அங்குட்டும் இங்குட்டும் சிறுகதைத் தொகுப்பு எழுத்தாளரின் பார்வையற்ற வாழ்க்கை, வணிகராகச் செயல்பட்ட வாழ்க்கை ஆகிய காலங்களில் தான் பெற்ற அனுபவங்களிலின் வாயிலாக மனித வாழ்வியலை உள்ளார்ந்து பார்த்து அவற்றில் குறிப்பிடத்தக்கவற்றைப் பதிவு செய்யும் விதமாக ஒரு புறத்திலும் பொதுவான சாதியக் கட்டமைப்பு, தனிமனித உளவியல் சிக்கல்கள், சமூகத்தில் புரையோடிப் போய் இருக்கும் மூடநம்பிக்கைகள் போன்றவை சார்ந்த பின்னணிகளை மறுபுறத்திலும் வாசகனிடம் கடத்தும் விதமாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
தேனி சீருடையான் (இயற்பெயர்:எஸ். கருப்பையா) என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட 15 சிறுகதைகளின் தொகுப்பே அங்குட்டும் இங்குட்டும் என்ற புத்தகம் ஆகும். எழுத்தாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினரும் ஆவார். இவர் 7 வயதில் பார்வையை இழந்து 20 வயதில் மீண்டும் பார்வையைப் பெற்றுள்ளார். அங்குட்டும் இங்குட்டும் நூலை டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் பதிப்பித்துள்ளது. இந்த நூலிற்கு எழுத்தாளர் சா. தமிழ்செல்வன் முன்னுரை எழுதியுள்ளார்.
அட்டலைகள்
இந்நூலின் முதல் சிறுகதையான அட்டலைகளில் பல பேர் மனதிற்குள் போராடிக் கொண்டிருக்கும் கேள்வியான பிச்சை எடுத்தலைக் குறித்த ஓர் பார்வையை தனது போக்கில் பதிவு செய்துள்ளார். தனது கடைக்கு தானம் கேட்டு வரும் பலவிதமானோரில் அவரவரின் வாழ்வியல் சூழல்களைப் புரிந்து கொண்டு அதற்கான நியாயப்படுத்துதலோடு அவர்களின் தட்டில் விழும் தொகை தீர்மானிக்கப்படுகிறது. இக்கதையில் தனக்கு எதிரான மனநிலையில் உள்ள அய்யப்பன் என்பவருடைய உரையாடலின் மூலம் சமூகத்தில் நாம் கடந்து செல்லும் பல அடிப்படைவாதிகளின் சிந்தனை ஓட்டத்தை நம் புரிதலுக்கே விட்டு விடுகிறார்.
ஆக்கருவா
இக்கதை சாதிய வன்மத்தின் அடிப்படையிலான அதிலும் தன் சுய சாதியின் ஆணவமான பின்னணியில் ஒரு மனிதன் எவ்வளவு கொடூரமாகச் செயல்படுகிறான் என்பதையும் இன்று சமூகத்தில் நிகழும் ஆணவக் கொலைகளைப் போன்ற அடிப்படை நியாயமற்ற செயல்களைப் பற்றிய புரிதலை வாசகனுக்கு ஏற்படுத்த முனைகிறார். அந்தக் கொலை குறித்த விவரிப்பு காட்சியாய் கண்முன் விரியும் போது மனம் நடுங்குகிறது.
முதிர் கன்னியான பூரணியக்காவின் தவிப்பைப் பின்வருமாறு எடுத்துக்கூறுகிறார். “நிர்வாணங்களின் கூடாரமாய் பிரபஞ்சம் காட்சிதந்த போது தனது நிர்வாணம் விலக்கமாகி நிற்பதைப் பூரணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பூபாளத்திற்குள் முகாரி நுழைந்து அலைக்கழித்தது.” என்று விவரித்துச் செல்கிறார்.
என்ன சொல்கிறாய்? பார்வையற்ற இருவரிடையே ஒருவருக்கொருவர் ஆதரவு தேடும் பற்றுக்கொடியாய் முளைத்த காதல், காலத்தின் ஓட்டத்தில் நிராசையாகிப் போய் வாழ்வு இருவரையும் அலைக்கழித்து சீரழித்த பின்னர் எழும் உரையாடலின் வழியாக மீண்டெழும் நினைவுகளின் வாயிலாக இக்கதையை விவரிக்கிறார் கதையின் ஆசிரியர்.
கவிதாவின் வார்த்தைகளாக முகுந்திடம் பேசுவதாகப் பொங்கிப் பிரவாகிக்கும் இந்த உரையாடலின் ஒரு பகுதியை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். “ஆத்மாவின் அந்தரங்க வெளியில் அலைந்து அலைந்து உன்னைத் தேடினேன். பூமியின் அதல பாதாளத்திலும் வான்முகட்டின் அண்ட வெளியிலும் இன்று வரைத் தேடியபடி இருக்கிறேன். என் உணர்வுக்கு நீ அகப்படவில்லை” என்பதாக ந்த விவரிப்பு செல்கிறது,
ஓய்வின் வலி
இச்சிறுகதையில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு வணிகராய் ஓய்வின் வலியால் படுகின்ற பாட்டினை விவரித்துச் செல்கிறது கதை. கொரோனா காலம் எவ்வாறு பெண்களை அடுப்படியில் வழக்கத்தை விட கூடுதல் நேரம் செலவழிக்க வைத்தது? என்ற பார்வையை வைத்த அவர் அந்தப் பாத்திரப் படைப்பு தனக்கு ஓய்வாய் கிடைத்த நேரத்தை என் தன் மனைவியின் வேலைகளைப் பகிர்ந்து கொள்ள மனமில்லாத சமூகத்தின் இயல்பாய் ஆணாதிக்க மனோபாவத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.
முதல் அடி
ஜெயபால் என்ற பார்வையற்ற மாணவன் தான் படித்த பள்ளிக்கே ஆசிரியராய் பணியில் சேர வரும் கதாநாயகனின் பார்வையில் கதை சொல்லப்பட்டுள்ளது.
”பிறவிக்குருடர்களுக்கு விசும்புவெளியின் ஓசையும் ஒலியும் முதல் வழிகாட்டி. யாருக்கும் புலனாகாத காற்றின் பேரோசை அவர்களின் காதுமடலுக்குப் புரிகிறது. சதாசர்வ காலமும் காற்றின் அலையடிப்பை நுகர்ந்தபடி வாழ்கின்றன. காற்று மட்டுமல்ல; மனிதர்களும் மிருகங்களும் ஒலியை உமிழ்ந்தபடி இயங்குகிறார்கள்.
நடையின் போது எதிரிலிருந்து காற்றின் சத்தம் வெட்டுப்பட்டால் அங்கே ஏதோ தடுக்கிறது என்று அர்த்தம். நின்று விலகுதல் தடையைக் கடக்கும் உத்தி” இவ்வாறாகச் செல்லும் விவரிப்பும் நிறங்கள் பற்றி அரைப்பார்வை கொண்டவர்கள், பார்வையோடு வாழ்ந்து பின் பறிபோனவர்கள், முற்றிலும் பார்வை இழந்தோர் ஆகியோரிடம் நடைபெறும் உரையாடல் ”வேறு எந்த எழுத்தாளனாலும் எழுத முடியாத அனுபவங்கள்” என்று முன்னுரையில் தமிழ்செல்வன் அவர்கள் கூறியதை நினைவுபடுத்துகிறது.
காணாமல் போன உயிர்
தமிழ்ச்செல்வி என்ற பாத்திரப்படைப்பு ஒரு பதின்பருவத்து மாணவியாய் இன்றைய சமூகத்தில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராய் முழுமையாய் விழிப்புணர்வு பெற்ற ஒரு பெண்ணாய் சபலம் பிடித்த செக்யூரிட்டி முதல் தமிழ் ஆசிரியர் வரை துணிந்து நின்று எதிர்க்கும் பெண்ணாய் வளைய வருகிறாள்.
மேலாவுல இருந்து வந்த பணம்
இன்றைய சமகால அரசியலில் ஜனநாயகம் பணநாயகமாய் மாறியுள்ளதையும் இன்னும் தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக நிற்கும் சித்தாந்தவாதிகளையும், முற்போக்குக் கொள்கையைத் தன் வாழ்வியலாகக் கொண்ட இயக்கவாதிகள் தங்கள் வாழ்க்கையையே தத்துவத்தின் செயல் வடிவமாக மாற்றிக் கொள்வதையும் பழனிமுத்து, ஜாம்ஷெட்பூர் ஆகிய இரு பாத்திரப்படைப்புகள் வழியாக விவரித்துவிட்டு இதையெல்லாம் புரிந்து கொள்ள இயலாதவாறு மணிமாலாக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதையும் விவரிக்கிறார்.
முத்துப்பரல்
இக்கதையில் பலராமனும் சந்தானமும் பிள்ளையில்லாத் தம்பதியினர். தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்பதற்காக ஏங்கிக்கிடக்கும் சந்தானத்தின் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பிள்ளைப்பேறு இல்லாத ஒரு பெண்ணைப் பார்த்து சமூகம் கேட்கும் கேள்விகளும் அவை சொல்லும் ஆலோசனைகளும் பரிகாரங்களும் ஒவ்வொன்றாய் செய்து பார்க்கிறாள்.
இறுதியாக கருத்தரிப்பு மையத்திற்குச் செல்லும் யோசனை பற்றிப் பேசும் போது வேறொரு ஆணின் உயிரணுவை எடுத்து தன் மனைவியின் கருமுட்டையில் வைப்பதை ஒத்துக்கொள்ளாத பலராமன் வேறொரு பெண்ணின் கருமுட்டையுடன் தனது உயிரணுவை வைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து தனது சுயரூபத்தை வெளிப்படுத்துவதோடு கதை முடிகிறது.
பூக்குழி
பூக்குழி கதையில் பூக்குழி உருவாக்குவது பற்றிய ஒரு பெரிய விவரிப்பு அழகாக எழுதப்பட்டுள்ளது. குதிரைக்காரன் ஒருவன் தனது குதிரையையும் பூக்குழியில் இறக்கி தானும் இறங்குவதாக வைத்த நேத்திக்கடம் தான் கதை. நெருப்புப் பட்ட குதிரை சில நாள்களில் இறந்து போனதாயும் அடுத்த ஆண்டிலும் பூக்குழி இறங்கக் காப்புக்கட்டியதாயும் முடிகிறது கதை. இந்தக் கதையில் பின்வரும் வாக்கியங்கள் தான் உண்மையான உண்மையாய் அமைகிறது.
“அனைவரும் குழி இறங்கி முடித்தார்கள். யாருக்கும் பூ மிதித்த உணர்வு தோன்றவில்லை. வாழ்க்கை வெக்கை தீக்குண்ட வெக்கையை விட அதிகம் என்பதால் குண்டத்தில் இறங்கி தங்கள் துன்ப துயரங்களைப் போக்க மன்றாடினார்கள்.”
விளிம்பு நிலை மக்களுக்கு கடவுள் பக்தி என்பது தங்கள் வாழ்க்கையின் மீதான நீட்டிப்பைச் செய்து கொள்வதற்கான ஒரு பற்றுக்கோலாக அமைகிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.
குடமுழுக்கு
குடமுழுக்கு என்று ஏன் பெயர் வைத்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் இருந்த ஒருவன் பிற்காலத்தில் எவ்வாறு பல பேரை படிக்க வைக்கும் கல்விப்புரவலாய் மாறினான் என்ற மாறுதலை விவரிக்கிறது. அத்தோடு சேர்ந்தே காலத்தின் கட்டாயமாக தொலைக்காட்சி, திறன்பேசி போன்றவை ஒரு வீட்டிற்கு அத்தியாவசியமான பொருள்களாய் மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக ஊடகங்களும் எவ்வாறு இன்று ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற விடயத்தையும் இலேசாக சுட்டிக்காட்டிச் செல்கிறது கதை.
மந்தாரை பூத்த அந்தி
இது அகநானூற்றுப் பாடல் போன்று தலைவனின் பிரிவால் வாடும் தலைவியின் கதை. அதனூடாக வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வோரின் துயரையும் மாதத்தில் பாதிநாள் வெளியூரில் அலைந்து திரிந்து வேலை பார்ப்போரின் நிலையையும் சுட்டிச் செல்கிறார்.
மின்னல் கயிறு
ஒரு காதல் தோல்வி, தற்கொலை முயற்சி இவற்றிற்குப் பின் மீண்டு வரும் வாழ்க்கையில் வாடிக்கையாளராக வரும் திருமணமான காதலியைச் சந்திக்கும் நேர்வில் மாதுளை என்பதை மாது…. ளை என்று தன் பெயரை உச்சரிப்பதற்காகக் கூறும் அவளின் உதட்டசைவில் திருப்பதியடையும் முன்னாள் காதலன் மாதவனின் உணர்வுகள் வழியாகக் கதை நகர்கிறது.
செந்தட்டிக்காடு
கனவுகளின் வழியாகத் தொடங்கும் கதைகளில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு கதைகள் “முத்துப்பரல்” , “இரண்டாகி … மூன்றாகி” ஆகியவையாகும். இக்கதையில் இதிகாசப் புராணங்களை உயர்த்திக் கொடிபிடித்து ஏகபத்தினி விரதனாய் வாழ்ந்த இராமனின் கதாபாத்திரம் வழியே காமத்திற்காக இன்னொரு பெண் தேடும் கதை நாயகனைத் திருத்தும் போக்கு வெளிப்படுகிறது. இவரின் மற்ற கதையாடல்களில் காணப்படும் சிந்தனை மரபிலிருந்து இக்கதை முரண்பட்டதாய் அமைகிறது.
இரண்டாகி …மூன்றாகி…
ஒரு முரட்டுக் கணவனுக்கு வாக்கப்பட்டு வந்து குழந்தையும் பெற்ற பிறகு அவன் செய்யும் இரணங்களையெல்லாம் பொறுத்துப் பொறுத்து தாங்க முடியாமல் இல்லறம் துறந்து தனியாய் வாழத்தொடங்கிய போதும் அதே கணவன் தொடர்ந்து வந்து சந்தேகம் கொண்டு வெஞ்சினம் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்படும் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்ணின் கதை. பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படும் போது அந்தப் பெண் படும் பாட்டின் விவரிப்பு மனம் பதைபதைக்கச் செய்யும் வகையில் இருக்கிறது.
நையாண்டி மேளம்
இச்சிறுகதை மணமகள் ரம்யாவின் விருப்பப்படி தான் விரும்பிய மாற்று சாதி மணமகனான ஸ்ரீதரை மணம் முடிக்க நடக்கும் நிச்சயதார்த்தத்தின் போது பெண் வீடு, மாப்பிள்ளை வீடு இரண்டு பக்கத்திலும் இருக்கும் பெரிய தலைக்கட்டுகள் என் வழக்கம், உன் வழக்கம் என்று மாறி மாறி சாஸ்திர சம்பிரதாயங்களைப் பேசும் பழக்க வழங்கங்களை நையாண்டியுடன் விவரிக்கும் தோரணையில் கதை செல்கிறது.
அத்தனை சிறுகதைகளிலும் கதை என்பதைத் தனிமைப்படுத்திவிட்டுப் பார்க்கும் போது மனிதர்களின் நம்பிக்கைகள், சாதிய அகங்காரம், ஆணாதிக்கம், பொதுவுடைமை மற்றும் முற்போக்குக் கொள்கையுடையோரின் வாழ்வியல், பார்வையற்றோரின் உணர்வுகள், காதல், வலி, உளவியல் சார்ந்த உரையாடல்கள் என வாசிப்போருக்கு ஒரு பரந்து விரிந்த அனுபவத்தைத் தருவதற்கான ஊடகமாக இந்தக் கதைக்களங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவே உணர முடிகிறது.
நூலின் விவரம்:
அங்குட்டும் இங்குட்டும்
எழுத்தாளர்: தேனி சீருடையான்
பதிப்பகம்: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
மின்னஞ்சல் முகவரி: [email protected]
தொடர்புக்கு: 9940446650
நூல் அறிமுகம் எழுதியவர்:
விரிவுரையாளர்,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
பாலையம்பட்டி,
விருதுநகர் மாவட்டம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.