தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” நாவல் – நூல் அறிமுகம்
நன்றாக பார்வை இருந்தது. திடீரெனப் பார்வை பறிபோனது. மினிக்கி.. மினிக்கி எரிந்து பீஸ் போகுமே பல்பு அது போல போய்விட்டது. பெரும் இருள் அவனைப் போர்த்திக் கொள்கிறது. நீண்டதொரு இருண்ட காலம். அந்த இருண்ட காலமும் ஒருநாள் முடிவுக்கு வருகிறது. எப்படி திடீரென பார்வை போனதோ அதேபோல் ஒருநாள் மீண்டும் பார்வை கிடைக்கிறது. பார்வை இருந்து, இல்லாமல் போய், மீண்டும் பார்வை பெற்ற ஒருவனின் அனுபவ அவலங்களே இந்நாவல்.
இது யாரோ சொல்லி, யாரோ எழுதிய நாவலல்ல, கற்பனைக் கதையுமல்ல. பெரும் எழுத்தாளாராய், ஒரு கவிஞராய் வலம் வரும் ‘தேனி சீருடையான்’ அவரின் சொந்த துண்ப துயரங்கள் தான் இந்நாவல்.
பார்வை இருந்து, இல்லாமல் போய், மீண்டும் கிடைத்து. பிரெயில் முறையில் உயர் படிப்பு படித்து, பார்வை பெற்று அதன் பிறகு தமிழ் படித்து, கவிதைகள் எழுதி, சிறுகதைகள் எழுதி, நாவல் எழுதி, எழுத்தாளர்களின் உலகில் ஒரு நிலையான இடத்தினைப் பெற்று, தனது சொந்த வாழ்வனுபவங்களை நாவலாக விரித்துரைக்கிறார் தேனி சீருடையான்.
கண் உள்ளவர்களாலும் காண முடியாத உலகமே நிறங்களின் உலகம்.
17 வருடம் பார்வையற்றும், பார்வையற்றவர்களோடு வாழ்ந்தும் பெற்ற அனுபவ அடர்த்தியே நிறங்களின் உலகம்.
எழுத்தாளர் எவரும் பெற முடியாத அனுபவம் நிறங்களின் உலகம்
கண் தெரிந்த காலமும், தெரியாத காலமும் அலையடிக்கிறது நிறங்களில் உலகில்.
அரிசிச் சோறும், கேப்பக் களியும், எதுவுமில்லா பட்டினியாக நம்மை வதைக்கிறது நிறங்களின் உலகம்
வறுமையும், கண்ணீரும், கொஞ்சம் காமமுமாக கனக்கிறது நிறங்களின் உலகில்.
ஏற்றமும் ஏமாற்றமுமாக, ஆடையும் ஆடையின்றியுமாக புறச்சூழலும், அகச்சூழலும் சுற்றிச்சூழல்கிறது நிறங்களின் உலகில்’
அரிசிச் சோற்றை அவ்வப்போது பார்ப்பது அபூர்வம்.அதிலும் மூன்று வேளை உணவு என்பது பெரும் கனவு. அந்த வாழ்க்கையில் இருந்தவனுக்கே அந்த உப்புமா காரலடிக்கிறது, என்றால், அந்த உப்புமா எப்படி இருந்திருக்கும். அந்த உப்புமாவைத் தின்று வயிறு நிறைந்ததும் கண்ணில் கண்ணீர் வருகிறது. ஊரில் இருக்கும் அம்மாவும் அக்காவும் எதையாவது தின்று வயிற்றை நிரப்பி இருப்பார்களா….. கண்ணை கசக்கிறது.
எல்லோருமே கண் தெரியாதவர்கள் தான். அந்த மைதானம் முழுக்க ஓடி ஆடி விளையாடுகிறார்கள். ஆனால், ஒருவரோடு ஒருவர் முட்டிக் கொள்வதில்லை. கண்ணுக்கு வெளியே ஏதோ ஒரு வெளிச்சம் அவர்களுக்கு வழிகாட்டுகிறது. பார்வை என்பது கண் சார்ந்தது மட்டுமல்ல என்பது எழுத்தாளருக்கு புரிகிறது, அது தமிழ் வாசகர்களுக்காக நிறங்களின் உலகமாக விறிகிறது.
பார்வை இல்லாதவன் தான் பாண்டி, ஆனால் அவன்தான் பார்வையுள்ள நம்மை கை பிடித்து அழைத்துச் செல்கிறான்.
கை, முழங்கை தடவி அடையாளம் காண்பான். வழுவழுப்பான கை என்றால் யார், சொரசொரப்பான கை என்றால் யார், ரோமங்கள் அடர்த்தியாக இருந்தால் யாரென்று அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதோடு நம் கை எடுத்து அவன் தோளில் வைத்துக் கொண்டு மந்தைவெளியில் உள்ள அரசாங்க பார்வையற்றோருக்கான பள்ளியயும், பள்ளி வளாகத்தில் உள்ள அரளிச் செடி, மருதாணிச் செடி என பல செடிகளின் மீது விரல்களால் நம்மை நீவச்செய்வான், அதன் பரிஷங்களை நம்மை உணரச் செய்வான். பத்மநாதன், கங்காதரன்,பூரணி அங்கம்மா, சரசக்க, சாரா…என பல கதாபாத்திரங்களை நமக்கு அறிமுகப்படுத்துவான். இன்னும் கொஞ்சம் அவனோடு நெருங்கிப் பழகினால் ஒரு முக்கியமான இடத்திற்கும் கூட நம்மை அழைத்துச் செல்வான். அவன் தோளிலோ, அக்குளில் நம் கையை பிடித்து வைத்துக் கொண்டு நடப்பான். அந்த முக்கியமான இடம் என்பது, ஜக்குபாய் வீடும், அந்த வீட்டுப் பெண் கன்னியம்மாவும். பாண்டிக்கு அது ரொம்ப பிடித்த இடம். ஆனால், சென்னையின் பெருமழையில், சென்னை என்றாலே ஆண்டு தோறும் புயலும் மழையும் வெள்ளமும் பெரும் சேதமும் வழக்கம் தான் போல, இந்தக் கதை கிட்டத்தட்ட அறுபதுகளில் நடக்கிறது. இடைவிடாமல் பெய்த பெரும் மழையில் சுவர் இடிந்து விழுந்து, பாண்டியின் அன்பும் ஆசையும் சுவரின் அடியில் நசுங்கிப் போகிறது.
கண்ணியம் இல்லாதவளின் மகள் தான் கன்னியம்மாள்.
தாய் மகளுக்காக பரத்தையாய் போகிறாள். மகளோ பரத்தையிடம் போவதே தவறு என பாண்டியை கண்டிக்கிறாள்.
அவளின் குரல் மயக்கத்தில் குழலுக்கு மயங்கிய ராதை போலாகிறான்.
அவளின் விரல் தீண்டலில் அவன் ஒரு வீணையாய் மாறிப் போகிறான்
அவனுக்கு மட்டுமல்ல காதலுக்கும் கண்ணின்றிப் போகிறது கண் தெரியாதவனின் காதல் கன்னியமாகிறது….. ஆனால்,
கன்னியம்மா பல நூல்களை பாண்டிக்கு வாசித்துக் காட்டுகிறாள். வறுமையின் காரணமாக ஜக்குபாய் விலைமாதுவாய் ஆகிறாள், என்பதை மட்டுமே காட்டும் நூலாசிரியர், கதை கதையாய் கதைத்துக் கொண்டே இருக்கும் மகள் கன்னியம்மாவை அவள் எப்படிப் பார்த்தாள், மகளை எப்படி நடத்தினாள். அடிக்கடி மகளிடம் பாடம் கேட்கும் பார்வையற்ற பாண்டியை சக்குபாய் எவ்விதமாய் அணுகினாள், எவ்விதமாய் நோக்கினாள் என்பதையும், அவர்கள் இருவரும் சந்தித்து.. சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும்போது சக்குபாய் அந்த வீட்டில் இருந்தாரா இல்லையா என்பதைக் கூட சொல்லவில்லை. ஜக்குபாயையும் அவள் மனநிலையும் ஏனோ நூலாசிரியர் விறித்துரைக்கவில்லை. அதோடு 200 பக்கத்திலேயே கதை முடிந்து விடுகிறது அதன் பிறகு ஏன் நாவல் தொடர்கிறதோ தெரியவில்லை. சென்னை செல்லும் ரயிலைப் போல கதை 200 பக்கம் வரை விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது
கதை நடந்த காலத்தோடு கதை பின்னிப் பிணைந்து தொடர்வது நடப்பதும் சரிதான். ஆனால், கதை ஒரு கட்டத்தில் நின்று விடுகிறது. கதையை விட்டுவிட்டு காலங்களை மட்டும் காட்சிப்படுத்திக்கொண்டே போவது சரியா? குறைவான பக்கங்களாய், கண் தெரிந்து எழுத்தாளராய் ஆனது வரை எழுதி இருந்தால் இன்னும் இது நிறைவான நாவலாக முடிந்திருக்கும். அல்லது பொறுமையாக இருந்து தோழர் தமிழ்ச்செல்வன் அவர்கலிடம் அணிந்துரை பெற்று வெளியிட்டு இருக்கலாம்.
ஐரோப்பிய உலகங்களில் எழுத்தாளர்கள் எழுதுவதை எல்லாம் அப்படியே வெளியிட்டு விடுவதில்லை. எழுத்தாளருக்கு நிகராக அங்கே எடிட்டர் என்று ஒருவர் இருக்கிறார். நிறங்களின் உலகத்திற்கும் அது போன்றதொரு எடிட்டர் இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் உன்னிப்பாக எழுதிச் செல்லும் நாவலாசிரியர், வாசகர்கள் எதிர்பார்க்கும் பல விசயங்களை எழுதாமல் தவற விட்டு விட்டார்.
பதினைந்தே பக்கம் கொண்ட முன்னுரையில் தோழர் ச. தமிழ்ச்செல்வன், மிக சுருக்கமாகவும் சுவையாகவும் ஒரு வாழ்க்கை வரலாறையே சொல்லிவிட்டார். 15 பக்கத்திலேயே சுவையாகவும் சுருக்கமாகவும் சொல்லிவிட முடிகிறதென்றால், இதைச் சொல்லுங்கள் அதைச் சொல்லுங்கள் என்று நாவல் ஆசிரியரிடம் நாம் சொல்ல முடியாது. ஆனால், எதிர்பார்க்கலாம் இல்லையா? தோழர் தமிழ்ச்செல்வன் அவர்கள், கண் தெரிந்து, தெரியாத காலம், மீண்டும் கண் தெரிந்த காலம் வரை முக்காலத்தையும் முன்னுரையில் சொல்லியிருக்கிறார். ஆனால் நிறங்களின் உலகம் நாவல், பாதியோடு முடிந்தது போல் இருக்கிறது.
ஒரு வேளை தோழர் தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய முன்னுரையை படித்ததால் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ
எழுத்தாளராக இருந்து எழுதிவிட்டுப் போனால் மட்டும் போதாது வாசகராகவும் இருந்து வாசித்து திருத்த வேண்டும்.
எது எப்படி என்றாலும் அனைத்தையும் ஞாபகத்தில் வைத்து ஒரு சிறப்பான நாவலை எழுதிய தோழர் தேனி சீருடையான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நூலின் விவரம்:
நூலின் விவரம்:
நிறங்களின் உலகம் (நாவல்)
எழுத்தாளர்.தேனி சீருடையான்
ஆண்டு: 2008
பக்கம்: 304
விலை: 280
வெளியீடு: அகரம் பதிப்பகம், தஞ்சை.
எழுதியவர்:
எழுத்தாளர் பொன் விக்ரம்
Ponvickram1967@gmail.com
–
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.