நிறங்களின் உலகம் (Nirangalin Ulagam) – நூல் அறிமுகம்
கண்களைச் சற்று நேரம் மூடி இருட்டுக்குள் தெரியும் நிறமற்றப் புள்ளிகளை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. அவை எப்படி இருக்கும். அந்த நிறப் புள்ளிகளோடு நம்மால் காலத்தை கடத்த முடியுமா. இவை எல்லாம் சாத்தியமா ..?
ஆனால் அப்படியும் சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள் இந்த யுகத்தில். பிறவியிலேயே கண் தெரியாமல் இருந்து போனால் அதில் எந்த லயமும் இல்லாமல் போகும் . இயல்பாக பிறந்து , இயற்கையாக வாழ்ந்து , இடையில் கண் பார்வை அற்றுப்போகும் போது, ஏன் இந்த வாழ்க்கை …? என்ற எண்ணம் தான் மேலோங்கும். அதிலும் பஞ்சம் தாங்கிகளாக வறுமையை சுமப்பவர்களின் வாழ்வை நினைத்துப் பார்த்தால் பொருளாதார முன்னேற்றம் என்பது எத்தனை ஆண்டுகாலப் பசியானாலும் தீர்வதற்கு வழியில்லை.
கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவி குளிரால் வருந்திய வறுமையுற்றோர்களின் வாழ்க்கை எத்தனை சோகமயமானது என்பதை தழுவி பார்த்தால் தானே தெரியும். தழுவிட முடியாவிட்டாலும் “நிறங்களின் உலகத்தை” வாசித்தால் உணர முடியும்.
கதையின் நாயகனாம் பாண்டி எதார்த்தமாய் ஒரு நாளில் கண் பார்வையை இழக்க வில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழந்ததையும் அவன் அறியவில்லை. மாமாவின் கைபிடித்து ரயில் வண்டி பயணம் செய்யும்பொழுது பாண்டியுடன், கண் தெரியாமல் நாமும் பயணம் சென்ற ஒரு உணர்வு தான் ஏற்பட்டது. எத்தனை நிறப் புள்ளிகளை இந்நாவல் வாசித்து முடிக்கும் வரை கண்மூடி கண்டிருக்கிறேன்.
பாண்டியின் கண் பார்வை இழப்புக்கு குத்தாலஞ் செட்டி வம்சம் இப்படி லோல் படனும்னு இருக்கு என்று அவர் சொல்லும் கதை கட்டுக்கதை. ஆனால் சுவாரசியமான ஒன்று. கண் பார்வை போன பின்பு ஒரு பெண்ணின் குரல் மஞ்சளும் வெள்ளையும் கலந்த விதமாய் இருந்தது எனும் இடங்களிலும், வெயில் முகத்தில் படும் பொழுது அதனை உணரும் விதமும் , வீட்டில் படுத்து கூரையின் வழியே வட்டக்காசாய் வெயிலை உணர்வதும் நம்மையும் பார்வையற்றவர்களாக மாற்றி உணர வைத்துவிடுகிறது.
முல்லையாற்று நீருக்கு மணல் கரை . இருளுக்கு இருளே கரையாய் அமைந்து வழிநடத்த, வறுமையால் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சாவின் விளிம்புக்குச் செல்லும் போது… சனம்புக்கீரை உப்பில்லாமல் கூட அவர்களின் பசியை அடக்கிய போது கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.
பார்வை இல்லாமல் சாலையைக் கடந்து தன் அய்யனின் கடைக்கு சென்று திரும்பும் பொழுதுகளில் , தான் படித்த பள்ளிக்கூடத்தின் தரையில் மண்ணை எடுத்து நெற்றியில் பூசும் போது கல்வியை சுவாசிப்பவனால் தரிசிக்க முடியவில்லையே என்று நினைக்காமல் இருக்க முடியாது.
தொலைந்து போகாத வாழ்க்கை வேண்டுமென்றால் தொலைந்து போன பார்வையை மீட்டே ஆக வேண்டும் . அதற்காக முத்துக்கனி சார் மூலமாக அம்மாவிடமும் அய்யாவிடமும் சம்மதம் வாங்கி மாமாவோடு சென்னைக்கு பயணமாகிறான் பாண்டி. பசி இல்லாத வயிற்றுக்கு சாப்பாடு தேவை இல்லை தான். ஆனால் சொந்தம் என்று யாருமில்லாத இடத்தில் நான் சாப்பிட போகிறேன் என்ற வரிகளில் பாண்டியின் மனம் மௌனமாகிறது.
நான் படித்து பெரியவன் ஆனதும் ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தால் , அதில் மாதம் 200 செலவு போக மீதிக்கு அரிசி மூட்டைகள் வாங்கி ஏழைகளுக்கு அள்ளி அள்ளித் தர வேண்டும் . வீட்டில் தினமும் நெல்லுச் சோறு ஆக்கி சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று வரிகள் பாண்டியினது வயிற்றுப் பசியை அணு அணுவாய்ச் சொல்கிறது நமக்கு.
பார்வையற்றோர் பள்ளியில் பிரெயில் வகுப்பு மூலம் பாண்டி பாடம் கற்கும் இடங்களிலும் , மெத்து மீது நடந்து செல்வதற்கும் , கல்வி பயில செல்லும் வேலைகளிலும் துணையாய் எத்தனை பார்வையற்ற நண்பர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாழ்வியலை பாண்டிக்கு கற்பிக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆசிரியரும் பாண்டியின் சிந்தனையைத் தூண்ட கதை சொல்லியாக நீதியைக் கற்பிக்கும் சேரா டீச்சர் பாண்டியன் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார். ஒருமுறை வயிற்றுப் பசியை போக்க புளிய இலை , தென்னங்குரும்பை, முருங்கைப் பூ , ரோஜா இதழ் , வாழை குருத்து என்று இவ்வசமாய் கிடைத்த எல்லா பொருளையும் திண்று பார்க்க பசியின் வேகத்தை குறைக்க முடிந்ததே தவிர நிறைவு செய்ய முடியவில்லை எனும்போது பசியற்ற உலகின் பாச பந்தம் கிடைக்காதா என ஏங்குகிறது மனசு.
பத்து மாத இடைவெளிக்குப் பின் தேனீக்கு வரும் பாண்டி “தேனி பாஷை முல்லையாற்று குளியல் போல் இனிமையாக இருந்தது “, எனும் போது கல்வியின் வாசம் பெற்ற பாண்டியின் நடத்தைகளில் பெரும் மாற்றத்தைக் காண முடிகிறது.
இடையிடையே ஹிந்தி திணிப்பு , கம்யூனிஸ்ட் காங்கிரஸ் திராவிட கட்சிகளின் நிலவரம், சூடான தேர்தல் பிரச்சாரம் அதில் சிலப்பதிகார உவமை, தீவிரமான சாரணர் இயக்கப் பணிகள் , குடியரசு தின நிகழ்வுகள், பிரெயில் புத்தக வடிவமைப்பு மற்றும் அதன் வாசிப்பு முறைகள், பிரெஞ்சு மொழியில் முதல் பிரெல்யின் அறிமுகம், பரந்த வாசிப்பு , கீழ்வெண்மணி நிகழ்வு, அண்ணாவின் தீவிர தேர்தல் பிரச்சாரம்
என பாண்டியை மையமாக வைத்தே நாவல் அக்கால முழு நிலவரத்தையும் கூறிவிடுகிறது.
பாண்டியின் பரந்த வாசிப்புக்கு துணை போகும் பல கதாபாத்திரங்கள் அடிக்கோடிட்டு வாசிக்கப்பட வேண்டியவை. கல்வி ஒருவனது வாழ்வில் உயர்வைத் தந்தாலும் அவனது வறுமையைப் போக்கும் அளவிற்கு உதவிடுமா..? என்ற ஐயத்தை பாண்டி மூலம் ஏற்படுத்துகிறது.
நாவலில் பாண்டி பார்வையற்றோர் பள்ளியில் உயர்நிலை வகுப்பு முடிந்து வெளியேறுவதோடு முடிவு பெறுகிறது. எனினும் அதற்குப் பிறகான வாழ்க்கையை முன்னுரையில் சுருக்கமாக கொடுத்திருந்தாலும் , அதற்கான விடை அவரவர் திறன்களை வெளிக்கொணர்வதிலே உள்ளது என்கிறது இப்புத்தகம்.
காதுகளைத் தன் கண்களாக கொண்டவர்களின் வாழ்வை கண்கொண்டு நாமும் பார்த்தோமானால் , பார்வையற்றோர் இப்பரந்த உலகில் வாழ்வதற்கு நாமும் இடமளித்த வள்ளல்கள் ஆவோம்.
புத்தகம் குறித்து
புத்தகத்தின் பெயர்: நிறங்களின் உலகம்
ஆசிரியர் : தேனி சீருடையான்
விலை : 280
பக்கங்கள் : 303
தலைப்பு : நாவல்
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

