தோழர் சீருடையான் அவர்கள் வா என்று அழைத்தால், சிறுகதை தானாக அவரிடம் வந்து வந்து ஒட்டிக் கொள்கிறது. விரல்களோடு இழைந்து விளையாடுகிறது. இன்னும் இன்னும் என்னை எழுதிப்போ என்று அவரிடம் சொந்தம் கொண்டாடுகிறது .
அப்படியாகத்தான் டிஸ்கவரி பப்ளிகேஷன் மூலமாக பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக ‘’அங்கிட்டும் இங்கிட்டும் ‘’ என்ற சிறுகதைப் புத்தகம் தற்போது வெளிவந்துள்ளது
தோழர் தமிழ்ச்செல்வன் அதற்கு அற்புதமான ஒரு முன்னுரையை அளித்துள்ளார்.
‘’அட்டலைகள் ‘’ என்ற முதல் சிறுகதையிலேயே இந்தக் கலை நேர்த்தியை நாம் காண முடியும். ‘ நாற்று நடவு ‘’ என்ற இரசாயனம் புழங்காத பழக்கடையில் ஆரம்பிக்கும் இந்தச் சிறுகதை அப்படியே அகமும் புறமுமாக சமமாகப் பயணித்து , சமுகத்தில் வாழும் மனிதர்களின் மனதில் எழும் ஒரு முக்கியமாக கேள்விக்கு பதில் அளிப்பதாக முடிகிறது .
ஆ மாதவன் வீதியைப் பார்த்து அதையே கதைகளாகச் செய்தது போல் ,தோழர் சீருடையான் அவர்களும் அந்த கடை வீதியைப் பார்த்து கதைகளைப் படைக்கிறார்.
ஆ. மாதவனைப் போலவே இவரையும் ‘’ கடைத் தெருவின் கதை சொல்லி ‘’ என்று நாம் அழைக்கலாம்.
சிறு வியாபாரிகளையும் , பழக்கடைகளையும் ஒவ்வொரு படைப்பிலும் இவர் பதிவு செய்கிறார் என்பது முற்றிலும் உண்மை .
காலையில் ஆரம்பித்ததில் இருந்து கடைக்கு இனமாக பெறுவதற்கு குறி சொல்கிறவர்களும் பிச்சை எடுப்பவர்களும் வந்த வண்ணமே உள்ளனர் அந்த நாளின் முடிவில் கணக்குப் பார்க்கும்போது ஒரு நாளில் நூறு ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இவருக்கு இது அதிகம் தான். ஆனால் வாழ வழி இல்லாத பிச்சைக்காரர்களும் நாளை புரட்சியின் துணைவர்களே ஆவார்கள். ஈந்து அவர்களை வாழ வைக்க வேண்டியது நம் கடமை . என்ற பதிலுடன் , எழுத்தாளனாக இருப்பதின் கடமை இதுவென்று நமக்கு உணர்த்துகிறார் .
‘அக்கருவா ‘’ என்ற கதை கிராமப்புறங்களில் இன்றும் நிலவும் ஆணவ படுகொலை அவலங்களை தோலுரித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. கிராமத்தில் உள்ள தன் தந்தையின் சாதிய மனப்போக்கிற்கு பயந்து தன் காதலியோடு ஊரை விட்டு ஓடிப் போய் இருபது வருடங்களுக்குப் பிறகு திரும்பி வரும் கதை சொல்லியின் கதை இது.
‘’என்ன சொல்கிறாய் ‘ என்ற கதை பார்வையற்றவர்களின் உலகத்தின் ஊடாக வெளிச்சம் பாய்ச்சி பயணிக்கும் ஒரு அற்புதமான சிறுகதையாகும் ஒரு தொலைபேசி உரையாடல் வழியாக கவிதாவிற்கும் முகுந்தனுக்கும் இடையில் ஏற்பட்ட காதல் ஒரு பூ போல அல்லது வெண்ணிறமாக ஒளி போல நம் கண் முன்னால் மலர்ந்து விரிந்து செல்கிறது .. பார்வையற்றவர்களின் உலகத்துக்குள்ளும் குருரங்கள் நடமாடுகின்றன. பாலியல் இச்சைகளினால் தவறுகள் அரங்கேறுகின்றன .ஆனாலும் மனதில் போற்றி வைத்த காதல் தூய பசும்பாலைப் போல கடைசி வரையிலும் கெட்டுப் போகாமலே தான் இருக்கிறது .
தோழரின் கதைகளை வாசிக்கும் போது இந்த அளவிற்கு யாரும் பார்வையற்றவர்களின் அக உலகத்தை உலகத்தை பேசி இருப்பார்களா என்ற சந்தேகம் நமக்கு வருவது தவிர்க்க முடியாதது. அந்த காதலர்கள் கடைசியில் ஒன்று கூடும்போது நமக்கும் நம்மை அறியாமலே ஆனந்தம் வந்து பெற்றுக் கொள்கிறேன் தொற்றிக் கொள்கிறது
‘’ஓய்வின் வலி ‘’கொரோனா காலத்தில் உழைப்பு மக்கள் உழைக்கும் மக்கள் அனுபவித்த சொல்லனா துன்பங்களை அருமையாக விவரிக்கிறது
பழக்கடையில் கூலி வேலை செய்யும் கடைக்கார பையன்கள் தெருத்தெருவாக தள்ளு வண்டியில் வைத்து வியாபாரம் செய்து பார்க்கின்றனர் பிறகு அதற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது அதற்குப் பிறகு அவர்களின் குடும்பத்தின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை .
‘’முதல் அடி ‘’ என்ற கதை பார்வையற்ற மாணவனான ஜெயபால் வாழ்க்கையோடு அவமானங்களோடும் போராடி படிப்பை மேற்கொண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பையும் முடித்து தான் படித்த பள்ளியிலேயே ஒரு ஆசிரியராக வேலைக்கு சேர வருகிறான் என்பதாக முடிகிறது.
இதில் குறிப்பாக சொல்ல வேண்டியது பார்வையற்றவர்களின் அக உலகமும் ,மன உறுதியும் , எடுத்த குறிக்கோளை முடிப்பதில் இருக்கும் தெளிவும் தான். அவர்களின் உலகத்திற்குள் நாம் நுழைந்து உலாவி விட்டு வருவது போல் அற்புத அனுபவம் வாய்ந்ததாக இருக்கிறது அனைவரும் படிக்க வேண்டிய கதை இது
‘’காணாமல் போன உயிர் ‘’ என்ற கதை தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. அதுபோலவே இன்றைய இளைய தலைமுறை மாணவர்கள் தங்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்படும் போது அதை எப்படி எதிர்த்து போராடி வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் தெளிவாகவே பேசியிருக்கிறது.
‘ மேலாவுல இருந்து வந்த பணம் ‘’ என்ற சிறுகதை எவ்வாறு தேர்தல் ஜனநாயகம் நாட்டில் பணநாயகம் ஆக்கப்பட்டது என்பதை கேலியும் கிண்டலுயமாக சித்தரிக்கிறது ‘’ .
முத்துப் பரல் ‘’ என்ற சிறுகதை ஒரு அற்புதமான அந்தரங்கத்தை விவரித்துச் சொல்லும் அருமையான சிறுகதை ஆகும் . சந்தானம் என்ற பெண் குழந்தைக்காக வேண்டி எத்தனை விரதங்களும் தவம் இருக்க தயாராக இருக்கிறாள். ஆனால் எதுவுமே பயனற்றுப் போக கடைசியில் அவளது கணவன் வேறொரு கருமுட்டையை எடுத்து அதை தன்னுடைய உயிரணுவோடு சேர்த்து அவள் வயிற்றில் ஏற்றி விடலாம் என்று சொல்லும்போது ஆணின் ஆணவம் அவளுக்கு முதல்முறையாக உறைக்கிறது . அவனை எட்டி உதைத்து விட்டு வாசலில் போய் தேம்பி அழுகிறாள்.
இளம் பெண்களை வகைப்படுத்தி வேதனைப்படுத்தி முட்டையை எடுத்து அதன் ஜீவத் துடிப்பை ரசாயன கலவையில் முக்கி எடுத்து இதை நினைப்பதற்கே அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது விடை தேட முடியாத இந்த கேள்வியை வாழ்க்கை பூராவும் நெஞ்சில் சுமந்தபடி அலைகிறாள் சந்தனம் அனைவரும் படிக்க வேண்டிய கதை இது
‘’ பூக்குழி ‘’என்ற கதை கிராமங்களில் இன்றும் நிலவும் மூடநம்பிக்கைகளையும் அடிப்படையில் அமைந்துள்ளது மனிதர்கள் பூக்குழி இறங்குவது போக தான் வளர்க்கும் குதிரையையும் அபத்தமாக பூக்குழி இறங்க வைக்கிறான் மனிதன்.
‘’குடமுழுக்கு ‘’என்ற கதை மணிப்பயலாக இருந்து பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல் திரிந்து ,சூழ்நிலையின் காரணமாக பேராசிரியராக உயர்ந்த மணிமாறன் என்பவரை பற்றிய அழகான சித்தரிப்பு . காலத்திற்கு ஏற்ப மீடியாக்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது
‘’மந்தாரைப் பூத்த அந்தி ‘’என்ற சிறுகதை ஒரு இளம் பெண் பார்வையில் விரிகிறது. விற்பனை பிரதிநிதியான தன் கணவனின் வரவை எதிர்நோக்கி இருக்கும் ஒரு மனைவியின் மன உலகத்தை அற்புதமாக படம் பிடித்திருக்கிறது .
‘’ மின்னல் கயிறு ‘’ காதலித்தவள் தன் கணவனோடு அவன் வேலை பார்க்கும் ஜூஸ் கடைக்கு வந்து ஜூஸ் அருந்துகிறாள். காதலனே ஜூஸ் போடுபவனாக இருந்து அவர்களுக்கு பரிமாறுகிறான் .காதல் கைகூடாமல் போனால் தற்கொலைக்கு முயற்சி செய்யாமல் , எதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற முறையில் அருமையாக இந்த கதையைப் படைத்திருக்கிறார் .
‘’செந்தட்டிக்காடு ‘’ என்ற சிறுகதையில் பிறன் மனை நோக்கும் ஆண்மை பிறழ்ந்த மனிதர்களின் அவலத்தை மிக உக்கிரகமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
‘’ இரண்டாகி மூன்றாகி ‘’ என்ற கதை பெண்ணின் அக உலகத்தைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது . கொடூரமான கணவனின் வன்முறையால் அவள் கொல்லப்படுகிறாள். அப்பொழுது தான் அவளுக்கு விடுதலை கிடைக்கிறது .இந்த ஊரும் உலகமும் சமூகமும் பெண்களுக்கு இன்னும் உறுதுணையாக இல்லை . வேடிக்கை பார்ப்பதாகத் தான் இருக்கிறது என்ற அவலத்தை மிக மிக அற்புதமாக இந்தச் சிறுகதையில் படம் பிடித்து காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
‘’நையாண்டி மேளம் ‘’ என்ற கடைசிச் சிறுகதை உண்மையில் இந்த சமூகத்தில் நிலவும் சாதியையும் சாதியத் தலைவர்களையும் தான் நையாண்டி செய்கிறது .
பெற்றோர்களே காதலை ஏற்றுக் கொண்ட பிறகும் சாதிய மனநிலை கொண்ட சாதித்தலைவர்கள் காதல் திருமணங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அதனால் தான் சாதியக் கிருமி இந்தச் சமூகத்தில் இன்னும் அழியாமல் இருக்கிறது .
மொத்தமாகப் பார்த்தால் தோழர்,சீருடையான் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட செய்தியையும் , சமூக அவலத்தையும் , பற்றி அழுத்தமாகவும் திருத்தமாகவும் தெளிவாகவும் பதிவு செய்திருக்கிறது என்று கூறலாம்.
தோழர் சீருடையான் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்
நூலின் தகவல்கள்:-
நூல் : “அங்கிட்டும் இங்கிட்டும்”
நூலாசிரியர் : தேனி சீருடையான்
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்
விலை: ரூ.200
நூலறிமுகம் எழுதியவர்:-
தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.