்மைகளை மறைத்து ஒழிப்பதற்காக ஆண் சமூகமும் தன்னையே பலி கொடுத்து தங்களை நியாயவான்களாக காட்டிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றளவிலும் வெவ்வேறு வடிவங்களிலும் வெவ்வேறு நிலைகளிலும் வெவ்வேறு சூழலிலும் சமூகத்தில் நிதமும் நாளும் கண்டு வருகிறோம்.

இங்கு பெண் என்கிற உடமையை தனதாக்கிக் கொள்வதே ஆண்களின் கௌரவத் திமிராகவும் வளர்த்து வைக்கப்பட்டு இருக்கிறது. “ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள், கொழுப்பெடுத்து அவ ஏன் தனியா போனா ராத்திரி நேரத்துல ? .. உடம்பு மூடுற மாதிரி அல்லவா துணி போட்டுக்கிட்டு போய் இருக்கணும் , அரைகுறையா போனா.. ரோடுல குதிரை மாதிரி “தின்னுதின்னு” நடந்துகிட்டு போனா பாக்குற ஆம்பள சும்மாவா இருப்பான்.”

இப்படி சாதாரணமாக வீட்டில் இருந்து தொடங்கிடும் பேச்சு நீதிமன்றத்தில் நீதி வழங்கும் நீதிபதி வரை அசிங்கமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது மூன்று வயது பெண் குழந்தையும் விட்டு வைக்காத ஆண் திமிரில் நின்று கொண்டு துப்பட்டா போடு என்று. பெண்கள் மீது ஆண்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் கொடூரங்கள் அசிங்கங்கள் அனைத்துமே எழுதப்படாத சமூகத்தின் விதியாக இறுகி கட்டமைத்து வைக்கப்பட்டு இருக்கிறது சமூகத்தின் ஆண் பெண் உள்ளிட்ட அனைவருக்குள்ளும். பெரும்படையை நடத்தி தன் குடிகளை காத்த தாய் வழி சமூகத்தின் தலைவியை கைதியாக்கி கடவுளாக்கி தேவதையாக்கி உடமையாக்கி வைத்திருக்கிறது ஆண் சமூகம்.

புராணங்களிலும் இதிகாசங்களிலும் தியாகிகளாகவும் காதல் பேசும் பெண்களை கொடூர மிகுந்த கருமை நிறம் கொண்ட அரக்கிகளாகவும்; ஆண்களின் உடல் தேவையை தீர்க்கும் வெள்ளைத் தோல் போர்த்தப்பட்ட சதை கொண்ட தேவதைகளாகவும் வரையறுக்கப்பட்ட பெண்கள் தன் நிலையில் இருந்து வலிகளை தினம் தினம் நிகழ்த்தப்பட்ட வரும் வஞ்சம் நிறைந்த வன்மங்களை மெய்யான உண்மைகளை பேசத் தொடங்கினால் சமூகத்தில் உயிர் கொண்டு அலையும் அத்தனை ஆண்களும் கழுவில் ஏற்றப்பட்டு இருக்க வேண்டும். அப்படியான செயலை செய்திருக்கிறார் தன்னுடைய முதல் நாவலில் எழுத்தாளர் சிந்தனா.

ஆண் சிந்தனைக்குள்ளும் மூளைக்குள்ளும் நிரம்பிக் கிடக்கும் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை; காதலின் பிரியத்தின் நேசத்தின் அன்பின் உரிமையின் உறவுகளின் பெயரால் பெண்களுக்கு எதிரான வார்த்தைகளை ஆயுதங்களாக்கி இருதயம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆயுதக் கிடங்கிற்குள் சிறு நெருப்பினை பற்ற வைத்திருக்கிறார் சித்தனா.

தான் வாங்கி அளிக்காத மாம்பழத்தை தனக்குத் தெரியாமல் கடவுளிடம் வேண்டிப் பெற்று அதை தனக்கு அளிப்பது ஒழுக்கம் நிறைந்த மனைவியின் செயலாகாது என்று சொல்லி, பெண் உடல் தேடும் இந்த ஆண் சமூகம் பக்தியை கூட ஒழுக்கக் கேடு எனச் சொல்லி சதை தேடலை நியாயப்படுத்திக் கொண்டது. கடவுளுக்கு சேவகம் செய்தாலும் பக்தி கொண்டாலும் காரைக்கால் அம்மையாரை ஒதுக்கி இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்திட்ட ஆண் மகனுக்கு நியாயம் சேர்த்ததுதான் அயோக்கியத்தனம் மிகுந்த ஆண் சமூகம். முறை தவறி மணம் செய்த தேவேந்திரனை கொண்டாடிய சமூகம் பக்தியால் கிடைக்கப்பெற்ற மாம்பழத்தை காரணமாக்கி காரைக்கால் அம்மையாரை பேய் மகளிராக சித்தரித்த கொடூரம் நிறைந்தது என்பதை பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய கட்டுரை போட்டியில் தான் எழுதி வெளியிட மறுத்த கட்டுரையின் பதிவிலிருந்து தொடங்கி இருக்கிறார் எழுத்தாளர் சிந்தனா தன் அறம் மிக்க கேள்விகளோடு இந்த நாவலில்.

தென்றிசை மாதெய்வங்கள் நாவல் செதுக்கி எடுத்த வார்த்தைகளுக்குள் சிக்கல் இல்லாமல் மிகத் தெளிவோடு வலி மிகுந்த பயணத்தை செய்து முடித்து இருக்கிறது. நாவல் முழுக்க நீலியின் வாக்குமூலத்தின் குரல் பொதுச் சமூகத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறது.

காட்டு மலர்களோடு கொஞ்சி விளையாடியவள்.. தான் வளரும் கிராமம் எங்கிலும் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்தவள்.. வெண்பனியின் மென்மையாக துள்ளி குதித்தோடும் முயல் குட்டிகளை பிடித்து விளையாடியவள்.. வாசல் வந்தழைக்கும் பணிமேக கூட்டங்களுக்கு பாண்டி விளையாட சொல்லிக் கொடுத்தவள்..
காற்றோடு கொஞ்சி விளையாடும் வளர்ந்து ஓங்கி நிற்கும் பச்சை மூங்கிலின் சரசரசப்பில் அஞ்சிப் பறந்த சிட்டுக்குருவியாய் சிணுங்கிய குழந்தை வழக்கமான நாளொன்றில் பெரிய மனுசியாகிறாள். அவளின் சிறகுகள் அனைத்தும் பெரியவர்களின் வார்த்தைகளால் வெட்டி எறியப்படுகிறது. அவளின் சிந்தனைகளுக்கு லகான் பூட்டப்படுகிறது.

பெரிய மனுசியான அதே வருடத்தில் வருடம் முழுவதும் சுற்றி அலையும் வசதி படைத்த வணிகன் ஒருவனுக்கு அவன் முதியவன் என்றாலும் பெற்றோர்களால் மணம் முடித்து வைக்கப்படுகிறாள். செல்லும் இடமெல்லாம் தன் இச்சைக்காக பெண்களைப் பயன்படுத்தியவன் சிறுமி கருவுற்றதும் முதல் குழந்தை பெற்றெடுக்கும் வழக்கத்தை மரபை காரணமாக்கி கருவுற்ற மனைவியை அம்மா வீட்டிலேயே விட்டுவிட்டு தன் படை சூழ ஊர் சுற்ற கிளம்பி விடுகிறான்
வாணிபத்தின் பெயரால்.

கருவுற்றவள் மகனை பெற்றெடுக்கிறாள். மகன் பிறந்தும் வீடு திரும்பாத கணவனைத் தேடி வளர்ந்து வரும் பாலகனை இடுப்பில் சுமந்து தன் தனயனோடு கணவனின் மாளிகை நோக்கி புறப்படுகிறாள். இதை சற்றும் எதிர்பாராத கணவன் ஊரே பார்த்திருக்க தன் தோட்டத்தின் மாளிகையில் குடி வைக்கிறான். வஞ்சகமாய் அவளைத் தோட்டத்தின் கிணற்றில் தள்ளிவிட, அவளோ தப்பிப் பிழைக்கிறாள். தங்கையை கொலை செய்யத் துணிந்த அவளின் கணவனை தனையன் கேள்வி கேட்கிறார். தன்னை கேள்வி கேட்டார் என்கிற ஒற்றை காரணத்திற்காக தன் கண் முன்னாலேயே தனயனை கொலை செய்கிறார் அவளின் கணவன். தனையன் தன் கணவரால்கொல்லப்படுவதைக் கண்டு அச்சம் கொள்கிறாள் தங்கை. வணிக கணவனோ கொலை ஆயுதத்தை தனது கைகளில் ஏந்தி தன்னை மனைவி பின் தொடர்ந்து வருமாறு வஞ்சகமாய் ஏமாற்றி பக்கத்தில் இருக்கும் கிராமத்தின் எல்லையை வேகமாய் ஓடி கண்டடைகிறான். எல்லையை காத்து நிற்பவர்களிடம் தன்னை பேய் ஒன்று குழந்தையை சுமந்து கொண்டு துரத்தி வருவதாகவும் அதனிடமிருந்து தன்னை காப்பாற்றும்படி அவர்களிடம் தஞ்சம் அடைகிறான். அன்று இரவே வேளாண் குடிகளை கொண்ட அந்த கிராமத்தின் பொது மன்றம் ஊர் மேடையில் கூட்டப்படுகிறது. பொது மன்றத்தின் மேடையில் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அந்தப் பெண்ணோ தான் பேய் அல்ல என்றும் தன்னுடைய கணவர் தான் அவர் என்றும் தன்னுடைய இடுப்பில் இருக்கும் குழந்தை தனக்கும் அவருக்கும் பிறந்த வாரிசு என்றும் தன் கணவனால் தனக்கு நடைபெற்ற உண்மைகள் அனைத்தையும் கூறுகிறாள். இப்பொழுது தீர்ப்பு சொல்ல முடியாது கணவன் மனைவி என்பதால் இருவரும் இந்த ஒரு நாள் ராத்திரி அந்த குடிசையில் தங்கி பேசி தீர்த்துக் கொள்ளுங்கள், காலையில் பேசிக் கொள்வோம் என்று குடிசைக்கு பாதுகாவலர்களை நியமித்து அன்றைய இரவு பொழுது பொது மேடை கூட்டத்தை முடித்து வைக்கிறார்கள்.

மா. சிந்தனா (Chinthana) எழுதிய தென்றிசை மாதெய்வங்கள் (Thendrisai  maaDeivangal) - நூல் அறிமுகம் - கருப்பு அன்பரசன் ( Karuppu Anbarasan) https://bookday.in/

அந்த இரவு அந்த குடிசைக்குள் என்ன நடந்தது.. ? கணவனை தேடி வந்த பெண்ணுக்கு என்னவாயிற்று..? அவளின் குழந்தையை கொடுவாள் கொண்டு கொலை செய்தது யார்.. முற்பிறவியில் பிராமணன் ஆகவும் இப்பிறவியில் வணிகனாகவும் இருப்பதாகவும் சொல்லி எப்பிறப்பிலும் கொலை பாதகச் செல்களுக்கு அஞ்சாத அந்த ஆணுக்கு என்ன ஆயிற்று..,? மறுநாள் காலை தீர்ப்பைச் சொல்ல வந்த அந்த வேளாண்குடி கிராமமே தங்களை தீக்கிரையாக்கி மாய்த்துக் கொண்டதற்கான காரணம்தான் என்ன? நீலி ஏன் பேய் மகளானார்? அந்த பேய் மகள் என்னவானார்? பேய் மகள் என்று எவர்களால் அழைக்கப்பட்டார்?
இப்படி நிறைய நிறைய கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்கிறது தொன்ம கதைகளிலும்.. பாடல்களிலும்.. தெய்வங்களிலும் உயிர் வாழ்ந்த பெண்கள் எப்படி சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள் அதற்குள்ளும் ஆண் சமூகம் எந்த மாதிரியான தில்லாலங்கடி வேலைகளை செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் தொல்லியல் ஆய்வாளர் எழுத்தாளர் சிந்தனா தன்னுடைய முதல் நாவலில்.

மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராக தமிழ் அறிந்த வாசகர்களுக்கு அறிமுகமாகி இருக்கும் சிந்தனா இந்த நூலின் வழியாக மிகச்சிறந்த நாவலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார். கவித்துவம் மிகுந்த தமிழ் வார்த்தைகளை நாவல் முழுவதும் கொண்டு வந்திருக்கிறார்.

நாவலுக்குள் அவரின் விவரணைகள் வாசிப்பவரின் மனசுக்குள் கொட்டும் அருவியின் தூவானத்தை தடவச் செய்கிறது.. கொடுமைகளையும் கொடூரங்களையும் சொல்லிடும் பொழுது வார்த்தைகள் வலிகொண்டு ரத்தத்தை சூடேறச் செய்கிறது. வாழ்த்துக்கள் சிந்தனா. தொடர்ந்து உங்களின் படைப்புகளை கொண்டு வாருங்கள்.

சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்கள் சிந்தன் புக்ஸ் நிறுவனம்.

அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் “தென்றிசை மாதெய்வங்கள்”

நூலின் தகவல்கள் : 

நூல் : தென்றிசை மாதெய்வங்கள்
(தூய பிறப்புகளின் தூய்மையற்ற கதை)
நீலியின் மரண வாக்குமூலமாக ஒரு நாவல்.
ஆசிரியர் : மா. சிந்தனா
வெளியீடு : சிந்தன் புக்ஸ் வெளியீடு
பக்கங்கள் :  100
விலை : ரூபாய் 120.

நூல் அறிமுகம் எழுதியவர் : 

மா. சிந்தனா (Chinthana) எழுதிய தென்றிசை மாதெய்வங்கள் (Thendrisai  maaDeivangal) - நூல் அறிமுகம் - கருப்பு அன்பரசன் ( Karuppu Anbarasan) https://bookday.in/

கருப்பு அன்பரசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *