தேனி சீருடையான் அவர்களின் இந்த நூல் ( “நித்திலப் பந்தல்” சிறுகதை தொகுப்பு) அவருடைய பத்தாவது சிறுகதை தொகுப்பாகும் . பத்துச் சிறுகதை தொகுப்புகள் வெளிவந்த பின்பும் ,தோழர் சீருடையானுக்குள் இன்னும் எழுதித் தீர்க்க வேண்டிய சாமானிய மனிதர்களின் கதைகள் நிறைய இருக்கின்றன . சமூகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு , அதன் செயல் பாடுகளில் ஆக்க பூர்வமாக பங்கெடுக்கும் ஒரு கலைஞனுக்கு மட்டுமே, எழுத எழுத வற்றறாத கதைகள் உதித்துக் கொண்டிருக்கும். தொடர் வாசிப்பும் , கூர்ந்த கவனிப்பும் அதில் கதைக்கான இடங்களை கண்டடடைவதும் சீருடையான் தோழருக்கு கைவந்த கலையாக இருக்கிறது.
அவரே இந்த இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டது போல ”யதார்த்த வாதம் என்பது வாழ்க்கையை அப்படியே பதிவு செய்வதல்ல . அதாவது நிழல் படம் எடுத்து ஆல்பம் போடுவது அல்ல . ஓவியமாய் தீட்ட வேண்டும் . உதாரணத்துக்கு கண்ணகியின் உருவத்தை , சாந்த சொருபியான அவலையாகவும் தீட்டலாம் . கைச்சிலம்பேந்தி நீதி கேட்கும் வீர உருவமாகவும் வரையலாம் . இதில் கண்ணகி என்ற நாயகி இன்று வரை கொண்டாடப்படுவதற்கான காரணம் அபலையாக ஒதுங்கிக் கிடந்த வாழ்க்கையினால் அல்ல . பாண்டியன் அவையில் வீராவேசத்தோடு போராடிய தருணம் தான் . அந்த நேரத்து கண்ணகியை ஓவியப்படுத்தி காட்டுவதே யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு. இண்டு இடுக்குகளுக்குள் புகுந்து மறைந்து கிடக்கும் புற வாழ்வின் சுவடுகளையும் உளவியல் சிக்கல்களையும் கொண்டுவந்து சக மனிதனுக்கு எடுத்துக்காட்டி எச்சரித்து வழிகாட்டுவது தான் யதார்த்தவாதியின் பாணி “
அவரின் முன்னுரையோடு வெளிவந்துள்ள இச் சிறுகதை தொகுப்பில் மொத்தம் 16 சிறுகதைகள் இருக்கின்றன அனைத்துமே எந்த பரிசோதனை முயற்சிக்கும் ஆட்படாமல் முழுக்க முழுக்க தோழர் சீருடையான் அவர்களின் பாணியில் எழுதப்பட்ட யதார்த்தவாத சிறுகதைகளாகும்.
”சிகரம் ” என்ற சிறுகதை குபேந்திரன் என்ற ஒரு மனிதனின் மன ஓட்டத்திலிருந்து விரிகிறது . குபேந்திரன் புதிதாக ஒரு அழகு நிலையம் திறக்கிறான் அவன் தந்தை பரமசிவம் அந்த ஊரில் மரியாதையாக இருந்ததில்லை . அந்த ஊரில் மிக மோசமாக இழிவுபடுத்தப்பட்டு , முடி திருத்தும் தொழிலை செய்து வந்தவர் அவர். சாதிய கட்டுமானங்களாலும் சாதிய அமைப்புகளாலும் மிகவும் கேவலப்படுத்தப்பட்டு வாழ்க்கையை தொலைத்தவர். ஆனால் அவரது அடுத்தடுத்த தலை முறை மிகவும் முன்னேறி சிகரத்தை தொடுகிறது. இதில் ஒரு குடும்பம் எவ்வளவு உயர்ந்தாலும் அவர்கள் தொழிலதிபராகவே மாறினாலும் கூட ( சிகரத்தையே தொட்டாலும் சரி ) அவர்கள் வழி வழியாக வந்த செய்து வந்த தொழிலை விட முடியவில்லை என்பதே உண்மை என்று பதிவு செய்திருக்கிறார். இதையே அவர் சிகரம் என்று முரண்பாடான வார்த்தையால் இந்த கதைக்கு தலைப்பு தந்திருக்கிறார் .
”நிலம் நீ நல்லை ” என்ற சிறுகதையில் தர்மராஜா என்ற சிறுவனின் குடும்பம் , இலங்கையில் இருந்து அகதியாக வந்து , தேனி மாவட்டத்தில் இலங்கை அகதி முகாமாக உள்ள இந்திரா நகர் பகுதியில் குடியேறுகின்றனர். தர்மராஜாவின் குடும்பத்திற்கு இங்கே போதிய உணவு கிடைத்தாலும் , தங்களது சொந்த நிலத்தை தொலைத்து விட்டு இங்கே வந்து அந்நிய மண்ணில் நிம்மதியாக இருக்க முடியாமல் அது தவிக்கிறது. இந்த துயரத்தை சகிக்காமல் , மீண்டும் லஞ்சம் கொடுத்து , தங்களது சொந்த மண்ணுக்கு திரும்புவது தான் கதை . மீண்டும் தாய் மண்ணுக்குள் காலடி எடுத்து வைத்த பின் தான் அவர்களுக்கு உயிர் வருகிறது. அதில் வருகின்ற சிறுவனின் பாத்திரமும் பெரியவர்களின் பாத்திரமும் மிகவும் நுட்பமாக ஆசிரியரால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
“வியனுலகம் “ என்ற சிறுகதை கிராமத்து சூழல் எவ்வாறு மனிதர்களை உணர்ச்சிவசப்பட வைத்து , அவர்களை குற்றச் செயலுக்கு தூண்டுகிறது என்பதை நுட்பமாக பதிவு செய்திருக்கிறது. மனிதர்கள் பொறுமையாக சிந்தித்து பகுத்தறிவுக்கு இடம் தர வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்
“உன்னால் நான்“ என்று சிறுகதை தோழரின் வழக்கமான பாணியில் இல்லை . இது வேறு ஒரு கதை களத்தில் எழுதப்பட்டதாக தோன்றுகிறது . அவரின் அழுத்தமான முத்திரையை இதில் பதிக்கவில்லை என்றே கூறலாம்.
“கோட்டம்“ என்ற சிறுகதை மதன் என்ற பாத்திரத்தின் வழியாக இந்த சமூகத்தில் ஆணாதிக்க மனப்பான்மை எவ்வாறு ஊடுருவி இருக்கிறது என்பதை தெளிவாக காட்டி இருக்கிறது. . அதை தற்காலத்து பெண்கள் எவ்வாறு அனாயசமாக எதிர்த்து முறியடிக்கிறார்கள் என்பதையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது
“முல்லை வழிப்பாதை“ என்ற சிறுகதையில் ஒரு மனிதன் தன் இளமை காலத்தில் காதலில் விழுந்ததற்காக துரத்தப்பட்டு வீட்டை விட்டு ஓடி போய் திருப்பூரில் வசிக்கிறான். பல வருடங்கள் கழித்து அங்கே வேலை நிறுத்தத்தின் காரணமாக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வரும்போது , அவனுடைய மனநிலையும் , இங்கே உள்ள மனிதர்களைப் பற்றிய அவனது மதிப்பீடும் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
எனக்கு மிகவும் பிடித்தது “துகில்“ என்ற சிறுகதையாகும் .இதில் பொதுவாக ரயிலில் பயணிக்கும் ஆண்கள் வாய்ப்பு கிடைத்தால் தனியாக பயணிக்கும் பெண்களிடம் எவ்வாறு அத்துமீறி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் , பெண்கள் எப்படி ஓரிரு வார்த்தைகளிலேயே அவர்களின் அநாகரீகத்தை ஆண்களுக்கு புரிய வைக்கிறார்கள் என்பதையும் மிகவும் நாசூக்காக ஆசிரியர் எடுத்துக் காட்டி இருக்கிறார் . இவ்வாறான சிறுகதைகளையே நாம் தோழரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறோம்
“மலையேற்றம்“ என்ற சிறுகதையில் வருகிற அம்மா பாத்திரம் ” சாதிதான் தப்பு , தொழில் தப்பு இல்லை “ என்கிறது . அதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் இருக்கிறோம் . இந்த சமூகத்தில் சாதியும் தொழிலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பது வரலாற்று உண்மையாகும். அதாவது வேறு நாடுகளில் ஒரு தொழிலை செய்பவர்களை அவர் அந்த தொழில் செய்கிறவர் என்று தான் பார்ப்பார்கள். ஆனால் நமது நாட்டில் ஒரு தொழில் செய்கிறவரை , அவரது தொழிலை வைத்து அவர் இன்ன சாதி என்று அடையாளம் கண்டு கொள்கின்றனர். தோழர் கதையில் இது ஒரு பதிவு என்ற அளவில் நிறுத்தி கொள்கிறார் . அவரின் ஆழ்மனக் கருத்து என்னவென்று இதில் நமக்கு தெளிவாக தெரிவதில்லை . அவர் அந்த பாத்திரத்தின் மூலமாக இது சரி என்று சொல்கிறாரா? இல்லை இது தவறு என்று சொல்கிறாரா என்று தெரியவில்லை .
“ வேண்டாம்“ என்ற சிறுகதை நந்தனம் என்ற ஒரு குருக்களின் வாயிலாக சொல்லப்படுகிறது . நவீன காலத்தில் கோயில்களில் எவ்வாறு பக்தி சிதைக்கப்பட்டு , வணிகம் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறார் . இப்படிப்பட்ட பக்தி தான் இந்தக் கோயில் நடக்கும் என்றால் , இந்த கோவிலே தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே போகிறார் அந்த குருக்கள் .
“ஒதுக்கங்கள் ‘ என்ற சிறுகதையும் அது போன்றதொரு படைப்புத் தான் . வயதுக் காலத்தில் காதலுக்கு ஆட்பட்டு, சின்னக்காமு ஒரு பெண்ணை விரும்பிய இளைஞன் , அப் பெண்ணின் தகப்பனாரால் துரத்தப்பட்டு , திருப்பூர் சென்று தங்கி விடுகிறான். அவன் மீண்டும் தன் காதலியை பார்ப்பதற்காக பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊருக்கு திரும்பி வருகிறான் . அங்கு அவளைப் போலவே இருப்பவள் ( காதலியின் மகள் ) அவனது காதலி இறந்து போனாள் என்று சொல்லக் கேட்டு உடைந்து அழுகிறான் . எவ்வளவோ மாற்றங்கள் புறத்தில் நடந்தாலும் , மாற்றங்கள் மனதில் நடக்க வேண்டும் என்பது ஒன்று. மற்றொன்று ” ஊரில் இருந்த குடிசைகள் கார வீடுகளாய் ஒளிர்ந்திருக்க ,ஒதுக்கத்தில் முளைத்திருந்த குடிசைகள் சாக்கடை சகதிக்குள் மூழ்கியிருந்தன ” என்று அவர் இந்தக் கதையை முடிக்கும் போது புலப்படுகிறது. இந்த தேசத்தில் சாதிக்கு எந்நாளும் சாவில்லை போலும் .
இந்த ஒதுக்கங்கள் என்ற கதையை , நான் OUT CASTS என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன். அது மாடர்ன் லிட்டரேச்சர் என்ற ஆங்கில இலக்கிய இதழில் பிரசுரமாகி , நிறைய பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும் .
தோழர் மென்மேலும் அவரின் பாணியில் மென்மேலும் இது போன்ற நிறைய சிறுகதைகளை எழுத வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன்
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “நித்திலப் பந்தல்” சிறுகதை தொகுப்பு |
| ஆசிரியர்: | தேனி சீருடையான் |
| வெளியீடு: |
தமிழ் வெளி பதிப்பகம்
|
| விலை: | ₹.200 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 தங்கேஸ் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
