கதைச்சுருக்கம் 62: தேனி சீருடையானின் *தகுதி* சிறுகதை

Theni Seerudayan (தேனி சீருடையான்) Short Story Thaguthi (தகுதி) Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Day, Bharathi Puthakalayamகதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

இவரது கதைகளை வாசிக்கையில் பிரேம் சந்தின் மணம் வீசும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

தகுதி

தேனி சீருடையான்

பிரம்மு கையசைத்ததும் டிரம் அடிக்கத் தொடங்கினாள் வேதி.  சந்தைக் கூட்டம் அவர்களைச் சுற்றி நெரிசலிட்டது.  ஒரு நெடுங்களை, ஓர் இரும்பு வளையம், சில அழுக்குத் துணிகள் என்ற ஆயுதங்கள் நடுவில் பரப்பிக் கிடந்தன.

பிரம்முவிற்கு மனசெல்லாம் சந்தோஷம்  குலுங்கியது.  இன்று இந்த அரைப் பொழுதுக்குள் இந்த நகரத்தில் மூன்றாவது முறையாகத் தனது திறமையைக் காட்டப் போகிறான்.  இப்போது இந்த மெயின் பஜாரும் அவனுக்கு நம்பிக்கை ஊட்டியது.  குறைந்தது  பத்துப் பதினைந்து சம்பாதிக்கலாம்.   அடுத்த இரண்டு மூன்று நாட்கள் சந்தோஷமாய் விடியும்.

சிந்தனைகள் பூத்துக் குலுங்க  ஒரு சீரான லயத்துடன் புல்லாங்குழல் வாசித்தபடி வட்டமிட்டிருந்த கூட்டத்தின் மையத்தில் அங்குமிங்கும் நடந்து கொடுத்தான்.

மயிலு மிகவும் சோர்ந்து போயிருந்தாள்.  நடுப்பொழுது வரப்போகிறது.  ஏற்கனவே இரு இடங்களில் வித்தை காட்டியதில் கிறுகிறுப்புத் தட்டிற்று.  காலையில் இருந்து இன்னும் சாப்பிடவில்லை.  வெறும் வயிற்றோடு வித்தைக் காட்டினால்தான் உடம்பு வளைந்து கொடுக்கும் என்பது பாரம்பர்யப் பாடம்.

“அக்கா எனக்குப் பசிக்குது” என்று அவர்கள் பாஷையில் மயிலு கூறினாள்.  “அப்பாகிட்ட சொல்லு, இனிமே எனனால சுத்த முடியாது.  பல்டி பண்ண முடியாது, கர்ணம் பாய முடியாது.”

மயிலுவின் கையை நிமிண்டினாள்.  “அப்பா திட்டுவாங்க” என்று கிசுகிசுத்தாள்.

குமருவும் நடனுவும் ஐந்து வயதுக்குட்பட்ட சின்னப் பையன்கள்.  இந்த நாலு குழந்தைகளும் வேதியும் பிரம்முவும் ஒட்டு மொத்தமாய் அழுக்கடைந்த பைஜாமாவோ பாண்ட்டோ போட்டிருந்தார்கள்.  உடம்பின் மேற்பகுதியில் இறுக்கமான பனியன் அணிந்து அழுக்காய் இருந்தார்கள்.

Theni Seerudayan (தேனி சீருடையான்) Short Story Thaguthi (தகுதி) Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Day, Bharathi Puthakalayam

கூட்டம் ஆவல் பொங்க ரசித்தது,  அந்த  நாடோடிக் கூட்டம் அவர்களின் உடற்பயிற்சியைக் காட்சிப் பொருளாய்க் காண்பித்தது.  ரசிகக் கூட்டத்தில் சிலரது கண்கள் அந்தப் பருவப் பெண்ணின் சதைநார்களில் வளையமிட்டன.  சிலரது இதயங்கள் அனுதாபத்தால் கரைந்தன.

“ம் ஜம்ப் பண்ணு, நல்லா ஆடு” என்று வார்த்தைகளினால் ஊக்கப்படுத்தினான் பிரம்மு. இருந்தாலும் மயிலு சோபிக்கவில்லை.  வயிற்றின் பக்கவாட்டில் தசைநார்கள் இழுத்து இழுத்து வலித்தன.  கண் புருவங்கள் வெறுக் வெறுக்கென்று அலம்பின.  பிரம்முவிற்கு மனதைக் குழப்பிக் கொண்டு கோபம் வந்தது.  அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை.  ஒரு யோசனை பளிச்சிட்டது,

“அரே என்ன இது சைத்தான் ஆடத் தெரியலையா? அந்த மாகாளி துணக்கி வரலியா,  அரே அரே என்ன இது பசியா? பசிச்சுப் பசிச்சே சாகணும்னு பொறந்து வந்தியா? அப்படியெல்லாம் நெனக்யாத.  தர்மப் பிரபுக்கள் பொறந்த ஊரு இது. ஒன்னப் பசியோடசாக விட்டுடுவாங்களா இல்ல இல்ல அரே” என்று ஏதேதோ வசனங்கள் பேசிக் கொண்டு மயிலுவின் கால்களைப் பிடித்துத் தலைகீழாய் விர்ரென்று சுழற்றி தரையில் மோதவிடப் போவதுபோல் அவளை நிற்க வைத்தான். 

Theni Seerudayan (தேனி சீருடையான்) Short Story Thaguthi (தகுதி) Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Day, Bharathi Puthakalayam
Theni Seerudayan (தேனி சீருடையான்)

மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு சந்தடி நிறைந்த இன்னோரிடத்தைத் தேடிப்போனான் பிரம்மு.  மயிலுவுக்கு எரிச்சலாய் இருந்தது.  அம்மாவிடமாவது அடைக்கலமாகிக் கொள்ளலாமே என்று துடித்தாள்.

“என்னடி மயிலு?” என்று இரக்கத்தோடு கேட்டாள் வேதி.

பசிக்குது என்பதுபோல்  வயிற்றை தொட்டுக் காட்டினாள் மயிலு.

பெற்ற மனம் சஞ்சலப்பட்டது,  ஆனாலும் பிரமுவிடம் சொல்ல மனம் துணியவில்லை,  அவன் முரடன் பசியைக் கண்டு அனுதாபப்படமாட்டான்.

“பொறு கண்ணு இன்னும் ஒரு ஆட்டந்தான்.  அப்பறம் போயி  வேணுங்கற அளவு சாப்பிடலாம்” என்று ஆறுதலாய் நீவிக் கொடுத்தாள் வேதி.

உச்சிவெயில் மண்டையைப் பிளக்க, கிறுகிறுப்பு உடலை வதைக்க, நடந்து கொண்டிருக்கும் போதே ஓரிடத்தில் குத்துக் காலிட்டு அமர்ந்து விட்டாள் மயிலு.  

“என்ன?” என்றான் பிரம்மு.  

“தங்கச்சிக்கிப் பசிக்குதாம்” இது பொன்னா.

குமருவும் நடனுவும்கூட  வயிற்றைத் தடவிக் கொண்டு அப்பாவிடமிருந்து ஏதோவொன்றை ஏக்கத்தோடு எதிர்பார்த்தார்கள்,

மயிலுவை நோக்கி வந்தான் பிரம்மு.  அவள் கூந்தலைப் பிடித்து எழுப்பி நிறுத்தினான்.  கன்னத்தில் ஓர் அறை விட்டான்.  விரல்கள் சுவடு பதித்தன.  இருந்தாலும் பிரம்முவின் உள்மனம் அட பாவமே என்று புலம்பியது.  சின்ன வயதில் அவன் தந்தை உபதேசித்த சொற்கள் மனமூலையில் எதிரொலித்தன.  ‘உடம்பு வலி வயித்துப் பசி அப்படிங்குற  அம்சங்களுக்காக எந்தவொரு சின்னதுகளுக்கும் எரக்கங்காட்டாத, களைப்பையும் பசியையும் தாங்கிக்கிற முடியாட்டி உடம்பு ரீதியாச் செய்யிற இந்த வித்தைகள் நுணுக்கமாகச் செய்ய முடியாது.  எப்பவுமே ஒம்மேல ஒரு பயம், ஒரு மரியாதை இருக்காப்புல அவங்கள நடத்து.  உடம்பின் சுறுசுறுப்பையும் நரம்புகளின் முறுக்கையும் வச்சே பணம் பண்ற நமக்கெல்லாம் வாழ்க்கையே கெடையாது.’

தெற்கு சினிமாக் கொட்டகைப் பக்கத்தில் அடுத்த ஆட்டத்தை துவக்கிவிட்டான் பிரம்மு.

“அரே என்ன இது சைத்தான், பசிக்கிதா பசிக்கிதா பசிச்சுப் பசிச்சே சாகப்பொறந்த கும்பல்ல பொறந்துட்டியே” மயிலுவின் கால்களைப் பிடித்துத் தலைகீழாய் விர்ரென்று சுழற்றி தரையில் மோதவிடப் போவது போல் பாவனை காட்டி சட்டென்று அவளை நிற்கவைத்தபோது கூடியிருந்த கூட்டம் கைகொட்டி ஆரவாரம் செய்தது.

@செம்மலர் ஏப்ரல் 1982 

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.