தேநீரில் மிதக்கும் கணிதம் (Theneeril Mithakkum Kanitham) – நூல் அறிமுகம்
தேநீரில் என்ன இருக்கும்? பால் இருக்கும். சர்க்கரை இருக்கும். டீ தூள் இருக்கும்.கொஞ்சம் சூடும் இருக்கும்.ஆனால் கணிதம் இருக்குமா?
இதென்ன.? விந்தையான தலைப்போடு ஒரு புத்தகம் உள்ளதே என்று விறுவிறுவென வாசிக்க தொடங்கி விட்டேன்.
மொத்தம் 30 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்குள் அடங்கி விடுகிறது.ஒவ்வொரு பக்கத்திலும் விளக்கப்படங்கள்.
உலகில் ஒவ்வொன்றிலும் கணிதம் ஒளிந்துள்ளது. கணிதத்தை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப ஒவ்வொரு செயலையும் செய்தால் நிச்சயம் மேன்மை அடைவது உறுதி. இருக்கும் நிலைமையும் உணர வைக்கவும் அடுத்த நிலைக்கு நகர்த்தவும் கணிதம் ஒன்றுதான் வழிகாட்டுதல் தரும் என முன்னுரையில் விழியன் அவர்கள் கூறுகிறார்.
கணிதத்தை குழந்தைகளுக்கு இனிமையாக கொடுக்கவும் நிஜ வாழ்வில் எங்கெல்லாம் கணிதம் இருக்கின்றது என சொல்லவும் பயன்படுத்தும் ஒரு உத்தி மட்டுமே தேநீரில் கணிதம் என்கிற இந்த புத்தகம். தேநீரைப் போல கணிதத்தை குழந்தைகளுக்கு சுவையாக தர வேண்டும் என்பதற்காக தேநீரை பயன்படுத்திக் கொண்டதாக முன்னுரையில் கூறியிருக்கிறார் நூலாசிரியர்
பால் கடையில் வாங்குவதில் இருந்து தொடங்குகிறது கணிதம். எந்த அளவிற்கு பால் வாங்கவேண்டும்? வீட்டில் யார் யாருக்கு பால் பிடிக்கும் டீ பிடிக்கும் காபி பிடிக்கும் என்றெல்லாம் ஒரு கணக்கு வைத்து பால் வாங்கப்படுகிறது. ஒரு லிட்டரா, அரை லிட்டரா, கால் லிட்டரா அல்லது 100 மில்லியா அதுவே ஒரு கணித அளவாக மாறிவிடுகிறது. பிறகு வீட்டிற்குள் வந்தவுடன் எரிவாயு எவ்வளவு செலவாகிறது என்று பார்க்க வேண்டும். அதுவும் ஒரு கணிதம். பிறகு பாலை ஊற்றி கொதிக்க வைத்து சர்க்கரையை போட வேண்டுமே. அது எந்த அளவிற்கு போட வேண்டும்.!! தூக்கலாக போட வேண்டுமா!! குறைவாக போட வேண்டுமா!! எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை இல்லாமல் போட வேண்டும். குழந்தைகளுக்கு சற்று தூக்கலான சர்க்கரை போட வேண்டும். அதன் பிறகு தண்ணீரின் அளவையும் இப்படித்தான் நான் பார்க்க வேண்டும். டீ தூள் போடுவதிலும் ஒரு கணக்கு இருக்கிறது.
அடுத்த கட்டுரைகளில் தேநீரின் வரலாற்றைப் பற்றியும் எங்கு உற்பத்தியாகிறது எப்படி டீத்தூள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது என்பதை பற்றியும் அவற்றில் எல்லாம் கணக்கு எப்படி பயன்படுகிறது என்பதை பற்றியும் மிக அழகுற கணித துணையோடு சொல்லப்பட்டிருக்கிறது.
தேயிலை பாக்கெட்டுகளின் பின்புறம் என்னவெல்லாம் குறிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் மிக விளக்கமாக கூறியிருக்கிறார்கள்.
டீத்தூள் பாக்கெட்டின் பின்புறத்தில் இருக்கும் எண்கள் என்னென்ன என்பது குறித்தான சில விஷயங்களை பார்ப்போம். தொகுப்பு எண்,(pocket number)தொகுப்பு தேதி, (packing date) காலாவதி தேதி,( expiring date) இவையெல்லாம் அந்த பாக்கெட்டுகளுக்கு பின்னாள் குறிக்கப்பட்டிருக்கும் என்றும் காலாவதி தேதியை பரிசிலித்த பின்னரே அந்த பொருள்களை வாங்க வேண்டும் என்றும் நாம் வீட்டில் டீ தூளை எத்தனை நாளைக்கு பயன்படுத்துவோம் என்று கணக்கிட்டு தான் வாங்க வேண்டும் என்றும் கூறுகிறார் நூல் ஆசிரியர். அதை தவிர பார்க்கோட் ஸ்கேனர் மூலம் அதனுடைய விலை மற்றும் காலாவதி செய்தியை கண்டுபிடிக்க மிகவும் பயன்பாடாக இருக்கும் என்றும் கூறுகிறார்.
தேநீரில் பயன்படுத்துகிற தேயிலையை உற்பத்தி செய்ய மறைமுகமாக எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை தேநீரில் தண்ணீர் கால் தடம் என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். 3 கிராம் தேயிலைக்கு 27 லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்றும் கால் லிட்டர் காபித்தூளுக்கு 130 லிட்டர் தண்ணீர் செலவாகிது என்றும் ஒரு கணக்கிட்டு தருகிறார். அதே போல ஒவ்வொரு உணவுப் பொருளும் உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்பதை ஒரு அட்டவணையும் இந்த கட்டுரையில் கொடுத்திருக்கிறார்.
அடுத்ததாக இன்னொரு கட்டுரையில் சர்க்கரையை பற்றி கூறப்பட்டுள்ளது. சர்க்கரை படிக வடிவை கொண்டிருக்கிறது. ஆனால் நாம் இதை உற்று நோக்குவதே இல்லை அதனுடைய வடிவங்கள் நான்கு வடிவமாக இருக்கிறது என்றும்
கனசதுர வடிவ சர்க்கரை கட்டி தேநீரில் போட்டதும் உடனே கரைந்து விடும் கெட்டி சர்க்கரை உடனே கரையாது என்றும் கூறப்பட்டுள்ளது
மேலும் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் தேநீர் பற்றிய ஆச்சரியப்படக் கூடிய சில தகவல்களை கெட்டி எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேநீர் கோப்பையின் வடிவங்கள், தேநீர் விளையாட்டு, கணிதமா மனிதமா, லாப நஷ்ட கணக்கு , விளக்க படம் மற்றும் தரவுகள் என பல கட்டுரைகளில் தேநீர் பற்றிய அரிய தகவல்களை எல்லாம் ருசியோட வாசித்துக் கொண்டே செல்லலாம்.
ஒவ்வொரு பக்கத்திலும் கணிதத்தின் பல்வேறு தலைப்புகளைக் கொண்டு நிறைவான ஒரு கணித நூலாக உள்ளது. கணிதம் என்றாலே அது கசப்பு என்ற சிந்தனையை மாற்றி கணிதம் இனிக்கும் என்ற புது மொழியை உருவாக்குகிறது. அனுபவத்தோடு கற்கும் கல்வி என்றும் மனத்தில் நிலைத்திருக்கும்.இந்த நூல் கணிதத்தை அனுபவித்து கற்க மாணவர்களின் கைகளில் மட்டுமல்ல ஆசிரியர்களின் கைகளிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் இருக்க வேண்டிய ஒரு நூலாக கருத வேண்டும்.
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர்: தேநீரில் மிதக்கும் கணிதம்
நூல் ஆசிரியர்: விழியன் &சரண்யா
வகைமை : கணித கட்டுரைகள் (குழந்தைகள்)
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை :110/
பக்கங்கள் : 104
வெளியான ஆண்டு : டிசம்பர் 2024
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/theneeril-mithakkum-kanitham/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சகுவரதன்
குடியாத்தம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.