தேனி சுந்தர் கவிதை

தேனி சுந்தர் கவிதை

இராத்திரி
பதினோரு மணி இருக்கும்..
ஒரு புத்தகத்தின்
இறுதி அத்தியாயத்தை
வாசித்து கொண்டிருந்தேன்..
எப்பப்பா விடியும்..
ஏண்டா…
எப்ப விடியும்னு சொல்லு..
காலைல தாண்டா..
எவ்வளவு நேரமாகும்..
வாட்ச் முள் எங்க வரணும்..
சரி..
என்ன விசயம்னு சொல்லு..
சைக்கிள் ஓட்டணும்..
அப்டியா..
சீக்கிரம் தூங்குனா..
சீக்கிரம் விடிஞ்சிரும்..
தூக்கம் வரமாட்டுதுல..
பொரண்டான்..
பொரண்டு பொரண்டு
உருண்டான்..
நான் தூங்குற வரைக்கும்
அவன் தூங்கல..
இந்த சைக்கிள் வாங்கி
ஒரு வருசம் ஆச்சு..
சின்ன சைக்கிள
நல்லா தான் ஓட்டிகிட்டிருந்தான்..
இந்த சைக்கிள அவனா
ஓட்டுற நம்பிக்கை
நேத்து தான் பொறந்திருக்கு..
அஞ்சரைக்கே முழிப்பு வந்து
விடிஞ்சிருச்சானு கேட்டான்..
இல்லயில்ல..
இன்னும் கொஞ்ச நேரம்
தூங்குன்னேன்..
அப்புறம் தலைவரு
ஒன்பது மணிக்கு தான்
முழிச்சாரு..
மழை எப்ப நிக்கும்..
நீ பல்தேய்ச்சு சாப்பிடு
நின்னுரும்..
மழை நின்னுருச்சா..
வெயில் வந்துருச்சா..
இப்ப எத்த மணியாகுது..
மழைக்கும் மணிக்கும்
என்ன இருக்கு..
இருந்தாலும் கேட்கிறான்..
அப்பாவாக
முன்னோக்கிச் சிந்தித்து
கொஞ்சம் உயரமான சைக்கிள
வாங்கிக் கொடுத்தேன்..
உண்மையில் படுவேகமா
நம்பிக்கையோட சைக்கிள்
ஓட்டிக்கிட்டிருந்தான்..
ரெண்டே ரெண்டு இஞ்ச் உயரம்..
ஒரு வருசமா
ஓட்டத் தெரியாதவனாக
ஆக்கிவச்சது..
இப்போ..
ரெண்டு கால்களுக்கும்
றெக்கை முளச்சது போல
தெருவின் ரெண்டு முனைக்கும்
ஓட்டி ஓட்டி…
ஓட்டி ஓட்டி ரசிக்கிறான்..
இருட்டாகிருச்சு..
பைக்ல இருக்குறமாரி
லைட் வச்சுக் குடுப்பா..
கால்கள் தரையில் இல்லை
பறக்கிறான்..
குழந்தைகளுக்கு
எட்டும் இலக்கை வைப்பதில்
எப்போதும் பிரச்சினையே..
வேறெங்கும் இல்லை..
நம்மிடம் தான்..!
– தேனி சுந்தர் ..
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *